யதார்த்தத்தை போல் உணர்ச்சிகரமும் கலையின் மிக முக்கியமான கூறுதான். யதார்த்தம் அல்லது நடப்பியல் சினிமாவைத் திரைப்படத்துறையினரும் ரசிகர்களும் கலைப்படம் என்று அழைக்கிறார்கள். உணர்ச்சிகரமான மெலோடிராமா எனப்படும் மிகையுணர்ச்சி ததும்பி வழியும் சினிமாப்படங்களையே கமர்சியல் படங்கள் என்று அழைக்கிறார்கள். ஆக்ஷன் படங்களிலும் இடையிடையே உணர்ச்சிகரமன மெலோடிராமாக் கட்சிகள் இடம் பெறுகின்றன். மிகையுணர்ச்சி என்பது வெகு ஜன சினிமாவில் தவிர்க்க முடியத ஓர் அம்சம்.
1950-களிலும் 60 களிலும் ரசிகர்களின் மிகையுணர்ச்சியைத் தூண்டிவிடுகின்ற எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்தன. பல படங்கள் நூறு நாட்களுக்கும் மேல் ஓடி தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர் களுக்கும் லாபம் சம்பாதித்துத் தந்தன. நான் பார்த்த முதல் தமிழ்ப்படம் ஜெமினியின் தயாரிப்பான சம்சாரம். சோகம் தளும்பி வடியும் படமான இது நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. ‘சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம்’, அம்மா பசிக்குதே போன்ற பாடல்கள் ஜனரஞ்சகமாக இருந்தன. அம்மா பசிக்குதே பாடலைக் கேட்டு மனம் உருகாத ரசிகர்களே இல்லை.
அக்கால திரைப்பட ரசிகர்கள் சோகமயமான திரைப்படங்களை விரும்பிப் பார்த்தனர். 1951-ல் வெளிவந்த சம்சாரத்துக்குப் பின் 1952-ல் வெளிவந்த பராசக்தி ஒரு அபாரமான வெற்றிப்படம். செல்வச்சிறப்போடு இருந்த சகோதரர்கள் பிரிவது, சகோதரியும் சகோதரர்களும் வறுமையில் வாடுவது போன்ற காட்சிகள் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றன.
அந்நாட்களில் பல வங்கமொழிக் கதைகள் தமிழ்த் திரைப் படங்களாகின. அம்மொழியின் தலை சிறந்த நாவலாசிரியரான சரத் சந்திரரின் ஒரு நாவல்தான் தேவதாஸ். தேவதாஸ் கதை பல இந்திய மொழிகளில் திரைப்படமாகியது. தமிழிலும் வெளிவந்து வெற்றிப்படமாகப் பட்டித்தொட்டியெங்கும் ஓடியது. நாகேஸ்வரராவும் சாவித்திரியும் இணைந்து நடித்தனர். தேவதாஸ் பார்வதியின் நிறைவேறாத காதல் சோகம் தமிழர்களின் மனதைக் கவர்ந்தது. உலகே மாயம், ஓ தேவதாஸ் போன்ற பல பாடல்கள் தேவதாஸில் இடம் பெற்றன.
எவ்வளவு பெரிய நகராட்சியாக இருந்தாலும் ஒரு திரைப்படத்தை அந்த ஊரிலுள்ள ரசிகர்கள் எல்லோரும் தினசரி மூன்று காட்சிகளிலும் பார்த்தாலும் இரண்டு வாரங்களுக்குள் பார்த்துவிட முடியும். அதிக பட்சமாகப் போனால் மூன்று வாரங்கள். ஆனால், 100 நாட்களுக்கு மேல் அதுவும் பிழியப் பிழிய அழவைக்கும் சோகமயமான காட்சிகளைக் கொண்ட திரைப்படங்கள் இத்தனை நாட்கள் ஓடவேண்டுமென்றால் ரிபீட்டட் ஆடியன்ஸ் தான் காரணம். அதே படத்தை இரண்டு முறை மூன்று முறை என்று திரும்பத் திரும்ப பல ரசிகர்கள் பார்த்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு அப்படங்களின் மெலோடிராமா காட்சிகளில் ரசிகர்கள் மனம் தோய்ந்து கிடந்தனர். மெலோடிராமா என்பது என்ன? காதலிப்பதும் காதல் நிறைவேறாமல் போவதும் சகஜம்தான். ஆனால் காதலியை நினைத்து தேவதாஸ் குடிக்கிறார். முழுநேரக் குடிகாரராகி விடுகிறார். ஷயரோகம் வந்து சதா இருமுகிறார். இருமிக் கொண்டே உலகே மாயம் வாழ்வே மாயம் என்று பாடுகிறார். உடல் நலிவுற்ற நிலையிலும் காதலியைத் தேடி துர்காபூருக்கு ரயிலிலும் மாட்டு வண்டியிலும் இருமிக்கொண்டே பயணிக்கிறார். பார்வதி வாழும் ஜமீன் மாளிகையின் கதவு தேவதாஸ் வருவதைப் பார்த்து மூடப்படுகிறது. கதவில் மோதி தேவதாஸ் மரணமடைகிறார். தேவதாஸின் காதல் மிகைப்படுத்தப்பட்ட காதல். நடைமுறை வாழ்க்கையில் எந்தக் காதலனும் காதலியை நினைத்து மருகி குடித்து தன்னை அழித்துக் கொள்வதில்லை. இந்த மிகையுணர்ச்சிதான் தேவதாஸின் வெற்றிக்குக் காரணம்.
