சிறப்புப்பக்கங்கள்

கிராமப்புறக் காதல்

இமையம்

என் பார்வையில் காதல் என்று ஒன்றும் இல்லை. எதிர்பாலின ஈடுபாடு மட்டும்தான் இருக்க முடியும். அந்தகாலத்தில் விருப்பத்தை எளிதில்

சொல்லமாட்டார்கள். இப்போது அந்த கூச்சம் இல்லை. ஆணும் சரி, பெண்ணும் சரி கூச்சத்தை, வெட்கத்தை தொலைத்தவர்களாக இருக்கிறார்கள். காதலை மட்டுமல்ல, கல்யாணத்தையும் ஏற்காத சமூகம் ஆகி

விட்டது - தமிழ் சமூகம். நம்முடைய பெண் தெய்வங்கள் எல்லாம் கொலை செய்யப்பட்ட பெண்கள்தான். குறிப்பாக சாதி மாறிக் காதலித்ததால் கொலை செய்யப்பட்டவர்கள். தீப்பாஞ்ச அம்மன், மாரியம்மன், செங்கேணியம்மன், காளியம்மன், பச்சையம்மன்,செல்லியம்மன் என்று பல தெய்வங்கள். நாட்டார் பெண் தெய்வங்கள் எல்லாம் கொலை செய்யப்

பட்டவர்கள்தான். சங்ககாலம் மட்டும்தான் காதலைப் போற்றிய, காதலை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட சமூகம். அதற்கு நேர் எதிரான சமூகம் நிகழ்கால சமூகம்.

அன்றும் சரி, இன்றும் சரி சாதி மறுப்பு திருமணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதில்லை. அறிவியல் வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு, கல்வி அறிவு, நாகரீகம் பெற்றுவிட்ட நிலையிலும் சாதி சார்ந்த மனோபாவத்தில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை. நிகழ்ந்திருக்கிறது என்று சொன்னால் அது நம்முடைய கற்பனை. உண்மை அல்ல.

எல்லா காலத்திலுமே மேம்பட்ட இனத்தை சார்ந்த ஒரு ஆண் தாழ்த்தப்பட்ட இனத்து பெண்ணுடன் பேசுவதை, பழகுவதை, சிரிப்பதை, விளையாடுவதை, கேலி, கிண்டல் பேசுவதை மட்டரகமாகப் பேசுவதை, காதல் செய்வதை சமூகக் குற்றமாக யாரும் கருதுவதில்லை. அது அன்றாட வாழ்வின் ஒரு செயல். அதற்காக ஊர்ப்பஞ்சாயத்து, சாதி பஞ்சாயத்து கூட்டுவதில்லை. அபராதம் விதிப்பதில்லை. சாணிப்பாலை குடிக்க வைப்பதில்லை. மொத்தத்தில் அது குற்றமே இல்லை. முறைக்கார பெண்ணோடு சகஜமான விளையாட்டு. ஆனால் தாழ்த்தப்பட்ட இனத்து ஒரு பையன் மேன்குலத்து பெண்ணை பார்த்தாலே போதும், சிரித்தாலே போதும், தொட வேண்டியதில்லை. உரசுவது மாதிரி சென்றாலே போதும். ஒரு பெண்ணின் பின்னால் தொடர்ந்து சென்றாலே போதும் பெரும் கலவரமாகிவிடும். இதுபோன்று ஏற்படும் கலவரங்கள் முன்பு அந்தந்த கிராமத்தோடு முடிந்துவிடும். ஆனால் இப்போது மாவட்ட அளவில், மாநில அளவில் பரவிவிடுகிறது.

தாழ்த்தப்பட்ட இனத்து பெண்ணோடு மேன்குலத்து ஆண் இணையும்போது ஏற்படாத தீட்டு, சாதிக்கலப்பு,

சாதியின் பெருமை இழப்பு - எப்படி மேன்குலத்து பெண்ணோடு தாழ்த்தப்பட்ட இனத்து பையன் இணையும்போது, காதல்செய்யும்போது மட்டும் ஏற்படுகிறது என்பதுதான் வினோதம். சாதிக்குரிய புனிதத்தை, பெருமையை, பெண்களின் உடல் வழியாகவே நாம் காப்பாற்றி வருகிறோம். எதில் கலப்பு ஏற்பட்டாலும் ஏற்படலாம். பெண் உடல் கலப்பு மட்டும் ஏற்படக் கூடாது. இப்படியான சமூகத்தில் காதலிக்க முடியுமா? மீறி காதலித்தாலும் அது காதலாகத்தான் இருக்கும். நாடகக் காதலாக இருக்காது.

