சிறப்புப்பக்கங்கள்

களை வெட்ட வந்த பெண்ணின் கதை!

கண்மணி குணசேகரன்

என்னுடைய கவிதை, கதை, நாவல், அகராதி என எந்த படைப்பாக இருந்தாலும், நான் கண்கூடாகப் பார்த்த, நேரடியாகக் கேட்ட சம்பவங்களின் அடிப்படையிலேதான் இதுகாறும் எழுதி வந்திருக்கிறேன்.

தெருக்கூத்தில் பொன்னுருவி தர்க்கம் நடக்கும்போது அவர்களுக்கு இடையில் ஒரு மெல்லிய திரை தான் குறுக்கே பிரித்திருக்கும். அத்தகைய ஒரு மெல்லிய துணி மறைவிற்கு அந்தாண்ட நடக்கிற விஷயங்களைக் கூட என்னால் எட்டிப்பார்க்காமல் முழுநிறைவாக எழுதிவிடமுடியாது. ஆக ஒரு படைப்பை ஓரளவிற்குக் கற்பனையாக எழுதலாம். முக்காலே மூணுவீசமும் கற்பனையாகவே என்னால் எழுதிவிடவே முடியாது.

நான் அடிக்கடி சொல்வது-போல்தான். படைப்பாளி ஒன்றும் பெரிய கொம்பு முளைத்தவன் கிடையாது. அவனும் இந்த சமூகத்தின் ஊடாகத்தான் வாழ்கிறான். பேராசிரியர் பழமலய் ‘ஊடா-கவும், கடந்தும்' என்பார். சில பேர் மக்களினூடாக முற்றாக வாழ்ந்து பிறகு அதிலிருந்து தன்னை வேறுபடுத்தி வேறொருவராய் நின்று திரும்பிப் பார்த்து அந்த வாழ்க்கையை யோசிப்பார்கள், எழுதுவார்கள். இதில் நான் வேறுபட்டவன். மக்களினூடாகவே வாழ்ந்து உழன்றுகொண்டிருக்கிற என்னால் இதிலிருந்து கடந்தேற முடியவில்லை. இம்மக்களின் சுக துக்கங்களில் விழுந்து கிடக்கிறேன். அவர்களில் ஒருவனாக பொட்டைமண் புழுதியில் நின்றுதான் என்னுடைய படைப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். சில பேர் இது எனது பலவீனமென சொல்லலாம். விடுதலையில்லா எழுத்து என தத்துவம் பேசலாம். ஆனால் எனக்கு இது நிறைவாக, மகிழ்வாக இருக்கிறது. அவ்வளவுதான்.

‘என்னோட கதையையெல்லாம் ஓங்கிட்ட சொன்னன்னா... நீ எவ்ளோ பெரிய புஸ்தகம் எழுதலாம் தெரியுமா... சும்மா பிச்சி எடுத்துக்கிட்டு ஓடும்...‘ என்பார்கள். ஏதோ ஒரு மனவருத்தத்தில், விரக்தியில் சொல்லி ஆறுதலடைய வேண்டிய இக்கட்டில் அவர்களுடைய பாடுகளை நம்மிடம் சொல்வார்கள். பலநேரங்களில் அவர்கள் சொல்வதை ஊங்கொட்டி கேட்டுக் கொள்வதோடு சரி. அரிதாய் சிலதைத் தான் எழுத நேர்வது. இப்படி சொல்பேச்சிக் கேட்டு எழுதுவதில் என்ன சிக்கல் என்றால்? ஒருவருடைய வாழ்க்கை அவர்கள் பக்கத்தில் நின்று பார்க்கிறபோது அவர்களுக்கு சரியானதாகவே இருக்கலாம். ஆனால் ஒரு படைப்பாளியாக நாம் பார்க்கையில் அதில் சில முரண்கள் தெரியும். அதை கவனத்திற் கொள்ளாமல் எழுதிவிடமுடியாது. அதையெல்லாம் சீர்தூக்கி எழுதுகிறபோது அவர்களுக்கு சில சங்கடங்கள் ஏற்படும். வருத்தப்பட நேரும். இத்தகு சிக்கலால்தான் ஓர் ஆவணமாக முற்றிலும்  உண்மைக் கதை என்று நான் அதை நிறுவுவதற்கு முயல்வதில்லை. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை தான். ஆனால் முழுதும் உண்மை அல்ல.

