சிறப்புப்பக்கங்கள்

கல்லூரிச் சாலை

மரு.சங்கர சரவணன்

மேல்நிலைக் கல்வி (+1 மற்றும் +2) படிப்பில் சேரும்போதே எதிர் காலத்தில் நாம் எந்தத் துறையில் செல்ல போகிறோம் என்பதை முடிவு செய்து விடுவது நல்லது. ‘தொண்டு செய்வாய் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே' - என்று பல்வேறு துறைகளிலும் ஒருவர் பணிபுரிய வாய்ப்பிருப்பதைப் பாவேந்தர் பாரதிதாசன் சுட்டிக்காட்டுகிறார்.

மேல்நிலைக் கல்வியில் சேரும் மாணவர்கள் மருத்துவம், பொறியியல், வேளாண் அறிவியல், கால்நடை மருத்துவம், சட்டம், செவிலியம், இயன்முறை மருத்துவம் (Physiotherapy) போன்ற ஒரு சில தொழிற்படிப்புகளை மட்டுமே கவனத்தில் கொண்டு மேல்நிலைக் கல்வியில் தங்களது Group-களைத் தேர்வு செய்கிறார்கள். ஆனால், இவற்றையும்தாண்டி பல்வேறு படிப்புகளும் வேலைவாய்ப்புகளும் பெருகிக் கிடப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

பட்டயக் கணக்கர் (Auditor) ஆவது எப்படி? விமானி (Pilot) ஆவதற்கு எப்படி பயிற்சி பெற வேண்டும்? மேல்நிலைக் கல்வி முடித்தவுடனேயே பல்வேறு அரசுப் பணிகளில் சேர்வதற்கு உள்ள வாய்ப்புகள் என்ன? என்பதைப் பற்றியும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தொழிற்படிப்புகளில் சேராமல் தான் பெற்ற மதிப்பெண்களுக்கேற்ப கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும்போதும் எந்த படிப்பிற்கு, எந்த படிப்பை விட வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். மேல்நிலைக் கல்வி முடிந்தவுடன் நன்றாக பயிற்சி எடுத்துக்கொண்டு 18 வயதிலேயே National Defence Academy (NDA), Staff Selection Commission (SSC) போன்ற அமைப்புகள் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற்று நேரடியாக அரசுப் பணியில் சேரலாம். ஆனால், இதற்கு இந்தத் தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வை பள்ளிப் பருவத்திலேயே வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். தமிழ்நாட்டு மாணவர்களிடையே, இதுபற்றிய விழிப்புணர்வு இன்னும் பெருக வேண்டும் என்பதை அகில இந்திய அளவில் இந்தத் தேர்வுகளில் வெற்றி பெறும் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாக உள்ளது என்ற புள்ளி விவரம் நமக்குக் காட்டுகிறது. 10-ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதும் தேசிய திறன் தேர்வு (National Talent Search Exam) பிற்காலத்தில் அவர்கள் குறி வைத்து எழுதப்போகும் போட்டித் தேர்விற்கு நல்லதொரு தொடக்கமாக அமையும்.

கல்லூரிப் படிப்பைத் தொடரும் மாணவர்கள் கல்லூரிச் சாலை என்பது தமது பன்முகத் திறமைகளைப் பெருக்கிக் கொள்வதற்குக் கிடைத்த பயணமாகக் கருதவேண்டும். கல்லூரியில் படிக்கின்ற காலத்திலேயே தட்டச்சு (Typewriting) சுருக்கெழுத்து (Shorthand), கணினி சார்ந்த சான்றிதழ் படிப்புகள் (Computer Couses) போன்றவற்றை கற்றுக்கொள்ளலாம். ஆங்கில மொழித் திறனை வளர்த்துக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் ஒருவர் எழுதும் வங்கித் தேர்வு (Bank Exam), இரயில்வே வாரியத் தேர்வுகள் (RRB Exam), ஒருங்கிணைந்த பாதுகாப்புத் துறைத் தேர்வுகள் - (Combined Defence Services - CDS) மற்றும் இந்திய குடிமைப் பணி தேர்வு (All india Civil Service Exam) போன்றவற்றில் வெற்றி பெறுவதற்குக் குறிப்பிட்ட அளவு ஆங்கில மொழித் திறன், நல்ல பொது அறிவுத் திறன், கணிதத் திறன் போன்றவை அவசியம் என்பதை உணர வேண்டும். தர்க்ககாரணவியல் (Logical Reasoning) பகுப்பாய்வு காரணவியல் (Analytical Reasoning) போன்ற திறன்களும் மிகவும் அவசியமாகும்.

