சிறப்புப்பக்கங்கள்

குறி தவறும் குருநாதர்

முத்துமாறன்

1995. மார்ச் மாதம். அத்வானியின் சோம்நாத்-அயோத்தி ரதயாத்திரைக்குப் பின்னால் பாஜக பெருமளவு வட இந்தியாவில் செல்வாக்குப் பெற்றது. முதல்முதலாக குஜராத்தில் ஆட்சி அமைத்தது. அப்போது முதல்வராக ஆனவர் கேசுபாய் படேல். ஒரு மதியப்பொழுதில் கேசுபாயும் அத்வானியும் பின்சீட்டில் அமர்ந்திருக்க முன் சீட்டில் இளையதலைவரும் அத்வானியின் சீடருமான நரேந்திரமோடியுடன் ஒரு காண்டெஸா கார் காந்திநகர் சர்க்கியூட் ஹவுஸ் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. காரை ஓட்டிக் கொண்டிருந்த டிரைவர் கேசுபாய்க்கு பல ஆண்டுகளாக காரோட்டிவருகிறவர். வழியில் நடந்து சென்றுகொண்டிருந்த இன்னொரு பாஜக தலைவர் கோவிந்தாச்சார்யாவைப் பார்க்கிறார். உடனே அவர்  காரை நிறுத்தி மோடியை இறங்கச்சொல்லிவிட்டு கோவிந்தாச்சார்யாவை ஏற்றிக்கொள்கிறார். அத்வானி ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. அன்றைக்கு இருந்த அதிகாரச் சமநிலை அப்படி.

இன்று அத்வானிக்கே அவர் விரும்பியபடி பிரதமர் பதவிக்குப் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவர் போட்டியிட விரும்பிய தொகுதி வழங்கப்படவில்லை. இன்று எல்லா இடங்களிலும் மோடி! அத்வானியின் சிஷ்யர் மோடி!

1985-லிருந்தே ஆர்.எஸ்.எஸ்சிலிருந்து பாஜகவுக்கு அனுப்பப்பட்ட நரேந்திரமோடி அத்வானிக்கு நெருக்கமாக இருந்தவர். பாரதிய ஜனசங்கமாக இருந்து பின்னர் 1980-ல் தொடங்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி 1984 நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றே இடங்களில் வென்றதற்குப் பின்னரே தொடங்குகிறது. ராஜிவை வீழ்த்தி விபிசிங் அரசு அமைந்தபோது கணிசமான இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருந்ததற்கு வாஜ்பாய்- அத்வானி கூட்டுத்தலைமைதான் காரணம். அதன்பின்னர் இந்துத்துவ அலை வடக்கே பரவமிக முக்கியக் காரணம் அத்வானி மேற்கொண்ட சோம்நாத்-அயோத்தியா ரதயாத்திரை. அப்போது அவருடன் உடனிருந்து கவனித்துக் கொண்டவர் குஜராத்தில் வளர்ந்துகொண்டிருந்த நரேந்திரமோடி. கிட்டத்தட்ட மகன்போல அத்வானியை மோடி கவனித்துக்கொண்டாராம்! குருஜி என்றுதான் அவரை அழைப்பாராம்! அத்வானிக்கும் குஜராத்தில் தனக்கொரு நம்பிக்கையான ஆள் தேவைப்பட்டதால் மோடியை அவர் வளர்த்துவிட்டார். மோடிக்குப் பிரச்னை வந்தபோதெல்லாம் அவரைக் கட்சிக்குள் காப்பாற்றியவர் அத்வானி.

குஜராத்தில் கேசுபாய் படேல் போய் சங்கர்சிங் வகேலா வந்தார். அவர் மோடி அளவுக்கதிகமாக அரசியல் நிர்வாகத்தில் தலையிடுகிறார் என்று  புகார் சொன்னார். அவரது அரசும் கவிழ்ந்தது. இதை அடுத்து குஜராத்தில் இருந்து மோடி வெளியேற்றப்பட்டார். அப்போது புதுடெல்லியில் அவருக்கு கட்சிப்பதவி கொடுத்து அத்வானி கூடவே வைத்துக் கொண்டார்.

