சிறப்புப்பக்கங்கள்

கனவே கலையாதே

ராஜ் சிவா

கனவுகள் இல்லாதவன் சிறகுகள் இல்லாத பறவை போன்றவன்'

ஒரு பிற்பகல் நேரம். மதிய உணவை ருசித்து ரசித்து உண்டுவிட்ட அசதியில் களைப்புத் தீர, எங்காவது அமைதியாக அமரலாமென நீங்கள் நினைக்கிறீர்கள். வீட்டின் மொட்டைமாடி உங்கள் விருப்பமான இடம். அழகிய பூக்கள் நிறைந்த பசுமையான மாடித் தோட்டம், ‘ஹாய்' சொல்லி உங்களை வரவேற்கிறது.

விதவிதமான செடிகளுக்கும், பூக்களுக்கும் நடுவே போடப்பட்டிருக்கும் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொள்கிறீர்கள். தினமும் நடக்கும் வழமையான செயல்தான். நாற்காலியில் அமர்ந்த சிறிது நேரத்திலேயே தூக்கம் உங்களை இறுகப் பற்றிக்கொள்கிறது. எங்கே தூங்கினேன், எப்போது தூங்கினேனென்ற எந்த நினைவுமின்றி, அப்படியே தூங்கிப் போகிறீர்கள். மாடித் தோட்டச் சூழலில் தூங்கியதாலோ என்னவோ, அழகிய பூங்காவொன்றிற்குள் மிதந்தபடி நுழைவதாகக் கனவு காணத் தொடங்குகிறீர்கள். ‘என்ன நான் காற்றில் மிதக்கிறேனே!' என்ற ஆச்சரியத்துடன் பார்த்தபோதுதான், அழகிய பட்டாம்பூச்சியாக

நீங்கள் மாறியிருப்பது தெரிகிறது. வண்ணமயமாக இருக்கும் சிறகுகளை ரசித்தபடி, ஒவ்வொரு பூவையும், ஒவ்வொரு செடியையும் தொட்டுத் தொட்டுச் சிறகடித்துப் பறக்கிறீர்கள். ‘அம்மாடீ! எவ்வளவு பூக்கள்! எத்தனை வர்ணங்கள்!‘ வியப்புடன் பூங்கா முழுவதும், அழகை உள்வாங்கியபடி பறந்து கொண்டிருக்கும்போது, உங்கள் கனவு கலையத் தொடங்குகிறது. கண்களை மெல்லத் திறந்து பார்க்கிறீர்கள். உறக்கமா, விழிப்பா என்னும் மயக்க நிலை. மாடித் தோட்டத்தில் அமர்ந்திருப்பதை உணர ஆரம்பிக்கிறீர்கள். என்ன ஆச்சரியம்! உங்கள் கண் முன்னால், நிஜமாகவே, நீங்கள் கனவில் கண்ட அதே வண்ணங்களுடன் அழகிய பட்டாம்பூச்சியொன்று படபடத்துப் பறந்து கொண்டிருக்கிறது. மாடித் தோட்டத்தின் ஒவ்வொரு

செடியிலும் அமர்ந்துவிட்டு, இறுதியில் உங்களை நோக்கிப் பறந்து வருகிறது. நீங்கள் அதைப் பார்க்கிறீர்கள். அதுவும் உங்களைப் பார்க்கிறது. அப்போதுதான், திடீரென உங்களுக்கு அந்தச் சந்தேகம் தோன்றுகிறது. ‘இந்தப் பட்டாம்பூச்சியாக மாறியதாக நான் இப்போது கனவு காண்கின்றேனா? இல்லை, நானாக மாறிவிட்டதாக அந்தப் பட்டாம்பூச்சி கனவு காண்கிறதா? யாருடைய கனவு இது? என்னுடையதா இல்லை பட்டாம்பூச்சியுடையதா?' என்ற குழப்பம் உங்களுக்குத் தோன்றுகிறது. நிஜத்தில் நடப்பவையாகவே கனவுகள் நம்மை நம்பவைக்கின்றன. இக்குழப்ப நிலையை நீங்களும் அனுபவித்திருப்பீர்கள்.

நான் கூறிய பட்டாம்பூச்சிக் கனவு, ‘ஷூவாங் ஷோ' என்னும் சீனத் தத்துவாசிரியன் ஒருவருக்கு ஏற்பட்டது. அதுவா இல்லை இதுவா என்னும் முரண்நிலைக்கு உள்ளானவர் அவர். அதனால், ‘மாஸ்டர் ஷூவாங் ஷோ முரண்நிலை' (Master Zhuang Zhow paradox) என்று இதைச்சொல்வார்கள். மாஸ்டர் ஷூவாங் ஷோ, தாவோ இசத்தின் இரு தூண்களில் ஒருவர். மற்றவர் நீங்கள் ஏற்கனவே அறிந்த ‘லாவோட்ஷி' (Laozi).

