சிறப்புப்பக்கங்கள்

காத்திருக்கும் கதைகள்!

அந்திமழை இளங்கோவன்

ஊரடங்கிற்குள் ஊரடங்கு நிகழ்ந்த ஒரு நாளின் நள்ளிரவு. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் முருங்கை மரமேறி அதில் தொங்கிய உடலை (சாதாரணமாக இயற்கையெய்திய) வீழ்த்தினான். அதைத் தூக்கிக் கொண்டு செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம், “மன்னா சிலர் அற்ப விஷயங்களுக்காக தங்கள் சக்தியை வீணாக்கும் போது நீ ஏதோ ஒரு உன்னதமான ஒரு லட்சியத்தை இலக்காகக் கொண்டுள்ளாய் என்று தோன்றுகிறது. உனக்கு ஒரு கதையைக் கூறுகிறேன் கேள்” என்று கதை சொல்லலாயிற்று.

“கடந்த மார்ச் மாதம் சென்னையிலிருந்து வெளிவரும் அந்திமழை மாத இதழ், தனது ஏப்ரல் மாத சிறப்பிதழை தயாரித்து விட்டு அச்சிட்டு விநியோகம் செய்ய முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. அந்திமழை மட்டுமல்ல உலகிலுள்ள பல இதழ்கள், செய்தித்தாள்கள் எல்லாவற்றிற்கும் கிட்டத்தட்ட அதே நிலைதான். மின் இதழாக அந்திமழையும் மற்ற பல இதழ்களும் வெளிவந்தன. சர்வாதிகாரிகளோ கொடுங்கோலர்களோ செய்யமுடியாத ஒன்றை கண்ணுக்குத் தெரியாத வில்லன் ஒருவன் சாதித்திருந்தான். பெயர் கொரோனா. உலக சுகாதார நிறுவனம் கொரோனாவை உலகத்தொற்றாக (Pandemic) அறிவித்தது. நம்பக தன்மைக்கு பெயர் பெற்ற லண்டனின் இம்பீரியல் (Imperial) கல்லூரியின் ஆய்வாளர்கள் சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் 4 கோடி பேர் இறந்து விடுவார்கள் என்று குண்டை தூக்கி போட்டனர். ஒட்டு மொத்த உலகமும் திரும்ப திரும்ப உச்சரித்த கொரோனா பற்றிய சிறப்பிதழை அந்திமழை வெளியிடாததற்கு காரணம் என்ன? என் சந்தேகத்திற்கு விளக்கம் தெரிந்து இருந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும். ஐந்து நிமிடம் டைம் என்றது.

மன்னன் யோசிக்கலானான், ‘‘கொரோனாவால் 4 கோடி பேர் இறந்து விடுவார்கள் என்று இம்பீரியல் கல்லூரி ஆய்வாளர்கள் சொன்னார்கள். ஆனால் மே 1, 2020 நிலவரப்படி 2,34,392 பேர் இறந்திருக்கிறார்கள். இவர்களில் அனேகருக்கு வயது 70ஐ விட அதிகம். மேலும் பலருக்கு வேறு நோய்களும் இருந்திருக்கின்றன.

உலகமெல்லாம் கொலஸ்ட்ரால் மிகப் பெரிய பிரச்சனையாக கருதப்பட்டதற்கு முக்கிய காரணம் அன்சல் கீ (Ancel Key) என்ற அமெரிக்க மருத்துவரின் ஆய்வு. கொழுப்பை உண்ணக் கூடாது என்று தடைவிதித்த அவர் 13, ஜனவரி, 1961 தேதியிட்ட டைம்ஸ் பத்திரிக்கையின் அட்டையை அலங்கரித்தார். ஆண்டுகள் ஓடியபின்னர், “கொழுப்பிற்கு எதிரான போர் முடிகிறது’’ என்று சொன்ன 23 ஜூன் 2014 தேதியிட்ட டைம்ஸ் இதழ் அன்சல் கீயின் ஆய்வு தவறு என்கிறது. 2019 ஆம் ஆண்டில் மருத்துவ உலகம் கொலஸ்ட்ரால் பற்றிய கவலை வேண்டாம் என்று உரக்க கூறுகிறது. இடைப்பட்ட காலத்தில் 150 லட்சம் கோடிகள் மதிப்புள்ள கொலஸ்டிரால் தடுப்பு மருந்துகளை உலகம் உட் கொண்டுள்ளது. கொலஸ்டிரால் கதையை கொரோனாவும் பின் தொடரலாம் என்று நினைத்திருப்பார்களோ?

இந்தியாவில் கொரோனாவை விட முக்கியமான பிரச்சினைகள் உள்ளன. உலகில் சாலை விபத்துகளில் அதிகம் சாவது இந்தியாவில் தான். 2018 ஆம் ஆண்டு 1,51,417 பேர் இந்தியாவில் சாலை விபத்தில் உயிரை விட்டிருக்கிறார்கள். தமிழகமும், உத்தர பிரதேசமும் முதல் இரண்டிடத்தில். அதாவது 415 இந்தியர்கள் சராசரியாக தினமும் சாலையில் உயிரை விடுகிறார்கள். யாரும் பதறுவதில்லை. இந்த மரணங்களை கொரோனாவுடன் ஒப்பிடமுடியாதுதான். ஆனால் கொரோனாவை விட பெரிய தொற்றாக காசநோய் இந்தியாவில் உள்ளதே... இவ்வளவு நாள் மனித இடைவெளிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இப்போது தேர்தல் பிரச்சாரத்துக்குத் தயாராவதாக செய்திகள் வருகின்றனவே..’’ இவ்வாறெல்லாம் விக்கிர-மாதித்-யனின் சிந்தனை போய்க் கொண்டிருந்த போது,

“மன்னா உனது மைண்ட் வாய்ஸ் வெளியே கேட்கிறது. மானங்கெட்ட மைண்டை மௌனமாக யோசிக்கச் சொல் உனக்கான நேரம் முடியப் போகிறது” என்று வேதாளம் எச்சரித்தது.

“யுகங்களைத் தாண்டி நடை போடும் மனித வாழ்வில் கோர நோய்களும், இயற்கையின் சீற்றங்களும் கேள்விக்குறிகளாக நடுவில் நினைவில் வந்தாலும் அதற்கான பதில்களை கண்டடைவதில் சமர்த்தானது மனிதகுலம். உண்மையும் புனைவுமான கதைகளோடு மனிதன் தனது பயணத்தை தொடர்கிறான். எல்லோரும் எப்போதும் கதைகள் உடன் தான் வலம் வருகிறார்கள். இதனால் தான் அந்திமழை கொரோனாவை விட்டு விட்டு சிறுகதை சிறப்பிதழ் வெளியிட்டிருக்கிறது” என்றான். சரியான பதில் கேட்டு அவன் சுமந்திருந்த உடலிலிருந்த வேதாளம் உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

இந்த சிறப்பிதழில் உள்ள 33 கதைகளும் உங்கள் மனதை மெருகேற்றலாம். விரைவில் நீங்கள் சொல்லக் காத்திருக்கும் கதைகளுடன் முன்பு போல் நண்பர்களைச் சந்தித்து கதைக்க வாழ்த்துகள்.

#ஊரடங்கை மதித்து, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து, கொரோனாவை விலக்கி வைப்போம்!

என்றும் உங்கள்

அந்திமழை இளங்கோவன்

மே, 2020 அந்திமழை இதழ்