சிறப்புப்பக்கங்கள்

கனவின் வேதியியல்

மரு.சி. செல்வராஜ்

தற்போதைய அறிவியல் வளர்ச்சியின் காரணமாக கனவுகளின் போது மூளையில் நிகழும் வேதியியல் மாற்றங்களை துல்லியமாக அறிந்துள்ளனர்.

மூளையில் நடக்கும் மின்னலை மாற்றங்கள், செயல்பாடுகள் மற்றும் ரத்த ஓட்டங்கள் காண்பிக்கும்  Function MRI, PET ஆகியவற்றை கொண்டு கனவுகளை ஆராய முடிகிறது. 

ஒருவர் கனவு காணும்போது மூளை எப்படி இருக்கும்? விழித்திருக்கும்போது எப்படி  முழு செயல்பாட்டுடன் இருக்குமோ அப்படித்தான் இருப்பதாக மின் அலை மாற்றங்களும் இரத்த ஓட்டங்களும் காண்பிக்கின்றன.

கனவுகள் தூக்கத்தின் முக்கிய அம்சங்களாக உள்ளன. நமது தூக்கம் சுழற்சிகளாக அதாவது Non -REM, REM ஆகிய அடுக்குகளைக் கொண்ட சுழற்சிகளாக நிகழ்கிறது. ஆரம்பத்தில் பத்து நிமிடங்களாக இருக்கும் REM தூக்கம் பிந்தைய சுழற்சிகளில் ஒரு மணி நேரம் வரை நீடிக்கிறது. 80 - 90 சதவீத கனவுகள் REM தூக்கத்தில் நடக்கின்றன. ஆனாலும் கனவுகள் தூக்கத்தின் எல்லா நிலைகளிலும் எல்லா சுழற்சிகளிலும் நிகழலாம்.

ரெம் தூக்கத்தின்போது வரும் கனவுகள் நீண்ட கனவுகளாகவும் உணர்ச்சிகள் மிகுந்தவையாகவும் குழப்பமானவையாகவும் எளிதாக ஞாபகத்துக்குக் கொண்டு வரும்படியும் உள்ளன. Non -REM தூக்கத்தின் போது வரும் கனவுகள் எளிதானவையாகவும் அன்றாட வாழ்வுக்கு சம்பந்தப்பட்டவையாகவும் பெரும்பாலும் ஞாபகத்துக்கே வராதவையாகவும் இருக்கின்றன.

கனவுகளுக்கான வேதியியல் தூண்டல் மூளைத் தண்டில் உள்ள PONS என்ற பகுதியில் இருந்து  அசெட்டைல்கோலின் என்ற வேதிபொருள் சுரப்பதில் தொடங்குவதாகக் கூறுகிறார்கள். எபிநெப்ரின்,

செரடோனின் போன்ற வேதிப்பொருட்கள் சுரந்து, இந்த REM தூக்கத்தை நிறுத்துகின்றன, கனவுகளும் நிறுத்தப்படுகின்றன.

தூக்கம் உடலுக்கு  ஓய்வையும் புத்துணர்வையும் அளிப்பதாகவும் இதில் கனவுகளுக்கான தூக்கம்  கற்பது, ஞாபகம் வைத்துக்கொள்வது, கற்பனைத் திறன் ஆகியவற்றில் பங்காற்றுகிறது. அத்துடன் ஞாபகங்களை ஹிப்போகாம்பஸ் என்ற தற்காலிக இடத்தில் இருந்து செரிப்ரல் கார்ட்டஸ் என்கிற நிரந்தர சேமிப்புக்கிடங்குக்கு மாற்றுவது, நினைவுகளை  கோடிங் (Coding) செய்வது, தேவையற்ற ஞாபகங்களை நீக்குவது போன்ற செயல்பாடுகளையும் நிகழச்செய்கிறது.

பிறந்த குழந்தைகளுக்கான  ஐம்பது சதவீத தூக்கம் கனவுகளுக்கான (REM) தூக்கமாகவே உள்ளது. இது படிப்படியாகக்குறைகிறது. ஆறு வயதாகும்போது இந்த தூக்கம் 25% சதவீதமாக பெரியவர்களைப் போல் ஆகிவிடுகிறது.

வயது ஆக ஆக இந்த ரெம் தூக்கத்தின் அளவு , மற்றும் Non -REM ஆழ்ந்த தூக்க அடுக்குகளின் அளவு குறைந்துகொண்டே செல்கிறது. இந்த ரெம் தூக்கக்குறைவு அல்சீமர் என்ற மூளைச் சிதைவு நோயுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. பொதுவாக வயது ஏற ஏற கனவுகள் குறைகின்றன. அப்படியே வரும் கனவுகளை நினைவு கூர்வதும் குறைந்துவிடும் என்கிறார்கள்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள்... இவர்கள் காணும் கனவுகளில் வேறுபாடுகள் உள்ளனவா? ஆம். மூன்று, நான்கு வயது குழந்தைகளின் கனவுகளில் மிருகங்கள், சாப்பிடும் காட்சிகள், அசையாத பொருட்கள் போன்றவை வருவதாகக் கூறுகிறார்கள். ஆண்கள் காணும் கனவுகளில் பெரும்பாலும் ஆண் பாத்திரங்களே வரும். பெண்கள் காணும் கனவுகளில் ஆண், பெண் பாத்திரங்கள் சமமாக வருவதாகச் சொல்லப்படுகிறது.

கனவுகளின் போது நமது மூளை வழக்கமான செயல்பாட்டுடன் இருந்தாலும் கை, கால், தசை அசைவுகள் குறைவாகவே உள்ளன. இதில் மாற்றம் நிகழும்போது கனவுகளில் இருப்பது போன்றே கைகால் களை நீட்டுவது, கத்துவது, அழுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இந்த பிரச்னை வயதாகும்போது  வரும் பார்க்கின்சன் நோயுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

(மருத்துவர் சி. செல்வராஜ், எம்.டி., டி.எம்., மூளை நரம்பியல் மருத்துவர், சேலம்)

அக்டோபர், 2022