மேலே சொல்லப்பட்ட திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு தகுந்த நூல்களை படித்தல் வேண்டும். தினந்தோறும் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தைக் கட்டாயமாக்கிக் கொள்ளவேண்டும். நாட்டு நடப்புகள் பற்றி அறிந்துகொள்வது அது குறித்து நண்பர்களுடன் விவாதிப்பது அவசியம். இணையதளங்களும் இது போன்ற தயாரிப்புக்குப் பெரிதும் உதவுகின்றன. வலையொளியில் (youtube) வழிகாட்டும் காணொளிகள் பல உண்டு. தமிழ்நாடு அரசு கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தினந்தோறும் காலை 7 மணி முதல் 9 மணி வரை நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பி வருகிறது. அதே நிகழ்ச்சிகள் தினந்தோறும் மாலை 7 மணி முதல் 9 மணி வரையும் ஒளிப்பரப்பாகின்றது. மாணவர்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், போட்டி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் நல்ல நூல்களை ஆங்கில பதிப்பகங்களோடு ஒப்பந்தம் மேற்கொண்டு தமிழில் வெளியிட்டு வருகிறது. இந்த நூல்களும் போட்டி தேர்வுகளுக்கு மிகவும் பயன்படுகின்றன. கல்லூரியில் மேற்படிப்பு படித்து ஆராய்ச்சி படிப்புகள் மேற்கொண்டு பயணிக்க விரும்புவர்களுக்கு தமிழ்நாடு

 அரசின் ‘நான் முதல்வன் திட்டத்தின்‘ இணையதளம் வாயிலாக நல்ல வழிகாட்டுதல் கிடைக்கிறது.

பல்வேறு அறிஞர்களும் சாதனையாளர்களும் தங்கள் கல்லூரிக் காலம் பற்றி அவர்களுடைய சுயசரிதையில் எழுதியுள்ளதைப் படித்தால் கல்லூரிக் காலம் ஒருவர் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல்கலாம் தன்னுடைய கல்லூரிக் காலத்தில் அசைவ உணவுக்கான உணவுக் கட்டணம் அதிகம் என்பதால் சைவத்திற்கு மாறிய சுவையான செய்தியைத் தனது சுயசரிதையில் பகிர்ந்திருப்பார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முதன்மைச் செயலாளராக பணியாற்றும் திரு.உதயசந்திரன் IAS அவர்கள் கல்லூரியில் படித்த காலத்தில் அவரது அறைக் கதவில் சக மாணவர்கள் ‘ஜில்லா கலெக்டர்‘ என்று எழுதி ஒட்டியதையும் அதை தனது 21-வது வயதிலேயே IAS தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதித்து காட்டியதையும் எண்ணிப் பார்க்கவேண்டும்.

தான் பள்ளியில் படித்தபோது உயிரியல் பாடத்தில் இடம்பெற்ற செல் நுண்ணுறுப்பான ரைபோசோம் (Ribosome) அமைப்பைப் பின்நாளில் தானே கண்டுபிடித்து அதற்காக நோபல் பரிசு பெறப்போகிறோம் என்பது விஞ்ஞானி வெங்கட்ராமன் இராமகிருஷ்ணனுக்கு அவர் பள்ளியில் படித்த காலத்தில் தெரியாது. இப்படி எத்தனையோ அதிசயங்களும் ஆச்சரியங்களும் நம் பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்தில் மறைந்திருக்கக் கூடும்.

எப்போதும் எதிர்மறை சிந்தனை இருக்கக்கூடாது. “இருட்டிலே வாங்கினோம் இன்னும் விடியவேயில்லை” என்று இந்திய சுதந்திரம் பற்றி எழுதப்பட்ட கவிதைக்கு மாற்றாக “பொழுது விடிந்து வெகுநேரம் ஆகிறது!- போர்வைக்குள் என்ன புலம்பல்?” என்ற கவிதை, எப்பொழுதும் உங்கள் மனதில் இருக்கட்டும்‘.

ஜூன், 2022