காங்கிரசைப் பொறுத்தவரை கட்சிப்பதவிகள் அனைத்துமே வாரிசுகளுக்கு என்ற எழுதப்படாத சட்டமே தமிழ்நாட்டில் இருப்பதாகத் தெரிகிறது.
வாழப்பாடி ராமமூர்த்தி காங்கிரஸ் தலைவராக இருந்தபோது மூப்பனாருக்கு எதிராக கோஷ்டி அரசியல் நடத்தும் நிலை உருவானது. பின்னர் காங்கிரஸில் இருந்து வெளியேறி ராஜீவ் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார். இவருக்கு இரு மகன்கள். ஒருவர் ராம சுகந்தன். கடந்த 2014 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தருமபுரியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இரண்டாவது மகன் கர்ணன் அகில இந்திய தேயிலை தோட்ட தொழிலாளர் சங்கத்தில் நிர்வாகியாக இருக்கிறார்.
அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 1996 -ல் தமிழ்மாநில காங்கிரஸ் என்ற கட்சியை மூப்பனார் தொடங்கினார். மத்தியில் ஐக்கிய முன்னணியில் அவரது கட்சியும் இடம்பெற்றது. 2001 - ல் அவர் உடல்நலக் குறைவால் இறந்தபோது தமாகாவை தலைமையேற்க வந்தவர் அவர் மகன் ஜி.கே.வாசன். ஆரம்பத்தில் தயங்கினாலும் பின்னர் அவர் தேர்ந்த அரசியல்வாதியாக தன்னைக் கட்டமைத்தார். காங்கிரசுடன் தமாகாவை இணைத்து, தன் ஆளுமையின் கீழ் தமிழகக் காங்கிரஸைக்கொண்டு வந்ததுடன் மத்தியில் அமைச்சர் பதவியும் பெற்றார். 2016 - ல் காங்கிரஸில் இருந்து பிரிந்து மீண்டும் தமாகா &வை தனிக்கட்சியாகத் தொடங்கி நடத்தி வருகிறார்.
தந்தை பெரியாரின் அண்ணன் மகனான ஈ.வி.கே சம்பத், பெரியாரை எதிர்த்துக்கொண்டு அண்ணாவுடன் இணைந்து தி.மு.க என்ற கட்சி உருவானபோது அதில் பாடுபட்டவர். திமுகவின் சார்பில் எம்.பி. ஆனவர். உட்கட்சி மோதலால் திமுகவிலிருந்து விலகி தமிழ் தேசிய காங்கிரஸ் தொடங்கி பின்னர் காங்கிரஸில் ஐக்கியம் ஆனார். அவரது மகன் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ஒரு கட்டத்தில் தமிழக காங்கிரஸின் தலைவராகும் வாய்ப்பைப் பெற்று தன் துணிச்சலான பேச்சுக்களால் கவனத்தை ஈர்த்தவர். மத்திய அமைச்சர் பதவியிலும் இருந்தவர். இவரது மகன் திருமகன் ஈ.வே.ராவுக்கு, இளங்கோவன் இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வந்தபோது காங்கிரஸின் சமூக ஊடகப்பிரிவில் பொறுப்பு அளிக்கப்பட்டது.
கே.வி. தங்கபாலு காங்கிரஸில் தலைவராக இருந்தபோது அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்தது. 2011 சட்டமன்றத் தேர்தலின்போது தங்கபாலுதான் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தார். அப்போது அவர் மனைவி ஜெயந்தியை மைலாப்பூரில் போட்டியிட வைத்தார். ஆனால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில் மாற்றுவேட்பாளராக இருந்த தங்கபாலு வேட்பாளர் ஆனார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தங்கபாலு போட்டியிட வில்லை. மாணவரணிப் பொறுப்பாளராக இருந்த மகன் கார்த்திகேயன் அடுத்த தேர்தலில் அரசியலில் களமிறங்கக்கூடும்.
முன்னாள் எம்.பி அன்பரசுவின் மகன் அருள் அன்பரசு, சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தார். 2014& நாடாளுமன்றத்தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். இவரது சகோதரி சுமதி மகளிரணியில் பொறுப்பில் இருந்தார். அருள் அன்பரசுவின் மனைவி மீனாவும் அரசியலில் இறங்கி உள்ளார்.
முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக உள்ளார். இவர் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றாலும்கூட தோல்வி அடைந்தார். இப்போது சிபிஐயின் விசாரணைப் பிடியில் இருந்தாலும் தமிழக காங்கிரசில் இருவரும் அசைக்கமுடியாத சக்திகளே.
முன்னாள் எம்.பி, சுதர்சன நாச்சியப்பன் தமிழகத்தில் கட்சிப் பதவியில் இருக்கிறாரோ இல்லையோ மத்தியில் ஏதாவது ஒரு பதவியில் இருப்பவர். இவரது மகன் ஜெயசிம்மன், இளைஞரணியில் பொறுப்பில் இருந்தார். இப்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கும் இவர் தேர்தல் சமயத்தில் களத்துக்கு வருவார்.
காங்கிரஸில் பெரியகுளம், தேனி ஆகிய தொகுதிகளின் சார்பில் எம்.பி,யாக இருந்த ஹாரூணின் மகன் ஹசன் மௌலானா இளைஞர் காங்கிரஸில் மாநிலத் தலைவராக உள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அம்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். காங்கிரஸில் பொருளாளர் பதவியில் இருக்கும் நாசே ராமச்சந்திரனின் மகன் ராஜேஷ் கட்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக உள்ளார். கடந்த தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.
ரங்கராஜன் குமாரமங்கலம், மிகப்பெரிய அரசியல் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தாத்தா பி.சுப்பராயன், சென்னை ராஜதானி முதல்வராக இருந்தவர். நேருவின் அமைச்சரவையில் பங்குவகித்தவர். அப்பா மோகன் குமாரமங்கலமும் முக்கியமான அரசியவாதி. கம்யூனிஸ்ட் கட்சியிலும் பின்னர் காங்கிரஸ் கட்சியிலும் பணியாற்றியவர். இந்திரா அமைச்சரவையில் இடம் வகித்தவர். ரங்கராஜன் குமாரமங்கலம் காங்கிரஸில் நரசிம்மராவ் அமைச்சரவையில் பங்குபெற்றார். பின்னர் பாஜகவில் சேர்ந்து வாஜ்பாய் அமைச்சரவையிலும் இடம் பெற்றார். இவரது மகன் மோகன் குமாரமங்கலம் காங்கிரசில் உள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சேலத்தில் போட்டியிட்டுத் தோற்றார்.
சட்டமன்றத்தில் கருணாநிதியுடன் விவாதம் நடத்திப் புகழ்பெற்றவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ பொன்னம்மாள். அவரது பேத்தி ஜான்ஸிராணி தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவியாக நியமிக்கப்பட்டார். இவருக்குப் பல நெருக்கடிகள் கொடுக்கப்பட்டாலும் அவரது சிறந்த செயல்பாட்டால் மீண்டும் அவருக்கு அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வளவு பேர் மட்டுமல்ல.. இன்னும் பல குடும்பங்கள் காங்கிரஸ் கட்சி அரசியலில் ஈடுபட்டுள்ளன. இதில் தமிழக காங்கிரஸ் தலைவரான திருநாவுக்கரசர் மட்டும் விதிவிலக்காக இருக்கமுடியுமா? தன் மகன் ராமச்சந்திரனை கடந்த சட்டமன்றத் தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் களமிறக்கினார். ஆனால் அவரால் வெல்ல முடியவில்லை!
செப்டெம்பர், 2018.