கல்விக் கடன் பெறுவது எப்படி? அதை சரியான முறையில் பயன்படுத்தி பின்னர் திருப்பிச் செலுத்துவது எப்படி ஆகிய பல கேள்விகளுக்கு அந்திமழையிடம் பதில் தருகிறார் இந்திரா பத்மினி, பொதுமேலாளர், ரீடெய்ல் பேங்கிங் அண்ட் மார்க்கெட்டிங், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.
கல்விக்கடன் என்பது இப்போது பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ள மாணவர்களுக்கு பேருதவியாக உருவாகி உள்ளது. 2001-ல் இருந்துதான் இப்போதுள்ள வடிவில் கல்விக்கடன்களை வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 4 லட்சம் வரை
செக்யூரிட்டியாக எதையும் கொடுக்கவேண்டியதில்லை. 7.5 லட்சம் வரைக்கும் பெற மூன்றாவது நபர் ஒருவரின் உத்தரவாதம் வேண்டும். அதற்குமேல் கடன்பெறும்போது ஞிணிடூடூச்tஞுணூச்டூ செக்யூரிட்டி தேவை. ஆரம்பத்தில் ஒவ்வொரு வங்கியும் தனித்தனியாக விதிகளை வைத்திருந்தன. ஆனால் பின்னர் இந்திய வங்கிக் கழகம் எல்லோருக்கும் பொதுவான விதிமுறைகளை வகுத்தது.
இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் வேறுபட்ட கடன்வழங்கு முறைகள் உள்ளன. இந்திய வங்கிக் கழகத்தின் பொதுவான திட்டம் அதில் ஒன்று. இதன்படி பொதுப்பிரிவில் வரும் மாணவர்கள் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களைப் பெற்றிருக்கவேண்டும். எஸ்.சி./எஸ்.டி. மாணவர்கள் 55% மதிப்பெண்கள் எடுத்திருக்கவேண்டும். ஆனால் இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு. ஏழை மாணவர்களாக இருந்து, கல்விக்கு வேறு வழியே இல்லாதபோது இந்த மதிப்பெண் வரம்பில் விலக்கு அளித்திருக்கிறோம். உதாரணத்துக்கு கும்பகோணம் அருகே தொழுநோயாளிகளின் குழந்தைகள் போதுமான சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் அவர்கள் அங்கே ஒரு மிஷனரி நிறுவனத்தில் நர்சிங் பயின்றபோது, அந்நிறுவனத்தினர் கல்விக் கடன் வழங்கமுடியுமா என்று எங்களை நாடினர். நாங்களும் இந்த உச்சவரம்பைத் தளர்த்தி உதவி செய்தோம். இதுபோல சில விலக்குகளை வங்கிகள் வழங்குகின்றன. கடன் கொடுப்பதில் வங்கிக் கிளைக்கே முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது.
உள்நாட்டுக் கல்விக்கு 20 லட்சம்வரை கொடுக்கிறோம். வெளிநாட்டுக் கல்விக்கு 40 லட்சம் வரை தருகிறோம்.
என்ன சான்றிதழ்கள் தேவை?
அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் சேர்வதற்கே வங்கிகள் கடன் அளிக்கின்றன. ப்ளஸ் 2 மார்க்ஷீட், கல்லூரியில் இடம் கிடைத்ததற்கான சான்று ஆகியவை தேவை. அரசு இடஒதுக் கீட்டில் சேரும் மாணவர்களுக்கும் சரி, தனியார் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்பவர்களுக்கும் சரி கடன் உண்டு.
ஆனால் அதிகபட்சம் எந்த அளவுக்கு டியூஷன் பீஸ் கடனாக வழங்கலாம் என்பதற்கு பல மாநிலங்கள் வரம்பு நிர்ணயித்துள்ளன. அதைவைத்தே கடன் வழங்கப்படும். எஞ்சினியரிங், நர்சிங், மருத்துவம் போன்றவற்றுக்கு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
4 லட்சம் வரைக்கும் மாணவர்கள் தரப்பில் பங்களிக்கவேண்டியது என்று எதுவும் இல்லை. ஆனால் 4 லட்சத்துக்கும் மேல் கல்விக்கட்டணம் இருப்பின் அதில் 15 சதவீதம் மாணவர்கள் கட்டவேண்டும். மீதியை வங்கி செலுத்தும். டியூஷன் பீஸ் தவிர மற்றசெலவுகளுக்கு கடன் வழங்கப்படும். அது மொத்தக் கட்டணத்தில் 20 சதவீதத்துக்குள் இருக்கவேண்டும்.