கனவுகளின் குழப்பநிலையைத் தினமும் நாம் அனுபவித்து வருகிறோம். நடப்பது நிஜமா அல்லது நிஜம்போலக் காண்கிறோமா என்னும் தெளிவேயில்லாமல் நடைபெறும் செயல்பாடுதான் கனவு. நல்ல ஆரோக்கியமான, மகிழ்ச்சி தரும் கனவுகளைக் காண்பதில் யாருக்கும் எந்தத் தடையுமில்லை. ஆனால், நாம் நினைப்பது எதுவும் கனவாகக் கிடைப்பதில்லை. நம் மூளை தன்னிச்சையாக அதைத் தெரிவு செய்கிறது. ஒரு சிலர் கனவென்றாலே நடுங்குவார்கள். நித்திரைக்குப் போவதற்குப் பயப்படுவார்கள். எப்போதும், பயங்கரமான, மிகமோசமான கனவுகளைத் காண்பவர்கள் அவர்கள். அதனால், உறக்கம் என்றாலே பயம் கொள்வார்கள். இதை ‘ஒனைரோஃபோபியா' (Oneirophobia) என்று உளவியலாளர்கள் அழைக்கிறார்கள். பேய், பிசாசு, இருளான இடங்கள், இடுகாடு, பாம்பு, பயம் தரும் மிருகங்கள் என அச்சமூட்டும் கனவுகளை நீங்களும் கண்டிருப்பீர்கள். அக்கனவுகளிலிருந்து உடன் வெளிவர விரும்புவீர்கள். அப்படியான அச்சம், அருவெறுப்புத் தரும் கனவுகளை எவரும் விரும்புவதில்லை. மாறாகப் பிடித்த நபர்களுடன், பிடித்த இடங்களில், விருப்பம்போலக் கழிப்பதாகக் காணும் இன்பமான கனவுகளையே நாம் விரும்புகிறோம். ஆனால், நல்ல கனவா, கெட்ட கனவா என்பதைத் துரதிஸ்டவசமாக நம்மால் தீர்மானிக்க முடிவதில்லை. மூளை, சுயமாகத் தெரிவு செய்யும் செயல்பாடல்லவா அது? ஆனாலும், நாம் காணும் கனவுகளை நாமே தீர்மானித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் சொல்லுங்கள்? ஒரு திரைப்படத்தை உருவாக்கும் இயக்குநர்போல, கனவுகளையும் இப்படி இப்படி நடக்க வேண்டுமென்று நாம் இயக்கினால் அதைவிட மகிழ்ச்சி இருக்கிறதா? ‘அதுசரி, இப்படியெல்லாம் செய்வது

சாத்தியம்தானா?‘‘என்று நீங்கள் கேட்டால், ‘ஆம்! இது சாத்தியமேதான்' என்பேன். கனவுகளை தமது தெரிவுகளுடன், தங்கள் விருப்பம்போல மாற்றிக் காண்பவர்கள் இருக்கிறார்கள். இவ்வளவு திடமாக நான் சொல்வதற்கு ஒரு காரணமிருக்கிறது. அதை நான் சொல்லும்போது உங்களால் நம்ப முடியுமோ தெரியவில்லை. கனவுகளை மாற்றிக் காண்பவர்களில் நானும் ஒருவன்.

‘என்ன இது, இதுவரை சரியாகத்தானே இவர் பேசிக்கொண்டிருந்தார். திடீரென, கனவை நான் மாற்றுவேன் என்று கப்சா அடிக்கிறாரே!' என்று நினைக்கிறீர்களல்லவா? இல்லை, நான்  சொல்வதெல்லாம் உண்மை. ‘கனவுகள்பற்றிச் சிறப்பிதழ் வெளியிடப் போகிறேன். அதற்கு ஒரு கட்டுரையை உங்களால் தரமுடியுமா?‘ என்று

அசோகன் அவர்கள் என்னிடம் கேட்டார். 'சரியான நபரிடம்தான் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். ‘தருகிறேன்‘ என்னும் ஒற்றை வார்த்தையுடன் என் சம்மதத்தையும் தெரிவித்தேன். அதற்குக் காரணம், கனவு காண்பதில் எனக்கிருக்கும் சிறப்புத் தன்மைதான். அதை அந்திமழை வாசகர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். படித்துவிட்டு நம்புவது, நம்பாமல் இருப்பது உங்கள் பொறுப்பு. அதைச் சொல்வது மட்டுமே என் பொறுப்பு.