கண்மணி குணசேகரன்

அஞ்சலை நாவல் எங்களுடைய ஆலமரத்துக் கொல்லையில் கம்புக்குக் களை வெட்டுக்கு வந்த ஒரு பெண்ணின் கதை.

ஏறுவெயில். குப்பைஎருவு போட்டிருந்ததில் பசபசவென்று சோலைகளை ஆட்டிக்கொண்டிருக்கின்றன கம்மம் பயிர்கள். குறுக்கநெடுக்க கம்மங்காய் புற்கள்தான். கோடிக்களைக்கொட்டை வெறுமனே பயிர் கால்களில் போட்டு எடாவிக்கொண்டு போகிறார்கள் சனங்கள். நான் கோட்டுக்கழியால் மெனைக்கு கோடு அடித்துக் கொண்டிருக்கிறேன். மாஞ்செவலையாய் ஒரு பெண் அவளுடைய குடும்பத்தின் சண்டை சச்சரவுகளை சொல்லி புலம்பியபடி வெட்டிக்கொண்டிருக்கிறாள். இடையிடையே சொல்வதற்கு இயலாமல் ஆத்திரத்தில் தத்தளிக்கிறது மனம். எவ்வளவு மனத்துயரமாக இருந்தாலும் கொல்லையில், வேலைத்தலையில் யாரும் அழமாட்டார்கள். அழுவதற்கும் எவரும் அனுமதிக்க மாட்டார்கள். மீறி அழுதால் கொல்லை விளையாமல் அழுதுகொண்டு போய்விடும் என்கிற நம்பிக்கை.

கூட களைவெட்டிக்கொண்டிருந்த பக்கத்து மெனை பெண்ணுக்கு என்னை, என் எழுத்து முயற்சிகளைப் பற்றித் தெரியும். (ஒப்பாரி சேகரிப்பின்போது நல்ல பழக்கம்.) ஊங்கொட்டி கேட்க மாளாத கணத்தில் ஓங் கதையெல்லாத்தையும் நம்ம சின்னவர் கிட்ட சொன்னா ஒரு புஸ்தமகாவே எழுதிடுவாரு,' சொல்லியபடி நிமிர்ந்து என்னையும் பார்த்தாள்.

‘தலைமுறை கோபம்' போடறதுக்கு வாங்கன கடனுக்கு இன்னம் அசலே அடையாம கெடக்கு. இதுல இந்த கதைய எழுதிகிட்டு எவங்கிட்ட போயி பணத்துக்கு நிக்கிறதுக்கு' என மனதில் நினைத்துக்கொண்டு எதுவும் பதிலுக்கு பேசவில்லை. களைவெட்டு முடிந்த நாளைந்து நாளில் அந்தப் பெண்ணின் குடும்பத்தில் பெரிய பாகப்பிரச்சனை சண்டை. மண்ணை வாரி விடாத குறையாய் அந்த பெண் வாசாங்கு விட்டபடி மேற்கே ரோட்டில் பெருநடையாய் கோபத்தில் போவதை பார்த்தேன். எதிரே வந்த அவளை நேருக்குப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. என்னையுமறியாமல் அவளைப் பற்றி விசாரிக்கவும் ஆரம்பித்தேன்.

