சிறப்புப்பக்கங்கள்

காந்தலே ருசி

பாரதிமணி

எங்கள் நாஞ்சில்நாட்டுப்பக்கம் அந்தக் காலத்திலிருந்து இப்போதுவரைக்கும் ரசவடை மிகவும் பிரபலம்.  ரசவடை  என்றால் நேற்றைக்கு மிஞ்சின மசால்வடையோ உளுந்துவடையோ இன்றைக்கு ரசத்தில் ஊறப்போட்டது இல்லை. இன்னிக்கு அரைச்சு இன்றே செய்த வடை.  இது எந்த ஊரிலும் இல்லை. ரசவடையும் கெட்டிச்சட்னியும் சொர்க்கம் தான்!

இடியாப்பம் என்பதை எங்கள் ஊரில் சேவை என்றும் சொல்வோம். அந்த சேவைக்கு மோர்க்குழம்பும், வடாம்  அப்பளமும். இது டிபன் மட்டுமல்ல.... மதிய உணவு, இரவு பலகாரம் எல்லாமே அது தான்! மீந்துபோனதை மோர்க்குழம்போடு கலந்து அடுத்தநாள் பழம்சேவை!

அந்த சேவை செய்யறது குழந்தைகளுக்கு பெரியவிளையாட்டு.

சேவைநாழின்னு ஒரு பாத்திரம் இருக்கும். அதில் சூடான கொழுக்கட்டைகளை நிறைத்து, அழுத்திப்பிழிந்து  சேவை செய்யணும். அதைச் செய்யறதுக்கு சாதாரணமா முடியாது. இப்ப  பச்சைமாவில் செய்து இட்லி மாதிரி அவித்து இடியாப்பம்னு கொண்டுவந்திடறாங்க. அப்பல்லாம் அரிசியை உப்புப்போட்டு அரைச்சுகொழுக்கட்டை மாதிரி செய்து, அதை நாழியில போட்டுபிழியணும். அந்த நாழியை அழுத்திப் பிழிய எந்த தாரா சிங்,கிங்காங்காலயும் முடியாது. அதனால் எல்லாவீடுகளிலும் சமையலறையில் சுவரில் ஒரு ஓட்டை போட்டுவெச்சிருப்பாங்க,..... 

‘சேவைநாழி ஓட்டை’. தரையிலிருந்து ஓட்டைக்கான உயரம் அவங்க வீட்டு சேவை நாழி எந்த உயரம் இருக்கிறதோ அந்த உயரம் இருக்கும்.  நாழியில் இரண்டு கொழுக்கட்டையைப்போட்டு, உலக்கையை எடுத்து அதன் தலையை சுவர் ஓட்டைக்குள் செலுத்தி, நடுவில் நாழியை வைத்து,  இன்னொரு பக்கம் சின்னக் குழந்தைகளை உட்கார வைப்பாங்க. அந்த வெய்ட் அழுத்தி சேவை பிழிந்துவரும். எங்களுக்கு சேவை பண்றதுன்னா, Sea - saw மாதிரி ஒருவிளையாட்டு. நாங்க முறை போட்டு உட்காருவோம்.

பொதுவாக எங்கள் பக்கம் தென்னைமரம் செழிப்பானதால்,  எல்லாவற்றிலும் தேங்காய் அதிகம் இருக்கும். நான் டெல்லிக்குப் போனபிறகுதான் தேங்காய்ச் சட்னியில் பொட்டுக்கடலை சேர்ப்பாங்க என்பதையே  தெரிந்துகொண்டேன்.

மதிய உணவுக்கு தேங்காய் அரைத்த குழம்பு இருக்கும். பருப்பு சேராது. ஒரு மூடித்தேங்காயில், 6 மிளகாய் வற்றல், கொஞ்சம் உளுத்தம்பருப்பு, ஒரு தேக்கரண்டி வெந்தயம் வறுத்தரைத்துப்போட்டு அதைசெய்வாங்க. இதில் அப்பக்கொடி தாளிதம் முக்கியம். வடசேரி கனகமூலம் சந்தை தென் தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறிச்சந்தை!

