இலங்கையில் பூநகரி முகாமை 1993-ல் புலிகள் தாக்கியபோது, நாகதேவன்துறை என்னும் சிறிலங்காவின் கடற்படை முகாமை அழித்தால்தான் முடியும் என்னும் நிலை இருந்தது. இராணுவ பூகற்ப கள நிலை அப்படி!
பூநகரி முகாமுக்கும் ஆனைஇறவு முகாமுக்கும் இடையில் உள்ள கிளாலி என்னும் பரவைகடல் பகுதியில் நாகதேவன்துறை இருந்தது. கிளாலி பரவைக் கடல் மிக ஆழம் கூடிய நீர்ப் பகுதி அல்ல. சில இடங்களில் முழங்கால் அளவுக்கும், சில இடங்களில் ஐந்தாறு பேரை அமிழ்த்தும் அளவுக்கும் ஆழம் இருக்கும். ஆனைஇறவு முகாமின் தரை வழியை தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் சிங்கள் இராணுவம் முற்றாக மூடியபோது வன்னியையும் யாழ் மாவட்டத்தையும் பிரிக்கும் கண்டி-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள அந்த ஒரேயொரு நிலப் பகுதி தமிழ் மக்களுக்கு போக்கு வரத்துக்கு மிகவும் சிக்கலான ஒன்றாகிவிட்டது.. மக்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து மறு மாவட்டத்துக்கு தரை மூலம் போக முடியாத நிலை வந்தது. எனவே கிளாலி வழி மூலம் சிறிய படகுகளில் சென்று வன்னியை அடைந்தனர். மக்களுக்காக அந்த வழியைத் திறந்து புலிகளே படகுச் சேவையை நடத்தினர்.
ஆனைஇறவு முகாமுக்கு உள்ளோ, பூநகரி முகாமுக்கு உள்ளோ, வாவியின் ஊடாக எவரும் நுழைந்து விடக் கூடாது என்பதற்காக சிங்கள கடற்படையால் பாதுகாப்புக்காக அமைக்கப் பட்ட முகாம் அது! சுமார் 300 கடற்படையினர் வரை அங்கே முகாமிட்டு இருந்தனர்..
கடலின்மேல் ஒரு நீர்க் காகம் இருந்தால் கூட நாகதேவன் துறையில் உள்ள சிங்களக் கடற் படை சுட்டுத் தள்ளும். இதைவிட ஆனை இறவு படைத் தளத்துக்கு ஏதும் ஆபத்து என்றால்,கிளாலி கடல் மூலம், வாட்டர் ஜெட் (நீருந்து விசைக் கப்பல்) என்னும் கலங்கள் ஐந்து நிமிடத்தில் பரவைக் கடலில் நகர்ந்து சென்று தாக்கும். அப்படி ஒரு நிலையில் உள்ள அந்த கடற்படைத் தளத்தை எப்படி கைப்பற்றமுடியும்..?
தலைவர் அந்த பொறுப்பை கடற்புலிகளின் தளபதி சூசையிடம் ஒப்படைத்தார். அங்கே நிறைய கடல் படகுகளும், மிக நவீன வாட்டர்ஜெட் என்று அழைக்கப்படும் அதிவேகத் தாக்குதல் படகுகளும் உண்டு. அவற்றை கைப்பற்றினால்தான் கடல்புலிகளுக்கும் நன்மை உண்டு.. பூநகரி முகாமையும் எளிதில் கைப்பற்ற முடியும். ஆம். திட்டம் தயார் ஆனது.
கிளாலியின் மறுகரையில் இருந்து கடல் புலிகள் நகர்ந்து படகுகளில் போகும்போதே கடல்படை சுட்டு அவர்களை அழித்து விடுவார்கள்.. என்ன செய்வது..? திட்டம் மிக ரகசியமாகவே போராளிகளுக்குக்கூட தெரியாமல் வைக்கப்பட்டது..ஆனால், ஏற்கனவே கடலின் அடியில் பயிற்சி பெற்று சுழியோடும் கடல் புலிகளின் படையோடு,புதியவர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டு, சுமார் நூறில் இருந்து இருநூறு விசேட கடல் புலிகளின் ‘கொமாண்டோ’ படைப்பிரிவு ஒன்று தயாராகிக் கொண்டு இருந்தது.
