அ பத்த நாடக வகை (Ubsurd theatre) என்று ஃப்ரெஞ்சில் ஒரு நாடக வகைமை 1950களில் பிரபலமானது. இருத்தலியல் கோட்பாடு சார்ந்தவை இந்த நாடகங்கள். அர்த்தமற்ற வாழ்க்கைக்கு எதிரான மனிதனின் (எதிர்) வினைகளே இதன் மையம். நாம் இதற்குள் எல்லாம் அதிகம் பயணம் போனால் நம்ம நிலையே அபத்தமாகி விடும். ஆனால் சினிமாவில் அபத்தம் என்பது சுவாரசியமான ஒன்று. தமிழ் சினிமாவே அபத்தமானதுதானே இதில் தனியா
சினிமாவில் அபத்தம் என்று எதைத் தேடப் போறீங்க என்று சிலர் கேட்பதும் புரிகிறது. அடக்கவே முடியாத வில்லனை கதநாயகன் பல வீர தீர சாகசங்களுக்கு அப்புறம் அடக்கியதும்,
''அரெஸ்ட் ஹிம்'' என்று வானத்தை நோக்கி சுட்டுக் கொண்டு ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் நாலைந்து போலீஸ் வந்து சுற்றி வளைப்பது காலகாலமாக நடந்து வரும் அபத்தம் தானே.
அதற்கு முந்தைய ஓரிரு காட்சிகளில், வில்லன் யாரையாவது தூணில் கட்டிப் போட்டு ''மரியாதையா இதில கையெழுத்துப் போட்டுரு இல்லைன்னா...'' என்று பக்கத்துத் தூணில் கட்டிப் போட்டிருக்கும் அம்மாவையோ தங்கையையோ சவுக்கால் அடிப்பதோ கழுத்தில் கத்தியோ துப்பாக்கியோ வைப்பதும் நூறு வருட அபத்தம்தான். மிரட்டி கையெழுத்து வாங்கினால் அந்தப் பத்திரம் செல்லாது என்பது சட்டம். இந்தச் சட்டத்திற்கும் நூறு வயது இருக்கும்.
அதே போல் கதாநாயகி ஆண் வேடம் போட்டுக் கொண்டு வருவார். அ து சகலகலா வல்ல கதநாயகனுக்கு முதலில் தெரியாது. இது ''ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி'' காலத்து ரகசியம். அதில் மாதுரி தேவி என்று ஒரு நடிகை ஆண் வேடமிட்டு தளபதியாக நடிப்பார். அதில் தொடங்கி பறக்கும் பாவையில் சரோஜாதேவி, என் கடமையில் மனோரமா, திருடன் படத்தில் கே.ஆர். விஜயா, ருத்ரா படத்தில் கௌதமி என்று இன்னும் நீளும் இந்தப் பட்டியல். இதில் அபத்தம் எதுவென்றால், முதலில் புரிந்து கொள்ளாத நாயகன், அப்புறம் எல்லாம் எமக்குத் தெரியும் பாணியில் ''பட்டுப்பாவாடை எங்கே கட்டி வைத்த கூந்தல் எங்கே,'' என்றோ ''பழநியப்பன் பழநியம்மாவா மாறிப் போனா மைடியர் ராமா...'' எனவோ பாட்டுப் பாடுவதில்தான் அதிக அபத்தம் வழியும். இதற்குள் அவளை பத்துத் தரம் தொட்டு, எட்டுத்தரம் பின்புறத்தில் தட்டி, அவன் ஆண் என்று இயல்பாக அணைக்க, அவள் அச்சம் நாணம்,மடம், பயிர்ப்பு என்னும் நான்கு குணங்களோடும் நெளிய, என நூறு அபத்த நாடகம் நடந்து விடும்.
அப்புறம் சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திகிற மாதிரி வில்லன் குகைக்குள்ளேயே மாறு வேடத்தில் போய் ஆடிப்பாடி அங்கே அடை பட்டுக் கிடக்கும் யாரையாவது காப்பாற்றப் போவார்கள். கடைசியில் கிளைமாக்ஸ் நெருங்கும் போது, ''ஏண்டா என்னை இளிச்ச வாயன்னா நினைச்சே, நீ எந்த மாற்று வேடத்தில் வந்தாலும் நான் கண்டுபிடிச்சிருவேண்டா,'' என்று வில்லன் கொக்கரிப்பார். சில காட்சிகளில் வில்லனை விமர்சனம் செய்தே பாட்டுப்பாடி ஆடுவார்கள். மதுரை வீரன் படத்தில் அழகர் மலை கொள்ளையர் குகைக்குப் போய். '' ஏய்ய்ச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா, எண்ணிப்பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க...'' என்று அறிவுரை
சொல்லிப் பாடி ஆடுவார்கள். திட்டம் போட்டு திருடும் திருடர்களுக்கு இதைப் புரியக்கூட கொஞ்சமாவது மூளையிருக்காதா?