தாளகக்குழம்பு எங்க ஊரில் விசேஷம். வேற ஊர்களில் இதை எட்டுக் கறிக்குழம்பு, எட்டு ’தான்’ குழம்பு, பத்து ’தான்’ குழம்பு என்று செய்வார்கள்.  திருவாதிரைக்களிக்கு தாளகம்தான் செய்வாங்க.  கல்யாணப்பொங்கல் என்று உண்டு. அது மஞ்சள்சோறு  மாதிரிதான் இருக்கும். அதில் மஞ்சள் பொடி உப்பு துவரம்பருப்பு அதெல்லாம் போட்டு செய்றது. அதுக்கு இந்த தாளகக்குழம்பு நல்ல சேர்க்கை.

நாஞ்சில்நாட்டு அவியலில் (தயிருக்கு பதிலாக) புளிபோட்டு செய்வார்கள்.  சிரட்டையில் செய்த அகப்பையால் பறிமாறுவார்கள். நன்கு தண்ணீர் விட்டு துடைத்த இலையில் மேல்பக்கம்  தயிர் பச்சடி, அப்புறம் ஸ்வீட்பச்சடி,  மூணாவது இடம் அவியலுக்கு.

சிரட்டைத்தவி என்று சொல்லப்படும் கரண்டியால் அவியலை இலையில் ‘சொத்’துன்னு வைத்தால் அது கம்பீரமாக உட்காரும். அது இலையில் விழும்போது வரும் ஓசையே இனிமையாக இருக்கும். ஆனால் தமிழ் நாட்டு அவியலில் தயிர் சேர்ப்பாங்க. அந்த தயிர் அவியலில் இருக்கும் சூட்டில் மோர் ஆகிவிடும். இலையில் வைத்தவுடன் நடுவில் இருக்கும் சோற்றை நோக்கி ஓர் ஆறுபோல் ஓடிவரும் அபாயம் உண்டு.

அப்புறம் எரிசேரி, காளன், ஓலன்.....புளிசேரி. மோர்க்குழம்புதான் புளிசேரி. தமிழ்நாட்டு மோர்க்குழம்பில் பத்தியத்துக்கு கோரோசனை உரைக்கறமாதிரி லேசா தேங்கா சேர்க்கிறாங்க. எங்க மோர்க்குழம்பில் முழுத் தேங்காய் உடையும். தயிரில் தேங்காயைக் கெட்டியாக அரைத்து சேர்க்கும் போதுதான் அதற்கு அடர்த்திவரும்.

சின்னக்குழந்தை ஒண்ணுக்குப்போறமாதிரி மோர்க்குழம்பு இருக்கக்கூடாது. எரிசேரி என்பது கூட்டுமாதிரி. நல்லமிளகு கலப்பார்கள்......

சேனைக்கிழங்கில் செய்வது. அதே மாதிரி ஓலனுக்கு ஆதட்ணீடுடிண (பச்சைப்பூசணி) பயன்படுத்துவார்கள். அதிகமாக காரம் இருக்காது.பெரும்பயறு போட்டு வைப்பாங்க. பூசணிக்காயும் சேப்பங்கிழங்கும்தான் இதற்கு உகந்தது. தேங்காய்ப்பால்சேர்ப்பாங்க. Bumpkin மாதிரி இருக்கும்.

எங்கள் பகுதியில் ஒரு கல்யாணம் நடக்குதுன்னா அதில் எத்தனை பாயசம் போடறாங்க என்பதை வெச்சு அவங்க அந்தஸ்தை மதிப்பிடலாம். ‘நம்ம மூத்தபிள்ளே வீட்டுக்கல்யாணத்திலெ அஞ்சு பாயசம்லா!’ மூணுவகைப் பாயசம், நாலுவகைப்பாயசம் சாதாரணம்!  பந்தியில் அமர்ந்ததும், இலை போடுபவரிடம், ‘மக்கா! இன்னிக்கு எத்தனை பாயசம்டே?’ என்பது முதல் கேள்வியாக இருக்கும். அந்த மாதிரி இடத்தில் சாப்பிடப்போகும்போது. சும்மா  சாம்பாரையும் ரசத்தையும் விட்டுக்கட்டிட்டு பாயசம் வரும்போது வயிற்றில் இடம் இல்லாமல் போய்விடக் கூடாது. வயிற்றில் இருப்பதை வெளியேகொட்டிவைக்கவும் முடியாது. நான்குவித பாயசம் வந்துகிட்டேஇருக்கும். அதுக்குப் பின்னால் அது ரிப்பீட். சாம்பார் சாதம் ஒருவாய்.. ரசம் வேணும்னா வாங்கி குடிச்சுட்டு, இலையைத்தொடச்சி வெச்சி ....மீதமிருக்கும் பருக்கையால் ஓரத்தில் அணைகட்டி, T20 மைதானம் போல் காலியாக ......பாயசத்துக்கு தயார் ஆகணும்.

