சிறப்புப்பக்கங்கள்

கு.ஞானசம்பந்தன்: மேடையில் உலவும் சமூக மருத்துவர்

தொ.பரமசிவன்

மனிதனை மனிதனாக்கிய அருங்கலைகளில் ஒன்று சொல்லாடல். எனவேதான், பேசுபவரை‘சொற்செல்வர்’ என்றும் கேட்கிறவரை ‘செவிச்செல்வர்’ என்றும் தமிழ் மரபு பேசுகிறது. மனிதர்களின் எல்லாப் பேச்சும் பேச்சாவதில்லை. அவையில் பேசுவது என்பது மனித உறவுகளை மேம்படுத்தும் ஒரு வினைப்பாடாகும். அது வெறும் சொற்களின் கூட்டு அல்ல. பரந்த மனமும், விரிந்த வாசிப்பும் நல்ல பேச்சாளனுக்கு உரிய அடிப்படைத் தகுதி. நண்பர் ஞானசம்பந்தனுக்கு அது வாய்த்திருக்கிறது.

ஞானசம்பந்தன் எனக்கு தியாகராசர் கல்லூரி வந்த பின்னர் நண்பர். இன்று அவர் பெருமைக்கும் பொறாமைக்கும் உரிய நண்பர். தேனியைப் போல உழைக்கக்- கூடியவர். அவர் நாடறிந்த நகைச்சுவையாளர். பேச்சாளர். அவரது பெயரைச் சொன்னாலேயே முகம் மலர்ந்து போகிற நண்பர்களைப் பார்த்திருக்கிறேன். இத்தகைய பேறு வாய்ப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். என்றாலும் நாவலர் என்பதே அவரது முதல் பெருந்தகுதி. நகைச்சுவைப் பேச்சாளர் என்பது அவரது கூடுதல் தகுதி.

தனி மனிதனை மட்டும் உடல் குலுங்க வைப்பதோடு சிரிப்பு முடிந்து போவதில்லை. சமுதாயத்தையும் உலுக்கி எடுக்கும் என்று சார்லி சாப்ளினும் என்.எஸ். கிருஷ்ணனும் காட்டிவிட்டுப் போனார்கள். ஞானசம்பந்தன் நிற்கின்ற அரங்குகளில் தென்றலாக நுழைகின்ற சிரிப்பு மிகச்சில மணித்துளிகளில் புயலாக வளர்ந்து விடுகிறது. ஆனாலும் முகத்தை மூடிக்கொண்டும், திருப்பிக் கொண்டும் சிரிக்கிற அருவருப்பு உணர்வு அங்கே இல்லை. வாழ்க்கையின் பல்வேறு அசைவு-களைக் காட்டும் சின்னச் சின்னக் குறிப்புகள், சிறு சிறு உரையாடல்கள், இவற்றின் வழியே பேராசிரியர் ஞானசம்பந்தன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். அவரது அனுபவம் பெரும்பாலும் வகுப்பறைகளுக்கு வெளியிலிருந்து பெறப்பட்ட-தாகும். அவரது நகைச்சுவையின் வெற்றிக்குக் காரணம் அவரது புத்தகவாசிப்பு மட்டுமல்ல அவரது மனித வாசிப்பும் கூடத்தான். சலிப்பூட்டும் பயண நேரத்தில் புத்தகங்களை வாசிப்பது போல அவர் மனிதர்களையும் வாசிக்கிறார்.

நான் கேட்டறிந்த வரை நகைச்சுவை உணர்ச்சியும் அவருக்குத் தந்தை வழிச் சொத்தாக அமைந்திருக்கிறது. தந்தை அவருக்கு நிறைய தமிழ் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதாவது எந்த தந்தையும் கற்றுக் கொடுக்காத வில்லிபாரதத்தைக் கற்றுக்கொடுத்திருக்கிறார். இன்றைக்குத் தமிழ்நாட்டில் வில்லிபாரத்தைப் பற்றி பேச ஓரிருவர் மட்டுமே உள்ளனர்.

அவையறிதல் என்பது நல்ல  பேச்சாளருக்குரிய கண்ணியமாகும். ஞானசம்பந்தன் அதில் தேர்ச்சி பெற்றவர் என்பதை நான் நேரிடையாகவே அறிவேன். அது என்னவோ தெரியவில்லை. தமிழ்நாட்டில் பேசத் தெரிந்தவர்களுக்குப் பெரும்பாலும் எழுதத் தெரியவில்லை. பேராசிரியர் ஞானசம்பந்தன் பேசத் தெரிந்தது போல எழுதவும் தெரிந்தவர். நிகழ்காலத் தமிழகத்தின் ஒரு தனிமனிதனின் ஆளுமை என்பது பல்வேறு வகையான நடப்புகளைச் சார்ந்ததாகும். அவற்றுள் ஒன்று ஊடகங்களின் வழி பரவலாக அறியப்படுதலாகும். அவ்வாறு அறியப்பட்டவர்களில் விதிவிலக்காகச் சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவருமே தங்கள் சொந்த முகங்களை, சொந்த சிந்தனைகளை இழந்து போய் விட்டார்கள். அந்த வகையில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் மரியாதைக்குரிய ஒரு விதிவிலக்கு.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளாலும், நுகர்வியப் பண்பாட்டுச் சரிவினாலும் நாம் காணும் மனிதர்களில் சரிபாதி பேர் மனநோயின் முதற்கட்டத்தில் காலடி வைத்தவர்களாகக் காணப்படுகிறார்கள். இந்த இறுக்கத்தை நகைச்சுவை தளர்த்தி விடுகிறது. நகைச்சுவையாளன் உளவியல் சிதைவை நேராக்கும் சமூக மருத்துவப் பணியைச் செய்கிறான். ஞானசம்பந்தனின் இந்த சமூக மருத்துவப் பணி தொடரட்டும். வெல்லட்டும் என வாழ்த்துகிறேன்.

(நமது செய்தியாளரிடம் கூறியதில் இருந்து)

ஆகஸ்ட், 2013.