நாஞ்சில் நாடன் 
சிறப்புப்பக்கங்கள்

குயிலும் காகமும் புள்ளினமே!

தலைகீழ் விகிதங்கள்

நாஞ்சில் நாடன்

பதினொன்றாம் வகுப்பு, புதுமுக வகுப்பு, பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு நிலைகளில் எழுதிய அரசு வேலைக்கான தேர்வு ஒன்றிலாவது தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், பம்பாய்க்குப் பையைத் தூக்கிக்கொண்டு பயணப் பட்டிருக்க மாட்டேன். விலை தந்து வேலை வாங்கும் காலத்தின் தொடக்கம் அது. இன்று வேலை வாங்கியோர் இடம் மாறுதல் பெறவும் விலைதான் என்கிறார்கள்.

பம்பாய் சென்று சேர்ந்து சோற்றுக்கும், அறை வாடகைக்கும், ரயில்வே சீசன் டிக்கெட்டுக்கும் அல்லாடிய காலம். நட்பும் அமையப் பெறாத, உறவு என எவரும் இல்லாத நேரத்தின் தனிமை, விரக்தி, தன்றிடம் இன்மை வாட்டிய போது, பம்பாய்த் தமிழ்ச்சங்க நூலகம் பெரும் ஆறுதலாக இருந்தது. தமிழ் நாளிதழ்களும் பருவ இதழ்களும் அங்கு சென்றே வாசிப்பது.

அதுவே என் எழுத்து வாழ்க்கையின் ஊற்றுக்கண் அல்லது நாற்றாங்கால். 1975-ஆம் ஆண்டில் ஜூலை மாதம் ‘தீபம்‘ மாத இதழில் முதல் சிறுகதை ‘விரதம்‘ வெளியானது. அது அம்மாதத்தில் சிறந்த சிறுகதையாக ‘இலக்கியச் சிந்தனை‘யால் தேர்ந்தெடுக்கப் பெற்றது. எனது ஏழெட்டுச் சிறுகதைகள் குறும்படமாகவும் திரைப்படமாகவும் ஆகியுள்ளன. அவற்றுள் விரதமும் ஒன்று.

தொடர்ந்து நண்பர்கள் பலரும் என்னை நாவல் எழுதத் தூண்டினார்கள். குறிப்பாக கவிஞர் கலைக்கூத்தன், வண்ணதாசன். 1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எனது முதல் நாவல் ‘தலைகீழ் விகிதங்கள்‘ வெளியானது. அதனைச் செப்பம் செய்தவர் ‘பாரதி‘ திரைப்பட இயக்குநர், நண்பர் ஞான.ராஜசேகரன்.

இதுவரை எனதிந்த முதல் நாவல், Bud - Bombay, அன்னம், விஜயா பதிப்பகம், காலச்சுவடு பதிப்பகம் என நான்கு வெளியீட்டாளர்களால் பல பதிப்புகள் கண்டுள்ளது. குறுங்கணக்குப் பார்த்தால், இந்த நாற்பத்தைந்து ஆண்டுகளில் முப்பதினாயிரம் படிகள் விற்றிருக்கும். கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ்நாடு அரசு எனது எந்தப் புத்தகத்தையும் வாங்குவதில்லை என்றாலும் கூட, ஒற்றைப் படிகளாக இன்னும் வாசகனால் வாங்கப் பெறும் பெருமை படைத்தது இந்நாவல்.

எனது முதல் நாவல் அச்சு வடிவம் பெற மூல காரணமாக இருந்தவர், நான் எழுத்தனாகப் பண்புரிந்த நிறுவனத்தின் C.E.O. பார்சி இனத்தவர், மெர்ஸ்பென் தன்பூரா என்று பெயர். அவருக்குத் தமிழ் பேச, வாசிக்க, எழுதத் தெரியாது. எனது பணியின் காரணமாக நான் ஏற்படுத்தியிருந்த நம்பிக்கையே ஆதாரம் அவருக்கு.

நாவல் எழுதுவது என்ற உறுதிப்பாட்டுக்கு வந்த பிறகு, அது பற்றிய சிந்தனையிலேயே திரிந்தேன் சிலகாலம். சில கதைகளும் எழுதினேன். என் கதைகளை வாசித்து விட்டு பம்பாய் தமிழ்ச் சங்கத்தில் நான் மதிக்கும் ஒருவர் மலம் துடைக்க ஆகும் இந்த தாள்கள் என்றார்.

