சிறப்புப்பக்கங்கள்

காய்கறிக்குத் தொட்டுக் கொள்ள சோறு! - மருத்துவர் கு.சிவராமன்

கற்பகவிநாயகம்

எங்கள் மருத்துவமனைக்கு வருவோரில் மூன்றில் ஒரு பங்கினர் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை எடுக்க வருகின்றனர். இந்த நோயை மருந்தால் மட்டுமே குணப்படுத்தி விட முடியாது. இந்த நோயை முழுமையாகக் கட்டுப்படுத்தி வைக்க, உணவு ஒழுக்கம், கால ஒழுக்கம் இவை எல்லாம் அவசியம். எவற்றை உண்ணலாம், எவற்றை உண்ணக் கூடாது என்ற உணவு ஒழுக்கம் முக்கியம்.

உங்கள் உணவுத் தட்டில் 70 சதவீதம் காய்கறிகளும் பழங்களும்  30
சதவீதம் தானியங்களும் இருக்க வேண்டும் என்று ஈட் லேண்ட் செட் கமிஷன் அறிக்கை கூறுகிறது. சோற்றைக் குவித்து தொடுகறிகளைத் தொட்டு சாப்பிட்டதற்குப் பதிலாக காய்கறிகளைக் குவித்து
சோற்றைத் தொட்டு சாப்பிடுங்கள்.

அரிசியோ சிறுதானியமோ கோதுமையோ &செமி பாலிஷ்டு அல்லது தவிடோடு இருப்பது மாதிரி கோதுமை, பழுப்பு அரிசி இவற்றை எடுத்துக் கொள்ளலாம். கிழங்குகளில் கேரட்டை கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம். பனங்கிழங்கையும்  பிடிகருணையையும் கொஞ்சம்
சேர்த்துக் கொள்ளலாம். இவை இரண்டிலும் கொஞ்சம் நார்த்தன்மை உள்ளது.

கொய்யா, பப்பாளி, மாதுளை - ஏற்கத்தக்க கனிகள். நாவலும் இலந்தையும் தின்னலாம்.  தேங்காய்ச் சட்னிக்குப் பதில் கருவேப்பிலைச் சட்னி எடுத்துக் கொள்ளலாம். தேங்காய் எண்ணெயில் பொரிப்பதை சேர்க்கக் கூடாது. ஆனால் கொஞ்சமாக தேங்காயை சேர்த்துக் கொள்வது நல்லது.     

பாகற்காய், கோவைக்காய் ஆகிய காய்கள் சர்க்கரை நோய்க்கு நல்லது. எதெல்லாம் கசப்புத்தன்மை உள்ளதோ அவை எல்லாம் நல்லது. பாகற்காயில் மொமார்டின், செரன்டின் ஆகிய இரண்டு ஆல்கலாய்டுகள் உள்ளன. இக்காய்க்கு கசப்பு சுவையை மொமார்டின்தான் தருகின்றது. இந்த இரண்டு ஆல்கலாய்டுகளும் ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது உலக அளவில் பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன. இரத்தத்தில் உள்ள சர்க்கரையை
செல்களுக்குள் தள்ளும் வேலையை இவை செய்கின்றன. கசப்பும் துவர்ப்பும் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை என்கிறது சித்தமருத்துவம். துவர்ப்புக்கு வாழைப்பூ, வாழைத் தண்டு நிறைய எடுத்துக் கொள்ளலாம்.

தேநீர் சிறப்பான பானம்தான். ஆனால் அதில் பாலைச் சேர்த்து அனைத்தையும் கெடுத்து விடுகிறோம். பால் சேர்க்காத தேநீர் பருகுங்கள்.

காலை உணவு:

ஒரு நாள் பாசிப்பயறு சுண்டல். இன்னொரு நாள்
சிவப்புக் கொண்டைக்கடலை இவற்றோடு இரண்டு அவித்த முட்டை அல்லது ஆம்லெட். இவற்றோடு காய்கறி சாலட். ஒரு கப்பில் எல்லா காய்கறிகளையும் போட்டு ஒரு சூப். இது தீவிர சர்க்கரை நோயாளிக்கான உணவுத் திட்டம். இது வாரத்தில் மூன்று நாள். அடுத்த மூன்று நாட்களுக்கு சிறுதானியங்கள் அனைத்தையும் சேர்த்து அரைத்த அடை. இரண்டு நாட்களுக்கு இட்லி, தோசை.