அத்வானி வீடுதான் புதுடெல்லியில் மோடிக்கு கதி. எப்போதும் அங்கேயே இருப்பார். அவர் சொல்லும் வேலைகளை சிரமேற்கொண்டு செய்வார். கட்சியில் மேலும் பல பொறுப்புகளைப் பெற அது உதவியது.

2001-ல் குஜராத்தில் நிலநடுக்கத்துக்குப் பின்னால் பாஜக முதல்வர் கேசுபாய் படேலுக்கு எதிராக கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்தபோது அங்கே மோடியை முதல்வராக அனுப்ப முக்கியக் காரணமாக இருந்தவர் அத்வானி. டெல்லியில் தேசிய அரசியலில் மோடி இருப்பதை விட மாநில முதல்வராக இருப்பது தனக்குப் பலம் என்று கருதினார் அத்வானி.

மோடி போய்ச்சேர்ந்தபின்னர் அங்கே மதக்கலவரம் நடந்தது. அது மோடிக்கு கட்சிக்குள்ளும் நாட்டிலும் பெரும் எதிர்ப்பை உருவாக்கியது. பிரதமர் வாஜ்பாய் கூட மோடிக்கு எதிர்நிலை எடுத்தபோது அத்வானியின் தலையீடு இல்லாமல் இருந்தால் அவர் காணாமல் போயிருக்கக் கூடும்.

அதன்பின்னர் மோடி மூன்றுமுறை முதல்வர் பதவியில் வென்றுவிட்டார். அதுவரை அமைதியாக இருந்த மோடி மெல்ல தேசிய அரசியலில் தன் பார்வையை செலுத்தினார்.2009-ல்  நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தன் பிரதமர் வேட்பாளராக அத்வானியை அறிவித்தது. அப்போது  அக்கட்சியை தலைமையேற்று நடத்திச் சென்ற அத்வானியால் வெற்றியை பெறமுடியவில்லை. எதிர்பாராத விதமாக காங்கிரஸ்தான் வென்றது.

காலங்கள் மாறுகின்றன. குஜராத்தில் வெற்றிகரமான முதல்வராக இருந்த மோடி மெல்ல கட்சிக்குள்ளும் தன் செல்வாக்கை வளர்த்தெடுத்து, அத்வானியின் எதிர்ப்பையும் மீறி முதலில் பாஜகவின் பிரச்சாரக் குழுத் தலைவராக தெரிவானார். ஆனால் அதற்கும் அத்வானி வெளிப்படையாக எதிர்ப்பைக் காட்டினார். தன்னுடைய மூன்று கட்சிப்பதவிகளையும் ராஜினாமா செய்தார். ஆனால் பின்னர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் தொலைபேசியில் பேசியபின்னர் ராஜினாமாவை வாபஸ் பெற்றார். கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு அவர் கட்சியை நடத்தும் விதம் தனக்கு வருத்தத்தை அளிப்பதாக கடிதமும் எழுதினார். ஆனால் இந்த எதிர்ப்பையும் மீறி பின்னர் பிரதமர் பதவிக்கான வேட்பாளராகவும் மோடி முன்னிறுத்தப்பட்டபோது  காலத்தின் சுழற்சி முடிவடைந்துவிட்டது பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி உள்ளிட்டவர்கள் மோடி பக்கம் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக மோடியின் தாய்வீடான ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய முழு பலத்தையும் அவருக்கு அளித்திருக்கிறது. இது அக்கட்சியைப் பொறுத்தவரை மூத்த தலைவர்கள் வழிவிட வேண்டிய காலம்! முரளிமனோகர் ஜோஷி அதை உணர்ந்து வாரணாசியை மோடிக்கு அளித்து ஒதுங்கிவிட்டார்! ஆனால் அத்வானி தேர்தலில் போட்டியிட சீட் ஒதுக்கப்பட்டதிலும் தன்னுடைய கசப்பைக் காட்டினார். அவருக்கு குஜராத்தில் காந்திநகர் ஒதுக்கப்பட்டபோது அவர் மத்திய பிரதேசத்தில் போபால் தொகுதிவேண்டும் என்று சொல்லிப்பார்த்தார். ஏற்கெனவே மோடியோடு மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹானை ஒப்பிட்டுப் பேசி குட்டையைக் குழப்பியிருந்தது ஞாபகத்துக்கு வரலாம்.

