சிறப்புப்பக்கங்கள்

கடத்தல் கவ்வும்

இரா. கௌதமன்

கடத்தலை மையப்படுத்தி, கடத்தலுக்கு ஐந்து விதிகள், போலியான கடத்தல் நாடகம் என்று சமீபகால திரைப்படங்களில் கடத்தலை கறுப்பு நகைச்சுவையாக காட்சிப்படுத்தியது சூது கவ்வும். இப்பட இயக்குநர் நலன் குமாரசாமியை அந்திமழை கடத்தல் சிறப்பிதழுக்காக தொடர்பு கொண்டோம்.

  “சூது கவ்வும் படத்தின் முதல் புள்ளி அமைச்சரின் மகன் கடத்தப்படுவதும் பின்னர் அவனே அமைச்சர் ஆவதும்தான்.அதற்கான காட்சியமைப்புக்களுக்காக வளர்க்கப்பட்டதுதான் கடத்தல் குழு. கடத்தல் குழுவை ரொம்ப சீரியசாகவோ, கொடூரமானவர்களாகவோ அமைக்காமல் மனிதாபிமானமுள்ள சாதாரண  கடத்தல்காரர்களாக காட்ட வேண்டும் என்று முதலிலேயே முடிவு செய்து விட்டோம்.குறைவான பணம் கேட்பான். கிடைத்தால் சரி, கிடைக்கா விட்டால் கூட அவர்களை ஒன்றும் செய்ய மாட்டான், விட்டுவிடுவான் என்பதுதான் கடத்தல்காரனின் குணாதிசயம்.இந்த ஒரு குணாதிசயத்தை வைத்துக் கொண்டு அவன் வேறு என்ன குணங்களை-யெல்லாம் கொண்டிருப்பான் என்று யோசித்து அமைத்தது கடத்தலுக்கான ஐந்து விதிகள். மற்றபடி படமே பேண்டசி படம்தான். கடத்தல் செய்பவர்களை திறமையான கடத்தல்காரர்களாகவெல்லாம் காட்டவில்லை.“ என்கிறார் நலன்.

“படத்தில் காட்டியிருப்பது மாதிரியெல்லாம் கடத்தல் செய்ய முடியாது. வழியில் செல்பவர் களை காரில் போகிறபோக்கில் இழுத்து ஏற்றிச்செல்வதெல்லாம் நடைமுறையில் சாத்தியமே இல்லாதது. வண்டியின் கண்ணாடிகளில் கறுப்பு ஸ்டிக்கர் கூட ஒட்டியிருக்காது. ஏனென்றால் கதை பக்கா வான கடத்தல் எப்படி செய்வது என்பதைப் பற்றியதல்ல. அதுவுமில்லாமல் என்னுடைய நாயகர்கள் அவ்வப்போது சொதப்புவர்களும் கூட” என்கிற நலன் இப்போது ஊரில் உட்கார்ந்து அடுத்த படத்துக்கான கதையை எழுதிக்கொண்டிருக்கிறார்.

“கடத்தலை தடுக்க அல்லது கடத்தப்படாமலிருக்க என்ன செய்யலாம்?” என்று அவரிடமும் கேட்டு வைத்தோம்.

“வழக்கமா கடத்தல் என்பது நம்முடைய கையில் இல்லாத விஷயம். எதற்காக கடத்துகிறார்கள் என்று பார்த்தால் முதலில் பணம். இரண்டாவதாக முன் விரோதம். பணம் இருப்பவர்களை கடத்துகிறார்கள் என்பதற்காக மக்களை பணம் சேர்க்காமல் இருங்க என்று சொல்ல முடியாது.

 இரண்டாவது விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்கலாம். முன்விரோதம் காரணமாக முதலாளியை கடத்திச் சென்று துன்புறுத்திய அவரது ஊழியர்கள் என்றெல்லாம் தினசரிகளில் செய்திகள் வருகிறது. முடிந்த அளவுக்கு சக மனிதர்களை துன்புறுத்தாமல் நாம் இருந்தால் இந்தமாதிரி விஷயங்களுக்காக கடத்தப்படுவதை தவிர்க்கலாம்.ஆனால் சமூகத்தில் தொடர்ச்சியாக நாம் வெறுப்புக்களை உருவாக்கிக் கொண்டேதான் வருகிறோம். அரசியல், தொழில் என்று எதில் எடுத்துக்கொண்டாலும் முன்னேறியவர்களை பார்த்துப் பொறாமையோ, வெறுப்போ உள்ளவர்கள் அதிகம். அதனால் இதை தவிர்க்க முடியுமா என்பது தெரியவில்லை.

கடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது என்று நினைப்பவர்கள் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றி யோசிக்கலாம்.” என்கிறார் சூது கவ்வும் இயக்குநர்.

ஆகஸ்ட், 2014.