சிறப்புப்பக்கங்கள்

குற்ற உலகில் நேர்மையான கதாநாயகன்?

கணேஷ் சுப்புராஜ்

இன்று படம் இயக்கக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் உதவி இயக்குநர்கள் ‘சார். ஒரு கிரைம் கதை. அதுல நீங்க Underworld DON சார்…‘ என கதை சொல்ல ஆரம்பித்தால் குறைந்தது பத்து நடிகர்களாவது கால்ஷீட் கொடுக்கத் தயாராக இருப்பார்கள். விக்ரமின் வெற்றி அப்படி ஒரு பாதையை அமைத்துக் கொடுத்திருக்கிறது.

படம் வெளியாகி மூன்று வாரங்கள் கடந்தும் தியேட்டர்களில் அரங்குநிறைந்த காட்சிகளைப் பார்க்க முடிகிறது. ஆனால் ஒரு பேட்டரி வாங்கித் தந்தார் என்பதற்காக 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு விடுதலை ஆகியிருக்கும் பேரறிவாளன் இருக்கும் இதே தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளையும் லட்சக் கணக்கான புல்லட்டுகளையும் சிதறவிட்டு ரத்தம் தெறிக்கத் தெறிக்க எடுத்த ஒரு படம் மாபெரும் வெற்றி அடைவது என்பது உண்மையிலேயே விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று.

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின்னான உளவியல் காரணங்களை ஆராய்வதற்கு முன்பாக தமிழ் சினிமாவில் குற்ற உலகம் (Crime World) இதுவரை எப்படிப் புனையப்பட்டிருக்கிறது என்பது பற்றிய புரிதல் இங்கே தேவைப்படுகிறது. கதாநாயகன் எந்த உலகைச் சேர்ந்தவன் என்பதை பொருத்து சினிமாவிற்குள் இருக்கும் குற்ற உலகை இரண்டு வகையாக பிரிக்கலாம். முதல் வகையில் குற்ற உலகில் இருக்கும் அசைக்கமுடியாத வில்லன்களை துணிந்து எதிர்த்துப் போராடும் ஒருவனாக ஹீரோ கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். பல்வேறு இழப்புகளையும் இடர்பாடுகளையும் தாண்டி கெட்டவர்களை அழித்தொழிக்கும் இந்தவகையான கதாநாயக பிம்பமே எம்.ஜி.ஆர். காலம் தொட்டு கொண்டாடப்பட்டு வந்த பார்முலா. இவ்வகை படங்களில் பெரும்பாலும் ஹீரோ நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருப்பார் அல்லது வில்லன்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பார். அதன்பின்னான 80, 90 காலகட்டத்தில் இந்த நல்ல ஹீரோ - கெட்ட வில்லன் என்ற கதைசொல்லல் முறை கொஞ்சம் கொஞ்சமாக மங்க ஆரம்பித்து இரண்டாம் வகை படங்கள் வெளிவர ஆரம்பிக்கின்றன.

இந்த இரண்டாம் வகை படங்களில் கதாநாயகன் குற்ற உலகை சேர்ந்தவராக இருப்பார். அவருக்கான தனிப்பட்ட நியாய தர்மங்கள் அந்த கதாபாத்திரம் மூலம் உணர்த்தப்படும். இந்தவகையில் வந்த எல்லா படங்களுக்கும் விதை போட்ட ஒரு படம் என கமலஹாசனின் ‘நாயகன்' படத்தைச் சொல்ல முடியும். படத்தின் தலைப்பிலேயே அந்த முரண் இருக்கும். படத்தின் கதாநாயகனான வேலுநாயக்கர் வெளி உலகத்தைப் பொருத்தவரை ஒரு தாதா.

சிறுவயதிலேயே ஒரு கொலை செய்துவிட்டு அகதியாக மும்பைக்கு வரும் அவர் அரபிக்கடலில் இருந்து பொருட்களைக் கடத்தல் மூலம் எடுத்து வரும் தொழிலை செய்ய ஆரம்பிக்கிறார். அதில் கிடைக்கும் பணத்தில் மற்றவர்களுக்கு உதவுகிறார். அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு ஒரு GODFATHER ஆக மாறுகிறார். நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா எதுவும் தப்பில்லை என்பது அவரது சித்தாந்தமாகிறது. அந்த படத்தின் வெற்றி கமலஹாசன் என்ற நடிகனை உலக அரங்கு வரை அழைத்துச் செல்கிறது. நடிப்பு, இசை, தொழில்நுட்பம் என பல்வேறு விஷயங்கள் அப்படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்தாலும் எல்லாவற்றையும் தாண்டி அந்த கதைக்குப் பின்னால் நாயகனா? தாதாவா? என வரையறுக்க முடியாமல் அறியப்பட்ட வரதராஜ முதலியாரின் நிஜமான வாழ்க்கையும் வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. 