என்றாலும் மனம் நாவலில் மையம் கொண்டு நின்றது. பிறந்து, வளர்ந்து, வாசித்து, விளையாடி, இருபத்தைந்து வயதுவரை உடலிலும் மனதிலும் தூவியும், பூசியும் வாழ்ந்த மண் நாஞ்சில் நாடு.

நாஞ்சில் என்றால் கலப்பை என்றே பொருள். புறநானூற்றில் பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுல வியனார் பாடலில் நாஞ்சில் எனும் சொல்லைக் கலப்பை எனும் பொருளில் ஆள்கிறார். கலப்பையை ஆயுதமாகக் கொண்ட பலராமனை, கலித்தொகை நாஞ்சிலான் என்கிறது. என்னை இன்று நண்பர்கள் நாஞ்சிலார் என்பர்.

நாஞ்சில் மண்ணும், மனிதர்களும், தாவரங்களும், புட்களும், மீன்களும், விலங்குகளும் என்னை வெறித்துப் பார்த்தனர் மனதுள். தூற்றல், சாரல், மழை, அடைமழை ஆதங்கப்பட்டன. தென்றல், வாடை, கொடுங்காற்று எனக் குமுறின. பங்குனி வெக்கையும் மார்கழிக் குளிரும் அலைக்கழித்தன. குளம், ஏரி, தெப்பக்குளம், வாவி, பொய்கை, தடாகம், குட்டை, நீராவி என ஈரப்படுத்தின. பழையாறு, தேரேகால், அனந்தனாறு, புத்தனாறு, சானல்கள், ஓடைகள், வாய்க்கால்கள் யாவும் துழாய்ந்து நீராட அழைத்தன. சடங்குகள், பண்டிகைகள், பயின்ற உழவுத் தொழில், குழைக்கம்பு பொறுக்குதல், தாள் பிடுங்குதல், உரம் சுமத்தல், சூடடித்தல், மாடு மேய்த்தல் யாவும் நினைவில் நின்று ஆடின. பன்னிரண்டு வயது முதல் கோயில்களில் கேட்ட சங்கீதம், கோயில் கொடைகளில் கேட்ட - பார்த்த வில்லுப்பாட்டு, நையாண்டி மேளம், வரத்துப் பாட்டு, வாழிபாடுதல், கணியான் கூத்து, கும்பாட்டம், ஆலி ஆட்டம், பொய்க்குதிரை ஆட்டம், மயிலாட்டம் என சாடி மறிந்தன. நம்பிரான் விளையாட்டு, சூரன்பாடு, காளியூட்டு, உச்சிக்கொடை, அம்மன் கோயில் சிறப்பு, சாத்தாங்கோயில் கஞ்சி, அம்மன் கோயில் பொங்கல் சோறு, பிள்ளையார் கோயில் கொழுக்கட்டை, அன்னைக்கொடைகளின் ஊட்டுப்புரை, படப்புச் சோறு, அரிசிப்பாயசம், திருப்பதி சாரத்துத் திருவாழ் மார்பன் தின்று மீந்த அரவணை என ஏங்கி ஏமாந்து கிடந்தது மனது.

பம்பாயின் அளவுச் சாப்பாடில் அரை வயிறே நிரம்பிய காலம். சில ஞாயிறுகளில், மத்தியானம், விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலையத்து நடை மேடை பெஞ்சில் அமர்ந்து, சென்னை போகும் விரைவு ரயிலை ஏக்கத்துடன் பார்த்துத் தொண்டை அடைக்கத் திரும்பியதுண்டு.

எனில் நாவல் எழுதுவது எனது சொந்த மண் குறித்த ஏக்கங்களுக்கு, வயமின்மைக்கு, வடிகாலாக இருந்தது. வடிகால் என்றால் சாக்கடையல்ல, மறுகால். நாவலைப் படித்தவர்கள் அறிந்து கொண்டிருப்பார்கள் இன்று நான் காகமா குயிலா என்று. நானோ காகமோ, குயிலோ, இரண்டுமே புள்ளினம் தானே என்ற மனநிலையில் இருக்கிறேன், அதை உணர்ந்து கொள்ள நாற்பத்தைந்து ஆண்டுகால எழுத்தனுபவம் தேவையாக இருந்தது.

எங்கிருந்து தொடங்குவது புதியதோர் நாவலை, அதுவும் முதல் நாவல் எனும் வினா எதிர் நின்றது.