முதலில்அடைப்பிரதமன் வரும். அப்புறம் சக்கப்பிரதமன் வரும். அப்புறம் ‘இடிச்சுபிழிஞ்ச’ பாயசம் வரும். எல்லாத்துக்கும் கடைசியில் பால் பாயசம் வரும். ஒன்று சீனியிலும் மீதி வெல்லத்திலும் செய்த பாயசங்கள். இதெல்லாம் கப்பில் வருவதல்ல! பெரிய கரண்டியுடன் ஒரு வாளியில்!  சரி!.....நாலு பாயசம்னா திகட்டாதா? .....வேறு எதற்கிருக்கிறது புளி இஞ்சியும், எலுமிச்சங்காயும், சம்மந்திப்பொடியும்? கடைசியாக மோர் சாதத்துக்கும் வயிறு வைத்திருப்பவர்கள் முட்டாள்கள்!

நாஞ்சில்நாடன் மகள் திருமணத்தின்போது, மற்ற மாநிலங்களிலிருந்து வந்த பல எழுத்தாள நண்பர்கள் ‘ஸார்! நாலு பாயசம்.....ஆனா வயத்திலெ இடம் தானில்லை!’ என்று குறைப்பட்டுக்கொண்டார்கள்! Bad planning!

பிடிக்கொழுக்கட்டை இன்னொரு முக்கியமான அய்ட்டம். புழுங்கலரிசி, தேங்காய், உப்பு போட்டு  மாவாய் அரைத்து, கடலைப்பருப்பு, உளுந்தப்பருப்பு கருவேப்பிலை தாளிச்சுக்கொட்டி நல்லா கிளறி பிடிக்கொழுக்கட்டைபிடிக்கணும். அதை இட்லி மாதிரி வேகவைக்கணும். சட்னியோட மிகவும் நல்லா இருக்கும்.

அரிசி உப்புமா என்றால் கடைசியில் வெண்கலப்பானையில் காந்திப்போனதை சுரண்டி சாப்பிடுவது வேறு ஒரு உலகத்தைக் காண்பிக்கும். ’கருப்பே அழகு;....... காந்தலே ருசி!’ என்று இதனால்தான் சொன்னார்கள். எங்கள் சாப்பாட்டு ஐட்டங்கள் பல மலையாளத்தையொட்டி இருக்கும்!  இருக்காதா பின்னே? திருவிதாங்கூர் மார்த்தாண்டவர்மா பரம்பரையின் பத்மநாபதாசர்களால் ஆளப்பட்ட வஞ்சிநாட்டின் நெற்களஞ்சியமல்லவா நாஞ்சில்நாடு?

உணவில் பல விஷயங்கள் திருநெல்வேலியில் இருக்கிறது இங்கேயும் இருக்கும். அது யாருக்கு சொந்தம் ?.....யாரு மொதல்லே?...என்கிறவிஷயத்தில் நான் ஏதும் சொல்லத் தயாரா இல்லை. ஏன்னா நான் அடிக்கடி திருநெல்வேலிக்கு போய்வரணும். யாருக்கு வேணா அது சொந்தமா இருந்துட்டுப்போகட்டும் என்னோட நாக்குக்குச் சொந்தமா இருக்கும்வரை எனக்கு எந்த பிரச்னையும் இல்லை!

அக்டோபர், 2016.