பள்ளி நாட்களில் எனக்கு சினிமா பார்ப்பதை விட சினிமா பாடல்களைக்கேட்பதே அதிகம் பிடிக்கும். சினிமா பார்க்கும்போது கூட, படம் இன்றுவரை பெரிய மனநிறைவை ஏற்படுத்துவது மிக அபூர்வமாகத்தான். ஆனால் ரசிக்காத படங்களில் கூட நான் விரும்பும் பாடல்கள் எப்போதும் இருக்கின்றன.
பள்ளிக் காலத்தில் சினிமா பாட்டுடனான என் முதல் உறவு எங்கள் பள்ளி வணக்கப்பாடலில் இருந்தே தொடங்குகிறது. ‘வண்ணம் ஐந்து கொண்ட விருது வாழ்கவே, புண்ணியஞ்சேர் பள்ளிச் சின்னம் வாழ்கவே, விண்ணகத்து மின்னுகின்ற விண் மீன் வாழுதே, மண்டலத்துக் குவளை சூழூதே‘ என்ற ஆரம்ப வரிகள் சுமார் 50 வருடங்களுக்குப் பின்னரும் என் நினைவில் நிற்பதற்கு அதன் மெட்டும் ஒரு காரணம். அது முகமது ரஃபி பாடிய ஒரு ஹிந்திப் பட பாடலின் மெட்டில் எங்கள் பள்ளி தமிழாசிரியர் எழுதியது. நானும் அவ்வப்போது பல சினிமா பாடல்களின் மெட்டில் பாட்டு எழுதிப் பார்ப்பது என் அன்றைய வழக்கங்களில் ஒன்று. அப்படி எழுதிய பாடல் தாள்களையெல்லாம் அண்மைக்காலம் வரையில் பத்திரமாகக் கூட வைத்திருந்தேன். வீடு மாற்றிய சமயங்களில் என் வீட்டுப் பொருட்களை நண்பர்கள் பேக்கிங் செய்த சமயங்களில் தொலைந்த பொக்கிஷங்களில் அவையும் அடங்கும்.
நான் கல்லூரிப் படிப்பில் நுழைந்திருந்த சமயத்தில்தான் தமிழ்நாட்டில் மேடையில் சினிமா பாடல்களை இசைக் குழுவினர் பாடுவது என்ற புதிய வடிவம் அறிமுகமாகியிருந்தது. அதற்கு முன்னரும் எம்.எஸ்.விஸ்வநாதன்- ராமமூர்த்தி குழுவினர் மேடையில் சினிமா பாட்டுக் கச்சேரி செய்தது உண்டென்றாலும், அது மிக மிக அபூர்வமான நிகழ்வுதான். கே.பி.சுந்தராம்பாள், சீர்காழி கோவிந்தராஜன், மதுரை சோமு போல சினிமாவிலும் பாடிய கர்நாடக பக்தி இசைப் பாடகர்கள் கோயில் கச்சேரிகளில் ஆரம்பத்திலோ முடிவிலோ தாங்கள் சினிமாவில் பாடிய ஓரிரு பாடல்களை துக்கடாவாக பாடும் வழக்கம் மட்டுமே இருந்தது. அவையும் பக்திப் பாடல்கள்தான்.
காமேஷ்-ராஜாமணி குழுவினர்தான் நானறிந்த அளவில் முதன்முதலில் முழு நீள மேடைக் கச்சேரியாக அன்றைய சினிமா பாடல்களைப் பாடும் வழக்கத்தைக் கொண்டு வந்தார்கள். காமேஷ் பின்னாளில் ’குடிசை’ என்ற படத்துக்கு இசையமைத்தார். அவர் மனைவி கமலா காமேஷ் அறிமுகமான முதல் படம் அது. சிகரெட் பழக்கம் காமேஷின் காலை முதலிலும் உயிரை அடுத்துமாக, பலி வாங்கிவிட்டது.
