சிறப்புப்பக்கங்கள்

கருத்தியல் பேச்சாளர் : திருமாவளவன்

குட்டி ரேவதி

திருமாவளவனின் உரைவீச்சு சிந்தனையின் ஓர் இழையாகத்தான் தொடங்கும். தமிழர்கள் சாதி ரீதியாக ஒடுக்கப் பட்டிருக்கும் காலங்காலமான அரசியலை விளக்குவதிலும் சரி, நிகழ்கால அரசியலை  விமர்சித்துப் பேசுவதிலும் சரி, தன் அரசியல் கருத்துகளை இழையோடு இழையாக நெய்து நெய்து தன் சிந்தனையை வெளிச்சப்படுத்துவதற்கு வரலாற்றில் நெடுந்தூரம் கூட்டிப் போவார். அரசியலின் போலிகளை அவர் தோலுரித்துக் காட்டும் விதம், ஒரு பாமரனுக்கும் புரியவைக்கும். அதேசமயம், தன்னை அரசியல் திரைகளுக்குள் மறைத்துக் கொண்டிருப்பவர்களையும் காட்டிக் கொடுக்கும்.

திருமாவளவன் அவர்களின் உரைவீச்சின் சிறப்பம்சம், 80 - களில் அவர் சட்டக்கல்லூரியில் படிக்கும் போதே பேசத்தொடங்கியது. படித்த காலங்களிலாகட்டும், அதற்குப்பின்பான காலங்களிலா கட்டும், தமிழகத்தின் தாழ்த்தப்பட்ட மக்களை ஓர் அரசியல் இயக்கத்திற்காக ஒருங்கிணைத்ததில் அவரது உரைவீச்சின் பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக, ஒவ்வொரு சேரிக்கும் சென்று, புறக்கணிக்கப்பட்ட மக்கள் உறைவிடங்களுக்கும் சென்று இரவு பகலாக அவர் தொடர்ந்து உரையாற்றினார். மின்சார வெளிச்சம் கூட சென்று சேர்ந்திராத சேரிகளைக் கூடத் தேடிப்பிடித்து மக்களிடம் பேசினார். அம்பேத்கரின் எழுத்தும் நூல்களும் பணியும் தான் அவருடைய பேச்சுக்கு விளைநிலமாக இருந்தது. இன்றும், அவருடைய இளம்பருவத்து தெரு மேடைப்பேச்சுகளை வியக்காதவர்கள் இல்லை.

முதன்மையாக, திருமாவளவன் ஒரு கருத்தியலாளர். அம்பேத்கரின் சிந்தனைகளில் தோய்ந்தெழுந்த, முதிர்ந்த எழுச்சியே அவரை ஓர் உரைவீச்சாளராக மாற்றியிருக்கிறது. இன்றும் மாவட்டங்களில் ஒழுங்கு செய்யப்படும் கூட்டங்களுக்கு மூலை மூடுக்கிலிருந்தெல்லாம் திருவிழாவுக்கோ, சினிமாவுக்கோ, திருமணநிகழ்வுகளுக்கோ

செல்வதைப் போல சைக்கிள்களில் அணி அணியாகக் கிளம்பிச் சென்று அவருடைய உரைகளுக்காகக் காத்திருக்கின்றனர். இன்றும் மதுரை போன்ற மாவட்டங்களில், அவர் பேச்சைக் கேட்க முப்பதாயிரம் பேர் கூடுவது என்பது சர்வசாதாரண நிகழ்வு. கூட்டத்திற்கு முன்பாக, காவல்துறை ஏதாவது தடைகளை எழுப்பினால், அந்தச் சூழலும் அவர் எண்ணங்களில் கலந்து உரையாக மாறி மக்களுக்கு எழுச்சியை எழுப்பும் படியாக இருக்கும். அந்தக் கூட்டத்தை எழுச்சி மிகுந்த கூட்டமாக்கும்.

திருமாவளவனை திராவிடக் கட்சியின் தலைவர்களுடனோ பிற சொற்பொழிவாளர்களுடனோ ஒப்பிடமுடியாது. பிற தலைவர்கள், தான் சார்ந்த சாதியை, கருத்தில் கொண்டு பெரும்பாலும் அங்கிருந்து கிடைக்கும் ஆதரவையும் ஆதாயத்தையும் கணக்கில் வைத்து சாதியரசியலைப் பேசாது விடுத்தனர். திருமாவளவன் அவர்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் ஒடுக்குமுறையையும், அவர்கள் மீது பொதுச்சமூகமும் அரசியல் கட்சிகளும் நிகழ்த்திய வன்கொடுமைகளையும் தாம் தன் உரையாக்கிப் பேசுவார்.

கல்விக்கூடங்களும், எழுத்தும், மொழியும் சென்று சேராத ஒரு சமூகத்தைத் தன் தீராத, ஓயாத பேச்சினால் மட்டுமே எழுச்சியுறச்செய்யமுடியும் என்று அறிந்திருந்திருக்கிறார் திருமாவளவன். சாதியம் ஆற்றும் ஒடுக்குமுறையாகட்டும், ஈழப்பிரச்சனையில் தமிழர்கள் மீது இந்திய அரசும், பிற அரசுகளும் காட்டும் பாராமுகமாகட்டும், இன்று வரை தமிழர் பிரச்னையை சாதிய பிரச்னையாகப் பார்த்து புரிந்து கொள்ளும் கூர்மதி மிக்க தலைவர் அவர் ஒருவர் மட்டுமே. அதற்கு ஒரே காரணம், அவர் ஆழமாகவும் கவனமாகவும் ‘அம்பேத்கரை’ அறிந்தும் வாசித்தும் வைத்திருப்பது.

அது மட்டுமன்றி, அவர் முதலில் ஒரு கருத்தியலாளர், அதன் பின்பு தான் அவர் ஒரு மேடைப்பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர். ஆகவே தான் அவர் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளர்.

ஆகஸ்ட், 2013.