ஆணோ பெண்ணோ கட்டாயமாகக் குடிக்க வேண்டிய கட்டாயம் வந்தால், குடித்து விட்டது போல ஏமாற்றி அதைத் தூரக் கொட்ட பக்கத்திலேயே தயாராக ஒரு பூஜாடி இருக்கும். இதற்கு ஒரு மாற்று யோசனை கூட உதிக்காது டைரக்டர் மூளையில். நூறு வருஷங்களாக ஒரே யோசனைதான். அதே போல சில படங்களில் வில்லன் சுடுவதற்கு துப்பாக்கியின் விசையை அமுக்குவார். துப்பாக்கி வெடிக்காது. அதிர்ச்சியுடன் நாயகனைப் பார்ப்பார் வில்லன். கதாநாயகன் புன்னகைத்தபடி, கைகளை விரிப்பார். ஆறு குண்டுகளும் அங்கே இருக்கும். அவற்றை எப்போது எப்படி எடுத்தார், யாருக்கும் தெரியாது. அதை விட, வில்லனோ அவனது அல்லக்கைகளோ சுடுவார்கள். ஆறு குண்டுகளும் குறி தப்பி அதெற்கென்று இருக்கிற பெரிய மணி ஜாடிகளில்(Bell glass) பட்டு. அவற்றில் உள்ள திரவம் தெறித்துச் சிதறும். நாயகன் குண்டுகளை ஒன்று இரண்டு என்று எண்ணி ஆறு முடிந்ததும் மறைவிடத்தில் இருந்து வெளியே வருவார். சமயத்தில்ஆறு வெடிச் சத்தத்தையும் தியேட்டரில் ரசிகர்களே எண்ணுவார்கள். இப்போது புல்லட்டுகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறது.
இதெல்லாம் காலகாலமான பூச்சுற்றல்கள். நீதிக்குத் தலை வணங்கு படத்தில் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் கல்லூரி மாணவர்கள். இந்த அபத்தம் போதாதென்று பி.ஏ படிக்கும் நம்பியார் தன் மார்க் ஷீட்டைத் திருத்துவார். பி.ஏயில் பாடங்கள், இங்கிலீஷ், தமிழ். கணக்கு, அரசியல் என்று பாடங்கள். ஆங்கிலேயர் காலத்திலேயே கணக்கு பி.எஸ்சிக்குக் கீழ் வந்து விட்டது. கணக்கும் அரசியலும் சேர்ந்து ஒரு பாடத்திட்டமே இருந்ததில்லை. இதையெல்லாம் இயக்குநர் யோசிக்கவே மாட்டாரா? விமர்சனத்திற்கு தலை வணங்கி எப்போதுதான் தன்னை மாற்றி கொள்ளுவார்களோ?
குங்குமச் சிமிழ் என்றொரு படம். கதாநாயகன் வேலை தேடிக் கொண்டிருக்கும் பட்டதாரி. மவுண்ட் ரோட்டில் திடீரென்று ஒருவர் விபத்தில் நடு வீதியில் இறந்து கிடப்பார். நாயகன் மைக் மோகன் ஓடியே போய் கூடி நிற்கும் கூட்டத்திடம் விசாரிப்பார். கூட்டத்தில் ஒருவர்,''இவரு நேத்து வரைக்கும் மாசம் ஆயிரத்திஐநூறு ரூபாய் சம்பளத்தில எல்.ஐ.சி யில் வேலை பார்த்தாரு, இன்னைக்கி நிலைமையப் பார்த்தீங்களா, என்று
சொல்லி முடிக்கும் முன்னேயே மைக் மோகன் தலை தெறிக்க மவுண்ட் ரோட்டின் அடையாளமான எல்.ஐ.சி பில்டிங்கின் பதினாலு மாடிப படிகளிலும் தாவி ஏறி, அந்த அலுவலக மேனேஜர் கேபினுக்குள் போய், '' சார் இங்கே வேலை பார்த்த ஆளு இப்போ நடு ரோட்டில செத்துப் போயிட்டார். அவர் வேலையை எனக்கு கொடுங்க சார்,'' என்பார். அந்த மேதாவியோ ''அந்த வேலையை இன்னொருத்தருக்குக் கொடுத்து அஞ்சு நிமிஷம் ஆச்சு, ஐயாம் சாரி,'' என்பார். யோவ் எல்.ஐ.சியில் வேலைன்னா அதற்கு தேர்வெல்லாம் எழுதி இண்டர்வியூவெல்லாம் பாஸாக வேண்டாமா... டைரக்டருக்கு யாராவது சொன்னால் தேவலை.