கமஹாசனுக்கு ஒரு ‘நாயகன்' என்றால் ரஜினிகாந்திற்கு ஒரு ‘பாட்ஷா' வருகிறது. ஏற்கெனவே பில்லா, தளபதி போன்ற படங்களில் அவர் கேங்க்ஸ்டர் ஆக நடித்திருந்தாலும் பாட்ஷா அவருக்கு பெற்றுத்தந்த இடம் மிகப் பெரியது. ‘அய்யா என் பேரு மாணிக்கம். எனக்கு இன்னொரு பேரு இருக்கு‘ என்ற வசனம் இன்றுவரை வெளியாகிக்கொண்டிருக்கும் எல்லா மாஸ் ஹீரோ படங்களின் ‘பஞ்ச்' வசனங்களுக்கும் முப்பாட்டன். பாட்ஷாவின் வரலாறு காணாத வசூல் ரஜினிகாந்தை சூப்பர்ஸ்டாராக மாற்றுகிறது. பட்டிதொட்டியெங்கும் ‘மாணிக் பாட்ஷா‘ பேசப்படுகிறார். ரஜினியின் இந்த கதாநாயக பிம்பத்தை அடியொற்றி வந்த அடுத்த கட்ட தலைமுறை நடிகர்களான விஜய், அஜீத் தொடங்கி பலர் இதே பார்முலாவை முயன்று பார்க்கிறார்கள். ஆரம்ப காலகட்டங்களில் இருவரும் தங்களுக்கான கேங்ஸ்டர் கதைகளை தேர்தெடுத்து நடித்தாலும் அதில் வெற்றி பெற முடியாமல் தோல்வியே அடைகின்றனர்.

2000 ஆண்டுக்குப் பின்னான கேங்ஸ்டர் கதைகளில் முக்கிய படமாக புதுபேட்டையைக் கூறலாம். ‘தொண்டையில் ஆப்ரேசன். காசு கொடு‘ என தெருவில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஒருவன், தவறுதலாக குற்ற உலகிற்குள் தள்ளப்பட்டு பெரிய தாதாவாகும் வாழ்க்கையைச் சொல்லியது அப்படம். மனிதனுக்கே உரிய அனைத்து பலவீனங்களும் உடைய ‘குமார்' என்கிற கதாபாத்திரத்தின் வாழ்க்கையைச் சொன்னாலும் அதை முக்கிய படமாக மாற்றுவது அதில் சொல்லப்பட்ட குற்ற உலகிற்கும் அரசியலுக்குமான தொடர்பேயாகும். இங்கே எல்லா குற்ற உலகிற்குப் பின்னாலும் அரசியல் இயங்கிக்கொண்டிருப்பதையும், அரசியல்வாதிகளின் அதிகாரப் போட்டிக்கு அடித்தட்டு மக்கள் ரவுடியாக மாற்றப்பட்டு கொல்லப்படுவதையும் சுட்டிக்காட்டியது அந்தப்படம். அதைப் புரிந்துகொள்ளும் கதாநாயகன் தானும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென எடுக்கும் முயற்சிகள் அவனை வீழ்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்கின்றன. இறுதியில் லாக்கப்பில் இருக்கும் அவனை போலீஸ்காரர்கள் வெளியே கொண்டுபோகிறார்கள். தன்னை கொல்லப்போவதாக அவன் பிதற்றிக்கொண்டே அவர்களோடு போகிறான். அவை ஒரு பைத்தியக்காரனின் வெற்று வார்த்தைகள் அல்ல. அதுவே அவனைப் போன்ற பெரும்பான்மையான அடியாட்களின் இறுதிமுடிவு. ஆனால் ஆச்சரியமாக அவன் அடைய நினைத்த கட்சிப்பதவியை அவன் அதுவரை எதிர்த்துக்கொண்டிருந்த அரசியல் கட்சி அவனுக்கு வழங்குகிறது. ஏனெனில் அரசியல் வரலாறுகளே அவனைப்போன்ற குமார்களால்தான் உருவாக்கப்படுகிறது. அதுவே ஆகப்பெரும் உண்மை என்பதே புதுப்பேட்டை படத்தின் முடிவு சொல்கிறது.

