சிறப்புப்பக்கங்கள்

காக்கிச்சட்டை  கதைகள்  

அந்திமழை இளங்கோவன்

தில்லி காவல்துறை தலைமையகத்திற்கு ஒரு ரகசிய தகவல். புஷ்பேஸ் விமான நிறுவன உரிமையாளர் எச். சுரேஷ் ராவை தெற்கு தில்லியின் ஒரு பங்களாவில் கட்டி வைத்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தகவல்.

அடிப்பது ரோமேஷ் சர்மாவும் அவரது அடியாட்களும்.

தலையிடலாமா? வேண்டாமா என்ற குழப்பத்தில் தில்லி  காவல்துறை துணை ஆணையர்,  தலைமையை நாட, தலைமை அனுமதி அளிக்கிறது.

ரோமேஷ் சர்மாவுக்கு சுரேஷ் ராவுக்கும் அப்படியென்ன பிரச்னை?

உத்தரபிரதேசத்தின் பல்பூர் தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார் ரோமேஷ். தேர்தல் பிரசாரத்திற்கு ஹெலிகாப்டர் தேவை என்பதால் சுரேஷ் ராவ் நடத்திய நிறுவனத்தை அணுகுகிறார். வாடகை பேசி ஹெலிகாப்டரை பிரசாரத்திற்கு பயன்படுத்துவது என்று முடிவாகிறது. இங்கு மற்றொரு பிரச்னை, ஹெலிகாப்டரின் மொத்த வாடகைத் தொகையை கொடுத்தால், அது தேர்தல் ஆணையம் தேர்தல் செலவுக்கு அனுமதிக்கும் தொகையை விட அதிகமாக இருந்தது. மாற்று யோசனைகள் விவாதிக்கப்பட்டு இறுதியில் தேர்தல் ஆணையத்தை ஏமாற்ற வேண்டுமென்றால் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுப்பதற்கு பதில் விற்பது போல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, ஆவணங்களை தயார் செய்துவிடுவது. தேர்தலுக்கு ஹெலிகாப்டரை பயன்படுத்துவது. தேர்தல் முடிந்த பின் ஒப்பந்தத்தைக் கிழித்துப் போட்டு விட்டு வாடகையை கொடுத்து கணக்கை முடித்துக் கொள்வது என்று பேசி முடித்தார்கள்.

எல்லாம் சரியாகத் தான் சென்றது. தேர்தல் முடிந்த பின் அலகாபாத்திற்கு அருகில் உள்ள பல்பூரில் ஹெலிகாப்டர் பாகம் பிரிக்கப்பட்டு, பெரிய டிரக்கில் ஏற்றப்பட்டு மும்பைக்குச் சென்றது. வழியில் மறிக்கப்பட்டு தில்லியில் உள்ள ரோமேஷ் சர்மாவின் பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, ஹெலிகாப்டர்  மறுபடியும் பாகங்களை இணைத்து தயார் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டது. ஹெலிகாப்டரை மறந்து விடு... ரோமேஷுக்காக தாவூத் இப்ராஹிம் அடியாள் இர்பான் கோகா என்பவன்  சுரேஷ் ராவை மிரட்டினான். தனக்கு நேர்ந்த கொடுமையை சுரேஷ் ராவ் காவல் துறையின் பல்வேறு கதவுகளைத் தட்டி புகார் அளிக்க முயற்சிக்கிறார். எங்கும் பலனில்லை. ரோமேஷின் உயர்மட்ட அரசியல் செல்வாக்கு மற்றும்  நிழல் உலக நடவடிக்கைகள் ஏற்படுத்திய பிம்பம் ஒரு பிரமாண்ட பயத்தை ஏற்படுத்துகிறது.

யார் இந்த ரோமேஷ்? எப்படி அசுரனானான்?

1954 இல் உ.பி.யில் அலகபாத்திற்கு அருகில் உள்ள குக்கிராமத்தில் ஓர் ஏழை குடும்பத்தில் அவன் பிறந்தான். சிறு வயதில் ஊரை விட்டு தில்லிக்கு இடம்பெயர்ந்தவன், தில்லியில்  வயர் தயாரிக்கும் நிறுவனமொன்றில் வாரக் கூலி நான்கு ரூபாய்க்கு வேலை பார்த்தான். பிறகு சாலையோரத்தில் மணிபர்ஸ், கைக்குட்டைகள் விற்றான். அதில் வாரத்திற்கு 5 -10 ரூபாய் கிடைத்தது. தொடர்ந்து 1970இல் மும்பைக்கு இடம்பெயர்ந்தான். மும்பையில் ஒரு கண்ணாடி தொழிற்சாலை ஒன்றில் மாத சம்பளம் ரூ 200க்கு வேலைக்குச் சேர்ந்தான்.

மும்பையில் ஓர் உணவக உரிமையாளரின் மகனோடு அறிமுகம் கிடைத்ததற்குப் பின், அவன் வாழ்க்கை உயரத் தொடங்கியது. இந்த காலக்கட்டத்தில் நிலம் தொடர்பான கட்ட பஞ்சாயத்துகளில் ரோமேஷ் ஈடுபடத் தொடங்கினான். 1976 - 1978 க்கு இடைப்பட்ட காலத்தில் அவனது சொத்துகளின் எண்ணிக்கை வேகமாக கூடியது. எப்படி என்பது புலனாய்வு போலீஸ் முதல் ஒருவருக்கும் புரியாத புதிர்.

