சுமார் 13 ஆண்டுகள் வனவாசத்துக்குப் பிறகு 1989 தேர்தலில் திமுக ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது. அந்த காலகட்டத்தில் உரிய அரசு, கட்சித் தலைமையின் அனுமதி எதுவும் இன்றி வைகோ இலங்கை சென்றது கலைஞரை மிகவும் நிலைகுலையச் செய்தது. அத்துடன் ஸ்டாலினும் வளர, வைகோ கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்டார். திமுக மாநாடுகளில் வைகோவை மதிய சாப்பாட்டு வேளையில் பேச வைப்பது என்பது 1990 பிப்ரவரி 9, 10 நாள்களில் திருச்சியில் நடந்த 6ஆம் மாநில மாநாட்டிலேயே தொடங்கி விட்டது. ஆனாலும் அவர் பேச்சைத் தொண்டர்கள் இருந்து கேட்டுவிட்டுத் தான் போவார்கள்.
தன் பேச்சாற்றாலால் கட்சிக்குள் ஒரு சக்தியாக அவரும் வளர்ந்திருந்தார். 91 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்வந்த பழனி, பேர்ணாம்பட்டு இடைத்தேர்தல்களில் தேர்தல்பணிக்குழு செயலாளராக இருந்த வைகோவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. பட்டும் படாமலும் செயல்பட்டுக்கொண்டிருந்தார்.
1993- காரைக்குடியில் வைகோ காலில் ஏற்பட்ட காயத்தால் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். செப்டம்பர் மாதம் ஒருநாள் மத்திய உளவுத்துறையிலிருந்து வைகோவுக்கு ஆதாயம் சேர்க்க, கலைஞரின் உயிருக்கு புலிகள் மூலமாக ஆபத்து என்று தகவல் வந்ததாக பத்திரிகையாளர் சந்திப்பில் கலைஞர் கூறினார். இது பெரும் புயலை கட்சிக்குள் ஏற்படுத்தியது.
இதற்கு உருக்கமாக வைகோ கொடுத்த மறுப்பு அறிக்கையை முரசொலி வெளியிடவும் மறுத்துவிட்டது. இந்நிலையில் அடையார் காந்திநகரில் என்ன செய்யலாம் என்று ஆலோசிக்க வைகோவுக்கு நெருக்கமான தலைவர்களான எல்.கணேசன், கண்ணப்பன், பொன்.முத்துராமலிங்கம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், செஞ்சி ராமச்சந்திரன், திருப்பூர் துரைசாமி, டி.ஏ.கே லக்குமணன், தங்கவேலு, ரத்தினராஜ் ஆகியோர் கூடிப்பேசினார்கள். கிட்டத்தட்ட புதுக்கட்சிதொடங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம்தான் அது. அதில் ’சகவாழ்வு சாத்தியமற்றது. இனி தனிவாழ்வுதான்’ என்ற முடிவு எடுக்கப்பட்டது.
பிரச்னை முற்றிவிட்டது. இன்னொரு பிளவு வேண்டாம் என்று பலர் முயற்சித்தனர். கி.வீரமணி, இயக்குநர் பாரதிராஜா, வைரமுத்து கலைப்புலி தாணு போன்றவர்கள் கலைஞரையும் வைகோவையும் சந்திக்க வைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று கடுமையாக முயன்றனர். இந்த நிலையில் வைகோவும் அவரது ஆதரவுத்தலைவர்களும் சிலநாட்கள் தலைமறைவாகி விட்டனர். ஒவ்வொருவரும் எங்கே இருக்கிறார்கள் என்று யாருக்குமே தெரியவில்லை.
நீண்ட காலமாக வைகோவுக்கு சென்னையில் பேசும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா என்னும் நிகழ்ச்சி 1993 செப் 11 அன்று பெரியார் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டது. அன்று காலை நொச்சிப்பட்டி தண்டபாணி என்னும் இளைஞர் தீக்குளித்து மாண்டார். அவர் உடலை அவரது சொந்த ஊரான கரூர் அருகே இருந்த நொச்சிப்பட்டிக்கு கொண்டு சென்று எரியூட்டினர். அங்கு மயானத்தில் நடந்த இரங்கல் கூட்டத்தில் இனியும் பொறுப்பதில்லை, தனி இயக்கம்தான் தீர்வு என்னும் முடிவை பலரும் வைகோவிடம் வற்புறுத்தினர். இதற்கிடையில் வேறு சில தொண்டர்களும் வைகோவுக்கு நீதி வேண்டும் எனத் தீக்குளித்தனர். அதன்பின் பல நாள்கள் பல இடங்களில் வைகோவின் ஆதரவாளர்கள் கூடித் திட்டமிட்டனர். அதில் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் இல்லத்தில் தான் வியூகங்கள் வகுக்கப்பட்டன.