இப்படி நாயகன் தொடங்கி புதுப்பேட்டை வரையில் வந்த குற்ற உலகை பின்னணியாகக் கொண்ட படங்கள் வெற்றி பெற்றாலும் அதிலிருந்த ஒரு நேர்மறையான அம்சம் என்பது குற்றம் பற்றி அதில் சொல்லப்பட்டிருக்கும் இயக்குநரின் பார்வை. குற்ற உலகில் வரும் கதாநாயகர்கள் அதன் எல்லா சாதக பாதங்களையும் அனுபவிப்பவர்களாகவே சித்திரிக்கப்பட்டு கொண்டிருந்தார்கள். வேலுநாயக்கர் வேலுபாயாக மாறிய போது தன் மனைவியையும் மகனையும் இழக்க நேர்கிறது. மகள் அவரை விட்டுப் பிரிந்து போகிறார். தன் சொந்த பேரனை கொஞ்ச முடியாத தாத்தாவாகிறார். படத்தின் இறுதியில்  சட்டத்திடம் இருந்து தப்பித்தாலும் அவர் செய்த குற்றமே அவரை காவு வாங்குகிறது. புதுப்பேட்டையில் வீழ்ச்சியின் உச்சிக்கு செல்லும் குமார் ‘ரொம்ப ஆடக்கூடாதுப்பா' என சொல்லியபடியே தன் சொந்த மகனைக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு போகும்படி ஆகிறது. இறுதிவரை அவனால் தன் மகனை கண்டுபிடிக்க முடியாமல் தேடிக்கொண்டிருப்பதாக சொல்வதோடு படம் முடிகிறது. இப்படி குற்றம் ஒரு கைப்பிடி இல்லாத கத்தி என்பது அப்படக் கதாநாயகர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் வழி சொல்லப்பட்டுக்கொண்டே இருந்தது. இப்படி நல்லவனும் கெட்டவனுமான நாயக கதாபாத்திர வடிவமைப்பை ‘மங்காத்தா‘ போன்ற படங்களின் வருகை மாற்றியது.

மங்காத்தாவின் கதாநாயகனான ‘வினாயக்‘ முழுக்க முழுக்க எதிர்மறை கதாபாத்திர (Negative Character) வடிவம். காதலித்து ஏமாற்றுவது. கொள்ளையடிப்பது, கூட இருந்தவர்களைக் கொலை செய்வது எல்லாமும் அவனுக்கு நியாயம். படத்தின் இடைவேளையில் “MONEY MONEY… MONEYT” என அஜீத் பேசும் வசனமும் அதற்கு பின்னணியில் ஒலிக்கும் யுவனின் இசையும் வில்லன் என்ற எதிர்மறை பிம்பத்தை ஹீரோவாக்கியது. மக்கள் வில்லன்களை கொண்டாட ஆரம்பித்தார்கள்.     

அதன்பிறகு குற்ற உலகம் சார்ந்து வெளிவந்த படங்களில் இரண்டு படங்கள் குறிப்பிடத்தகுந்தவையாக இருக்கின்றன. ஒன்று ஆரண்யகாண்டம் மற்றொன்று ஜிகர்தண்டா. ஆரண்யகாண்டம் அதன் சொல்முறையாலும் படமாக்கப்பட்ட விதத்திலும் ஒரு புதியபாணியை உருவாக்கியது. படமுன்னோட்டத்தில் சொல்லப்பட்ட வசனம் போல சீமாட்டியின் சிண்டுபோல புனையப்பட கதைவடிவத்தில் எது தர்மம் என்ற கேள்விக்கு எது தேவையோ அதுவே தர்மம் என்ற கருவை முன்வைத்தபடி படம் முடிவடைகிறது. 

ஜிகர்தண்டா அதன் இரண்டாம் பாதியில் சேது என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரம் கலையின் வழியே அடையும் மீட்சியால் ஒரு புதிய கோணத்தை முன் வைத்தது. தன்னைப் பார்த்தால் எல்லோரும் பயந்து நடுங்க வேண்டும் என அதுவரை நினைத்துக்கொண்டிந்தவன் மற்றவர்களை மகிழ்ச்சி படுத்துவதன் மூலம் வாழ்க்கைக்கான அர்த்தத்தை புரிந்துகொள்கிறான். பல வருடங்களாக அவனோடு பேசுவதை நிறுத்தியிருந்த அவன் அம்மா, அவன் நடித்த படத்தை பார்த்துவிட்டு அவனோடு பேச ஆரம்பிக்கிறாள். கேங்ஸ்டர் என்ற இடத்திலிருந்து நடிகன் என்ற தனக்கான புதிய அடையாளத்தில் சேது பயணிப்பதோடு கதை முடிகிறது.

