சிறப்புப்பக்கங்கள்

காமிரா, நடனம், எடிட்டிங்

Staff Writer

ஒரு திரைப்படம் நிறைய பேரின் கூட்டுமுயற்சி. இப்படி இருப்பதால் பல்வேறு துறைகளில் புதுரத்தம் பாயும்போது திரைக்கலையும் செழுமையாகின்றது. இப்படி புதுரத்தம் பாய்ச்சும் அசலான இளைஞர்களில் சில முகங்கள் இங்கே.

முரளி: எனது சொந்த ஊர் கிருஷ்ணகிரிக்குப் பக்கம். நான் சின்னவயதிலிருந்தே சினிமாவுக்கு வாசகனாக இருந்துவருகிறவன்” என்று தெளிவான சொற்களில் பேசும் முரளி, மெட்ராஸ் படத்தின் ஒளிப்பதிவாளராக கவனம் கவர்ந்தவர். இப்போது ரஜினி நடிக்கும் இரஞ்சித் இயக்கத்தில் உருவாக இருக்கும் கபாலி படத்துக்கும் ஒளிப்பதிவாளர். ஓவியக்கல்லூரியில் படித்தபோது இரஞ்சித் இவரது கல்லூரித் தோழர். “ஓவியங்கள் மூலமாக உணர்வுகளை வெளிப்படுத்திய எனக்கு இயற்கையாகவே சினிமா மீது ஆர்வம் வந்தது. புனேவில் உள்ள பிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஒளிப்பதிவு படித்தேன். அங்கே நான் செய்த குறும்படம்  தேசிய விருது பெற்றது. அதன் பின்னர் எனது முதல் படம் அண்டால ராட்சசி என்கிற தெலுங்குப் படம். அதற்கு அடுத்தது இரஞ்சித்தின் மெட்ராஸ்!”

உங்களுக்குத் தூண்டுதலாக இருந்த ஒளிப்பதிவாளர் என்று யாரும் உண்டா?

அப்படி தனிப்பட்ட முறையில் யாரையும் சொல்ல இயலாது. பல காலமாக திரை மொழியைப் பயின்று வந்திருக்கிறேன். ஒவ்வொருவரும் பல்வேறு கோணங்களில் பங்களித்ததைக் கற்றிருப்பதால் அவர்கள் எல்லோருமாகச் சேர்ந்துதான் சின்ன சின்ன விஷயங்களாகத் திரண்டு என் ஒளிப்பதிவு முறையாக உருவாகி உள்ளது.

திரைப்படம் இயக்கும் ஆர்வம்?

நிச்சயம் உண்டு. இப்போது சினிமா என்கிற மீடியத்தை ஒளிப்பதிவாளராக அணுகிக் கற்றுவருகிறேன். எதிர்காலத்தில் கண்டிப்பாகப் படம் இயக்கும் திட்டமும் உண்டு.

ராதிகா: வளர்ந்துவரும் திரைத்துறை நடன இயக்குநர் ராதிகா(34) இப்போது பரபரப்பாக இயங்கிக்கொண்டிருப்பவர். 2012-ல் முகமூடி படத்துக்கு இயக்குநர் மிஷ்கின் நடனம் அமைக்கும் வாய்ப்பை இவருக்கு முதல்முதலாக அமைத்தார். அதன்பின்னர் சிகரம் தொடு, 555, ரோமியோ ஜூலியட், தாரை தப்பட்டை என்று நடனம் அமைத்துக்கொண்டிருக்கிறார். ஓய், வாகா, சீனி ஆகிய வளர்ந்துவரும் படங்களிலும் பணியாற்றிவருகிறார். “என் குடும்பமே சினிமா துறையில் தொடர்புடைய குடும்பம். என் அம்மா பல படங்களில் நடித்த கலைஞர். எனவே எனக்கும் சின்ன வயதிலேயே சினிமா மீது ஆர்வம். பரதம் கற்றுக்கொண்டிருந்ததால் 12 வயதிலேயே இந்த துறைக்கு வந்துவிட்டேன். கிட்டத்தட்ட எல்லா டான்ஸ் மாஸ்டர்களிடமும் உதவியாளராகப் பணிபுரிந்த அனுபவம் இருக்கிறது. சிறந்த நடன இயக்குநர் என்று பெயர் வாங்கவேண்டும். நிறைய விருதுகள் பெறவேண்டும் என்பதுதான் குறிக்கோள்!” என்கிறார் ராதிகா.

