சிறப்புப்பக்கங்கள்

காதோடுதான்...

அந்திமழை இளங்கோவன்

அமேசான் நிறுவனத்தின் அதிபர் ஜெப் பெசோஸ் ஆகஸ்ட் 2013இல்  அமெரிக்காவின் புகழ்பெற்ற வாஷிங்டன் போஸ்ட் நாளிதழை 1857 கோடி கொடுத்து வாங்கினார்; இந்த நாளிதழை சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார்.

பின்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை இந்நாளிதழ் அம்பலப்படுத்த ஆரம்பித்த போதும் தடை போடவில்லை.

ட்ரம்ப் ஒவ்வொரு நாளும் பொய்களையும் தப்பான தகவல்களையும் அள்ளிவிட, வாஷிங்டன் போஸ்ட்  அவற்றை ஒன்று இரண்டு என்று வரிசைப்படுத்தி வெளியிட்டது.

 இந்நாளிதழில் செய்திகளின் அடிப்படையில் ஜெப் பெசோஸ்  பல எதிரிகளைச் சம்பாதிக்கிறார். அவர்களுள் முக்கியமான இருவர், டொனால்ட் ட்ரம்ப், சவுதி அரேபியாவின் இளவரசர் ஆகியோர்.

டொனால்ட் ட்ரம்புக்கு  வாஷிங்டன் போஸ்ட்  மட்டுமல்ல, கடந்தகாலத்தில் அவரோடு தொடர்பிலிருந்த பல பெண்களும் அவரது அந்தரங்கத்தைத் தெரிந்தவர்களும் குடைச்சலைக் கொடுத்தனர். எனவே அவர், தன் நண்பரான டேவிட் பெக்கரின் உதவியை நாடினார். நேஷனல் என்கொயரெர் பத்திரிகையின் அதிபரான இந்த டேவிட், ஒரு காரியம் செய்தார். ட்ரம்பின் அந்தரங்கத்தைப் புட்டுப்புட்டு வைக்கும் கட்டுரைகளின் முழு உரிமையையும் அதிக விலை கொடுத்து வாங்குவார். வாங்கி ,பின் பிரசுரிப்பதில்லை. இதை ”Catch and Kill”  என்று ஊடக உலகில் கூறுவதுண்டு.

இதே காலகட்டத்தில் ஜெப் பெசோஸ் வாழ்வின் ஒரு மாற்றம். அமேசான் வெளியிட்ட Manchester by the sea  திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன.  அதற்கான கொண்டாட்ட பார்ட்டியில் ஜெப் பெசோஸை தனது கணவருடன் சந்திக்கிறார், நடிகையான லாரன் சாஞ்சஸ்.  புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார்.  அதன் பின் இருவரிடையே  உறவு பலப்படுகிறது. அந்தரங்கமாக நெருக்கமாகிறார்கள்.

லாரன் சாஞ்சஸ்  தனது சகோதரரான மைக்கேல் சாஞ்சஸுடன் மனம் விட்டுப் பேசுவதுண்டு. மேக்கேலுக்கு  ஜெப்பை ஓர் உணவு விடுதியில் அறிமுகப்படுத்துகிறார். அங்கே ஜெப்புக்கும் லாரனுக்கும் இடையில் உள்ள நெருக்கத்தைப் பார்த்து அதிர்ந்து போகிறார் மைக்கேல். வெளியுலகிற்குத் தங்களது காதலைச் சொல்ல முடியாத லாரன், மெல்ல மெல்ல மைக்கேலிடம் பகிர்கிறார். கொஞ்சம் கொஞ்சம் என்று ஆரம்பித்த தகவல்கள் மடைதிறந்து வர, அவர்களின் குறுஞ்செய்தி உரையாடல்களும் அந்தரங்கப்புகைப்படங்களும் மைக்கேலிடம் வந்தன. ரகசியங்களை நீண்ட காலம் அடைகாத்த மைக்கேலுக்கு இதை வைத்து காசு பார்த்தால் என்ன என்று தோன்ற,  இது நேஷனல் என்கொயரரை அடைந்தது.

 அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசும் அவரது மனைவியும் 9, ஜனவரி 2019 அன்று ட்விட்டர் மூலம் தங்களது விவாகரத்தை உலகிற்குத் தெரிவித்தனர்.

கிசுகிசுக்களும், வதந்திகளும் ஏன்? எதற்கு? எப்படி? பரவுகின்றன என்பதை மேலே விவரிக்கப்பட்ட சம்பவங்கள் தெளிவாகப் படம் பிடித்து காட்டுகின்றன.

சென்னையில், கல்லூரியில் சேர்ந்த புதிதில், நாங்கள் கல்லூரிக்கு எதிரில் உள்ள டீ கடையில் அல்லது பக்கத்துத் தெருவில் உள்ள டீ கடையில் அடிக்கடி தென்படுவோம். கல்லூரிக்கு அருகில் உள்ள தெருவின் பெயர், மேடக்ஸ் தெரு. அந்தத் தெருவிலிருந்து ஜெனரல் காலின்ஸ் சாலைக்குச் செல்லும் வழியில் தான், தமிழகத்தில் கிசுகிசு மூலம் ப்ளாக்மெயில் செய்து பணம் பறித்த  லட்சுமிகாந்தன், கொலை செய்யப்பட்டார்.