இக்காலத்தில் விவாகரத்துக்கள் அதிகரித்துவிட்டன. 40, 50 ஆண்டுகளுக்கு முன்னால் பெண்கள் மனதுக்குப் பிடிக்காத கணவர்களுடன் சகித்துக் கொண்டு வாழ்க்கை நடத்தினர். கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற வழக்கு மொழியே அதுபோன்ற அந்நாளைய பெண்களுக்காகக் கூறப்பட்டதுதான். பெண்களின் இந்த மனநிலையைச் சித்திரித்து பல தமிழ்ப்படங்கள் வெளிவந்தன. கணவனே கண்கண்ட தெய்வம் என்ற படத்தில் சாபத்தினால் குரூபியான கணவனுடன் மனைவி வாழ்கிறாள். அவளே முயன்று அவனது குரூப வடிவத்தையும் மாற்றி, பழைய வடிவுக்குக் கொண்டுவருகிறாள்.
தங்கப் பதுமையில் பெண்ணாசையினால் மனைவியைப் பிரிந்த கணவன் அரசினால் கண்களை இழக்கும் தண்டனைக்குள்ளாகி மனைவியின் பதிவிரதா தன்மையால் அவளுடன் கடைசியில் இணைகிறான். நடைமுறை வாழ்வில் முகக் குரூரத்தையோ தீக்கோலினால் இழந்த கண்களையோ திரும்பப்பெற்று முகம் சீரமைக்கப்படுகிற விஞ்ஞான வளர்ச்சியெல்லாம் இக்கதைகள் நடைபெறும் காலகட்டத்தில் இல்லை. ஆனால் கணவனே கண்கண்ட தெய்வத்திலும் தங்கப் பதுமையிலும் இது சாத்தியமாகியிருக்கிறது. மனைவியரின் கற்பும் அவர்களது முயற்சிகளும் பெரும் சோகத்துடன் இப்படங்களில் சித்திரிக்கப்பட்டு அவை ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றன. இப்படங்களின் மிகைப்படுத்தப் பட்ட மெலோ டிராமாக் காட்சிகள்தான் இவை நூறு நாட்கள் ஓடியதற்குக் காரணம்.
மெலோடிராமா திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் என்றதும் உடனே நினைவிக்கு வருகிறவர்கள் டைரக்டர் ஏ.பீம்சிங்கும்,கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும்.ஏ.பீம்சிங் ‘ப’ வரிசைப் படங்களை இயக்கியவர் என்று அக்காலத்தில் பத்திரிகைகளால் பாராட்டப்பட்டவர். பதிபக்தி, பாகப்பிரிவினை, பாவ மன்னிப்பு, பாச மலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும்,பாத காணிக்கை,பச்சை விளக்கு, பழனி என்று ‘ப’ என்ற எழுத்தை ஆரம்பமாகக்கொண்ட திரைப்படங்களை இயக்கியவர் ‘பீம்பாய்’ என்ற பீம்சிங்.
இவரது திரைப்படங்களில் குடும்ப வாழ்வுதான் சித்திரிக்கப்பட்டது என்றாலும் யதார்த்தத்தை மீறிய மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றிருந்தன.‘பதிபக்தி’யில் இராணுவத்திலிருந்து வீடுதிரும்பும் ராணுவ வீரர் தன் குடும்பத்தை தேடுகிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் தன்னுடன் இராணுவத்தில் பணிபுரிந்த நண்பனையே சுட முயல்கிறார். பாகப்பிரிவினையில் சிவாஜிகணேசனுக்குப் பக்கவாதம். ஆனாலும் அவரை மணந்து கொள்கிறார் சரோஜாதேவி. அண்ணன் தம்பிகளுக்குள் சண்டையை மூட்டிவிட்டு சொத்தை பிரிக்கக் காரணமான வில்லனாக எம்.ஆர்.ராதா.
