சிறப்புப்பக்கங்கள்

கணக்கு கேட்டார்; கட்சி தொடங்கினார்!

அ.தி.மு.க

ராவ்

பெரும்பாலும் தலைவர்களிடையே உருவாகும் கருத்து மோதல்களால் கட்சிகள் உடைகின்றன. அதிமுகவும் அப்படித்தான் பிறந்தது என்பதில் என்ன சந்தேகம்? கலைஞருக்கும் எம்.ஜி. ஆருக்கும் இருந்த நெருக்கம் குறைய தொடங்கியதற்கு வெளிப்படையான காரணங்களும் உண்டு; திரைமறைவு நிகழ்ச்சிகளும் உண்டு.

வெளிப்படையான காரணங்கள் கலைஞரின் மூத்த மகன் மு.க முத்து சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் அப்படியே எம்ஜிஆர் பாணியை பின்பற்றினார்! ‘பிள்ளையோ பிள்ளை' பட விழாவில் அவருக்கு பாராட்டு! அதற்கு எம்.ஜி.ஆரும் அழைக்கப்பட, யாரையும் காப்பி அடிக்காமல் நடிக்கச் சொன்னார்! எம்.ஜி.ஆர் கேட்டுக் கொண்ட ஒரு சில அதிகாரிகளின் பதவி நீடிப்பு போன்றவை கண்டு கொள்ளாமல் விடப்பட்டன. அதனால் எரிச்சலில் இருந்தார் அவர்.

தி.மு.க தரப்பில் டெல்லி மேலிடத்தால் கட்சியை உடைக்க வற்புறுத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. இருக்கலாம் என்பது அரசியல் வட்டார நம்பிக்கை. இந்திரா காந்தி எந்த பிற மாநிலத்திலும் தன்னை விஞ்சி வலுவான தலைவர்கள் இருக்கக் கூடாது என்ற முடிவில் இருந்தார். கலைஞர் அப்படி இல்லை... தனது ஆதரவு அலையால் ஜெயித்தவர், 1971 வெற்றிக்கு தானே காரணம் என்று நினைப்பது மாபெரும் தவறு என்று இந்திரா கருதினார். இதனால் திமுகவை உடைக்க டெல்லி திட்டம் தீட்டியதாக திமுக திடமாகக் கருதியது!

முதலில் உளவுத்துறை ஆதித்தனாரை திமுகவுக்கு எதிராக வளர்க்க நினைத்ததாகவும் ஆனால் கெட்டிக்காரஅதிகாரி ஒருவர் எம்ஜிஆரை தான் இழுக்க வேண்டும் என்று ரிப்போர்ட் அனுப்பினாராம்! அந்த அதிகாரி கடைசி வரை காங்கிரஸ் கட்சி ஆதரவாளராகவே இருந்தார்! இவை திமுக தரப்பில் பேசப்பட்டவை.

ஒரு விஷயம். தமிழ்நாட்டில் தான் ஆரம்பித்து வைத்த மதுவிலக்கு கொள்கையை கலைஞர் குழி தோண்டி புதைத்த வருத்தத்திற்கு ஆளான ராஜாஜி, திமுக ஆட்சியை ஊழல் தலை காட்டுவதாக எழுதி விட்டார்! ‘ராஜாஜி சொல்கிறாரே?' என்று ஒரு பத்திரிகை அந்த ஊழல் குற்றச் சாட்டை பற்றி தலையங்கம் தீட்டி விட்டது. அப்பத்திரிகையுடன் நெருக்கமாக இருந்த எம்ஜிஆரிடம் அப்போது அவர் எழுதிவந்த தொடரை நிறுத்துமாறு நெருக்கடி தரப்பட்டது!

இந்த விவகாரத்தில் தன்னைக் கட்டாயப்படுத்தியது எம்ஜிஆரை மிகவும் பாதித்ததாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து கட்சி துவங்கிய சில மாதங்களிலேயே திமுக ஆட்சி மீது ஊழல் பட்டியல் தயாரித்து பிரம்மாண்ட கூட்டத்தை வழிநடத்தி சென்று அதை ஆளுநரிடம் ஒப்படைத்தார் எம்ஜிஆர்!