கதாநாயகன் முருகன் மீது கொலைப்பழி விழுகிறது. தப்பி ஓடுகிறான். தற்செயல்களினால் அவன் தன் காதலி வீட்டிற்கே செல்ல நேர்கிறது. அவளது அப்பா ஒரு பஞ்சாபி. அவனையும் அவனது நிலையையும் புரிந்து கொண்டு அவர் ஒரு திட்டமிடுகிறார். லண்டனில் இறந்து போன அவரது மருமகன் 'கிருபால் சிங்' என்பவராக முருகனை மாற்றி ஐ. பி.எஸ் படித்து பெரிய போலீஸ் அதிகாரி ஆகி விடுகிறார். அதுவும் கதாநாயகி மடி மீது படுத்துக் கொண்டே படிக்கிறார்.( நாங்கள் அந்தக் காலத்தில், முதல் நாள் படம் பார்க்கும் போது, கேலியாகப் பேசிக் கொள்வோம், இப்படி காதலி மடியில் படுத்துக் கொண்டே படித்தால் ஐ.ஏ.எஸ்ஸே பாசா யிடலாம்டா என்று) நீட் ஆள் மாறாட்டம் 'சங்கே முழங்கு'(1972) படக் காலத்திலேயே வந்து விட்டது போல.
தலைவன் படத்தில் எம்.ஜி.ஆரும் ஜோதி லட்சுமியும் ஒரு குகையில் மாட்டிக் கொள்ளுவார்கள். குகையின் வாசலை வில்லனின் ஆட்கள் அடைத்து விடுவார்கள். ஆனால் குகையின் மேல் (கூரைப்) பக்கம் திறந்திருக்கும். எம்.ஜி.ஆருக்கு பதஞ்சலியின் யோக வித்தை தெரியும். ஜோதிலட்சுமியை மடியில் வைத்துக் கொண்டு மூச்சையடக்கி யோக நிஷ்டையில் அமர்ந்து அப்படியே மேலே பஞ்சு போலக் கிளம்பி வந்து விடுவார். தியேட்டரே சிரிக்கும் வேடிக்கையை நினைத்து. சித்த மருத்துவம், பதஞ்சலி யோகம் பற்றி தகவல்கள் தந்த நீதிபதி பலராமையா, சுவாமி விவேகானந்தர் ஆகியோருக்கு டைட்டிலில் நன்றி வேறு கூறிக் கொள்வார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இது ஜேம்ஸ் பாண்ட் ரகப் படம்.
ராமன் எத்தனை ராமனடி படத்தில் சாப்பாட்டு ராமனாக சரியான மக்காக கிராமத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் நாயகனான சிவாஜி, அடி உதை பட்டு பட்டணம் போய் நடிகர் திலகம் விஜயகுமார் ஆக மாறி கிராமத்திற்கு மாலை மரியாதை வரவேற்புடன் திரும்பி வருவார். பட்டணம் எல்லா மாயங்களையும் செய்யும். ஆனால் சினிமா உலகை ஜெயித்து விடும் கனவுகளுடன் வந்த பல இளைஞர்கள் பல காலமாகியும் இன்றைக்கும் எந்த வாய்ப்புமின்றி கஷ்டப்படுகிறார்கள்.
ராஜராஜ சோழன் படம் பிரமாண்டமான சினிமாஸ்கோப் படம். அதில் சோழச்சக்கரவர்த்தியை அறிமுகப்படுத்தும் காட்சியில், பெரிய கோயில் பெரிய நந்தியை கர்மசிரத்தையோடு செதுக்கிக் கொண்டிருக்கும் தலைமைச் சிற்பிக்கு அவர் அறியாமல் எச்சில் பணிக்கம் சுமக்கிற மாதிரி காட்சி அமைத்திருப்பார், இயக்குநர். உண்மையிலேயே பிரமாண்டமான செட், உணர்ச்சிகரமான காட்சிதான். ஆனால் தஞ்சைப் பெரிய கோயில் பெரிய நந்தியும் மண்டபமும் பின்னாளில் நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் வடிக்கப்பட்டதாகச் செய்திகள் இருக்கின்றன. இது அபத்தமில்லை ஆர்வக்கோளாறு. மாட்டு வண்டியிலேயே குண்டக்கல்லில்ருந்து சென்னைக்கு வந்து விடுவது. குதிரை வண்டியிலேயே ரயிலை ஓவர் டேக் செய்வது எல்லாவற்றையும் ரசிகர்கள் ஆரவாரமாக கை தட்டி ரசிப்பார்கள். யாராவது சுட்டிக்காட்டினால் 'ஏ அதெல்லாம் கதைதானே கதைக்கு கண்ணு மூக்கு உண்டுமா,'' என்பார்கள். கண்ணு மூக்கு மட்டுமல்ல சில படங்களில் சில இயக்குநர்களுக்கு மூளையும் இருக்காது.
நவம்பர், 2019.