இப்படியாக குற்ற உலகில் நேர்மையான கதாநாயகன் என்ற பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி சூழ்நிலை காரணமாக குற்றச் செயல் செய்யும் கதாநாயகன் என உருமாற்றமடைந்து பின் முழுக்க முழுக்க எதிர்மறை கதாபாத்திரமே நாயகன் என்ற நிலை வந்தது. 2010க்கு பிறகான காலகட்டங்களில் வந்த குற்ற உலகம் சார்ந்த பல படங்களில் இந்த எதிர்மறை கதாபாத்திர அம்சம் கொண்ட கதாநாயக பிம்பமே வெற்றிக்கான பார்முலாவாக மாறி இருந்தது. ஆனால் அதன்பின் இயக்குநர்களாக வந்த  பா.ரஞ்சித்தும் வெற்றிமாறனும் அதை உடைத்தெறிந்தார்கள்.

ரஞ்சித் தின் ‘கபாலி'யும் ‘காலா'வும் மீண்டும் ‘நாயகன்' பாணியிலான மக்களுக்காக போராடும் எதிர்மறை கதாநாயகனை மீட்டெடுத்துக் கொண்டுவந்தது. வெற்றிமாறனின் ‘வடசென்னை' இன்னும் அணுக்கமாக அரசியல், அதிகாரத்திற்கு எதிராக எழுந்துவரும் ஒரு கதாநாயகனை முன்வைத்தது. அரசியல் புரிதலோடு எடுக்கப்பட்ட குற்ற உலகம் இனி வர ஆரம்பிக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த நிலையில் தான் PAN INDIAN என்ற சொல்லாடல்களுடன் இந்தியா முழுவதும் வெளியான KGF போன்ற படங்கள் வெளியாயின. அவற்றின் வெற்றி மீண்டும் அரசியல் புரிதலற்ற வெல்ல முடியாத கதாநாயகனாக பழைய பாணி முறைக்கே இன்று கொண்டு வந்திருக்கிறது. கொஞ்சம்  யோசித்துப்பார்த்தால் KGF இன் கதாநாயகன், மங்காத்தா வினாயக்கின் மேம்படுத்தப்பட்ட வடிவம் என்பதே உண்மை. வறுமையில் இறந்துபோகும் அம்மாவிற்கு சிறுவனாக மகன் செய்துகொடுக்கும் சத்தியம் என்ற கூடுதல் கதை ராக்கிபாய் எத்தனை கொலைகள் செய்தாலும் அவனை மக்கள் கொண்டாடும் ஹீரோவாக மாற்றியிருக்கிறது.

‘போங்கடா... போய் புள்ள குட்டிகளைப் படிக்க வைங்கடா' என வன்முறைக்கு எதிராகப்பேசிக் கொண்டிருந்த கமல்ஹாசன் போன்ற சிறந்த நடிகர்களையும் KGF போன்ற PAN INDIA படங்களின் வெற்றி யோசிக்க வைக்கிறது. டிஜிட்டல் யுகத்தில் பப்ஜி போன்ற விளையாட்டுகளின் தாக்கத்தில் இருக்கும் இன்றைய நவீன கால இளைய தலைமுறைக்கு ஏற்றவாறு கதைகளை அவர் நடிக்க முடிவு செய்கிறார். ஆனால் காந்தியின் அகிம்சை தத்துவத்தை தன் படங்களில் பேசிக்கொண்டிருக்கும் கமல்ஹாசன் தன் கொள்கையிலிருந்து விலகாமலும் அதே நேரத்தில் படம் முழுவதும் தோட்டாகள் தெறிக்க வேண்டுமென நினைத்து அவர் தேர்தெடுத்த கதாபாத்திரமே விக்ரம் என்கிற முன்னாள் ரா ஏஜெண்ட். கமல்ஹாசன் போன்ற கலைஞனின் கலை ரீதியாக படைப்புகளுக்கு விக்ரம் போன்ற படங்கள் ஒரு வகை பின்னடைவையே தரும் என்றாலும் கமல் எதிர்பார்த்திருந்த வெற்றியை அது ஈட்டித்தந்திருக்கிறது.

தயாரிப்பாளராக கமல்ஹாசன் மீண்டு வந்துவிட்டார். ஆனால் அவர் ‘நாயகன்' ஆக மீண்டு(ம்) வரவேண்டும். அப்படித் திரும்பி வரும் போதும் அவரிடம் கேட்பதற்கு ஒரே ஒரு கேள்வி எஞ்சி நிற்கும்.

நீங்க நல்லவரா? இல்ல கெட்டவரா?

(கணேஷ் சுப்புராஜ், சினிமா உதவி இயக்குநர்)

ஜூலை, 2022