இந்திராவுக்கும் எம்ஜிஆருக்கும் நெருக்கம் ஏற்பட்டது உண்மை. திடீரென்று ஒரு நாள் கட்சியின் கணக்கு விவரங்களை தன்னிடம் காட்டுமாறு ஒரு பொதுக்கூட்டத்தில் கேட்டார் அவர். கட்சியின் பொருளாளரான தனக்கு எதுவும் தெரிவிக்கவில்லை என்றார். இந்நிலையில் எம்ஜிஆரை வெளியே அனுப்புவது சரி என்று துணிந்தார் கலைஞர். என்றைக்கு இருந்தாலும் தனக்கு அவர் சவாலாக இருப்பார் என்பது அவருக்கு தெரியாதா? முதலில் திமுக அமைச்சரவையில்தான் எம்ஜிஆரை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது. ராஜாராம், சத்தியவாணி முத்து, ப.உ. சண்முகம் எதிர்த்தனர்.நெடுஞ்செழியன் வழியாக எம் ஜி ஆர் நீக்கப்பட்டது அறிவிக்கப்பட்டது! ஆனால் அன்று காலையிலேயே மதுரை முத்து நிருபர்களிடம்' எம்ஜிஆரை தூக்கியாச்சு' என்று கூறிவிட்டார்.

அச்சமயம் சத்யா ஸ்டூடியோவில் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் எம்ஜிஆர்! அப்போது செய்தி டெலிபோனில் அவருக்கு வந்தது.

சற்றும் கலங்கவில்லை, எதிர்பார்த்ததுதான்! எல்லோருக்கும் காத்திருந்த நிருபர்கள் உடபட - பால் பாயாசம் வழங்கப்பட்டது!

எம்ஜிஆரை நீக்கியதற்கு, திமுக தலைமை சற்று எதிர்பாராத பலத்த எதிர்ப்பு தொண்டர்களிடையே கிளம்பியது. ஒவ்வொரு ஊரிலும் கட்சித் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு தங்கள் எம்எல்ஏக்கள் வீடுகளை முற்றுகை இட்டனர்.  பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று நிர்பந்தப்படுத்தினர். கட்சி எம்எல்ஏக்கள் சமாளிக்க திணறி சென்னைக்கு ஓடி வந்தார்கள்.

 சத்யா ஸ்டுடியோவில் லாரி லாரியாக தொண்டர்கள் திரண்டனர். அவர்களே திமுக கொடியில் அண்ணா படத்தையும் சேர்த்து புதியதோர் கட்சிக் கொடியை உருவாக்கினார்கள். அண்ணாவின் பெயரை கட்சிக்கு சூட்டியது அவர்களே. இப்படி ஒரு பரபரப்பான சூழ்நிலையில் அடுத்து எப்படி கொண்டு போவது என்ற சிந்தனையில் இருந்தார் எம்ஜிஆர்.! அவர் புதுக்கட்சியை ஆரம்பிக்க ஆர்.எம். வீரப்பனேகூட ஒப்புக்கொள்ளவில்லை! ராம அரங்கண்ணல் இந்த கட்டத்தில் ஒரு நாள் காலை திநகர் ஆற்காடு சாலை வீட்டுக்குச் சென்ற போது எம்ஜிஆர் கவலையோடு படுத்துக் கொண்டிருந்ததாக தனது வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் குறிப்பிடுகிறார். அந்த சமயத்தில் டெல்லியில் இருந்து டெலிபோன் வந்தது; அதில் பேசியவுடன் எம்ஜிஆர் மகிழ்ச்சி அடைந்தார் என்ற அவர் எழுதியிருந்தார். 1972 அக்டோபர் 14ஆம் தேதி அதிமுக பிறந்தது! இந்திரா காந்தியின் உத்தரவுப்படி எம்ஜிஆருக்கு கட்சி வழிமுறைகளை அமைத்துக் கொடுக்க பாலதண்டாயுதம், மோகன் குமாரமங்கலம் ஆகியோர் துணைக்கு வந்ததாக சொல்லப்பட்டது. கம்யூனிஸ்ட் கல்யாண சுந்தரமும் கை கொடுத்தார்! நாஞ்சில் மனோகரன் முதலில் எம்ஜிஆர் உடன் இணைந்தார். அப்போது அவர் எம்பி! தென் சென்னை மாங்கொல்லையில் முதல் கூட்டம் பெரிய அளவில் நடந்தது! எம்ஜிஆர் சுற்றுப்பயணம் சென்றார்! வென்றார் சென்ற இடமெல்லாம் சிறப்பு!

திமுகவுக்கு தலைவலியாக திண்டுக்கல் இடைத்தேர்தல் வந்தது. ஊர் அதுவரை அறியாத வழக்கறிஞர் மாயத்தேவரை எம்ஜிஆர் நிறுத்தினார. இந்த தேர்தலுக்கு தான் இரட்டை இலை தேர்தல் சின்னம்! அதிமுக மாபெரும் வெற்றி. அடுத்த இடம் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ், மூன்றாவது இடத்தில் திமுக! அன்று முதல் வெற்றிப் பாதையில் நடைபோட்டார் எம்.ஜி. ஆர்.! எதிர்ப்பாளர்கள் காணாமல் போனார்கள்!