காமேஷ் ராஜாமணி குழுவிலிருந்துதான் பின்னாளில் எண்ணற்ற குழுக்கள் உதயமாகின. முதன்முதலில் அந்தக் குழுவில் பாடகராக இருந்தவர்களில் ஒருவர் ஏ.வி.ரமணன். அவர் பின்னாளில் தனிக் குழு ஆரம்பித்தார். சிவராஜ், ஆனந்த் என்ற கருவிக் கலைஞர்கள் தனிக் குழு தொடங்கினார்கள். பிறகு இவர்களின் குழுக்களிலிருந்து மேலும் குழுக்கள் பிறந்தன. காமேஷ்-ராஜாமணியும் சில வருடங்கள் கழித்துப் பிரிந்து தனிதனிக் குழுவானார்கள்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் சினிமா பாட்டுக் கச்சேரி என்பது காமேஷ் ராஜாமணி வருகைக்குப் பின்னரே பரவலான பழக்கமாயிற்று. எழுபதுகள் சென்னையில் சபாக்கள் கோலோச்சிய காலம். சுமார் 100 சபாக்கள் இருந்தன. 40 நாடகக்குழுக்கள் இருந்தன. ஒவ்வொரு சபாவும் ஒவ்வொரு மாதமும் ஒரு நாடகம், ஒரு நடனம், ஒரு கர்நாடக இசைக் கச்சேரி தன் உறுப்பினர்களுக்கு சீசன் டிக்கட் அடிப்படையில் கொடுத்துக் கொண்டிருந்த காலம் அது. சில சபாக்கள் ஒரே மாதத்தில் ஐந்தாறு நிகழ்ச்சிகள் கொடுத்து அசத்துவதும் உண்டு. இந்த வட்டத்துக்குள் சினிமா மெல்லிசை கச்சேரியும் நுழைந்தது. மாதாந்திர நிகழ்ச்சிகளில் மெல்லிசைக் கச்சேரி தவிர்க்க இயலாத அம்சமாக மாறிற்று. சில அரங்குகள் மெல்லிசை கச்சேரி நிகழ்ச்சிக்கு சபாவுக்கு தம் அரங்கை வாடகைக்கு கொடுக்க மறுத்ததும் உண்டு. காரணம், சில சந்தர்ப்பங்களில் ரசிகர்களின் உற்சாகத்தால் சீட் மெத்தைகளுக்கு ஏற்பட்ட ஆபத்துதான்.
சினிமா பாட்டு தரக் குறைவானது, அதற்கு இடம் தருவதா என்ற மேட்டிமை மனநிலையில் மியூசிக் அகாதமி நெடுங்காலம் தன் அரங்கில் மெல்லிசை நிகழ்ச்சிகளை அனுமதிக்கவே இல்லை. (அந்த கட்டுப்பாட்டை ஏ.வி.ரமணன்தான் தளரச் செய்தார் என்று ஞாபகம்).
நண்பர்களும் நானும் அப்போது செங்கற்பட்டில் ஒரு சபா நடத்தினோம்.
சென்னைக்கு வெளியே சபா நடத்துவது என்பது அப்போது மிக அபூர்வமானதும் கடினமானதும் ஆகும். நாங்கள் மற்ற சபாக்களைப் போல இல்லாமல் கொஞ்சம் வித்யாசமான நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டிருந்தோம். எவர்லாஸ்ட்டிங் என்ட்டர்டெயினர்ஸ் என்று பெயரிடப்பட்டிருந்த எங்கள் சபா, நெவர்லாஸ்ட்டிங் சபாவாக சில மாதங்களிலேயே முடங்கிவிட்டது. எங்கள் போட்டி சபா என்று கருதப்பட்ட நித்யகலா என்ற சபாவுக்குத்தான் அதிக உறுப்பினர்கள் இருந்தார்கள். உள்ளூரின் பெரும் பிரமுகர்களின் ஆதரவும் அதற்கே இருந்தது. எங்களை விட அதிக காலம் அந்த சபா செயல்பட்டது.
