ஆரண்ய காண்டம் படத்தில் காளையன் பாத்திரம் ஞாபகம் இருக்கிறதா? குரு சோமசுந்தரம் அந்தப் பாத்திரத்தில் பின்னி எடுத்திருப்பார். அதில் அவர் அடிக்கடி தன் புத்திசாலிப் பிள்ளை கொடுக்காப்புளியிடம் சொல்லும் வசனம், ‘‘நமக்கு எங்கப்பா விடியப் போவுது?''
அவர் ஒரு முன்னாள் ஜமீன்தார். இந்நாள் பராரி. ஒரு கட்டத்தில் அவருக்குக் கொஞ்சம் காசு கிடைக்கிறாற்போல் ஒரு சமிக்ஞை தெரியும். ஒரு போன் பண்ணினால் காசு வரும். காளையன் போன் நம்பர் இருந்த துண்டுக் காகிதத்தைத் தொலைத்து விடுவார். ‘‘அதானே, நமக்காவது நல்ல காலம் பொறக்றதாவுது!'' என்று வழக்கம் போல் அரற்றுவார். கொஞ்ச நேரத்தில் காகிதம் கிடைத்து விடும்.
கொடுக்காப்புளி கடுங்கோபத்தில் அப்பனை முறைப்பான். ‘‘இல்லப்பா, இந்த மாதிரி சொல்லிக் கிட்டே இருந்தாத்தான் திருஷ்டி கழியும்'' என்று சமாளிப்பார். எனக்கு நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது நானும் அந்தக் காளையன்தானோ என்று தோன்றும்.
என் தொழில் எழுத்து. ஆனால் எனக்கு எழுத்தை விடப் பிடித்தது பயணம். இப்ன் பதூதாவிலிருந்து ஆரம்பித்து எக்கச்சக்கமான பயண நூல்களைப் படித்திருக்கிறேன். (அந்திமழையிலும் ஒரு பயணத் தொடர் எழுதினேன், நிலவு தேயாத தேசம் என்று. உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.) ஆஃப்கானிஸ்தானில் போர் நடந்து கொண்டிருந்தபோது லண்டனிலிருந்து ஆஃப்கன் வழியாக பாங்காக் வரை கால்நடையாகவே பயணம் செய்த பிரிட்டிஷ்காரர் ரோரி ஸ்டூவர்ட், 19&ஆம் நூற்றாண்டு வரை யாருமே பயணம் செய்திராத அராபியப் பாலைவனத்தில் நடைப் பயணம் செய்த வில்ஃப்ரட் தேஸிஜர் என்று ஏராளமான பயணிகளின் நூல்கள் என் நூலகத்தில் நிரம்பிக் கிடக்கின்றன. நம்முடைய கேரளத்தைச் சேர்ந்த ஸக்கரியா கூட தென்னாஃப்ரிக்காவிலிருந்து கிளம்பி ஆஃப்ரிக்க கண்டத்தின் வடக்கு எல்லை வரை 5000 மைல்களை சாலை வழியே கடந்து பயணத் தொடர் எழுதியிருக்கிறார்.
நானோ ஓர் அரசு அலுவலகத்தில் மாட்டிக் கொண்டேன். ஒன்று அல்ல, இரண்டு. அப்போதெல்லாம் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பிராமணப் பையன்கள் ஸ்டெனோகிராஃபி படித்து பூனா, பம்பாய், தில்லி போன்ற நகரங்களுக்கு ஸ்டேனோவாகப் போய்க் கொண்டிருந்தார்கள். ஐம்பதுகளிலிருந்து இந்தப் போக்கு ஆரம்பித்தது. இப்படிப் போனவர்களில் ஒருவர்தான் அப்போது என் ஆதர்சமாக விளங்கிய விமர்சகர் வெங்கட்சாமிநாதன். கும்பகோணத்தில் பள்ளிப் படிப்பு முடிந்ததும் பதினேழு வயதில் புவனேஷ்வரில் ஸ்டெனோவாகப் போய் விட்டார். பள்ளியில் படிக்கும்போதே டைப்பிங், ஸ்டெனோக்ராஃபி இரண்டும் முடித்து விடுவார்கள். அதாவது புத்திசாலிப் பையன்களும் பெண்களும். பிறகு வெங்கட் சாமிநாதன் புவனேஷ்வரிலிருந்து தில்லியில் சிபிஐ துறையில் ஸ்டெனோவாகச் சேர்ந்தார். இது நடந்தது அறுபதுகளில். நான் 1978-இல் தில்லி சிவில் சப்ளைஸில் ஸ்டெனோவாகச் சேர்ந்தேன்.