வயதான நோயாளிகளுக்கு சாலட் சீரணப்
பிரச்சினையை உருவாக்கும் என்றால் அவற்றை அவித்து அரைத்துத் தந்துவிடலாம். இதற்குப் பெயர் ஸ்மூதி. இதில் தக்காளி, வெங்காயம் இவற்றை அரைத்து விடுவர். காய்கறிகள் எல்லாவற்றையும் ஆவியில் வேகவைத்துக் கூழாக்கி இவற்றைச் சேர்த்து குடிக்கத் தருவர்.

இரவு உணவு:

கல்யாண வீடுகளில் மட்டுமல்ல, அன்றாடம் வேலைக்குச் செல்வோர் கூட இரவு உணவை ஒரு கட்டு கட்டி விடுகின்றனர். அதுவும் சர்க்கரை வியாதிக்காரர்கள் இரவில் கடும் பசியில் இருப்பதால் கூடுதலாக உணவு எடுத்துக் கொள்ளும் சபலத்தில் இருப்பர். இதில் கட்டுப்பாடு மிக மிக அவசியம். வேக வைத்த காய்கறிகள், காய்கறிகள் போட்டு கோதுமை ரவை கிச்சடி அல்லது கம்பு&சோள தோசை இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இதைவிட முக்கியம் என்னவென்றால் இரவில் ஏழரைக்குள் உணவை முடித்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோயருக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே இதுதான் சரியான நேரம்.

புலால் பிரியர்களுக்கு

மீன் சமையலுக்கு முதலிடம் தர வேண்டும்.
சோற்றில் மீன் குழம்பை விட்டு சாப்பிடாமல் தனி மீன்களை சாப்பிடும் பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும்.

கடற்கரையில் வசிக்கும் பாக்கியமில்லாதவர்கள் நாட்டுக் கோழியை தேர்வு செய்யலாம். அதிலும் கடக்நாத் கருங்கோழியை உண்பது சிறப்பானது. இதன் இறைச்சியும் கருமையாகவே இருக்கும். இது தசைகளை வலுவாக்கும் என்று சித்தமருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளது. இக்கறியை பயன்படுத்தி குக்குடாதி சூரணம் எனும் சித்தமருந்து செய்யப்படுகிறது. காடை முட்டையும் காடைக் கறியும் கோழியை விட மிக சிறப்பான உணவுகளாம். மாட்டுக்கறியும் ஆட்டுக்கறியும் ஃபிரெஷ் ஆக இருந்தால் வீட்டிலேயே சமைத்து உண்ணுங்கள்.

சர்க்கரை நோயாளிகள் செய்யக் கூடாதவை

  • ஆரம்பகட்ட சர்க்கரை நோயாளிகள் & சர்க்கரை வந்துவிடுமோ என்ற கட்டத்தில் இருப்பவர்கள் &கைவிட வேண்டியவை - வெள்ளைச் சர்க்கரை. பட்டை தீட்டிய தானியங்கள்.

  • மாவுத்தன்மை அதிகமிருப்பதாலும் நார்த்தன்மை இல்லாததாலும் பீட்ரூட் உட்பட்ட கிழங்குகள் வேண்டாம்.

  • சிலருக்கு சர்க்கரையோடு சிறுநீரகப் பிரச்சினையும் இருக்கும். அவர்களுக்கு கீரை வேண்டாம்.

  • மா, பலா, வாழை, சப்போட்டா, சீதாப் பழம் & விலக்கப்பட்ட கனிகள்.

  • காலை உணவாக இட்லி / தோசை / பழைய
    சோறு சேர்க்கவே கூடாது.