சர்க்கஸ் பார்க்கச் சென்ற சிவாஜியின் முடமான கால்,கைகள் மின்சார ஒயரைத்தொட்டதால் சுகமாவதாக கதை முடிகிறது. மின்சாரத்தைத் தொட்டால் மரணம் என்பது நடைமுறை யதார்த்தம். ஆனால் சிவாஜியின் நோய் குணமாவது பீம்சிங்கின் மிகைப்படுத்தல்.
ராணுவ வீரர்களைப் பற்றிய கதைதான் பார்த்தால் பசிதீரும். பாகப்பிரிவினையைப் போல் குருடாகி உடல் ஊனத்துடன் சிவாஜி கணேசன் பாலும் பழமும் திரைப்படத்தில் தோன்றுகிறார். பார்த்தால் பசி தீரும் படத்திலும் சாவித்திரிக்குக் கண் பார்வை சரியில்லை. உடல் ஊனம் திரைப்பட ரசிகர் களிலிருந்து கண்ணீரை வரவழைக்க உதவும் ஒரு திரைக்கதை
சாதனம்.
பாசமலரும், பச்சை விளக்கும் தங்கைக்காக வாழும் அண்ணனின் உருக்கமான திரைக்கதை அமைப்பைக்கொண்ட படங்கள். பாச மலர் சிவாஜிகணேசன் தங்கையைப் பிரிந்து, மனைவியை இழந்து தனியே தன் குழந்தையுடன் வாழ்ந்து இறந்து போகிறார். அண்ணனின் பிணத்தின்மீது விழுந்து தங்கை சாவித்திரியும் உயிரை விடுகிறார். அடுக்கடுக்கான துயரச் சம்பவங்கள், உச்சக்கட்ட காட்சியின் மரணங்கள் இவற்றால் பாதிக்கப்படாத ரசிகர்களே அன்று இல்லை.தியேட்டரை விட்டு படம் முடிந்து வெளியே வரும்போது ரசிகர்கள் கண்களைத் துடைத்துக்கொண்டே வந்தார்கள். பாசமலரும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்குனராவதற்கு முன் ‘தெய்வப்பிறவி’ போன்ற படங்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார்.‘சாரதா’தான் அவர் இயக்கிய முதல்படம்.எஸ்.எஸ்.ராஜேந்திரனும் விஜயகுமாரியும் காதலித்துத் திருமணம் செய்தவர்கள். கல்லூரி ஆசிரியரான எஸ்.எஸ்.ஆர். ஒரு விபத்தினால் பாதிக்கப்பட்டு, மனைவியுடன் தாம்பத்ய சுகத்தை அனுபவிக்க முடியாதவாகிறார். கணவன் மனைவியை நெருங்கும்பொதெல்லாம் விஜயகுமாரி விலகி விலகி ஓடுகிறார். மாடியிலிருந்து கீழே விழுந்தால் எலும்பு முறிவு ஏற்படலாம்.ஆனால் சாரதா கதா நாயகனுக்கு நேர்வதோ தாம்பத்ய உறவு பாதிப்பு. இதுதான் திரைக்கதையின் முடிச்சு. படம் வெள்ளிவிழா கொண்டாடியது.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய இன்னொரு மாபெரும் வெற்றிப்படம் ‘பணமா பாசமா’. படத்தின் தலைப்பிலேயே கதையின் சாரம்சம் சொல்லப்பட்டுவிட்டது. பணத்துக்கும் பாசத்துக்கும் இடையே நடக்கும் போட்டியை வெகுஜன ரசிகர்களின் ரசனைக்காக திரைக்கதை அமைத்து,பக்கம் பக்கமாக கதாபாத்திரங்களை வசனம் பேசவைத்திருந்தார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படங்கள் எல்லாவற்றிலுமே கதாபாத்திரங்கள் மூச்சுத்திணற திணற வசனங்களைப்பேசின.
ஏ.பீம்சிங்கிற்கும்,கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கும் குடுப்பப்பாங்கான படங்களை இயக்கியவர்கள் என்று பேர்.மிகைப்படுத்தல் என்ற சுவை,தமிழ் திரைப்படங்களில் மட்டுமின்றி இந்திய மொழிப்படங்களுக்கே உரிய தனிச்சுவை.
ஏப்ரல், 2013.