அப்போது நான் கடல்புலிகளின் அரசியல் பொறுப்பாளராக இருந்தேன். எனக்கும் தாக்குதல் திட்டத்தின் முழு விபரம் தெரிவிக்கப் பட்டது. ஆனால் இரண்டுநாளைக்கு முன்தான்! அங்கே கைப்பற்றப்படும் நீருந்து விசைப் படகுகளைக் கொண்டுவந்து கரையில் நிற்கும் டிராக்டர்களில் ஏற்றிக் கொண்டுபோக நிறைய மனிதவலு வேண்டும்..அந்தப் பணி என்னிடம் ஒப்படைக்கப் பட்டது!
பூநகரியினுள் புகுந்து தாக்கும் தரைப்படைப் பிரிவுக்கு பொறுப்பான சில தளபதிகளை தவிர, கடல்புலிகளின் திட்டம் வேறு யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை..
இருநூறு கடல்புலிகள் (ஆண் பெண் உட்பட) நீருக்கு அடியில் பிளாஸ்டிக் பிராணவாயு சிலிண்டர்களை முதுகில் கட்டிகொண்டு, சுவாசித்தவாறு..ஒரு சிறு கடல் அசைவும் வெளியில் தெரியாதவாறு நீருக்கு அடியில் சுழியோடிக் கொண்டிருந்தனர்...அவர்களின் முதுகுகளில் மிக நவீன தானியங்கிகள் இருந்தன..எல்லாமே குண்டுகளால் நிரப்பப்பட்டிருந்தன..‘ரொக்கெட் லோஞ்சர் களையும்’ சிலர் சுமந்தவாறு போய் கொண்டிருந்தனர்..
பிராணவாயு சிலிண்டர்களின் முடிவுக்காலம் இரண்டு மணிநேரம்தான்.மூன்றுமணி..நான்கு மணிநேரம் பாவிக்ககூடிய எடை கூடிய சிலிண்டர்களும் உண்டு. ஆனால் ஆயுதங்களையும் அவர்கள் சுமக்க வேண்டும் என்பதால் இந்த சிலிண்டர்களே பொருத்தமானது என்று தெரிவு செய்யப்பட்டிருந்தது. எல்லாமே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு கடற்புலிகளால் கொண்டுவரப்பட்டவைதான்.
இரண்டு மணிநேரத்துக்குள் அவர்கள் ஐந்து அல்லது ஆறு கடல் மைல் தூரத்தை ஒரு அசைவும் இன்றி நீருக்கு அடியில் சுழியோடிக் கடக்கவேண்டும்..ஆனால்,நமது கடற்புலிகள் தளர்வின்றிக் கடந்து கொண்டிருந்தார்கள்.. நேரம் இரவு பன்னிரண்டு மணியை தாண்டிக் கொண்டிருந்தது.. எனது உறவுக்காரப் பெண்..லெப். மகேஸ்வரியும் அதில் ஒருவர். தாக்குதலுக்கு தலைமை ஏற்று கடல் புலிப் போராளி ஒருவன் முன்னே சுழியோடிக் கொண்டிருந்தான். அவனது உயரமோ ஆறடிக்குமேல் இருக்கும். கட்டான உடல். ’ராம்போவை’படங்களில் பார்த்தவர்கள் அதையே கற்பனை செய்து கொள்ளலாம்..அது சினிமா..இதுவோ நிஜம்.