ஒரு சபா நிகழ்ச்சிக்கு காமேஷ் ராஜாமணி குழுவினர் செங்கற்பட்டிலும் வந்து
வாசித்தார்கள். அங்கேதான் நான் முதன்முதலில் பல விதமான இசைக் கருவிகளை நேரில் தொட்டுப் பார்த்தேன். சின்ன வயதிலிருந்தே என் குரல் பாடுவதற்கான குரல் அல்ல. எனவே எனக்கும் வாய்ப்பாட்டில் ஆர்வம் வரவில்லை. தாளக் கருவிகளே என்னை ஈர்த்தன. பள்ளி மேசையில், மர பெஞ்ச்சில் தாளம் போட்டுக் கொண்டிருப்பது பழக்கமாக இருந்தது. முதலில் ஒரு பாங்கோஸ் வாங்கினேன். பாரிமுனை பிராட்வேயில் மியூசிக் எம்போரியம் என்ற கடையில்தான் அப்போது கொஞ்சம் மலிவான விலையில் கிடைத்தது. பாங்கோஸ் என்பது சிறிய அளவில் இருக்கும் இரட்டை டிரம் வாத்தியம். இரு முட்டிகளுக்கிடையே வைத்துக் கொண்டு வாசிக்க வேண்டும். (சர்வர் சுந்தரம் படத்தில், அவளுக்கென்ன அழகிய முகம் பாடலில் காட்டும் இசைக் குழுவில் (சங்கர்) கணேஷ் அதை வாசிப்பதைப் பார்க்கலாம்.)
என் முதல் பாங்கோஸை என் முதல் கேமராவான ஆக்ஃபா க்ளிக் 3யில் ஒரு படம் எடுத்துவைத்திருக்கிறேன். இன்றும் அந்தப் படம் என்னிடம் உள்ளது. அந்த பாங்கோஸ் இல்லை. பாங்கோசின் தோல் கிழிந்துவிட்டால், தோல் மட்டும் மாற்றித் தரும் வழக்கம் அப்போது உண்டு. அதற்காக சென்னைக்கு வந்து அண்ணா சாலை சாந்தி தியேட்டர் அருகே இருக்கும் மியூசி மியூசிக்கல்ஸில் கொடுத்து மாற்றவேண்டும். இப்படி பல பாங்கோஸ்கள் வாங்கி பல முறை தோல் மாற்றியிருக்கிறேன். இப்போதும் என்னிடம் ஒரு பாங்கோஸ் இருக்கிறது. ஆர்.கே, நீல்சன் என்ற இரு நண்பர்கள் எப்போது வீட்டுக்கு வந்தாலும், என் பாங்கோசுக்கு வேலை இருக்கும். இருவரும் நன்றாகப் பாடுவார்கள். நான் தாளம் வாசிப்பேன்.
தாளக் கருவிக் கலைஞராக இருப்பதில் இதுதான் சிக்கல். யாராவது பாடினால்தான் நான் கூட வாசிக்க முடியும். நானே தனியே வெகு நேரம் வாசிக்கமுடியாது. என் வீட்டில் என்னை விட இரு வயது மூத்தவரான அண்ணன் ராமசாமிக்கு லீட் இன்ஸ்ட்ருமெண்ட் வாசிக்கும் ஆர்வம் இருந்தது. அவர் ஒரு புல்புல்தாரா வாங்கினார். புல்புல்தாராவுக்கு பேஞ்சோ என்றும் ஒரு பெயர் உண்டு என்பது எனக்குப் பல வருடம் கழித்துத் தான் தெரியும். கம்பிகளை ஒரு கையால் தட்டிக் கொண்டு, இன்னொரு கையால் கம்பிகளை அழுத்தும் கீ பட்டன்களை அழுத்தி ஒலி எழுப்பும் கருவி இது. வீட்டில் அவர் புல்புல்தாரா வாசிக்க நான் பாங்கோஸ் வாசிப்பேன். முழுக்க முழுக்க எங்கள் மகிழ்ச்சிக்காக மட்டுமே செய்தோம். ஒரு முறை கூட வீட்டுக்கு வருவோருக்கு வாசித்துக் காட்டுவது என்றெல்லாம் செய்ததில்லை.
ராமசாமி புல்புல்தாராவுக்குப் பின்னர் ஹார்மோனியம் வாசிக்க விரும்பினார். அதற்காக இருவரும் சென்னை வந்து தங்கசாலை தெருவில் ரெண்டு கிலோமீட்டர் நடந்து ஒரு கடையைக் கண்டுபிடித்து ஹார்மோனியம் செய்ய ஆர்டர் கொடுத்தோம். டபிள் ரீட் ஹார்மோனியம் தயாரிப்பதில் அந்தக் கடைக்காரர்தான் திறமையானவர்.
