ஆள் கடத்தல் என்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்க தீவிரவாத இயக்கங்களால் செய்யப்படும் குற்றச்செயல்களில் ஒன்றாக இருக்கிறது. இது அல்லாமல் பணத்துக்காக செய்யப்படும் ஆள்கடத்தல்களும் இருக்கின்றன. தொழில்ரீதியாக கொடுக்கல் வாங்கல்களில் ஆள்கடத்தல் செய்யப்படுவது வழக்கமாக இருக்கிறது. இந்தியாவில் இளம் பெண்கள் கடத்தல் காதல்விவகாரங்களில் நிகழ்வதும் தனிப்பட்ட அம்சம். திரைப்படங்கள், ஊடகங்களில் கடத்தல் நிகழ்வதைப் பார்த்து பலரும் இப்படி கடத்தல் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். குழந்தைகள்கூட இன்றைக்கு வீட்டிலோ பள்ளியிலோ பிரச்னை என்றால் ஆள்கடத்தல் நாடகம்கூட ஆடிவிடுகிறார்கள்.
என்னைக் கேட்டால் பெரும்பாலான ஆள்கடத்தல் விவகாரங்கள் காவல்துறையின் கவனத்தில் வராமலேயே முடிந்துவிடுகின்றன. காவல்துறையின் கவனத்துக்கு வந்தால் கடத்தப்பட்டவரின் உயிர்தான் மிகமுக்கியமானது என்பதை மனதில் கொண்டு செயல் படுவோம். கடத்தப்பட்டது பெண்ணாக இருப்பின் மிகக்கவனத்துடன் செயல்படுவோம். பல நேரங்களில் பெண்ணின் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு வழக்குப் பதியாமல்கூட அவர்களை மீட்டிருக்கிறோம்.
மும்பை போன்ற நகரங்களை எடுத்துக் கொண்டால் தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல் போன்றவர்கள் சினிமா பைனான்ஸ், தொழில் ஆதாயம்,கொடுக்கல் வாங்கல் பிரச்னைகளுக்காக செய்யும் கடத்தல்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் பல வெளியே தெரியாமல் தீர்த்துவைக்கவும் படுகின்றன.
கடத்தல்காரர்களைக் கண்டுபிடிக்க முன்பெல்லாம் பெரிய தொழில்நுட்ப வசதிகள் இல்லை. கடத்தியவர்கள் சீட்டு எழுதி அனுப்புவார்கள். கடிதம் எழுதுவார்கள். இப்போது போல செல்போன் சிக்னல் வைத்தெல்லாம் கண்டு பிடிக்க இயலாது. மிகவும் பொறுமையாக கண்ணி வைத்து, கடத்தல்காரர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் பேசி, அவர்கள் போக்கிலேயே போய்த்தான் பிடிக்கவேண்டும். மீட்ட பிறகு கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும்.
வீரப்பன் போன்றவர்கள் தொடர்ந்து ஆள்கடத்தலில் ஈடுபட்டார்கள் என்றால் இதற்கு முக்கிய காரணம் அரசு நிர்வாகம் அவனது கோரிக்கைகளை நிறைவேற்றி ஆட்களை மீட்டதுதான். ஒரு முறை அப்படிச் செய்தால் மறுமுறை அப்படிச் செய்ய அவனுக்கு உத்வேகம் பிறந்தது. ராஜ்குமாரை அவன் கடத்தியது அப்படித்தான்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை அடையாரில் உள்ள ஒரு பள்ளியிலிருந்து ஸ்ரீராம் என்ற மாணவன் ஒரு குடும்பப் பிரச்னையால் கடத்தப்பட்டான். அவனை கடத்தல்காரர்கள் கொன்றே விட்டார்கள். அதன் பின்னர்தான் சென்னையில் உள்ள பள்ளிகளில் அடையாள அட்டை போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள், பள்ளிதான் மாணவனுக்குப் பொறுப்பாக இருக்கவேண்டும்; யார் வந்தாலும் அழைத்துச்செல்ல அனுமதிக்கக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
1983-ல் என்று நினைக்கிறேன். இலங்கையில் ஐ.நா.அதிகாரிகள் இருவரை யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழ் இயக்கத்தினர் கடத்திவிட்டார்கள். அது பெரிய செய்தியாக ஆகிவிட்டது. யார் கடத்தினார்கள் என்று ஒருவிவரமும் தெரியவில்லை. அப்போது தமிழக காவல்துறைதான் எந்த இயக்கம் என்று கண்டுபிடித்து குறுகிய காலகட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீட்டது.