அந்தக் காலத்தில் தில்லி போகும் தமிழ் பிராமணர்கள் பொதுவாக செண்ட்ரல் செக்ரடேரியட் என்று சொல்லக் கூடிய மத்திய அரசின் இதயப் பகுதியான மினிஸ்ட்ரிகளில் ஒன்றில்தான் கிளார்க்காக சேர்ந்து டெபுடி செக்ட்ரி (அங்கே செக்ரடரியை செக்ட்ரி என்றுதான் சொல்வார்கள்) வரை உயர்வார்கள். அந்தப்படியே வெங்கட் சாமிநாதனும் ஸ்டெனோவிலிருந்து டெபுடி செக்ட்ரியாக உயர்ந்தார். சாமிநாதனின் நண்பர்களுக்குக் கூட இந்த விவரங்களெல்லாம் தெரியாது. நான் சிவில் சப்ளைஸ் என்ற மாநில அரசுத் துறையில் சேர்ந்தேன். மாநில அரசில் சேர இந்தி தெரிந்திருக்க வேண்டும். நான் தில்லியையே மனதில் குறித்து வைத்திருந்ததால் பள்ளியில் படிக்கும்போதே தக்ஷிண் இந்தி பிரச்சார சபாவின் மூலம் இந்தி படித்திருந்தேன்.
அதற்கு என் நைனாதான் ஒரு பெரிய தூண்டுதல். அவர் ஒரு தீவிர திமுக அனுதாபி என்பதால் வீடே ஒரு திமுக கிளை அலுவலகம் போலத்தான் இருக்கும். எனக்கும் நைனாவை ரொம்பப் பிடிக்கும். அப்படிப் பார்த்தால் நான் தீவிர தமிழ் வெறியனாகத்தானே மாறி இருக்க வேண்டும்? அப்படி நடக்காமல் போனதற்குக் காரணம், மாதாமாதம் முதல் தேதி அன்று எங்கள் வீட்டின் சொந்தக்காரரின் கணக்கப்பிள்ளை வாசலில் வந்து நின்று வாடகை கொடுங்கள் என்று தெருவே கேட்பது போல் கத்துவார். ஏற்கனவே சென்ற மாத வாடகை பாக்கி என்பதால் சத்தம் கொஞ்சம் பலமாகவே இருக்கும். அதனால் எனக்கு என் நைனாவை உயிருக்குயிராய் பிடித்தாலும், நைனாவின் வழியில் போனால் நாமும் இப்படித்தான் ஆவோம் என்று சின்ன வயதிலேயே ஒரு எண்ணம் மனதில் படிந்து விட்டது.
ஆனால் பிற்பாடு பல ஆண்டுகள் கழித்துத்தான் தெரிந்தது, நைனா அம்மா அப்பாவினால் கைவிடப்பட்டு தன்னந்தனியாக நின்று ஈ.எஸ்.எல்.சி. (அந்தக் காலத்து எட்டாங்கிளாஸ்) வரை படித்து அதற்கு மேல் படிக்க வசதி இல்லாமல் (சாப்பிட வேண்டுமே?) எங்கெங்கோ எடுபிடி வேலை செய்து பிறகு ஒருவழியாக ஒண்ணாங்கிளாஸ் வாத்தியாராகச் சேர்ந்தார் என்பது.
