சென்னை மேற்கு மாம்பலத்தில் எனக்கு ஒரு வீடு இருக் கிறது. என் அப்பா காலத்தில் 1997 - ல் ஒருவர் அந்த வீட்டுக்குக் குடிவந்தார். இடையில் என் தந்தை காலமாகிவிட்டார். பல ஆண்டுகளாக வாடகைதாரரை மாற்றவில்லை. 2012 - ல் அவர் இரு படுக்கை அறைகள் கொண்ட அந்த வீட்டுக்கு கொடுத்த வாடகை வெறும் ஆறாயிரம் ரூபாய் மட்டும்தான். இந்நிலையில் அந்த வீட்டுக்குக் குடிசெல்ல நாங்கள் முடிவு செய்து அவருக்குத் தெரிவித்தோம். அவருக்குப் பல வீடுகள் உள்ளன. இருப்பினும் இந்த வீட்டுக்குக் குடிவந்தபின்னர்தான் அவரது தொழில் விருத்தி அடைந்ததால் அந்த வீட்டை ராசியானதாக அவர் நினைத்துவிட்டார் போலிருக்கிறது. வீட்டைக் காலி செய்ய மறுத்துவிட்டார். நானும் என் வயதான தாயாரும் அவரை மிரட்டுவதாக எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். எப்போதும் சட்டத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட நான் நீதிமன்றத்தை அணுகினேன். முதலில் குறைவான வாடகை கொடுத்து வருகிறார் என்பதால் வாடகை நிர்ணயச் சட்டப்படி வழக்குத் தொடர்ந்தோம். பின்னர் வீட்டை காலி செய்யக்கோரும் சட்டப் பிரிவில் அடுத்த வழக்கு என இரு வழக்குகளை நடத்தினோம். இதற்கிடையில் அவர் 2013 டிசம்பருக்குள் வீட்டைக் காலி செய்வதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் செய்யவில்லை. இந்த வழக்குகள் ஐந்தாண்டுகளாக நடந்து இந்த ஆண்டுதான் தீர்ப்பு வந்தது. நான் ஒவ்வொருமுறையும் நீதிமன்றத்துக்கு ஒழுங்காக வந்து ஆஜர் ஆவேன். ஆனால் அவர் தரப்பில் வாய்தா கேட்டு இழுத்தடிப்பார்கள். ஐந்து முறைக்கு மேல் வராமல் போனபின்னர் அபராதம் எல்லாம் விதிக்கப்பட்ட பின்னர்தான் அவர் தரப்பில் ஆஜர் ஆனார்கள். இடையில் என் தாயார் இறந்துவிட்டதால் நான் தான் சட்டப்படி வாரிசு என்று சான்றிதழ் பெற்று வழக்கைத் தொடர்ந்து நடத்தியதாலும் சற்று தாமதம் ஏற்பட்டது.
வாடகை நிர்ணய வழக்கில் வழக்குத் தொடர்பவருக்கு பெரிதாக வேலையில்லை. நம் சார்பில் பொறியாளர் ஒருவர் ஆஜராகி இப்போதைய வசதிகள் படி எவ்வளவு வாடகை நிர்ணயிக்கவேண்டும் என்று கூறுவார். அவர்கள் சார்பிலும் ஒரு பொறியாளரை ஆஜர் செய்யவைத்து குறுக்கு விசாரணைகள் நடத்தி இறுதியில் வாடகை நிர்ணயம் செய்யப்படும். கடைசியில் மாதம் 21,075 ரூபாய் என வாடகை நிர்ணயம் செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர் கொடுத்துவந்ததோ ஆறாயிரம் ரூபாய்தான். வழக்கு தொடர்ந்ததில் இருந்து இன்றுவரை அவர் மீதி வாடகையைக் கொடுக்கவேண்டும். இதற்கிடையில் வீட்டைக் காலிசெய்ய போட்ட வழக்கிலும் அவரை காலி செய்யச் சொல்லி தீர்ப்பானது. வழக்கு நடந்த தீர்ப்பான ஐந்தாண்டு கழித்து அவர் காலிசெய்து சென்றபோது அவர் கடைசி இருமாத வாடகையைக் கொடுக்க வில்லை. மின்வாரிய கட்டணத்தையும் செலுத்தாமல் சென்றுவிட்டதால் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.
வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றவர் சாவியையும் தரவில்லை. இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஒரு மனு, பின்னர் வீட்டின் பூட்டை உடைக்க ஒரு மனு என்று நீதிமன்றத்தை நாடினோம். கடைசியில் ஆமினா முன்னிலையில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றோம். வீட்டைப் பார்த்ததும் எனக்கு பேரதிர்ச்சி! உள்ளே ஏராளமான சிதைவுகளை ஏற்படுத்திவிட்டுச் சென்றிருந்தார். அவற்றைச் சரிசெய்யவே பெரும் செலவு ஆனது. இப்போது அவரிடம் இந்த செல வுக்கான தொகை, வாடகை பாக்கி என்று வசூல் செய்யவேண்டும். இதற்காக மீண்டுமொரு நீண்ட சட்டப் போராட்டத்தை எதிர்நோக்கி இருக்கிறேன். இந்த ஆண்டுகளில் வீட்டை வாடகைக்கு விட்டவனாக நீதிமன்றத்தில் அலைந்த எனக்குத் தோன்றியதெல்லாம் ‘சட்டம் ஒரு இருட்டறை' என்ற அறிஞர் அண்ணா அவர்கள் கூறியது பொருள் பொதிந்த வாதம் என்பதே.
மே, 2018.