சிறப்புப்பக்கங்கள்

கழகம் நடத்திய காதுகுத்து விழா!

மருத்துவர் கனிமொழி என்விஎன் சோமு

மு.க.வின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரும் பேரறிஞர் அண்ணா அவர்களின் தோழரும், தலைவர் கலைஞர் அவர்களின் தளகர்த்தர்களில் ஒருவருமான எனது தாத்தா என்.வி. நடராசன் அவர்களின் காலம் முதலாக தலைமுறை தலைமுறையாக தி.மு.க.வுக்கும் எங்கள் குடும்பத்துக் குமான உறவும் நட்பும் கழகப் பணிகளும் இன்றளவும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

எனது தாத்தா என்.வி.என். அவர்களின் மறைவுக்குப் பின்பு, எனது சித்தப்பா செல்வம் அ.தி.மு.க.வில் இணைந்தார். இதனால் கடைசி சித்தப்பா சாக்ரடீஸ் அவர்களின் திருமணம்  எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்தது. அந்தத் திருமணத்திற்கு எனது தந்தை என்.வி.என். சோமு அவர்கள் போகவில்லை. இதன் தொடர்ச்சியாக சற்று மனவருத்தத்திலும் இருந்தார்.

இதையறிந்த தலைவர் கலைஞர், எனது தந்தையைத் தேற்றியதோடு அந்த நேரத்தில் அவரை உற்சாகப்படுத்த பிறந்த நாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்தார். அது தந்தைக்கு 47 வது பிறந்தநாள். 50 வது பிறந்த நாள் என்றாலும் பரவாயில்லை... இது என்ன இடைப்பட்ட விழா என்று பின்னணி தெரியாத தோழர்கள் குழம்பினார்கள்.

அந்தப் பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் பேசிய தலைவர் கலைஞர், ‘ இந்த விழா எதற்காக என்று எல்லோரும் கேட்கிறார்கள்... ஒரு வீட்டில் திருமணம் கோலாகலமாக நடந்தால்... சீமந்தம், குழந்தை பிறப்பு... அந்தக் குழந்தையை தொட்டிலில் போடுவதோடு விழாக்கள் முடிந்துவிடும். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து அந்தக் குழந்தைக்கு காது குத்து என்ற பெயரில் ஒரு விழா நடக்கும். அப்படி சோமுவை உற்சாகப்படுத்த அவருக்கு கழகம் நடத்தும் காதுகுத்து விழாதான் இந்தப் பிறந்தநாள் விழா' என்றார். அவ்வளவு மன வருத்தத்தில் இருந்த தந்தையும் மனம்விட்டுச் சிரித்தார்.

1984 நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் மட்டுமே கழகம் வென்றது. பொதுத்தேர்தலின் போது தள்ளிவைக்கப்பட்ட வட சென்னை தொகுதிக்கான தேர்தல் 1985ம் ஆண்டு நடந்தது. தந்தைதான் கழக வேட்பாளர். அந்தப் பிரச்சாரத்தின் போது பேசிய தலைவர், ‘ மத்திய சென்னை வெற்றி மூலம் கழகத்தின் கைகளில் தாலிக்கயிறு கொடுத்திருக்கிறீர்கள். வடசென்னையில் சோமுவை வெற்றிபெறச் செய்து, அந்தக் கயிற்றில் கோக்க வேண்டிய மஞ்சளையும் கொடுத்தால் நன்றாக இருக்கும்' என்றார். கழகத்திற்கு வெற்றியைக் கொடுத்தார்கள் வடசென்னை மக்கள்.

மகப்பேறு மருத்துவரான நான் எனது தந்தையின் மறைவுக்குப் பிறகு, கழகத்தில் தீவிரமாக செயல்படத் தொடங்கினேன். 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்பி, தலைவரிடம் எனது விருப்பத்தைச் சொல்லப் போயிருந்தேன். முதுகுத் தண்டு பகுதியில் சிகிச்சை எடுத்துக்கொண்டு தலைவர் ஓய்விலிருந்த நேரம். தலைவரிடம் எனது விருப்பத்தைச் சொன்னேன். அருகிலிருந்த சண்முகநாதன், ஓய்விலிருக்கும் இந்த நேரத்தில் அதையெல்லாம் பேசாதீர்கள் என்றார்.

ஆனால், அவரை கையமர்த்திய தலைவர், இது கட்சி விஷயம். அவர்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டியது அவசியம் என்று சொல்லிவிட்டு, அவர் வயதில் பாதிகூட இல்லாத என்னிடம் அந்த நேரத்துச் சூழலை விளக்கிச் சொல்லி, பொறுமையாக காத்திரு என்று சொல்லி அரசியலில் பொறுமை அவசியம் என்ற அறிவுரையை எனக்கு வழங்கினார்.

அந்த நேரத்தில் தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்க இயலாத சூழலில், 2011 சட்டமன்றத் தேர்தலில் மாதவரம் தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்தார். அதில் நான் வெற்றி வாய்ப்பை இழந்தபோதிலும், 2013 ஆம் ஆண்டு என்னை நேரில் அழைத்தார் தலைவர் கலைஞர்.  ‘கழகத்தில் புதிதாக மருத்துவ அணியைத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன். உன்னைச் செயலாளராகப் போட்டுதான் தொடங்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். நன்றாக பணி செய்' என்று வாழ்த்தி என்னை அப்பொறுப்பில் நியமித்தார். சுமார் பத்தாண்டுகள் அப்பொறுப்பில் சிறப்பாக பணிபுரிந்து, அவரது ஆசீர்வாதத்தால் அந்த அணியின் தலைவராகவும் கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் கழகப் பணிகளைத் இன்றளவும் தொடர்கிறேன்.