1978இல் அரசியலின் பக்கம் அவன் பார்வை திரும்பியது.  சோஷலிஸ்ட் கட்சியின் முன்னாள் பீகார் உள்துறை அமைச்சர் உடனான நட்பு. பின் மத்திய உள்துறை அமைச்சர் சௌத்ரி சரண் சிங் உடன் அறிமுகம். 1979இல் ரோமேஷ் சர்மா மகாராஷ்டிரா ஜனதா கட்சி (சோஷலிஸ்ட்)யின் ஒருங்கிணைப்பாளர் ஆகிறான். முன்னாள் துணை பிரதமர் தேவிலால் மற்றும் அவரது மகன் ஓம் பிரகாஷ் சவுதாலா ஆகியோருடன் நெருக்கம், இப்படி அரசியல் வளர்ச்சி. மற்றொருபுறம் மும்பையின் வரதராஜ முதலியார், தாவூத் இப்ராஹிம் என்று தனது நிழலுலக தொடர்பை வளர்த்துக் கொள்ளும்  ரோமேஷ், அசைக்க முடியாத சக்தியாக மாறுகிறான்.

ஆனால் திரையில் காட்டப்படும் வில்லன்களைப் போல் அல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கைப் பழக்கங்கள் உள்ளவன்.  பழங்கள், பழச்சாறு, மீன் மட்டும் சாப்பிடுவான். ஆல்கஹால் கிடையாது. ‘இதயத்திற்கு நல்லது' என்பதால்  வைன் மட்டும் சாப்பிடுவது வழக்கம். அவனது பலவீனங்கள் இரண்டு. 1.அழகான வெளிநாட்டு கார்கள்  2. அழகான இளம் பெண்கள்.

எண்ணிலடங்கா வழக்குகளில் கைதாகி இருக்க வேண்டியவர் ரோமேஷ். அசாம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுபா,  ஜம்முவின் எம்பி ஜனக் ராஜ்குப்தா ஆகிய அரசியல் பெருந்தலைகளின் சொத்தை ஆட்டை போட்ட இவன் மாட்டியது ஆரம்பத்தில் சொன்ன ஹெலிகாப்டர் வழக்கில் தான்.

20, அக்டோபர் 1998, அன்று தில்லியின் புகழ் பெற்ற காவல் ஆணையர் அமோத் கே. காந்த்  அறிவுறுத்தல்படி அவன் கைது செய்யப்பட்டான்.

எல்லா தரவுகளும், ஆவணங்களும் சரியாக ஏற்பாடு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் கவனமாக வாதாடப்பட்டு பத்தாண்டு சிறைத் தண்டனையும் 17,50,000 அபராதமும் வழங்கப்பட்டது.

இந்த வழக்குப் பற்றி காவல் ஆணையர் அமோத் காந்த் குறிப்பிடும் போது, போலீசுக்கு இவனைப் பற்றி எல்லாம் தெரியும். இருந்தாலும் ஏன் ரோமேஷ் சர்மா முன்பே கைது செய்யப்படவில்லை? இவ்வளவுதூரம் வளர அனுமதிக்கப்பட்டான் என என் உள்மனம் கேட்டது.

நான் பதில் சொன்னேன்:  இந்திய காவல்துறை இரண்டு விஷயங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. முதலில் அதன் சரியான செயல்பாடுகள் நீதிமன்ற நடைமுறையிடம் தோற்கின்றன. ஏனெனில் நீதிமன்றத்துக்கு சரியான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சாட்சியங்கள் தேவை. இரண்டாவது காவல்துறை அமைப்பே தவறுக்குப் புறம்பானது அல்ல. அது பணத்தாலும் அதிகாரத்தாலும் வளைக்கப்படும் நிலையில் உள்ளது.

அமோத் காந்தின் மேற்கூறப்பட்ட வாசகங்கள் காவல்துறை சில வேளைகளில் செயல்பட முடியாமல் போகிறது என்பதைக் காட்டுகிறது.

தூத்துக்குடியில் மக்களை குருவிகளைப் போல் சுட்டது, சாத்தான் குளத்தில் அப்பா மகனை அழைத்துப் போய் அடித்துக் கொன்றது,  பல் பிடுங்கிய கதை என எத்தனையோ இருக்கும் போது... என்று பலர் இழுப்பது காதில் விழுகிறது.

குற்ற மாபியா, காவல்துறை, அதிகார வர்க்கம், அரசியல்வாதிகள் - இவர்களுக்கு இடையே இருக்கும் தொடர்பை ஆராய்வதற்காக உள்துறை அமைச்சகச் செயலர் என்.என்.வோரா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ரா, ஐபி, சிபிஐ, வருவாய் புலனாய்வுத்துறை, மத்திய நேரடி வரிகள் வாரியம், அமலாக்கத்துறை போன்றவற்றின் தலைவர்கள் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். இக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தினாலே மக்களுக்கும் நல்ல காவல்துறை அதிகாரிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

காவல்துறையின் சாகசங்களை அவர்களது வெற்றிக் கதைகளை ஊடகங்கள் சரியாக பதிவு செய்யவில்லை என்கிற ஆதங்கத்தை பல காவல்துறை அதிகாரிகள் நம்மிடம் பகிர்ந்ததுண்டு. அந்திமழையின் இந்தச் சிறப்பிதழ் இது தொடர்பானதே.

மே, 2023 அந்திமழை இதழ்