எனக்கும் பாங்கோசுக்குப் பின்னர் திடீரென கடத்தின் மீது ஆர்வம் வந்தது. கடம் என்பது ஒரு பானை. ஆனால் அதை விசேஷமாக தயாரிக்கவேண்டும். எப்படி கடம் தயாரிப்பார்கள், எங்கே செய்கிறார்கள் என்பதெல்லாம் தெரியாத வயது அது. எங்கள் ஊரில் மண் பாண்டங்கள் செய்யும் ஒரு குயவரிடம் போய் கேட்டோம். அவர் தனக்கு கடம் செய்யத் தெரியாது என்றார். அரைகுறையாக அறிந்திருந்ததை வைத்துக் கொண்டு அவருக்கு செய்முறை சொன்னேன். களிமண் பிசையும் போது அதில் முட்டைகளை உடைத்து ஊற்றவேண்டும். கொஞ்சம் இரும்புத் தூள்களை கலக்க வேண்டும்.அப்போதுதான் கடத்தில் மெட்டாலிக் நாதம் வரும் ! அவரும் இதையெல்லாம் கேட்டு அதன்படியே இரு கடங்கள் செய்து கொடுத்தார். நானும் ராமசாமியும் போட்டி போட்டு வாசிப்போம்.
கருவிகள் மீதான என் ஆர்வம் தொடர்ந்து அடுத்து கல்லூரியில் ஃபைவ் டிரம்ஸ் வாசிக்கப் பழகினேன். ஆனால் ஃபைவ் டிரம்ஸ் சொந்தமாக வாங்குவது எனக்கு இயலாத விஷயம். விலை அதிகம். காங்கோ டிரம் என்ப்படும் மூன்று டிரம்கள் பொருத்திய கருவியை வாங்கினேன். இதில் வெவ்வேறு சைசிலான மூன்று டிரம்களும் வரிசையாக இணைத்து ஸ்டாண்டு போட்டு நிறுத்தப்பட்டிருக்கும். இதற்கு காசு சேர்ப்பதற்காக, பல நாட்கள் மதியம் சாப்பிடாமல் பணத்தை மிச்சப் படுத்தி ஒரு நாள் பசி மயக்கத்தில் அண்ணா சாலை தேவநேயப் பாவாணர் நூலக வாசலில் மயங்கி விழுந்து காப்பாற்றப்பட்டிருக்கிறேன்.
காங்கோ இருந்த சமயம், செங்கற்பட்டில் சில நண்பர்கள் ஒரு இசைக்குழு தொடங்கினார்கள். என்னையும் சேர்த்துக் கொண்டார்கள். குழுவில் ஜார்ஜும், குணாவும் சிறந்த பாடகர்கள். பின்னாளில் ஜார்ஜ், சிவராஜ் ஆனந்த் குழுவில் பாடச் சென்றார். குணாவின் அண்ணன் தாமு பெருங்களத்தூர் ஸ்டாண்டர்ட் மோட்டார் தொழிலாளி. மிக சிறந்த தபலா கலைஞர். எப்போதும் வாயில் வெற்றிலை மென்றுகொண்டே தபலா வாசிப்பார். இந்தக் குழுவில் செங்கற்பட்டை சுற்றியுள்ள கிராமங்களில் சின்னச் சின்ன வீட்டு விசேஷங்களுக்கெல்லாம் கச்சேரி நடத்த சென்றிருக்கிறோம். சில இடங்களில் மேடையே இராது. வீட்டு முற்றத்திலேயே இசைக் குழு உட்காரும். சுற்றிலும் நாலாபக்கமும் ஆடியன்ஸ் இருப்பார்கள்.