ஏற்கெனவே ஏமாற்றிய குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி மற்றும் அந்தமான் சிறையிலடைக்கப்பட்ட லட்சுமிகாந்தன், விடுதலையான பின் கிசுகிசுக்காகவே ஆரம்பித்த இதழ் சினிமா தூது. பிரபலங்களின் ரகசியங்களை வெளியிடாமல் இருக்க பணம் பறிக்கும் முயற்சியைத் தொடர்ந்து செய்தார். சினிமா தூது பற்றி அப்போதைய சென்னை கவர்னரிடம் மனு கொடுத்து  இதழின்  உரிமம் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் இந்துநேசன் என்ற பத்திரிகை தொடங்கி, இதே வேலையை ஆரம்பித்தார். சினிமா பிரபலங்கள் மீது புழுதிவாரி இறைக்கும் செய்திகளை வெளியிட்டார்.

 இவர் மீது கொலை வெறி தாக்குதல் நிகழ்த்தப்பட்ட தினம் 8, நவம்பர் 1944. மறுநாள் அவர் இறந்தார்.

இவரது முன்னோடி, ஹாலிவுட்டின் வால்டர் வின்சல் என்பவர் என்று சொல்லலாம். 1930 மற்றும் 1940-களில் ஹாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்த இவர்தான், அங்கே முதல் கிசுகிசு பத்தியாளர். ரகசியங்களை எழுதுவேன் என மிரட்டி பணம் பறிப்பது, திரையுலகின் மீது அதிகாரம் செய்வது என்றும் ஆட்டம் போடுவதற்கு, இவர் தன் கைவசம் உள்ள கிசுகிசுக்களைப் பயன்படுத்தினார்.

ஹாலிவுட்டின் மற்றுமொரு புகழ்பெற்ற கிசுகிசு எழுத்தாளர், லௌலா பார்சன்ஸ். இவர் வில்லியம் ரண்டால்ப் ஹெர்ஸ்ட் என்ற பத்திரிகை அதிபருக்கு அவரது ஆசை நாயகியும் நடிகையுமான மரியான் டேவிஸ்  மூலம் அறிமுகமாகி உச்சத்திற்குப் போனார்.

 லௌலா பார்சன்ஸ் உச்சத்தில் இருந்த காலத்தில் அவரது கிசுகிசு பத்தி, உலகமெங்குமுள்ள 700 நாளிதழ்களில் மறுபிரசுரம் ஆனது.

இந்த சமயத்தில் நடிகர் சார்லி சாப்ளினுக்கும் மரியான் டேவிஸுக்கும் உறவு இருப்பதாக, ஹெர்ஸ்ட் சந்தேகப்படுகிறார்.

இதற்கு முடிவு கட்ட, ஆடம்பரப் படகு ஒன்றில் பார்ட்டி ஏற்பாடு செய்தார். சார்லி சாப்ளினுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு தவறுதலாக இயக்குநர் தாமஸ் இன்ஸ் என்பவர் மேலே பட்டு அவர் படகில் இருந்து தூக்கிச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களில் லௌலா பார்சன்ஸும் ஒருவர். ஆனால், அது பற்றி இவர் மூச்சு விடவில்லை! கிசுகிசு எழுத்தாளரே இதைக் கிசுகிசுவாகக்கூட எழுதவில்லை என்றால், என்ன சொல்வது?

25, செப்டம்பர்,2019 தேதியிட்ட Time இதழில்  கிசுகிசுக்கள் பற்றி இப்படிக் குறிப்பிடப்பட்டுள்ளது:

‘கிசுகிசு என்றால் மோசமானது என்றே நினைக்கிறார்கள்.  ஆனால், அப்படி இல்லை. அந்த நேரத்தில் அங்கு இல்லாத ஒருவரைப் பற்றிப் பேசுவது கிசுகிசு. அது பெரும்பாலும் தீங்கு இல்லாத ஆர்வத்தைத் தூண்டும் பேச்சாகவே அமைகிறது. இது எதிர்மறையான பேச்சாகத்தான் இருக்கவேண்டும் என்பது இல்லை. நடுநிலையான, நேர்மறையான தகவல்கள் பரிமாற்றமாகவும் இருக்கலாம் என்கிறார் ஓர் ஆய்வாளர்.

2015இல் செய்யப்பட்ட ஓர் ஆய்வின் படி, கிசுகிசுக்களைக் கேட்கும்போதும் மூளையின் முன் பகுதியில் ஓரிடம் தூண்டப்படுகிறது என்று கண்டுபிடித்துள் ளனர். சமூகப் பழக்கவழக்கங்களை நாம் கடை பிடிக்க உதவும் பகுதியாம் அது.'

முதலில் சினிமாவை சுற்றியே நிகழ்ந்த கிசுகிசுக்கள், தற்போது வாழ்வின் எல்லா நிலைகளிலும் நீக்கமற நிறைந்துள்ளன.

 மருத்துவம், அரசியல், சினிமா, இலக்கியம், அலுவலகம், குடும்பம் என்று எல்லா இடங்களிலும் வதந்திகளும் கிசுகிசுக்களும் ததும்பி வழிகின்றன. உண்மைக்கும்  பொய்மைக்கும் இடையிலான கோடு அழிக்கப்பட்டு விட, அநேக நேரங்களில் தனக்கு சௌகரியமான பொய்களை மனிதன் நம்புகிறான்.

பொய்களை இனம் காண, அதைப் பற்றிய ஒரு விவாதம் தேவைப்படுகிறது. அந்திமழையின் இந்தச் சிறப்பு பக்கங்கள், அந்த விவாதத்தின் தொடக்கமாக கூட இருக்கலாம்!

என்றும் உங்கள்

அந்திமழை இளங்கோவன்.

ஜூன், 2021