ஆனால் கடைசியில் பாஜக தலைவர்கள் (மோடியும் கூடத்தான்) அவரைச் சந்தித்து காந்திநகரையே ஏற்க வைத்தனர். காந்திநகரில் அத்வானி போட்டியிடாமல் போயிருந்தால் குஜராத்தில் அத்வானிக்கே பாதுகாப்பு இல்லை போலிருக்கிறது என்ற பிரச்சாரம் தூள் பறந்திருக்கும்.

சீடனின் வளர்ச்சி குருவுக்கு சற்று கசப்பாக இருப்பினும் எல்லாம் சரியாகிவிடும் என்கிறார்கள் பாஜகவினர்.

இந்திய வரலாறு முழுக்க குருவுக்கும் சீடனுக்குமான உறவுகளின் பல்வேறு மாறுபட்ட அம்சம்ங்கள் குறித்த சம்பவங்கள் விரவிக் கிடக்கின்றன.

இந்திய நவீன வரலாற்றின் ஆரம்பத்தில் காந்தி தன் சீடர்களில் ஒருவரான நேருவை பிற தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி பிரதமர் ஆக்கமுனைந்தார். தனக்கு மிக நெருக்கமான வல்லபாய் படேலை விட அவர் நேருவையே தொலைநோக்கில் சிறந்த பிரதமராக  கருதினார். இது சீடனை முன்னிறுத்திய குருவின் கதை.

தமிழ்நாட்டிலும் திராவிட அரசியல் அப்படித்தான். பெரியாரிடம் இருந்து அவரால் வளர்க்கப்பட்ட ஒரு மிகப்பெரிய சீடர் கூட்டமே மிகச் சங்கடமான ஒரு நிலையில் வெளியேறி புது இயக்கம் கண்டது. ஆனாலும் கடைசிவரை அவர்கள் பெரியாருக்கென தனி இடத்தைக் கொடுத்து வைத்திருந்தார்கள். அதனால்தான் 1967-ல் திமுக வென்றபோது பெரியாரின் ஆதரவு அவர்களுக்கு மறுபடியும் கிடைத்தது.

இதே இயக்கத்தில் இன்னொரு பிளவும் ஏற்பட்டது. அதுவும் குரு-சீடன் மோதல்தான். தன் காலடியிலேயே அமர்ந்து தன்னை நேசித்த வைகோவுக்கு மூன்றுமுறை மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்து பெருமைப்படுத்தினார் கலைஞர். வைகோவின் மாநிலங்களவைப் பேச்சு நூலாக வெளியிடப்பட்டபோது அதில் முன்னுரை எழுதியவர் கருணாநிதி. ”நான் கோபால்சாமிக்கு தலைவர் மட்டுமல்ல; தாயுமானேன்’ என்று குறிப்பிட்டிருப்பார் அவர். ஆனால் அவரே 1993-ல் வைகோவை கட்சியை விட்டு வெளியேற்றினார்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை மேல்மட்டத்தில் குரு-சீடர் மோதல் ஏற்பட வாய்ப்பில்லை. ஏனெனில் அது ஒரு குடும்பத்தின் தலைமையையே பெரிதாக நினைக்கிறது. ராகுல்காந்தி இப்போது தன் அரசியல் குரு என்று சோனியாவையும் மன்மோகன்சிங்கையும் சொல் கிறார். இவர்களுக்கு எதிராக அவரும் திரும்பப் போவதில்லை. இவர்களும் எதிர்க்கப்போவது இல்லை.