அனைவரையும்போல நல்ல கனவுகள், கெட்ட கனவுகள் என மாறிமாறி காண்பவன்தான் நானும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், எனக்கு விருப்பமில்லாத ஒரு இடமோ, நபரோ, பேய் பிசாசுகளோ, மரணங்களோ, அருவெறுப்புகளோ, குறிப்பாகப் பாம்புகளோ (அடிக்கடி பாம்புகள் என் கனவுகளில் வந்து மிரட்டும்), என் கனவில் தோன்றும்போது, அந்தக் கனவை எனக்கு விருப்பப்படி என்னால் மாற்ற முடிகிறது. தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களில், ‘இனி இவருக்குப் பதில் இவர்' என்று ஆளை மாற்றுவதுபோல என்னாலும் மாற்ற முடியும். பயங்கரமான இடம் அல்லது நபர் கனவில் வந்தால், உடனடியாக எனக்குப் பிடித்த இடமாகவோ நபராகவோ மாற்ற முடிகிறது. பிடிக்காத சம்பவம் என்றாலும், பிடித்த சம்பவமாக மாற்றுகிறேன். அனைத்தும் கனவில்தான். இப்படிக் கனவை மாற்ற முடிந்தவர்களை ‘லூசிட் கனவாளிகள்' (Lucid Dreamers) என்கிறார்கள். இப்போதும் உங்களால் நான் சொல்வதை நம்பமுடியவில்லை, இல்லையா? பரவாயில்லை. தொடர்ந்து படியுங்கள்.

லூசிட் கனவுகளை (Lucid Dreamers) நான் மட்டும் காண்பதாக நினைக்காதீர்கள். மனிதர்களில், 30 விழுக்காட்டினர் லூசிட் கனவு காண்பவர்கள்தான். இதைப் படிக்கும் உங்களில் சிலர், ‘அட! நானும் இப்படிக் கனவை மாற்றியிருக்கிறேனே!' என்று ஆச்சரியப்படுவீர்கள். அது என்றோ ஒருநாள் உங்களுக்கு நடந்திருக்கலாம். ஆனால், லூசிட் கனவாளிகளால் எப்போதும் கனவை மாற்ற முடியும். இதற்கான பயிற்சி முறைகளை அறிமுகப்படுத்துபவர்கள் இணையத்தில் நிறையவே இருக்கிறார்கள். ஆனால், அது நல்லதா, கெட்டதா என்பது தெரியவில்லை. இயல்பாக நடந்தால் நல்லது என்றே நம்புகிறேன்.

இந்த இயல்பு சிறுவயதிலிருந்தே எனக்கு வாய்த்திருக்கவில்லை. திடீரென அமைந்தது. உறங்கும்போது, சில நொடிகள் மூச்சை நிறுத்தும், ‘ஸ்லீப் அப்னியா' (Sleep Apnea) என்னும் குறைபாடு எனக்கு உண்டு. உடல் பருமனுடையவர்கள், குறட்டை விடுபவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரு குறைபாடு. ஆனால், மரணம்வரை இட்டுச் செல்லக்கூடியது. பக்கவாதம் ஏற்படும் ஆபத்தும் ஸ்லீப் அப்னியா உள்ளவர்களுக்கு உண்டு. நித்திரையில் மட்டும் நிகழக்கூடிய விபரீதம். அதனால், மூச்சுக் காற்றைச் சமன் செய்யும் கருவியை இணைத்தபடியே நான் தூங்கச் செல்ல வேண்டும். என்றிலிருந்து அக்கருவியைப் பயன்படுத்த ஆரம்பித்தேனோ, அன்றிலிருந்து

லூசிட் கனவுகள் எனக்குச் சாத்தியமானது. ஏன் எனக்கு அப்படி வாய்த்தது என்பதற்கான அறிவியல் காரணம், எவரிடமும் இல்லை. எனது உறக்க நிலையை அளந்து அவதானிக்கும் மருத்துவ நிபுணர்கள், நான் நன்றாகத் தூங்கி எழுவதாக அக்கருவியின் தரவுகளிலிருந்து தெரிவிக்கிறார்கள். ஏனோ எனக்கு அது வாய்ந்தது, அவ்வளவுதான்.

'இந்த நொடி இந்த நொடி இப்படியே தொடராதா' என்ற மகிழ்வான விடியல்கள், பல நாட்கள் எனக்கு வாய்த்திருக்கின்றன. ‘கனவே கலையாதே!' எனக் கனவுகளைக் காதலித்திருக்கிறேன். கவிதைகள், கட்டுரைகளைக் கூடக் கனவில் முழுமையாக்கியிருக்கிறேனென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சரி இதையெல்லாம் நீங்கள் நம்பவா போகிறீர்கள்? உங்களை நம்ப வைப்பது என் பொறுப்புக் கிடையாது. ஆனாலும், Lucid Dreams என்று இணையத்தில் தேடுங்கள். தரவுகளைக் கூகிள் அள்ளித் தருவார்.

செப்டம்பர், 2022