பொதுவாக ஆடுன காலும் பாடுன வாயும் நிக்காதுன்னு ஊர்ல நாட்டுல சொல்லுவாங்க, எழுத்துக்கும் அதைச் சேத்துக்- கலாம். எழுத ஆரம்பிக்கிறதுல நூத்துக்கு 99 பேரு கவிதைதான் எழுத ஆரம்பிக்கிறாங்க. அப்புறமா புனைவுக்குத் தடம் மாறிர்றாங்க.
பொதுவான காரணம் கவிதை எழுதறவங்களுக்கு ஒரு மரியாதை இருக்கும் ஆனா அதனால பிரயோசனம் இருக்காது. மரியாதையான ஒசரத்தில எல்லாம் வைப்பாங்க. ஆனா வச்சுட்டு நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டாங்க. Poetry is to prose as dancing is yo walkன்னு சொல்லற மாதிரி அதாவது கவிதைங்கிறது நாட்டியம் மாதிரி, நாவல்ங்கிறது நடக்கிறது மாதிரி. அப்ப கதைன்னா, அதை ஜாக்கிங் மாதிரின்னு வச்சுக்கலாம்.
நான் கவிதைகள் மட்டுமே எழுதிக்கிட்டிருந்தேன். அதிலேயே குறுங்காவியங்கள் எல்லாம் கூட எழுதிப் பார்த்திருக்கேன். கி.ரா. மாமா சொன்ன மாதிரி கவிதையிலேயே பேச்சு வழக்கில் எழுதி அதையும் ஒரு பாணியா மாத்திக் கூட வச்சேன். உரைநடைதான் சரியாவே வரலை. அப்படியும் கசடதபற, கணையாழி, ஞானரதத்தில் எல்லாம் தலா ஒரு கதை எழுதியிருக்கேன். ஒரு நாவல் 1974இல் எழுதினேன்.
பேப்பரும் பேனா மையும் வீணானதுதான் மிச்சம். 1980 இல் இன்னொன்னு எழுத ஆரம்பிச்சேன். ‘வீடு'ன்னு தலைப்பு வச்சு. கொஞ்சம் சுமாரா வர்ற மாதிரி இருந்துச்சு, சொந்த வாழ்வில் ஏற்பட்ட எதிர்பாராத இழப்பினால் ரொம்ப மன உளைச்சலில் கஷ்டப்பட்டேன். அதுக்கு என்னவெல்லாம் எதுவெல்லாம் காரணம்ன்னு எனக்குள்ளேயே கேட்டுக் கேட்டு, அதையெல்லாம் தவிர்க்க ஆரம்பிச்சேன். அப்ப நாவல் எழுதறதும் காரணமோன்னு நினைச்சுத் தூக்கிக் கடாசிட்டேன்.