பார்வைக்கு எடுப்பில்லாத தம்பிக்கு பெண் கொடுக்கமாட்டார்கள் என அண்ணன்காரனை மாப்பிள்ளையாகக் காட்டி தம்பிக்காரனுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். மாப்பிள்ளையாக காட்டப்பட்ட லட்சணமானவனை மனதில் வரிந்துகொண்டு வாழ வந்தவளுக்கு நோஞ்சானோடு வாழ பிடிக்கவில்லை. அங்கிருந்து வெளியேறியவள், சூழ்நிலையால் அக்காக்காரியின் கொழுந்தனை திருமணம் செய்துகொள்கிறாள். அங்கு ஒரு குழந்தை பிறக்கிறது. ஆனால் அங்கேயும் நிம்மதியாய் வாழ முடியாத மன நெருக்கடி. குழந்தையை தூக்கிக்கொண்டு தாய்வீட்டிற்கு திரும்புகிறாள். அங்கும் துரத்துகிறது வாழ்க்கை. குழந்தையை விட்டுவிட்டு முதலில் வாழ்க்கைப்பட்ட நோஞ்சானோடு வந்து பழையபடிக்கு வாழத் தொடங்குகிறாள். இங்கு இரண்டு குழந்தை.. ஏற்கெனவே தொளாரில் பிறந்த பெண் பிள்ளைக்கு இவள் முக்கியத்துவம் கொடுப்பது நோஞ்சான்காரனுக்குப் பிடிக்கவில்லையென்பது ஒரு பக்கம். ஆண் பிள்ளையாக இருந்தாலும் பரவாயில்லை இரண்டும் பெண்கள். இவனும் வாய்க்கு செத்த பயலாய் இருக்கிறான். இவள் நாடுநகரம் சுற்றியவள். இருக்கிற சொத்தை மூத்தார் மகன்கள் தங்கள் பெயருக்கு (நோஞ்சான் சித்தப்பனை வெறும் கார்டியனாகப் போட்டு) கிரயம் எழுத முயல்கிறார்கள். இது தெரிந்துதான் சம்பந்தப்பட்ட அந்த பெண் மேற்கே காவல்நிலையத்தில் புகார்கொடுக்க ஓடியிருக்கிறாள்.

ஒரு பெண்ணின் வாழ்வில் நேர்கிற ஒரு இடர்பாடு அவளை வாழுங்காலமெல்லாம் எவ்வளவு சின்னாபின்னப் பட வைத்துவிடுகிறது என்கிற மன பதைபதைப்பில் இந்த நாவலை எழுத ஆரம்பித்தேன்.

இந்த வாழ்வியல் சம்பவத்தின் நிகழ்களங்கள் யாவும் விருத்தாசலம் பகுதியில் நடக்கக்கூடியது என்றாலும் ஒரு படைப்பை நான் எழுதுகிறபோது எனக்குத் தெரிந்த ஊரில் நடப்பதுபோல் எழுதினால்தான் அந்த நிலப்பகுதிகளை கதையோட்டத்திற்கு தடையில்லாமல் சொல்வதற்கு எளிதாக இருக்கும். அந்த வகையில் மணக்கொல்லை, கார்கூடல், தொளார் ஆகிய மூன்று ஊர்களை கதைக்கு தேர்ந்தெடுத்தேன். மணக்கொல்லை பூராவும் முந்திரிக் காடுகள். கார்கூடல் நெல் அதிகம் விளையும் பகுதி. பெண்ணாடத்தை அடுத்த தொளார் பகுதியில் கரும்பு அதிகமாக விளையும். மூன்று ஊர்களுமே விருத்தாசலம் வட்டத்தைச்சார்ந்த, ஒட்டிய பகுதிகள்தான் என்றாலும் மக்களின் பேச்சுத் தொனியும் மொழியும் சற்று மாறுபடும். மூன்று நிலப்பகுதி, மக்கள் வாழ்வு என  எழுத்துவெளியில் கை உதறி, கால் உதறி நடப்பதற்கான லாவகம் ‘அஞ்சலை‘ நாவலில் எனக்கு வாய்த்தது.