நான் பட்டப் படிப்பின் இறுதியாண்டில் இருந்தபோது, நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. திடீரென ஒரு நாள் மாலை, எந்த முன்னறிவிப்பும் இன்றி, என்னை மாப்பிள்ளை பார்க்க வந்தனர் ஐந்து மூத்த ஆண்கள். எனக்கப்போது இருபத்தோரு வயது. இன்னும் படிப்பு முடித்திருக்கவில்லை. வேலை கிடைத்திருக்கவில்லை. அஃதென்றும் பிரச்னை இல்லை என்றும், வேலை அவர்களே வாங்கித் தந்து விடுவதாகவும் சொன்னார்கள். பெண், பெற்றோருக்கு ஒற்றைக்கொரு மகள் என்பதால் அவர்களது வீட்டோட இருந்து கொள்ளலாம் என்றனர்.

எனது தாவர சங்கம, அசையும் அசையாத சொத்துகள் யாவுமே படிப்பு தான். ‘நல்ல படிக்கிற பய, அசத்துப் பயக்களோட கூட்டு கெடையாது, பீடி வெத்தலை பாக்கு, பொடி, கள்ளு - சாராயம்- செவுரு முட்டி பழக்கம் இல்லே!‘ என்பன என்னக்கான தகவுச் சான்றிதழ்கள்.

என்னை மாப்பிள்ளை பார்க்க வந்தவரில் சிலரையும், கருதிப் பேசிய அந்தப் பெண்ணையுமே தெரியும் எனக்கு! எங்கள் ஊர் வீர நாராயணமங்கலத்தில் இருந்து, குறுக்குப்பாதையில் நடந்தால் மூன்று மைல் நாவல்காடு. அப்பன் கூடப் பிறந்த தங்கையை அங்குதான் கெட்டிக் கொடுத்திருந்தது. அத்தை வீட்டுக்கு ஆண்டில் பலமுறை போவேன். எனவே பேச வந்த பெண்ணைப் பலமுறை பார்த்திருக்கிறேன், சிறுமியில் இருந்தே! நிறமும் களையும் திருத்தமுமான பெண்ணாக வளர்ந்தும் இருந்தாள். ஐம்பதாண்டுகள் கடந்த பின்பும் இன்றும் என்னால் நினைவில் நிறுத்தி எழுத முடிகிறது என்றால் காணாதா?

மறுக்க எந்த முகாந்திரமும் இல்லை என்றாலும் மூர்க்கமாக மறுத்தேன். படித்து முடித்து, வேலை தேடி, தன் காலில் நிற்கும் ஆசை. வீட்டில் ஏழுபேரில் நான் மூத்தவன். ஒரு தங்கையும், ஐந்து தம்பிகளும். கடைசித் தம்பி ஆரம்பப் பள்ளியில் இருந்தான். இன்று அவன் உதவி ஆட்சியர். அவர்களைக் கரையேற்ற அப்பாவுக்கு உதவ வேண்டும்.

அப்பா ஓர் நேர் சம்சாரி. மூன்று சென்ட் நிலத்தில் தென்னையோலைக் கூரை வேய்ந்த வீடு! நான்கு கோட்டை விதைப்பாடு பாட்டம். உழவுக்கு இரண்டு எருமைக் கடாக்கள். கறவைக்கு ஒரு எருமை மாடு. பத்திருபது கோழிகள் - சேவலும் பெடையுமாக - கிடக்கும் கோழிக்கூடு. இரண்டு தென்னை, ஒரு முருங்கை, ஒரு கறிவேப்பிலை மரம்.

வாழ்க்கையே புரந்தரனார் பெருந்தவமாய்ப் போய்க்கொண்டு இருந்தது. நானாவது கரையேறட்டும் என்று பெற்ற அம்மா - அப்பா, வளர்த்த சித்தி - சித்தப்பா சொன்ன புத்திமதி எதுவும் ஏறவில்லை எனக்கு. முடிவில் என் பிடிவாதமே வென்றது!

அந்த இடத்தில் தொடங்கி, அந்தக் கல்யாணம் நடந்து கூடியிருந்தால் என்னவாகியிருக்கும் என்ற என்புனைவே என் முதல் நாவல். தலைகீழ் விகிதங்கள். இந்த சம்பவம் நடந்தது 1968-இல். நான் நாவலாக எழுதியது 1977-இல். உண்மையில் எனக்குத் திருமணமானது 1979-இல்.

இதனை வட்டார வழக்கு நாவல் என வகைப்படுத்திச் சிறுமைப் படுத்தியது கல்வியறிவுப் புலம். வட்டார வழக்கு எனப்படுவது யாதெனில் என்று தொடங்கி சில முழு நீளக் கட்டுரைகள் எழுதினேன் பிற்றை நாளில்.