என் காங்கோவுக்கு அப்போது விசேஷ மதிப்பு இருந்தது. ஏனென்றால் எத்தனைக் கருவிகளுடன், எத்தனை விதமான கருவிகளுடன் குழு வந்திருக்கிறது என்பதைப் பொறுத்தே அதன் மதிப்பு கூடும். எல்லா குழுக்களும் காங்கோவோ,ஃபைவ் டிரம்சோ கொண்டு வரமாட்டார்கள். வயலின் எண்ணிக்கை அதிகம் இருந்தால் தனி அந்தஸ்து இருக்கும். கச்சேரிக்கு ரேட் பேசும்போது எத்தனை கருவி என்பதை கேட்பார்கள். என் காங்கோவுக்கு ஐந்து கால்கள் இருந்தன, ஒன்று மட்டும் பக்கவாட்டில் இருக்கும். மேலே இதற்கென்றே டைய்லரிடம் அளவு கொடுத்து தைத்த காக்கி உறையைப் போட்டிருப்பேன். தோளில் எடுத்து சுமந்தபடி குழுவினருடன் ஒரு கிராமத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, வழியில் பார்த்த ஒருத்தருக்கு அது வைக்கோல் அடைத்த கன்றுக்குட்டி போல தோன்றியிருக்கிறது. (பால் சுரக்கும் மாட்டின் கன்று இறந்துவிட்டிருந்தால் செத்த கன்றை வைக்கோல் வைத்து அடைத்து மாட்டின் முன்னால் நிறுத்தி அதை ஏமாற்றுவார்கள்.) மாடு இல்லாமல் கன்னுக்குட்டியை மட்டும் எடுத்துகிட்டு எங்கே போறீங்கன்னு கேட்டார் அவர். அன்றிலிருந்து என் காங்கோவை நாங்கள் எல்லாருமே கன்னுக்குட்டி என்றே சொல்லிவந்தோம்.
குழுவில் இருக்கும் அத்தனை இசைக்கருவிகளும் பங்கேற்கும் விதமாக ஓப்பனிங் சாங் எப்போதும் இருக்கவேண்டும். அப்போதுதான் ஆடியன்ஸ் கவனம் கிட்டும். எங்கள் குழுவில் நாங்கள் ‘ நாளாம் நாளாம் திருநாளாம்‘ என்ற பாடலை முதலில் இசைப்போம். வேறு குழுக்கள்
‘வணக்கம், பல முறை சொன்னேன் சபையினர் முன்னே‘என்ற பாட்டைப் பயன்படுத்துவார்கள். இரண்டுமே விஸ்வநாதன் சாங்தான் என்றாலும், வணக்கம் சுமார் ரகம்தான். மெல்லிசைக் குழுவில் என்னைப் போன்ற தாளக் கருவி கலைஞர்களுக்கு பாடகர்களை விட ஒரு பொறுப்பு அதிகம். அவர்கள் பல்லவி, சரணம் மெட்டு நினைவில் வைத்திருந்து, எப்போது எடுக்க வேண்டும் என்று கவனமாக இருந்தால் போதும். ஆனால் இடையிடையே வரக்கூடிய பி.ஜி.எம் எனப்படும் பேக் கிரவுண்ட் மியூசிக்கின் மெலடி என்ன என்பதை கருவி கலைஞர்களும் தாளக் கலைஞர்களும்தான் துல்லியமாக நினைவில் வைத்திருக்க வேண்டும். எங்கள் குழுவில் வாயாடி ஆசாமி நான்தான் என்பதால், அடுத்த பாட்டு என்ன என்ற அறிவிப்புகளை செய்யும் தொகுப்பாளனாகவும் நான் இருந்தேன்.
சென்னைக்கு வெளியே இருக்கும் குழுக்களின் அன்றைய இன்னொரு பிரச்சினை, பாடுவதற்கான பெண்கள். சென்னையிலிருந்துதான் வரவழைக்கவேண்டும். சுசீலா வாய்ஸ், ஈஸ்வரி வாய்ஸ் என்று இரண்டு வகை வாய்சுக்கும் பெண்கள் தேவை. சில பெண்கள் குரலை மாற்றி இரண்டையும் பாடிவிடுவார்கள். ஆண்களால் இப்படி மாற்ற முடியாது. டி.எம்.எஸ் வாய்ஸ் பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ் பாட்டைப் பாடினால் சகிக்காது. ஆச்சரியமென்னவென்றால் அந்த காலத்தில் ஏ.எம்.ராஜா, பி.பி.எஸ், எஸ்.பி.பி வாய்சிலெல்லாம் பாட நிறைய பேர் வந்துகொண்டே இருந்தார்கள். ஆனால் டி.எம்.எஸ்.வாய்சுக்கு எளிதில் சரியான ஆள் கிடைக்கமாட்டார். அப்போது அறிமுகமான கோவை முரளி என்பவர் இன்றும் பாடிக் கொண்டிருக்கிறார் !
