இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொருவிதமான கருத்துமோதல்களும் களமோதல்களும் இருக்கும். கருப்பும் காவியும் மோதும் இடம் தமிழ்நாடுதான். வடக்கே போனால் காவியும் கதர்ச்சட்டைகளும் மோதிக்கொள்வார்கள். கருப்பு என்று நாம் சொல்லும் திராவிட இயக்கங்களும் கட்சிகளும் இந்துத்துவ கருதுகோளை மிகக்கடுமையாக எதிர்த்த ஒரு கொள்கையில்தான் உதித்தவை. இந்த நூறாண்டுகளில் கிட்டத் தட்ட முக்கால்வாசிக்காலம் இந்த மோதல் முழுமூச்சுடன் நடந்தது எனலாம். பின்னர் காவியும் கருப்பும் கட்சிகளின் உபயத்தில் மெல்ல கலக்கத்தொடங்கின. கல்வியில் உயர்தல், வறுமை ஒழிப்பில் ஓரளவு வெற்றி, உலகமயமாக்கல், நகரமயமாதல் ஆகிய நிகழ்வுகளின் பின்னணியில்தான் இந்த வினோதமான சந்திப்பு கொஞ்சம் கொஞ்சமாக சாத்தியமாகி இருக்கிறது.
தமிழகத்தில் இயங்கும் இந்துத்துவ வலதுசாரி இயக்கங்களில் பெரிய உறுப்பினர் பலம் ஏதும் இல்லை. ஆனால் இந்திய அரசை தேர்தல் அரசியலில் பாஜக பெருவெற்றி பெற்று கைப்பற்றி இருக்கும் இந்நிலையில் தமிழ்நாட்டிலும் அவர்கள் கை ஓங்கியே இருப்பதுதான் நடைமுறை அரசியல். கிட்டத்தட்ட சின்னதும் பெரிதுமாக 43 இந்து இயக்கங்கள் தமிழ்நாட்டில் உள்ளனவாம். ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங் என்கிற ஆர்.எஸ்.எஸ்தான் இவற்றின் தாய்.
இதன் கட்டுப்பாட்டில் இருக்கும் பரிவார் அமைப்புகளைத் தாண்டி இந்து ஆர்வலர்களாக இருக்கும் பல தலைவர்கள் ஆளுக்கொரு அமைப்பு வைத்திருக்கிறார்கள். ஒரு தொலைக்காட்சியில் தாலி குறித்த விவாதம் ஒளிபரப்ப முடியாத அளவுக்கு தடைவிதிக்கும் செல்வாக்கும் இவர்களுக்கு இருக்கிறது. திராவிடர் கழகம் திட்டமிட்ட தாலி அகற்றும் நிகழ்ச்சி, மாட்டுக்கறி சாப்பிடும் நிகழ்ச்சியே பெரும் சிக்கலுக்கு இடையில்தான் நடத்தமுடிந்தது. தமிழகத்தின் பிற இடங்களில்கூட அவர்களால் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தமுடியவில்லை. ஆனால் அதே சமயம் சின்னதாக எதிர்ப்புக்காட்டினாலும் எங்களை காவல்துறை பிடித்து உள்ளே வைக்கிறது; வழக்குப் போட்டுவிடுகிறது என்று வலதுசாரி அமைப்பினரும் புலம்புகிறார்கள். இரு அமைப்புகளுமே கடுமையான கண்காணிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றன. மத நல்லிணக்கம், கருத்துரிமை என்று பல கோணங்களில் தமிழகத்தில் வலதுசாரி இயக்கங்கள் விவாதிக்கப்படுகின்றன. இவற்றுக்கு எதிரான கருத்துகளை திராவிட இயக்கங்கள் முன்வைக்கின்றன.
வலதுசாரி கட்சிகள், திராவிடக்கட்சிகள் இடையே இணக்கம் ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. தேர்தல் அரசியலில் அக்கறை இல்லாத, சமூக திருத்தங்களில் அக்கறை காட்டும் கருத்தியல் மோதலைப் பற்றி மட்டும் நாம் இங்கே பேசுகிறோம். ஆனால் அரசியல் அதிகாரப் பின்னணியில் இருந்து கருத்தியல் இயக்கங்களும் செயல்வலிமைபெறுகின்றன என்பதை மறுக்க இயலாது. இந்த இதழில் திராவிட இயக்கங்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள வலதுசாரி இந்து இயக்கங்கள் ஆகியவற்றின் சுமார் நாற்பதாண்டு செயல்பாடுகளையும் எதிர்காலத்தையும் அலசும் கட்டுரைகள் இடம்பெறுகின்றன.
அக்டோபர், 2015.