சிறப்புப்பக்கங்கள்

கனா: கனவு நாயகி

ஜெகன் கவிராஜ்

பெண்களை மையப்படுத்தி அவர்களை தலைமைப் பாத்திரமாக்கி வரும் படங்களின் வரிசை தமிழ்சினிமாவில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 2018-ஆம் ஆண்டு வெளியான கனா படம் கனமான பெண் கேரக்டரை கொண்டது. அப்படத்தின் நாயகியின் வளர்ப்புமுறையிலே அவளின் உறுதித்தன்மை நிலைநிறுத்தப்பட்டிருக்கும். 10 ஆண்களோடு எந்த விகல்பமும் இன்றி கிரிக்கெட் விளையாடும் அவளின் இயல்புத்தன்மை திரையில் மிக அழகாக வெளிப்படுத்தப் பட்டிருக்கும்.

விவசாயமும் கிரிக்கெட்டும் தன்னிரு கண்கள் என வாழும் தந்தையைக் கொண்ட நாயகி, கிரிக்கெட் விளையாட்டை தன் கரியராக தீர்மானிக்கிறாள். அவளின் சமரசமற்ற நம்பிக்கை தந்தையின் வளர்ப்பிலிருந்து வந்ததாய் படத்தில் உணர்த்தப்பட்டிருக்கும். ‘வாயாடி பெத்தபுள்ள' என படத்தில் வரும் பாடலில் ‘என் மக ஆம்பள பத்துக்கு சமம் தானே' என நாயகியின் தந்தை பாடுவதாய் வரும். அப்போதே அவளின் கேரக்டரின் வீரியம் தெரியப்படுத்த பட்டிருக்கும். ஒரு பெண்ணின் வீரத்தை ஆணுக்கு இணையாகவோ. இல்லை ஆணுக்கு மேலாகவோ மெச்சுவது தான் உயர்ந்தது என்ற மனோபாவம் இயக்குநருக்கும் இருந்திருக்கிறது என்பதற்கு இந்த வரிகள் சான்று. அதற்கோர் காரணமும் இருக்கிறது. யெஸ் அது நமது மனவியலின் மரபு.

படத்தில் நாயகி உடையும் ஒரு கணம் வரும். நிலவுக்கு கூட என் கனவுகளைச் சொல்வேன் என உறுதிகொண்டவள் உடையும் போது அவளுக்கு அப்பாவின் ஆறுதலை விட தன் அன்னையின் வார்த்தைகளே பெரும் உந்துதலைக் கொடுக்கும். பொதுவாகவே பெண்கள் உடையும் போதெல்லாம் சக பெண் அவளுக்குத் தோள் சாயத்தேவைப்படுகிறாள். குறிப்பாக ஒரு மகளுக்கு தந்தை எவ்வளவு தான் ஊக்கம் தந்தாலும் தாய் தரும் ஊக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கனா படத்தில் எதையும் சாதித்திடாத தன் தாயிடம் இவ்வளவு உறுதி இருக்கிறதே என நாயகி உள்ளார்ந்து உணர்வாள். அது மிக நுட்பமான ஒரு உளவியல் காட்சி. கனா வெகு சாதாரண கமர்சியல்

அம்சங்களோடும், வெறும் கணநேர பாசாங்கு உணர்ச்சியைக் கொண்டும் அமைக்கப்பட்ட கதைதான் என்றாலும், அப்படத்தில் வடிக்கப்பட்டுள்ள முதன்மைப் பெண் பாத்திரம் முழு நிறைவைக் கொண்டுள்ள பாத்திரம். டங்கல் படத்தின் க்ளைமாக்ஸில் அமீர்கான் உதவ முடியாமல் ஒரு இடத்தில் மாட்டிக்கொள்ள, அவரின் மகள் தனியாகவே போட்டியில் வெல்வாள். கனாவில் அந்த அற்புதம் நிகழா விட்டாலும் இந்தப் பெண்ணின் வெற்றியிலும் யாரும் பெரிதாக பங்கு போட முடியாது என்பதாகவே நம் மனதில் பதியும். அந்த வகையில் கனாவின் நாயகி..நம் பெண்களின் கனவுநாயகிதான்.

மார்ச், 2023