ரொம்பநாள் கடத்தல்காரர்களின் பிடியில் கடத்தப்பட்டவர்கள் இருந்துவிட்டால் அவர்கள் கடத்தல்காரர்களுடன் இணக்கமாகிவிடுவார்கள். அதை ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் என அழைப்பது எல்லோருக்கும் தெரியும். வீரப்பனால் கடத்தப்பட்ட ராஜ்குமார் ஆகட்டும்; மற்றவர்கள் ஆகட்டும் அவனிடமிருந்து மீண்டபின்னர் அவனைப்பற்றி நல்லவிதமாகவே பேசினார்கள். இதைத்தான் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் என்கிறோம். அவன் நாகப்பாவைக் கடத்தி பின்னர் அவரைக் கொன்றுவிட்டான். நாகப்பாவை மீட்க எவ்வளவோ முயன்றும் தோல்வியே கிடைத்தது. அதன் பின்னர் அவனுடைய சரிவு ஆரம்பமாகியது.
சென்னையில் ஒரு பணக்கார குடும்பத்தின் பெண் கடத்தப்பட்டார். மீட்பு நடவடிக்கையில் இறங்கினோம். அப்போதுதான் அதன் பின்னர் ஒரு காதல்விவகாரமும் இருப்பது தெரிந்தது. பெற்றோர் பெண்ணைக் கவனிக்காமல் பணம் பண்ணுவதில் மட்டுமே குறியாக இருந்ததுதான் பிரச்னைக்குக் காரணம். அப்பெண்ணை உயிரோடு மீட்டோம்.
குழந்தைகளைப் பெற்றோர் கவனத்துடன் கண்காணிப்பது மிக அவசியம். அஜாக்கிரதையாக எப்போதும் இருக்கக்கூடாது. கோவையில் சமீபத்தில் டிரைவர் ஒருவன் இரு குழந்தைகளை வேனில் கடத்திக்கொண்டு சென்று கொலை செய்த சம்பவம் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.
நான் சென்னை காவல்துறை ஆணையராக இருந்தபோது பெங்களூர் இளம் பெண் ஒருவர் தனக்கு இசை மீது இருந்த ஆசையைப் பெற்றோர் புரிந்துகொள்ளாததால் இசைக்கலைஞர் ஒருவரைத் தேடி இங்கு வந்துவிட்டாள். பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அப்பெண் மைனர் என்பதால் அப்பெண்ணைக் காப்பகத்தில் வைத்தோம். ஆனாலும் அதற்குள் அப்பெண்ணுக்கு உரிய வயது வந்துவிட்டதால் நீதிமன்ற உத்தரவுப்படி அப்பெண்ணை விடுவித்தோம். 16-20 வயதுக்குள் இருக்கும் வயதில் ஆண், பெண் இருபாலரையுமே கண்காணித்துப் பெற்றோர்கள் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியமாகிறது.
ஆள்கடத்தல் போன்றவற்றைத் தவிர்க்க சில முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை இயல்பாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். டிரைவர், வீட்டுப்பணியாள் போன்றவர்களின் தொலைபேசி எண்களை வைத்திருப்பது, ஆட்டோவிலோ டாக்ஸியிலோ சென்றால் அதன் எண்களைக் குறித்துக் கொள்ளல் போன்றவற்றைச் செய்யவேண்டும். நான் வேண்டுமென்றே கவனக்குறைவாகத்தான் இருப்பேன் என்று நடந்துகொண்டால் பிரச்னைகளை எதிர்கொள்ளத்தான் நேரிடும்.
இந்தியாவுடன் ஒப்பிடுகையில் மற்ற நாடுகளில் கடத்தல்போன்ற குற்றங்கள் அதிகம் என்றே சொல்ல லாம். போதைப்பொருள், ஆயுதக்கடத்தல் மலிந்த நாடுகளில் குற்றத்தை விரும்பியே செய்பவர்கள் உருவாகி இருக்கிறார்கள். மேலை நாடுகளில் விசாரிப்பதே சிரமம்.
ஆள்கடத்தல் நடந்தால் உங்களிடமே பிரச்னை இருந்தாலும்கூட நீங்களாகவே அதைத் தீர்த்துவிடலாம் என்று நினைக்கவேண்டாம். காவல்துறையின் உதவியை நாடுங்கள் என்றுதான் நான் அறிவுரை சொல்வேன்.
நீங்களாகவே தீர்க்க நினைத்தால் அதில் அபாயம் அதிகம்.
இந்தியாவில் 2013-ல் நடந்த இயற்கைக்குப் புறம்பான மரணங்கள் என 7,50,000 என்று இந்திய குற்ற ஆவணம் தெரிவிக்கிறது. விபத்து, தற்கொலை ஆகியவற்றைத்தாண்டி அடையாளம் காணப்படாத உடல்களே ஏராளமாக இருக்கும். இதில் பல காவல்துறையின் கவனத்துக்கு வராத ஆள்கடத்தல்களின் விளைவாக நடந்தவையாகவும் இருக்கலாம்.
(நமது செய்தியாளரிடம் பேசியதில் இருந்து)
ஆகஸ்ட், 2014.