என்னை நீ இழந்துபோவதில்
எனக்குப் பெருந்துக்கமில்லை.
நான்
பற்றியிழுத்துத் துய்த்த உன் இதழ்கள்
விரகத்தின் குளிரால் வெடிக்கக்கூடும்
உன் முடிச்சுருளில்
பரவசமாய் இடறி நகர்ந்த என் விரல்கள்
வெப்பமற்று உறையக்கூடும்
நான்
திளைக்கத் திளைக்கக் கவ்விய
உன் கனிந்த மார்புகளின் உள்ளொடுங்கிய காம்புகள்
என் ஈரநாவுக்குள் விறைத்து நிமிரும்
திவ்விய நொடிகள் இனி இல்லாது போகும்
உன்
நாபிச் சுழலில் வட்டமிட்டு இறங்கி
உன்னில் கரையும் மாயச் சுழற்சி ஓய்ந்துபோகும்
விரியத் திறந்து வரவேற்கும்
மென்மயிர்க் கருஞ்சுடரில்
படர்ந்த முத்தங்கள் உதிரக்கூடும்
எனினும்
நாம் பரஸ்பரம் பகிர்ந்து
ஒருவருக்கொருவராய் நிறைந்த
காலத்தின் நினைவுக்காய்
உன் பாதங்களில்
என் இரு துளிக்கண்ணீர்
- நண்பர் சுகுமாரனின் இந்த கவிதை ஒரு பிரிவின் வலியை மிகுந்த துயரத்தொடு சொல்கிறது.
இந்த கவிதையின் நாஸ்டால்ஜியாவோடு ஒன்றிப் போகக் கூடிய அனுபவம் பலருக்கும் வாய்த்திருக்கக் கூடும்.
நேற்றைய ஞாபகங்களை, உணர்வுகளை, அனுபவங்களை நினைவு கூறும் சொல்லாக நாஸ்டால்ஜியா மாறியிருக்கிறது.
(Nostalgia Meaning : a sentimental longing or wistful affection for a period in the past. )
17வது நூற்றாண்டின் இறுதியில் வீட்டை விட்டு பிரிந்திருக்கும் நபர்களிடம் ஏற்படும் ஒரு வித படபடப்பான உணர்ச்சியைக் குறிக்கும் மருத்துவச் சொல்லாக பயன்பாட்டிற்கு வந்தது நாஸ்டால்ஜியா.
பின் அது பிரிவை அழகியலாக நோக்கும் சொல்லாக உருமாறியிருக்கிறது.
டௌக் லார்சன் என்கிற அமெரிக்க கட்டுரையாளர், நாஸ்டால்ஜியா என்பது பழைய நாட்களின் கரடுமுரடான நினைவுகளை சரிசெய்யும் கூரான கருவி போன்றது என்கிறார்.
கடந்து போன காதலை வாஞ்சையுடன் நினைத்து பார்க்கும் படைப்புகள் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. வரும் சிறப்புப் பக்கங்களில் சில மென் காதல் திரைப் படங்களையும் அது பார்த்தவர்களிடம் ஏற்படுத்திய இன்ப அதிர்வுகளையும் உங்கள் முன் வைக்கிறோம்.
தீபத் திருநாளை காதலோடு கொண்டாட வாழ்த்துகள்.
என்றும் உங்கள்,
அந்திமழை இளங்கோவன்
நவம்பர், 2018 அந்திமழை இதழ்