தளபதி சூசையுடன் வேறு ஒரு தாக்குதல் குழு கிளாலியின் மறுகரையில்,ஒரு மறைவிடத்திலே அதிவேகப் படகுகளோடு மறைந்து நிற்கிறார்கள்.எனக்கு ஒதுக்கப் பட்ட வேலையை செய்ய நானும் சூசையோடு தயாராக நிற்கிறேன். அந்த படை அணி நாகதேவன்துறையை அடைய முன்பே, பிராண வாயு சிலிண்டர்களும் முடியும் தறுவாயில் இருந்தன. ஆனால், அவர்கள் வெற்றிகரமாக குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே இலக்கை அடைந்து விட்டார்கள்.
தளபதி முன்னே சென்று, தமது இலக்கு சரிதானா?என்று ஒருமுறை சரிபார்த்துக் கொண்டான். எல்லாம் சரிதான்.. நீரின் அடியில் இருந்து வெளிவந்து புலிப்பாய்ச்சல் முகாம் மீது தொடங்கியது. சில நிமிடங்களிலேயே தாக்குதல் முடிவடைந்தது.. ஆம்; அப்படி ஒரு பயங்கர, யாருமே எதிர்பாராத தாக்குதல் அது. காவலுக்கு நின்ற சில கடற்படையினர் கிளாலிக்கு மறுகரையில் இருந்து யாரும் புலிகள் வருகின்றார்களா? என்று வாயை... வழியை பார்த்துக் கொண்டிருக்கும்போதே இங்கே கடற்படையின் இதயத்துக்குள் புகுந்து கடற்புலிகள் தாக்க தொடங்கியது என்பது, ஸ்ரீலங்கா இராணுவம்... தனது சரித்திரத்தில் கண்டிராத பேரதிர்ச்சி.
ஐம்பது அறுபது என்று சிங்களக் கடற்படை சாவை தழுவ,ஏனையோர் உயிர்களைக் கையில் பிடித்தவாறு,பூநகரி முகாமை நோக்கி ஓடத் தொடங்கினர். அதே நேரம், நாகதேவன் துறையில் தாக்குதல் ஆரம்பம் ஆனபோது, பூநகரி முகாமினுள்ளும் புலிகளின் தரைப்படை புகுந்து தாக்குதல் நடத்தத் தொடங்கியது.
தளபதிகள் பானு, பால்ராஜ், பொட்டம்மான், தளபதி தீபன், தளபதி சொர்ணம், மற்றும் தமிழ் ஈழத்தின் சகல பகுதிகளிலும் இருந்து வந்த சிறப்பு தளபதிகளின் தலைமையில் படைகள் வீறுகொண்டு எழுந்து சென்று பூநகரி முகாமினுள் புகுந்தன..இந்த சண்டையில் கடற்படையிடம் இருந்த பத்து வாட்டர் ஜெட்கள் கடல்புலிகளின் கைகளுக்கு வந்தன..அதில் இரண்டு சண்டையில் சேதமாக, ஏனையவை அதிகாலைக்குள் எமது முகாமுக்கு கொண்டு செல்லப் பட்டன. கடலில் இருந்து அந்த படகுகளை நூற்றுக்கணக்கான பொதுமக்களைத் திரட்டிக் கொண்டுவந்து,கரையில் நின்ற டிராக்டர்களில் ஏற்றினோம்.
இன்றுவரை பெரும்பாலானோருக்கு இந்த தாக்குதல் எப்படி நடந்தது என்று தெரியாது. நாளை புலிகளின் அதி உன்னத தாக்குதல் ஒன்றின் சிறப்பு மக்களுக்கும் உலகத்துக்கும் தெரிய வேண்டுமே. அதுவும் மிக முக்கியம் என்பதற்காகவே இந்தக் கட்டுரை.
(கட்டுரையாளர் ஈழவிடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர். எழுத்தாளர். வாய்க்கால் கரையோரம் என்பது இவரது புதிய நாவல். தொடர்புக்கு: yogeshwaran velu@facebook.com)
மே, 2015.