ஆனாலும் எனக்கு நைனாவின் வழி உருப்படும் வழி அல்ல என்பது தெளிவாகத் தெரிந்து போயிற்று. அதனால் நைனாவுக்கு எதிராகவே இந்தி படித்தேன். அதற்கும் நான் தில்லி சிவில் சப்ளைஸில் சேர்ந்ததற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் மாநில அரசில் - அதுவும் மக்களோடு நேரடித் தொடர்பில் இருக்கும் சிவில் சப்ளைஸ் - சேர்ந்து வேலை செய்ய இந்தி ஓரளவுக்கு உதவியாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். ஆனால் மாநில அரசில் ஸ்டெனோவாகச் சேர்ந்தால் சாமிநாதனைப் போல் பதவியில் உயர்ந்து டெபுடி செக்ட்ரி வரை போக முடியாது. அதுவும் சிவில் சப்ளைஸில் அது நினைத்தே பார்க்க முடியாத விஷயம். அப்படி ஆவதற்கு DANICS என்று ஒரு தனி சிவில் சர்விஸ் பரீட்சை இருந்தது. தில்லி, அந்தமான் நிகோபார் ஐலண்ட்ஸ் சிவில் சர்விஸ். டெபுடி செக்ட்ரி ஆக முடியாதே தவிர சிவில் சப்ளைஸில் வேலை பார்த்தால் பணம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும். கொட்டியது. நான்தான் சாக்குப் போட்டு பிடிக்காமல் செண்ட்ரல் செக்ரடேரியட் நூலகத்திலேயே எப்போதும் காலத்தைக் கடத்தினேன். வாரத்துக்கு ஒருமுறை போய் கையெழுத்துப் போட்டால் போதும். யாருமே என்னைக் கேட்பதில்லை. காரணம், என்னுடைய பங்கும் அவர்களுக்குப் போகும் அல்லவா? அதனால் நான் போகாததே அவர்களுக்கு நல்லது. ஒருநாள் என் அதிகாரிதான் என்னைத் தனியே அழைத்து ‘‘லட்சுமி உன் வாழ்க்கையில் ஒரு முறைதான் கதவைத் தட்டுவாள். உன் அதிர்ஷ்டம் உனக்கு இளம் வயதிலேயே தட்டுகிறாள். நீ கண்டு கொள்ள மாட்டேன் என்கிறாய். லட்சுமியிடம் என்ன பிரச்சினை என்றால், ஒருமுறைதான் தட்டுவாள். அப்புறம் நீ தலைகீழாய் நின்றாலும் வர மாட்டாள்'' என்றார். ஸ்ரீவத்சவா என்ற அந்த பிஹாரி அதிகாரியை நான் இப்போதெல்லாம் நினைக்காத நாள் இல்லை. நானும் தலைகீழாய் நின்று பார்த்தேன், பார்க்கிறேன். ம்ஹும். சரஸ்வதி இருக்கும் இடத்தில் நான் எட்டிக்கூடப் பார்க்க மாட்டேன் என்று சொல்லி விட்டாள் லட்சுமி. சரஸ்வதியோ என் உயிர். லட்சுமிக்காக அதை விட முடியுமா?
1990 வாக்கில் தில்லியிலிருந்து கிளம்பி சென்னை வந்து அஞ்சல் அலுவலகத்தில் ஸ்டெனோவாகச் சேர்ந்தேன். சொர்க்கத்திலிருந்து நரகம். ஓரிருவரைத் தவிர மற்ற எல்லா அதிகாரிகளும் மெண்டல் அஸைலத்திலிருந்து தப்பி வந்தவர்களைப் போல் நடந்து கொண்டார்கள். ஓர் அதிகாரி, மூத்த ஸ்டெனோவை கழுத்தைப் பிடித்து தள்ளிய கண்றாவியை எல்லாம் கண்ணால் பார்த்தேன். அதிகாரிக்கு 25 வயது, ஸ்டெனோவுக்கு 55 வயது. என்னுடைய அதிர்ஷ்டம் அல்லது துரதிர்ஷ்டம் அந்த அதிகாரியிடமே நான் ஸ்டெனோவாகப் போய்ச் சேர்ந்தேன்.