இது இப்படி இருக்க சுயசாதியில் காதல் திருமணங்கள் (சுய விருப்பத் தேர்வு திருமணங்கள்) ஏற்றுக்கொள்ளப்படுகிறதா என்றால் அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று சிலர் சொல்கிறார்கள். இதை நம்புவது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதைப் போன்றது. சம படிப்பு, சம அந்தஸ்து, சம பொருளாதார வசதி இருந்தால் மட்டுமே சுயசாதி காதல் திருமணங்கள் ஏற்கப்படும். இல்லையென்றால் சாத்தியமில்லை. மருத்துவம் படித்த, பொறியியல் படித்த ஒரு பெண் சுய சாதியில் எதுவும் படிக்காத ஒரு பையனை திருமணம் செய்ய முடியாது. அதேமாதிரி மருத்துவம், பொறியியல் படித்த ஒரு பையன், படிக்காத ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடியுமா? முடியாது. பையனும் பெண்ணும் மருத்துவம், பொறியியல் உயர்ந்த படிப்பு படித்திருக்கிறார்கள். ஒரே சாதிதான். கார் வாங்காமல் கிலோ கணக்கில் தங்கம் வாங்காமல், எந்த பெண்ணை எந்த ஆண் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்? இது பொய் என்று சொல்ல முடியாது. சுயசாதியில் பெண் வேண்டும். எப்படி என்றால், இன்ன உயரத்தில், இன்ன நிறத்தில், இன்ன படிப்புடன், இவ்வளவு சம்பளத்துடன், இவ்வளவு நகைகளுடன், இவ்வளவு வசதிகளுடன் இருக்கவேண்டும் என்பதுதான் நிபந்தனை. நம்முடைய திருமணங்கள் நிபந்தனைகளின் அடிப்படையில்தான் நிகழ்கின்றன.

கிராமங்கள் இப்படி இருக்க நகரங்களில் சாதி மறுப்பு - காதல் திருமணங்கள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதையும் நான் நம்பவில்லை. அதிகம் படித்தவர்கள், உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள், அயல் நாடுகளில் வாழ்பவர்கள்தான், நிறம், எடை, உயரம், குலம், கோத்திரம், நட்சத்திரம், ஜாதகப் பொருத்தம் பார்ப்பதில் அதிதீவிரமாக ஈடுபாடு காட்டுகின்றனர் என்பதற்கு கல்யாணமாலை போன்ற நிகழ்ச்சிகள், விளம்பரங்கள்,

சாட்சியாக இருக்கின்றன. ஆண் எதிர்பார்க்கிற அத்தனை பொருத்தங்களும் உள்ள ஒரு ஏழைப் பெண்ணை காதலிப்பது, திருமணம் செய்வது ஏன் நடைபெறுவதில்லை? இது பெண்ணுக்கும் பொருந்தும். நம்முடைய திருமணங்களை சாதி தீர்மானிக்கிறது. மதம் தீர்மானிக்கிறது. படிப்பு, பதவி, பணம் தீர்மானிக்கிறது. முன்பு சாதியும், மதமும் மறைமுகமாக செயல்பட்டன. இப்போது நாம் படித்தவர்களாகிவிட்டோம். அதனால்

சாதியும், மதமும் நேரடியாகவே செயல்படுகிறது. பெரு நகரங்களிலேயே சாத்தியப்படாதபோது மொத்த

கட்டுமானமே சாதியால் உருவானது கிராமம். அங்கு எப்படி சாத்தியமாகும்?

என்றைக்கு குடும்ப அமைப்பு உருவானதோ அன்றே பெண் ஆணின் உடைமையாக்கப்பட்டுவிட்டாள். இந்நிலையை நிலவுடமை அமைப்பு பாதுகாத்து வந்தது. இன்று உலகமயம், தாராளமயம், கல்வி, பொருளாதார

சுதந்திரம் என்று ஏற்பட்டுவிட்ட நிலையிலும் பெண் - ஆணின் உடமைதான். பெண்கள் இன்று இரட்டை உழைப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். பெண்கள் இன்று பெருமளவில் வேலைக்கு செல்கிறார்கள். பெண்களுக்கு வேலையும் கொடுக்கப்படுகிறது. காரணம் அதிகமான உழைப்பு, குறைவான சம்பளம். இதற்காகத்தான்.