 ஒவ்வொரு பகுதியிலும் எப்படிப் பேசுகிறார்களோ அதை அப்படியே எழுதி வெளியிட வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. ஆசிரியர் கூற்றும், கதை விவரிப்பும் பேச்சு வழக்கிலேயே எழுதினேன். சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் அண்ணன் குறிஞ்சிவேலனின் ஆலோனையின் பேரில் குறிஞ்சிப்பாடியில் மணியம் பதிப்பகத்தில் கைப்பிரதியை கொடுத்தேன். அவரும் படித்தார். நாவலில் வரும் கொச்சை வார்த்தைகளைப் பார்த்து அரண்டு போய்விட்டார் சம்பந்தம் அய்யா. ‘என்னங்க இப்படிலாம் எழுதிருக்கீங்க?' என்றார்.

பேச்சு வழக்கில் இப்படி நிறைய நாவல் வந்திருப்பதாக சொல்லி கொச்சைகளின் எண்ணிக்கையை மட்டும் குறைத்து, பேச்சு நடையில் கொஞ்சம் இயல்பை கூட்டி ‘அஞ்சலை' நாவல் 1999இல் முதல்பதிப்பாக வந்தது. படித்தவர்கள் ஓரளவிற்கு பரவாயில்லையென்கிறமாதிரிதான் சொன்னார்கள். வெகுநாட்களுக்குப் பிறகு நாவலை மறுபதிப்பு போடுவதற்கு முயன்றேன். அப்போது என்னுடைய சிறுகதைகளை வெளியிட்டிருந்த அண்ணன் தமிழினி வசந்தகுமார் அவர்களிடம் இதன் மறுபதிப்புக்குக் கேட்டேன்.

அஞ்சலையை படித்துவிட்டு ‘நல்ல நாவல், கொஞ்சம் வேலை செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்' என்று ஆலோசனைகள் கொடுத்தார். அதன்படிக்கு திருத்தங்களும் வடிவமைப்பில் சில மாற்றங்களும் சற்று கூடுதல் பக்கங்களுமாய் உருமாற்றமடைந்து தமிழினி வெளியீடாக (2005) வெளிவந்தது. தமிழினியில் வந்த பிறகுதான் அஞ்சலைக்கு ஒரு புதிய வெளிச்சம் கிடைத்து நிறைய பேரிடம் போய் சேர்ந்தது.

அஞ்சலை நாவல் தற்போது ஐந்தாவது பதிப்பு வந்திருக்கிறது. இதில் பெரிய மகிழ்ச்சி என்னவென்றால் இருபத்தியிரண்டு வருடங்கள் கழித்தும் புதிதுபுதிதான வாசகர்களை தன்னகத்தேக் கொண்டு ஆய்விற்கும் பரிந்துரைப்பிற்குமாய் அஞ்சலை இலக்கிய களத்தில் நின்று கொண்டிருப்பதுதான்.

அஞ்சலையின் கதாபாத்திர சித்தரிப்பதில் ஒரு நூல் தவறியிருந்தாலும் கூட அவளை அசிங்கப்படுத்துவது மாதிரியாய் ஆகியிருக்கும். அவளின் மேல் ஒரு கரிசனம் ஏற்படும் அளவுக்கும் அவலத்தன்மையுடனும் எழுதியிருப்பேன். ஒரு படைப்பை எப்போதும் இப்படி எழுதவேண்டுமென நான் தீர்மானித்து எழுதுவதில்லை. அப்போதைய மனவோட்டத்தின்படி என்ன இருக்கின்றதோ அதைத் தான் எழுதுவேன். அதனால் தான் அஞ்சலை நாவல் இத்தனை ஆண்டுகள் கழித்தும் நல்ல படைப்பாக நிலைகொள்கிறது.

ஜனவரி -2022