பிஜோய்: சின்ன வயதிலிருந்தே கிராபிக்ஸ்தான் என்னுடைய விருப்பமாக இருந்தது’ என்கிறார் பிஜோய். சென்னை போரூரில் உள்ள பாண்டம் எஃப்எக்ஸ் நிறுவனத்தை நடத்துகிறவர். சமீபத்தில் வெளியான இன்று நேற்று நாளை படத்தின் அழகான கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்துக் கொடுத்தது இந்த நிறுவனமே. தென்காசியைச் சேர்ந்த பிஜோய், அங்கே கல்லூரிப் படிப்பு முடித்ததும் சென்னைக்கு வந்து முதுகலைப் படிப்பாக விஷுவல் எபக்ட்ஸ் படித்தார். பிறகு தானே சொந்தமாக முயன்று பல விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறார். வேறு சில நிறுவனங்களில் பணிபுரிந்தபோது ஆயிரத்தில் ஒருவன், கந்தசாமி, தசாவதாரம் போன்ற படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகள் செய்திருக்கிறார். “2010-ல் பாண்டம் எபக்ஸை ஆரம்பித்தோம். சின்ன குழுவாக ஆரம்பித்தோம். ஹாலிவுட் படங்களைக் குறிவைத்தே இது ஆரம்பிக்கப்பட்டது. அவெஞ்சர்ஸ், ட்ரான்ஸ்பார்மெர்ஸ் போன்ற படங்களுக்கும் கிராபிக்ஸ் பங்களிப்பு செய்திருக்கிறோம். இன்றைக்கு நூறுபேர் வரை எங்களிடம் பணியாற்றுகிறார்கள்” என்கிறார் பிஜோய். வெற்றிகரமான இளைஞர்! விஸ்வரூபம்- 2, மற்றும் வேறு சில படங்களுக்கும் கிராபிக்ஸ் வேலைகள் பரபரப்பாகப் போய்க்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்.

கவமிக் யு ஆரி: செல்போனில் வந்த மெசேஜைக் கவனிக்காமல் தன் இரண்டாவது படத்துக்கான காண்ட்ராக்டில் கையெழுத்துப்போட பேனாவை எடுத்தார் கவமிக் யு ஆரி. தஞ்சையில் பிறந்து புதுச்சேரியில் வளர்ந்தவர். சின்னவயதில் இருந்தே காமிராவும் கையுமாகச் சுற்றியவர். 15 வயதில் ஒரு குருவால் ஈர்க்கப்பட்டு பௌத்தத்துக்கு மாறி, அதுவரை ஹரிஹரன் என்றிருந்த தன் பெயரை கவமிக் யு ஆரி என்று மாற்றிக்கொண்டவர். பி.சி.ஸ்ரீராம், ஜீவா, சந்தோஷ் சிவன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்து, இந்தியில் தன் முதல் படமாக மாஷ்ட்ரம் வெளியான பிறகு அடுத்த படத்துக்காக கார்த்திக் சுப்புராஜிடம் பேசியிருந்தார். அவரிடமிருந்து தகவல் இல்லை. எனவே மும்பையில் ஒரு படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற வந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்வோம் என்று முடிவெடுத்து தயாரிப்பாளர் அலுவலகத்துக்கு வந்திருக்கிறார் கவமிக். மீண்டும் முதல் வரிக்குப் போகலாம். கையெழுத்துப் போடுவதற்குள் போன் ஒலித்தது. பேசியவர் கார்த்திக் சுப்புராஜ். நேராக சென்னைக்கு வாருங்கள் ஜிகர்தண்டாவில் பணியாற்றலாம் என்று அழைப்பு. கவமிக் ஆரி தமிழ்ப்படத்துக்கு வந்தது இப்படித்தான். 

விவேக் ஹர்ஷன்: ஜிகர்தண்டா படத்துக்கு சிறப்பாக எடிட்டிங் செய்ததற்காக தேசிய விருது வாங்கியவர் விவேக் ஹர்ஷன். எடிட்டர் ஆண்டனியிடம் மூன்று ஆண்டுகள் உதவியாளராக இருந்தவர். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், 22 ஃபீமேல் கோட்டயம் போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்தவர், காக்கிச்சட்டை, வி.எஸ்.ஓ.பி., வெளியாக இருக்கும் ரஜினி முருகன் போன்றவற்றிற்கும் பணியாற்றி இருக்கிறார். எடிட்டிங் வேலை என்பது இரவு பகல் பாராமல் செய்யக்கூடிய வேலை என்று சொல்லப்பட்டாலும் விவேக் அந்த அழுத்தம் தன்னை பாதிக்காமல் இருக்க இப்போது 6-7 மணி நேரம் மட்டுமே பணிபுரிவதாக ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார். சினிமா இயக்கவேண்டும் என்ற ஆர்வமும் இருக்கிறது.

செப்டெம்பர், 2015.