பெண்ணின் உடல்மீது ஆணின் கட்டுப்பாடு மட்டுமல்ல சமூகத்தின் கட்டுப்பாடும் இருக்கிறது. ஒரு பெண் குடும்ப அமைப்பால்,  சமூக அமைப்பால் ஓயாமல் கண்காணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறாள். அவள் எப்படி பேச வேண்டும், சிரிக்க வேண்டும், நடக்க வேண்டும், எப்படி உடை உடுத்த வேண்டும் என்பதையெல்லாம் குடும்பமும், சமூகமும்தான் தீர்மானிக்கிறது. நம்முடைய சாதிய சடங்குகள், மதச்

சடங்குகள் அனைத்துமே பெண்ணை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டிருக்கிறது. இது பெண்ணின் உடலை ஆணின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கான தந்திரங்கள்தான். ஒரு ஆண் எத்தனை பெண்களுடனும் பழகிவிட்டு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியும். அதேநேரத்தில் ஒரு பெண் சாதாரணமாக ஒரு ஆணோடு பழகிவிட்டு வேறு ஒரு ஆணை திருமணம் செய்துகொள்ள முடியாது. அதேமாதிரி திருமணமான ஒரு ஆண் வேறு பெண்ணோடு உறவு வைத்துக்கொள்ள முடியும். ஆனால் திருமணமான ஒரு பெண் வேறு ஒரு ஆணோடு பழகினால் அவள் உயிரோடு இருக்க முடியுமா? எந்த சாதியாக இருந்தாலும்? மருத்துவத்திற்கு படித்த ஒரு பெண் அதே படிப்பு படித்த ஒரு ஆணை திருமணம் செய்துகொள்ள ஏன் கார் கொடுக்க வேண்டும்? கிலோ கணக்கில் ஏன் தங்கம் கொடுக்க வேண்டும்? பெண் பிள்ளை என்றால் அவளுடைய கல்யாணத்திற்கு நகை சேர்க்கிறோம். ஆண் பிள்ளை என்றால் படிக்க வைத்து அமெரிக்காவுக்கு அனுப்பவே நாம் கனவு காண்கிறோம். இதுதான் நம் சமூகத்தின் உளவியல்.

கிராமப்புறத்தில் வாழ்கிற மாணவ - மாணவிகளின், இளைஞர்கள் - இளம் பெண்களின் வாழ்விடம் மட்டும்தான் கிராமம். அவர்களின் உடை, பேச்சு, செயல், நடவடிக்கைகள், மனோபாவம் அத்தனையும் பெரு நகரத்திற்குரியவையாக இருக்கின்றன. செல்போன், தொலைக்காட்சி, கணினி, போக்குவரத்து வசதிகள் அவர்களுக்கு இந்த மனோபாவத்தை ஏற்படுத்தி யிருக்கிறது. கிராமங்கள் புனிதமானது, அங்குள்ளவர்கள் வெள்ளந்தியான மனோபாவம் படைத்தவர்கள் என்று நம்புகிற நம் கற்பனையை அது பொய் என்று ஓயாமல் நிரூபித்துக்கொண்டே இருக்கிறது. தமிழ் சினிமா ஏற்படுத்திய மிகை - கற்பனை இது. நகரங்களைவிட கிராமத்தில்தான் ஊடக கவர்ச்சியில் அதிகம் வீணாகிற மாணவ - மாணவிகள், இளம் பெண்கள் - இளைஞர்கள் இருக்கிறார்கள். கிராமப்புறங்களில்தான் அதிகளவிலான சினிமா ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன.  கல்வி, போக்குவரத்து, தகவல் தொடர்பால் ஏறபட்ட சுதந்திரம் கட்டுப்பாடு அற்றதாக, பெரியோரை மதிக்காத, பெற்றோர்களை புறக்கணிப்பதாக இருக்கிறது. கிராமப்புற மாணவ - மாணவிகள், இளைஞர்கள் - இளம் பெண்களின் கவனம் இப்போது படிப்பதிலும் இல்லை. உழைப்பதிலும் இல்லை. சினிமா பார்ப்பதில் மட்டுமே இருக்கிறது.

(நம் செய்தியாளரிடம் பேசியதிலிருந்து).

பிப்ரவரி, 2014.