மெல்லிசை குழுப் பாடகராக வருவதில் பலரும் அறியாத மிகப் பெரிய சிக்கல், அதை ஏணியாகப் பயன்படுத்தி சினிமாவில் பின்னணி பாடும் வாய்ப்பை பெற்றுவிடமுடியாது என்பதுதான். இன்று வரை மெல்லிசைக் குழுக்களில் பாடகராக அறிமுகம் ஆனவர்களில் சினிமா பாடகரானவர்கள் என்பது விரல் விட்டு எண்ணக் கூட ஒரு கை விரலே அதிகம். மிக சிறந்த பாடகரான பி.எஸ்.சசிரேகா மெல்லிசைக் குழுக்களில் நிறைய பாடியதாலேயே அவருக்கு சினிமா வாய்ப்பு குறைந்துபோனதாக நான் நினைக்கிறேன்.
என் மெல்லிசைக் குழு அனுபவங்கள் எல்லாம் கல்லூரி வாழ்க்கையோடு முடிந்து போய்விட்டன. அடுத்து இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் கடை நிலை ஊழியராக வேலைக்கு சேர்ந்தபோது, அங்கே நந்தகுமார் என்ற சக அலுவலர் இசையார்வம் உடையவராக இருந்தார். நன்றாக வயலின் வாசிப்பார். தேவி தியேட்டருக்குப் பின்னால் ஒரு சந்தில் அவரது ஒற்றை அறை வீட்டில் அவர் வயலின் வாசிக்க, நான் காங்கோ வாசிக்க சில நாட்களைக் கழித்திருக்கிறோம். எனக்கு மெல்லிசைக் குழு ஆர்வம் இதற்குள் வற்றிவிட்டிருந்தது. என் நாடக ஈடுபாடு மேலோங்கியது. இசையில் ஈடுபாடு எப்போதும் தொடர்ந்தது. சினிமா பாட்டின் இசைதான் என்னை இன்றும் ஈர்க்கும் அம்சம். ஆனால் அதன் உள்ளடக்கம், படமாக்கலில் இருக்கும் மசாலா வணிகத்தன்மை எல்லாம் என்னை மெல்ல மெல்ல மெல்லிசைக் குழுவிலிருந்து அந்நியப்படுத்தின.
1976ல் இசை மேதை எம்.பி.சீனிவாசன் வழிநடத்திய சென்னை இளைஞர் இசைக் குழுவின் ஒரு நிகழ்ச்சியைக் கேட்டேன். கருவிகள் மிகக் குறைவு. ஒரு ஹார்மோனியம். ஒரு தபலா மட்டுமே. இருபது பேரின் குரல்களே மிகவும் முக்கியமாக இருந்தன. நிகழ்ச்சி முடிந்ததும் எம்.பி.எஸ் அவர்களை சந்தித்து, நானும் குழுவில் இணையவிரும்புகிறேன், ஆனால் என்னால் பாட முடியாது. டிரிபிள் காங்கோ வாசிக்க முடியும் என்றேன். அவர் சிரித்தார். இந்தக் குழுவில் அதற்கு வேலையே இல்லையே என்றார். அவருடனான நட்பு தொடர்ந்தது. என் சேர்ந்திசை ஈடுபாடு 38 வருடங்களாக இன்று வரை தொடர்கிறது. அந்த குழுவின் கௌரவ உறுப்பினர் பேட்ஜை அவர்கள் எனக்கு சில வருடங்கள் முன்னர் அளித்ததுதான் நான் வாழ்க்கையில் பெற்ற ஒரே முக்கிய விருது.
டிசம்பர், 2014.