அப்படியே இட்லி சாப்பிட்டே ஆகவேண்டும் என்றால் நல்ல பழுப்பரிசியில் அல்லது மாப்பிள்ளை சம்பா என்ற சிவப்பு அரிசியில் ஆட்டிய மாவில் அவித்த இட்லியை அதுவும் இரண்டு மட்டும் எடுத்துக் கொள்ளலாம். அதுவும் காலையில்தான் அனுமதி. இரவு அதற்கும் தடை.

  • இரவு நெடு நேரம் விழிப்பது சர்க்கரைக் கட்டுப்பாட்டுக்கு எமன். இரவில் விழித்தால் பித்தம் கூடும். பித்தம் கூடினால் சர்க்கரை கூடும். இரவு முழுக்க கம்ப்யூட்டர், செல்போனை நோண்டிக் கொண்டிருப்போர் உடனடியாக விழித்துக் கொள்க. 

  • மதுப்பழக்கம் நிச்சயமாக சர்க்கரையை அதிகப்படுத்தும். டாஸ்மாக்கில் விற்கப்படும் மது, 150 வகையான வேதிப்பொருட்கள் கலந்துதான் தயாரிக்கப்படுகின்றது. இந்த
    சாராயம் கல்லீரலை பாதிக்கும். அது சர்க்கரை அளவை, இன்சுலின் அளவை, அது செயலாற்றும் தன்மையை மாற்றும்.

  • தீயில் சுட்டுத் தின்னும் பார்பிக்யூ உணவுகள் புற்று நோயை உருவாக்கும்.  சத்துகளை உட்செரித்தலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பார்பிக்யூவை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரையே வராமல் இருக்க:

சிறுவயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்தல், வெள்ளைச்சர்க்கரை, சாக்லேட் தின்னாமல் தவிர்த்தல், பசித்துப் புசிப்பது, நிறைய காய்கறிகள், கீரைகளோடு, மாவுச்சத்தைக் குறைவாக எடுப்பது இவற்றைப் பின்பற்றினால் சர்க்கரை நோயைத் தவிர்க்கலாம்.

ஆரம்பகட்ட சர்க்கரை வியாதிக்காரர்கள் இண்டர்மிடன்ட் ஃபாஸ்டிங் (நீண்ட பட்டினி) இருக்க வேண்டும். மாலை ஆறு மணிக்கு சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டு மறுநாள் காலை எட்டு வரை எதையும் தொடக் கூடாது. இது ஆரம்பகட்ட சர்க்கரை நோய்க்கு மிக  நல்லது என ஹார்வர்டு மருத்துவ பல்கலைக்கழகம் ஆய்வில் கண்டறிந்துள்ளது. இரவில் சாப்பிட வேண்டிய மாத்திரையை மருத்துவரிடம் கேட்டு சாயந்தரமே எடுத்துக் கொள்ள வேண்டும். கடந்த முந்நூறு வருடமாகத்தான் இரவில் சாப்பிடும் வழக்கம் மனித குலத்துக்கு உள்ளது. ஒன்றரை லட்சம் ஆண்டுகளாக இருட்டில் உணவேதும் எடுக்காத இனமாகத்தான் நாம் இருந்துள்ளோம். இந்த நீண்ட பட்டினி உடலின் உயிரியல் கடிகாரத்தை சரி செய்து உடலை
உற்சாகமாக்கி விடுகிறது.

நமது ரத்த சர்க்கரை அளவை அவ்வப்போது கண்டறிந்து கொள்வது மிக அவசியம்.
சர்க்கரை நோய் உருவாக்கும் பல நோய்களால் இளவயதிலேயே எண்ணற்றவர்கள் இறந்து போகின்றனர். 15 சதவிதம் பேருக்கு சர்க்கரை நோயின் காரணமாக புற்றுநோய் வருவதாக
சொல்கின்றனர். 25 சதவீதம் பேருக்கு மாரடைப்பு வருவதற்கான காரணம் சர்க்கரைதான். எனவே சர்க்கரைக் கட்டுப்பாடு மிக மிக அவசியம். அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.

(கேட்டு எழுதியவர்: கற்பகவிநாயகம்)

டிசம்பர், 2019.