மாணவர்களுக்கு விடுதியில் இடம்கிடைக்காமல் வெளியே தங்கி இருக்கும் பட்சத்தில் அல்லது கல்விநிறுவனத்தில் தங்குமிட வசதி இல்லாத பட்சத்தில் மாதம் 2000 ரூபாய் வரை தங்குமிடக் கட்டணத்தை வங்கி வழங்கும்.
வட்டிவீதம் மற்றும் திருப்பிச் செலுத்துதல்
படிப்பு முடித்து 7-முதல் 15 ஆண்டுகள் வரை கடனைத் திருப்பிச் செலுத்தும் வசதி உண்டு. படித்துமுடித்து ஒராண்டுவரை கடனைத் திருப்பி செலுத்தும் தவணை ஆரம்பிக்காது. ஆனால் ஆரம்பத்திலிருந்தே வட்டி உண்டு. படிப்பு முடிந்து ஓராண்டுக்குள் அவர்களுக்கு வேலை கிடைத்து கடனை திருப்பி செலுத்த ஆரம்பிப்பார்கள் என்பது எதிர்பார்ப்பு.
கடன்பெற ஆரம்பித்ததில் இருந்தே வட்டி ஆரம்பம் ஆகிறது. ஆண்டு வருமானம் 4.5 லட்சத்துக்குள் இருப்பவர்களுக்கு தொழில்துறை படிப்புகள் படிக்கையில் மத்திய அரசு மானியமாக அந்த வட்டியைச் செலுத்திவிடும். அதுவும் அவர்கள் கல்லூரியில் படிக்கிற காலத்துக்கு மட்டும்தான். அதன்பின்னர் இந்த சலுகை இல்லை. வட்டியுடன் சேர்த்து அவர்கள் திருப்பிச் செலுத்தவேண்டும். இந்த மானியம் பெறுவதற்கான தகுதி இல்லாத மாணவர்கள் அவர்கள் படிக்கும்போதே வட்டியை மட்டும் செலுத்தலாம். அல்லது படிப்பு முடித்து குறிப்பிட்ட விலக்களிக்கப்பட்ட காலம் முடிந்தபின்னர் அசலுடன் சேர்த்து வட்டியைத் தவணைமுறையில் செலுத்தவேண்டும். இந்த வட்டிவிகிதங்கள் எல்லா வங்கிகளுக்கும் பொதுவானவை அல்ல. மாறக்கூடும்.
ஐ ஓபியில் 4 லட்ச ரூபாய் வரை கடன்பெறுபவர்களுக்கு நாங்கள் 12.25% வட்டிவிதிக்கிறோம். மகளிருக்கு 0.5% சலுகை உண்டு.
நாலாயிரம் கோடி ஐஓபியில் மட்டும் 2.5 லட்சத் துக்கும் மேற்பட்ட கல்விக்கடன் கணக்குகள் உள்ளன. கிட்டத் தட்ட 4000 கோடிவரை கடன் வழங்கி உள்ளோம்.
மாணவர்கள் கடன் பெறுகிறார்கள். படிப்பை முடிக்கிறார்கள். ஆனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அவர்களுக்கு போதுமான வேலைவாய்ப்புகளை வழங்குவதாக இல்லை. இதனால் 7-8 சதவீதம் அளவுக்கு வாராக்கடன் இதில் உள்ளது. அத்துடன் பல பன்னாட்டு நிறுவனங்களும் கேம்பஸ் நேர்காணல்களில் மாணவர்களைத் தேர்வு செய்து வேலை தராமல் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கவைக்கின்றன. இப்போது அரசு புதிய திட்டம் ஒன்றின்மூலம் குறிப்பிட்ட காலத்துக்கு கல்விக்கடனில் வட்டிக்கு மட்டும் மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
கடனைத் திருப்பிச் செலுத்த சில ஆலோசனைகள் வட்டிக்கான மானியம் பெற இயலாத மாணவர்கள் படிக்கும்போதே அவர்களுடைய பெற்றோர்களால் வட்டியைச் செலுத்திவிட இயலுமானால் அவர்களின் சுமை ஓரளவு குறையும்.