அப்புறம் 30 வருசம் போலக் கழிஞ்சது. சினேகிதர் இளங்கோவனோட தொடர்ந்த நச்சரிப்பில் வாரா வாரம் அந்திமழை இணைய இதழில் நினைவின் தாழ்வாரங்கள்ன்னு என் சுய புராணத்தைக் கொஞ்சம் கற்பனை சேர்த்து எழுதினேன். நாம் வாழும் உலகம் நம்மிடமிருந்து என்னவெல்லாமோ கேட்கிறது எதிர்பார்க்கிறதுன்னு சொல்லுவாங்க, அது உண்மைதான்னு நான் உணர்றா மாதிரி, அதுக்கு பெரிய வரவேற்பு இருந்துது. காடா செடியா ‘கண்டமானிக்கி' திரிஞ்சுக்கிட்டிருந்த என்னுடைய வாழ்க்கையில என்ன இருந்துரும், சினிமா, அரசியல் கூடவே நிறைவேறாத காதல் அப்படித்தான் கழிஞ்சிது நாட்கள். ஆனா போகிற பாதையெல்லாம் வந்து வந்து போன எத்தனையோ வேறுபட்ட மனு சங்கள் மத்தியில் ஒரே ஒரு பூமுகம் மட்டும் கூடவே வந்தது காதலின் ராட்சசியாய். அந்தக் காதலை கவிதை எடுத்துக்கிட்டு. மிச்சமிருந்ததை நடைச் சித்திரம் போல எழுதின ‘நினைவின் தாழ்வாரங்கள்' ‘உருள்பெருந்தேர்,' ‘ஓடும் நதி' ‘காற்றின் பாடல்' போன்ற தன்வரலாற்றுப் புனைவுகள் எடுத்துக் கொண்டன. அது போக மிச்சமிருந்த சினிமாவைப் பற்றிய ஞாவகங்கள் ‘சுவரொட்டி', ‘என் உள்ளம் அழகான வெள்ளித்திரை', ‘பாடலென்றும் புதியது' போல சினிமாவும் மனுசர்களும் கலந்து வந்துது. இவைகளிலெல்லாம் தலைகாட்டிய மனிதர்களும் மனுஷிகளும் அவர்கள் வாழ்க்கைப்பாடுகளும் ‘நீ ஓங்குரல்லயே பேசிக்கிட்டிருந்தா எப்படி, எங்களையும் பேச விட்டா நாங்க எங்க சந்தோஷமோ தும்பமோ எங்க பாடுகளைச் சொல்லுவோம்ல்லா என்று கேட்காமல் கேட்டார்கள். தன் வரலாற்றுப் புனைவில் ஓங்கிச் சளம்பிக் கொண்டிருந்த ‘நான்' ஐக் கழட்டி விடும் முயற்சியில் பிறந்ததுதான் ‘வேனல்' நாவல். திருநெல்வேலி அதன் மக்கள், அந்தப் பேச்சு வழக்கு, இவையெல்லாம் அதன் மையமா இருந்தாலும். பெண்களின் நொம்பலத்தைப் பற்றி அது அதிகமாகவும் ஆதுரத்துடனும் பேசியது.
அடுத்த நாவலின் களம் சென்னையும் திரைப்படுலகமும். உதவி நடிகர்கள், நடிகைகள், திரையில் தெரியாத பின்னணியில் இயங்கும் கலைஞர்களின் உதிரி வாழ்க்கை பற்றிச் சொன்னது. என்னைப் பொருத்து அது தமிழில் ஒரு புது முயற்சி. அப்புறம் பேரருவி அது, சீஸனுக்கு வரும் உல்லாசப் பயணிகளை நம்பி வாழும் குற்றாலத்தின் மக்களைப் பின் புலமாக வைத்து எழுதப்பட்டது.
நாலாவது நாவல் மாக்காளை இப்போது வெளிவந்துள்ளது. இதுவும் திருநெல்-வேலியைக் களமாகக் கொண்டிருந்-தாலும் 1960களின் சினிமா, அரசியல், சமூக வாழ்வினைப் பதிவு செய்கிற நாவலாய் வந்துள்ளது. வெறும் வரலாற்று நூல்கள் ஏற்படுத்தாத சரித்திரத் தாக்கத்தை இப்படிப் புனைவுகள் வலுவான வகையில் ஏற்படுத்தும் என்பது என் நம்பிக்கை. அதைத்தான், ‘‘மக்கள் நாவல்களை ஏன் பிரபலமான இலக்கிய வடிவாக எண்ணி அதிசயிக்கிறார்கள், ஏன் அவை அறிவியல் புத்தகங்கள், தத்துவ இயல் நூல்களை விட விரும்பி வாசிக்கப்படுகின்றன என்றால் நாவல்கள் அவற்றின் இருப்பை விட, அவற்றில் இருப்பதை விட உண்மையானது'' என்று பிரபல எழுத்தாளர் ஜி.கே.செஸ்டர்டன் கூறுகிறார். ஆம். நாவலாசிரியனையும் தாண்டி ஒரு நாவல் உண்மையானது.
ஜனவரி - 2022