அதில் திமுகவின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றிற்கு உரிமை கோருவது எனவும், சொத்துகள் பற்றி பேசுவதில்லை எனவும் முடிவெடுத்தபோது வீரபாண்டி ஆறுமுகத்துக்கு உடன்பாடில்லை. அறிவாலயம் உள்ளிட்ட சொத்துகள் மீது கவனம் செலுத்துவதில்லை என்பதற்கு தொண்டர்கள் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கருத்து கூறப்பட்டது. (கட்சி அங்கீகரிக்கப்பட்டால் சொத்துகள் தானாக வந்துவிடும் என்றும் எண்ணியிருக்கக்கூடும்).
ஒருவழியாக அக்டோபர் 26 அன்று கீழத்தஞ்சை, குடவாசலில் மாவட்ட செயலாளர் மா.மீனாட்சிசுந்தரம் தலைமையில் பிரிவினைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தான் வைகோவை ஆதரிக்கும் 8 மாவட்ட செயலாளர்கள் வெளிப்படையாக தோன்றினர். கண்ணப்பன்(கோவை), செல்வராஜ்(திருச்சி), பொன்முத்துராமலிங்கம்(மதுரை), செஞ்சி ராமச்சந்திரன் (தென் ஆற்காடு), கணேசமூர்த்தி (பெரியார் மாவட்டம்), மா.மீனாட்சி சுந்தரம்(கீழத்தஞ்சை), லக்குமணன்(நெல்லை), ரத்தினராஜ் (கன்னியாகுமரி), ஆகியவர்களின் ஆதரவு அவருக்கு கிடைத்தது. பிறகு திமுகவிலிருந்து அவர்கள் விலக்கி வைக்கப்பட்டனர். அதன் பின் தான் திருச்சியில் தனிப் பொதுக்குழு இவர்களால் கூட்டப்பட்டது. அதில் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் வைகோவுடனிருப்பதாகவும், இதுதான் உண்மையான திமுக எனவும் பிரகடனப் படுத்தினர். அந்த கூட்டத்தில் 40 பக்கத்துக்கு முக்கியமான கொள்கைத் திட்டம் ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர். தொடர்ந்து கலைஞர் தஞ்சையில் ஒரு பொதுக்குழுவைக்கூட்டி தனது பலத்தை நிரூபித்தார். வழக்கில் வென்றார். அதுவரை திமுக என்ற பெயரிலும், கருப்பு சிவப்பு கொடியோடும் இயங்கி வந்த வைகோவின் ஆதரவாளர்கள் நடிகர் சங்க கட்டடத்தில் நடந்த கூட்டத்தில் மறுமலர்ச்சி திமுக என்ற பெயரையும், கருப்பு சிவப்பு கொடியின் மேல் கூடுதலாக ஒரு சிவப்பு பட்டை சேர்த்து சிவப்பு, கருப்பு, சிவப்பு கொடியும் முடிவானது.
எம்ஜிஆர் பிரிந்தபோதுகூட இத்தனை மாவட்டச் செயலாளர்கள் அவருடன் பிரியவில்லை. தொண்டர்கள்தான் பிரிந்தனர். ‘திமுகவில் இது ஒரு செங்குத்தான பிளவு’ என்று மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்தியச் செயலாளர் மறைந்த ஹர்கிஷன்சிங் சுர்ஜித் வர்ணித்தார். திமுகவில் வளர்ந்துவந்த ஏராளமான நிர்வாகிகளும் இளைஞர்களும் முக்கிய தலைவர்களுமாக வைகோ பக்கம் சேர பெரும் இழப்பை திமுக தாற்காலிகமாக சந்தித்தது என்னவோ உண்மைதான்!
செப்டெம்பர், 2014.