வேலை கிடைக்காத நிலையில் துணிச்சலாக சுயதொழிலில் இறங்கவும் அவர்கள் தயாராக இருக்கவேண்டும். எங்கள் வங்கியிலேயே பல சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தொடங்க பயிற்சியும் கடன்வசதியும் தருகிறோம். கிராமப்புற பயிற்சி மையங்கள் மூலம் பல தொழில்திறன்களை வளர்ப்பதற்கு பயிற்சிகள் அளித்துவருகிறோம். தயாரிப்பு மற்றும் சேவை தொடர்பான பயிற்சிகள் அவை.
பெற்றோர் அல்லது பாதுகாவலர் கல்விக்கடனில் இணை- உத்தரவாதம் தருபவராக சேர்க்கப் படுவார்கள். மாணவர்கள் தங்கள் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள வங்கியில் கடன் வாங்குவது நல்லது. அப்போதுதான் வங்கிகளும் கடனைத் திருப்பி வசூலிக்க வசதியாக இருக்கும். உதாரணத்துக்கு கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு மாணவர்கள் படிக்க வருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது சென்னையில் இருக்கும் வங்கியில்தான் கடன்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். படிப்பு முடிந்தபின் அக்கடன்களை அவர்களின் சொந்த ஊருக்கு அருகே உள்ள வங்கிக்கே மாற்றிக்கொள்ளுமாறு நாங்கள் வலியுறுத்துவது வழக்கம். அப்போதுதான் கடன் திருப்பிச் செலுத்துவது வசதியாக இருக்கும்.
கடனை தவணைக் காலம் முடிவதற்கு முன்பே முன்கூட்டியே செலுத்தும்போது அதற்கு தனியாகக் கட்டணம் எதுமே இல்லை. ஒழுங்காக தவணை செலுத்துபவர்களுக்கு மொத்தவட்டியில் 1%-ஐ தள்ளுபடியும் செய்கிறோம்..
ஐ.ஏ.எஸ் பயிற்சி போன்றவற்றிற்கும், தொழிற்பயிற்சிக் கல்வி போன்றவற்றிற்கும் கல்விக்கடன் தர வழி உண்டு. வழக்கமான கல்விக்கடன் வழங்க இயலாத நிலையில் அந்த மாணவரிடம் போதுமான செக்யூரிட்டி இருக்குமானால் அவர்களுக்கு ஐ.ஓ.பி.ஸ்காலர் என்ற பெயரில் கடன் தருகிறோம்.
எந்த வங்கியையும் கல்விக்கடன் தரவில்லை என்று குற்றம் சொல்ல இயலாது. நாங்கள் மட்டுமே 2.5 லட்சம் கடன்களுக்கு மேல் கொடுத்துள்ளோம். வாராக்கடன் இருக்கும் பட்சத்தில்கூட. பெரும்பாலான வாராக்கடன்கள் 4 லட்சத்துக்கும் குறைவான கடன்களில் இருக்கின்றன. வாங்கிய கல்விக்கடனை அரசு தள்ளுபடி செய்துவிடும் என்று நினைத்து திருப்பிக் கட்டாமல் இருப்போரும் உண்டு. அப்படி நினைக்காமல் தங்களுக்கு உதவிய வங்கிக்கு கடனைத் திருப்பிச் செலுத்திவிடுவதே சிறந்தது. ஏனெனில் இது அனைத்துமே பொதுமக்கள் பணம். மாணவர்களும் பெற்றோரும் பொறுப்பாக திருப்பிச் செலுத்தாமல் இருந்தால் பிற மாணவர்களுக்கு கடன் வழங்க பணம் எங்கே இருந்து வரும்?
ஏப்ரல், 2014.