ஆம் ஆத்மி கட்சியே அவர்களின் ஊழல் எதிர்ப்பு குருவான அன்னா ஹசாரேவின் கசப்பில்தான் உருவானது. முதல்வரான பின்னால் கெஜ்ரிவால் ஹசா ரேவை சந்திக்கவில்லை. அவரும் இவருக்கு எந்த ஆதரவும் தெரிவிக்கவில்லை. விமர்சகராகவே தொடர்கிறார்.

மிக அற்புதமான குரு-சிஷ்ய உறவுகள் நம் வரலாற்றில் உள்ளன. அதில் குறிப்பிடத்தகுந்தது ராமகிருஷ்ணருக்கும் விவேகானந்தருக்குமானது. சீடரான நரேந்திரனைப்(விவேகானந்தரின் இளம்வயது பெயர்) பார்க்காமல் சிலநாட்கள்கூட ராமகிருஷ்ணர் இருக்கமாட்டார். அவரால் இருக்க இயலாது.

ஒருமுறை நரேந்திரன் ராமகிருஷ்ணரைப் பார்க்க பலவாரங்கள் வர இயலவில்லை. பிரம்மசமாஜ் கூட்டங்களில் பாடுவது நரேந்திரனுக்கு வழக்கம் என்பதால் அந்தக்கூட்டத்துக்கு தன் சீடனைப் பார்க்க ராமகிருஷ்ணர் சென்றார். பாடகர்கள் குழுவில் நரேந்திரன் குரலை அவரால் தெளிவாகக் கேட்க முடிந்தது. குரலைக் கேட்டவுடன் ராமகிருஷ்ணர் பரவசநிலையை அடைந்தார். கூட்டமே திரும்பி அவரைப் பார்த்தது. பெரும் குழப்பம் உண்டானது. நரேந்திரன் ஓடிச்சென்று அவரைத் தாங்கிகொண்டு மதிப்புடன் கடிந்துகொண்டார். குருவோ கண்ணீர்ப் பெருக்குடன் என் சீடனான உன்னைப் பிரிந்து என்னால் இருக்க முடியவில்லை என்றார். இன்னொருமுறை நரேந்திரனைப் பார்க்க அவர் வீட்டுக்கே வருகிறார் ராமகிருஷ்ணர். நரேந்திரன் இரண்டாவது மாடியில் படித்துகொண்டிருக்கிறார். இன்னொருவரின் உதவியுடன் படியேறுகிறார். பாதிவழியிலேயே நரேந்திரன் மாடியிலிருந்து எட்டிப்பார்க்கிறார். அவனைக் கண்டதுமே அன்புப் பெருக்கெடுத்தோட பரவசநிலையை குரு அடைகிறார். அவரைப் பெரும் சிரமப்பட்டு அறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். உள்ளே சென்றதும் உடனே ஆழ்ந்த சமாதிநிலையை அடைகிறார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

”உலகவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்கள்தான் அன்பு காட்டமுடியும் என்கிறார்களே? அவர்களுக்கு அன்பைப் பற்றி என்ன தெரியும்? வெறுமனே பாசாங்குதான் செய்யமுடியும். என் குரு மட்டுமே ஆழமான அன்பை அறிந்தவர்” இது விவேகானந்தரே பின்னாளில் சொன்னது.

குருக்கள் தன் சீடர்களின் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் அவர்களது வளர்ச்சி தன் ஆசனத்துக்கே ஆபத்து என்கிறபோது பதட்டமும் வருத்தமும் அடையாமல் இருப்பது வெகுசிலருக்கே சாத்தியம். அதுவும் அதிகார அரசியலில்  தன்னை விஞ்சும் சீடர்களை குருக்கள் விரும்புவதில்லை. வேண்டுமானால் அமைதிப்படை அமாவாசையிடம் கேட்டுப்பாருங்கள்!

ஏப்ரல், 2014.