இன்னொரு விஷயம். அஞ்சல் துறையின் குமாஸ்தாக்களுக்கு மிக வலுவான தொழிற்சங்கம் இருந்தது. அதனால் குமாஸ்தாக்களை எந்த அதிகாரியும் எதுவுமே செய்ய இயலாது. அதிகபட்சம் சைதாப்பேட்டையிலிருந்து தி. நகருக்கு மாற்றலாம். ஆனால் தமிழ்நாடு பூராவுமே ஸ்டெனோக்கள் 25 பேர் இருந்தார்கள். அதிலும் 20 பேர் பிராமணர்கள். என்ன பண்ண முடியும்? மேலும், அதிகாரி நினைத் தால் ஸ்டெனோவை சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்குத் தூக்கி அடிக்க முடியும். அப்போதெல்லாம் கிட்டத்தட்ட கம்யூனிசம் நடைமுறையில் இருந்த காலகட்டம். துப்புரவுத் தொழிலாளியின் ஊதியத்தை விட நூறு ஐநூறுதான் குமாஸ்தாவின் ஊதியம் அதிகம் இருக்கும். அதை விட ஸ்டெனோவுக்கு நூறு ரூபாய் அதிகம். 2000&இல் நான் வேலையை விட்ட போது என் ஊதியம் 8000 ரூ. இப்போது 80,000 ரூ. அந்தப்பிசாத்து சம்பளத்தில் ஒரு ஸ்டெனோ இரண்டு ஊர்களில் இரண்டு நிறுவனங்களை எப்படி நிர்வாகம் பண்ண முடியும்? அதனால் நாங்களெல்லாம் கிட்டத்தட்ட Bootlickers ஆகவே வாழ்ந்து வந்தோம். சம்ச்சா என்று இந்தியிலும் ஜால்ரா என்று தமிழிலும் வழங்கும். பயணம் பற்றிக் குறிப்பிட்டேன் அல்லவா? 1999&ஆம் ஆண்டு பாரிஸ் செல்ல அழைப்பு வந்தது. அரசு ஊழியர் தும்மினால்கூட அரசிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி கேட்டேன். தில்லி தலைமையகத்துக்கு என் வேண்டுகோளை அனுப்பினார்கள். அங்கிருந்து எனக்கு விசாரணை வந்தது. நீங்கள் எந்த பேட்ச்? என்னது பேட்சா? எனக்குப் புரிந்து விட்டது. ஐஏஎஸ் அதிகாரிகளுக்குத்தான் அனுமதி கேட்டு தில்லிக்கு அனுப்ப வேண்டும். இந்தக் கருங்காலிகள் என்னைப் பழி வாங்க வேண்டும் என்றே தில்லிக்கு அனுப்பியிருக்கிறார்கள். இந்தக் குழப்பத்தில் பாரிஸ் இலக்கியச் சந்திப்பே முடிந்து விட்டது. அடுத்த ஆண்டும் பாரிஸிலிருந்து அழைப்பு வந்தது. மறுபடியும் குழப்படி செய்வார்கள் என்று யூகித்து ஒரு பத்திரிகை அதிபரிடமிருந்து பொய்ச் சான்றிதழ் வாங்கி (அந்தப் பத்திரிகையில் வேலை செய்வதாக) வீசா பெற்று பாரிஸ் போனேன். பயணம்தான் என் வாழ்க்கையே. அதற்கே பிரச்சினை என்றால் ஏன் இந்த வேலையில் இருக்க வேண்டும் என்று யோசித்தேன்.
அப்போதுதான் அந்த ஸைக்கோ அதிகாரியிடம் என்னைப் போட்டார்கள். ஒருநாள் என்னை அவர் இடியட் என்று திட்டினார். நான்
ங்கோத்தா,தேவ்டியாப் பயலே என்று திட்டினேன். நல்லவேளை, அவர் என்னை ஸைக்கோ என்று நினைத்துப் புகார் பண்ணி விட்டார். அடித்திருந்தால் நானும் அடித்து அன்றைய தினமே சிறைக்குப் போயிருப்பேன். ராஜினாமா கடுதாசி கொடுத்தேன். என் அதிர்ஷ்டம். ஸைக்கோவின் அதிகாரி என் எழுத்தை வாசிப்பவர். இலக்கிய ரசிகர். ராஜினாமா கடிதத்தைக் கிழித்துப் போட்டு விட்டு, விருப்ப ஓய்வுக்கு நான் விண்ணப்பித்ததாக ஆறு மாதம் back data போட்டு மறுநாளே விருப்ப ஓய்வு கொடுத்து அனுப்பினார்.
சரி, இதற்கும் ஆரண்ய காண்டம் காளையனுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா? இருபது ஆண்டுகள் முயன்று பணம் சேர்த்துக் கொண்டு அமெரிக்கா போகலாம் என்று கிளம்பினேன். உலகம் பூராவும் விமானப் போக்குவரத்து ரத்து ஆகி விட்டது!
செப்டெம்பர், 2020.