நான் ஒரே ஒரு கருத்துக்கணிப்பைத் தான் பொருட்படுத்துவேன். அது தேர்தல் நாளன்று நிகழ்வது.
-மைக்கேல் ஹோவார்ட்,
பிரிட்டன் அரசியல் தலைவர்
தேர்தல் என்று வந்துவிட்டாலே கருத்துக்கணிப்புகள் என்று வர ஆரம்பித்து யார் எவ்வளவு சீட்டுகளைப் பிடிப்பார்கள் என்று ஊகங்கள் வர ஆரம்பித்துவிடும். உண்மையில் அரசியலில் ஆர்வம் கொண்ட யாருமே தங்கள் மனதுக்குள் இந்தகட்சிக்கு இத்தனை இடம் கிடைக்கும் என்ற கணிப்பை வைத்திருப்பார்கள். அந்த கணிப்பை தங்கள் அனுபவத்துக்கு ஏற்ப, உள்ளூர் நிலவரத்துக்கு ஏற்ப உருவாக்கி இருப்பார்கள். ஆனால் கருத்துக்கணிப்பு என்பது ஒரு அறிவியல் பூர்வமான, கணிதத்தை அடிப்படையிலான கலையாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் அதிலும் தவறுகள் ஏற்பட்டுவிட வாய்ப்புகள் உள்ளன. 1+1= 2 என்று தேர்தல் கூட்டணியில் கணக்குகள் பலிப்பதில்லை. அதிக வாக்குகள் பெறும் கட்சி அதிக இடங்களைப் பெறும் என்றும் சொல்வதற்கு இல்லை. இதனால் சிலசமயம் தவறாக கணித்துவிட்டு மீசையில் மண் ஒட்டவில்லை என்று துடைத்துக்கொண்டு செல்பவர்களும் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு 2004 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பாஜகதான் வெற்றி பெறும் என்று எல்லா கருத்துக்கணிப்புகளும் சொல்லி பொய்த்துப் போயின. புகழின் உச்சியில் இருந்த வாஜ்பாயி, எதிர்பாராதவிதமாக தோல்வியைச் சந்தித்தார்.
இந்த கருத்துக் கணிப்புகளுக்கு இடையில் சில திணிப்புகளும் நடக்காமல் இல்லை. கருத்துக்கணிப்புகளால் ஒருவரின் தேர்தல் வெற்றியைப் பாதித்துவிட முடியுமா என்ன? இதனால் எந்த விளைவுகளும் வரக்கூடாது என்பதற்காகத்தான் எக்ஸிட் போல் முடிவுகள் தேர்தலின் எல்லா கட்டங்களும் முடியும் வரை வெளியிடப்படக்கூடாது என்று தடை அறிவித்திருக்கிறார்கள். அத்துடன் தேர்தலுக்கு இரண்டு நாள் முன்னதாக எல்லா கருத்துக்கணிப்பு முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட வேண்டும் என்றும் விதிகள் புழக்கத்தில் உள்ளன.
இந்த இதழில் தேர்தல் கருத்துக்கணிப்புகள் தொடர்பான நேர்காணல்கள், கட்டுரைகளைத் தொகுத்திருக்கிறோம். மே 23ஆம் நாள் என்ன முடிவுகள் வெளியாகும் என்பதை முன்கூட்டியே கணித்தவர்களில் சிலர் நமக்கு நேர்காணல் அளித்துள்ளனர். இந்த முறை ஜக்கம்மா வாக்கு பலிக்குமா என்று பார்க்கலாம்.