சொற்களை ஊதாரித்தனமாக விரயம் செய்கிறவன் என்றும், மேம்போக்கான முற்போக்குவாதி என்றும் தரப்படுத்தினார் நான் என்றும் மதிக்கும் மூத்த எழுத்தாளர். என் சில சொற்கள் அப்பளத்தில் கல் என்றார் இன்னொருவர். வெள்ளாள சாதி எழுத்து என்றனர், தத்தம் சொந்த சாதி மரபைப் பேணிய-வர்களும் சாதிக்கு வெளியே பெண் எடுக்கா-த-வர்களும், கொடுக்காதவர்களும். ‘என்ன எப்பப் பார்த்தாலும் அவியல், தீயல், எரிசேரி, புளிசேரி, பிரதமன்?‘ என்றனர். வெறுஞ்சோற்றுக்கே அலந்து கிடந்தவன் சிக்கன் மஞ்சூரியனும், அஜ்மீர் பிரியாணியும், விருதுநகர் புரோட்டாவும் கொல்கொத்தா ரஸ்குல்லாவும், காமதேனுப் பசுவின் வாரிசுகளின் சுத்த நெய்யில் சுட்ட இனிப்புகளையுமா எழுதவியலும்?

‘தலைகீழ் விகிதங்கள்‘ எழுதி இருபது ஆண்டுகள் கடந்த பிறகு தங்கர் பச்சன் இதனை ‘சொல்ல மறந்த கதை‘ எனும் தலைப்பில் சினிமாவாக எடுத்தார். இயக்குநர் சேரன் நடிகராக வந்த முதல் படம். சன்மானமாகக் கிடைத்த இலட்ச ரூபாய் இதயத்தில் ஸ்டென்ட் வைத்துக் கொள்ளும் மருத்துவத்துக்கு சமன்பட்டது.

‘சொல்ல மறந்த கதை‘ வெளியான பிறகு நாகர்கோயில் போயிருந்தபோதும் என் தம்பி மகன் நாகலிங்கத்துடன் சென்று பயோனியர் முத்து தியேட்டரில் அந்த படம் மறுபடியும் பார்த்தேன். இப்போது அவன் எம்.எஸ். படித்து முடித்துவிட்டு, கலிஃபோர்னியாவில் பணிபுரிகிறான். படம் முடிந்து வெளியே வந்ததும் அவன் கேட்டான் “இவுனுக்கு என்ன பெரீப்பா பிரச்னை?' என்று. ஆமாம் அதுவும் நாவல் பற்றிய ஒரு பார்வை. கோணம், புரிதல்!

மொழியில், வெளிப்பாட்டுத்திறனில், உத்தியில், சொல் முறையில் முதல் நாவலில் இருந்து கன தொலைவு கடந்து வந்திருப்பதும் அறிவேன். இருபதாண்டு காலத்தில் ஆறு நாவல்கள் எழுதினேன். எனது ஆறாவது நாவல் ‘எட்டுத்திக்கும் மதயானை‘. அதன் பிறகு இருபத்து மூன்று ஆண்டுகள் ஆயினும் நாவலேதும் எழுதவில்லை.

அன்னம் பதிப்பகத்து வெளியீடாகத் ‘தலைகீழ் விகிதங்கள்‘ சில பதிப்புகள் வந்தன. கவிஞர் மீரா சொன்னார், சாகித்ய அகாதமி விருதுக்கான இறுதிச் சுற்றில் அந்த நாவல் இருப்பதாக. ஆனால் அதுவெனக்கு அருளப்பெற்றது இருபத்தைந்து ஆண்டுகள் சென்றபின். என்னிலும் இளையவரான, எனக்குப் பின் எழுதவந்த பலர் எனக்கு முன் அந்த விருது வாங்கிச் சென்றனர். பட்டியல் சொல்வது பண்பாகாது. அதற்கான முற்போக்கு, சமூகநீதி, சினிமா, அரசியல் செல்வாக்குகள் எமக்கில்லை என்பதுவும் அறிவேன்.

என்றாலுமென்? நாற்பத்தைந்து ஆண்டுகள் முன்பு எழுதிய நாவல் இன்னும் வாசிக்கப் படுகிறது என்பதுவும், புதிய பதிப்புகள் வருகின்றன என்பதுவும், கிளாசிக் நாவலாகக் கருதப்படுகிறது என்பதுவும் எழுத்தாளன் என்ற நிலையில் இறும்பூது தரும் செய்திகளே!

ஜனவரி, 2022