சங்கிலித் தொடராய் மூன்று சம்பவங்கள். இவைத் தனித்தனியானவையாகத் தோன்றலாம். ஆனால் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
முதலாவது, 1994-ல் புதுடெல்லிக்கு வந்திருந்த பிரிட்டனைச் சேர்ந்த நான்கு சுற்றுலாப்பயணிகள் காஷ்மீர் பிரிவினைவாதிகளால் கடத்தப்பட்டது. இரண்டாவது 1999-ல் காந்தஹாருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம்- 814 கடத்தப்பட்டது. மூன்றாவது அமெரிக்க பத்திரிகையாளர் டேனியல் பெர்ல் கடத்தப்பட்டு தலைவெட்டிக் கொல்லப்பட்டது.
எப்படி என்று பார்ப்பதற்கு முன்பாக 1994-ல் நடந்த கடத்தலைப் பற்றிப் பார்த்துவிடுவோம். பால் பெஞ்சமின் ரைடவுட், கிறிஸ்டோபர் மைல்ஸ் க்ரோஸ்டன், ரைஸ் பாட்ரிட்ஜ், பேலா நஸ் ஆகியோர்தான் கடத்தப்பட்ட பயணிகள். இவர்கள் நால்வருக்கும் பிரிட்டனைச் சேர்ந்த ஓமர் ஷேக் என்கிற இளைஞர் தனது பெயர் ரோஹித் சர்மா என்று சொல்லி அறிமுகம் ஆனார். இந்தியாவில் தனது உறவினர் தன் பெயருக்கு ஒரு கிராமத்தை எழுதி வைத்திருப்பதாகச் சொல்லி அழைத்தார். இந்தியாவை சுற்றிப்பார்க்கும் ஆசையில் அவர்களும் புதுடெல்லியில் வந்து இறங்கினார்கள்.
அது காஷ்மீரில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடிய காலகட்டம். ஹர்கத் அல் அன்சார் என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர் ஓமர் ஷேக். இவரது பின்புலம் சிலிர்க்கவைக்கக்கூடியது. லண்டனில் தொழில் செய்த பாகிஸ்தானிக்கு பிறந்தவர். அங்கேயே படித்தவர். அதுவும் எங்கே? 1000 பவுண்ட் டெர்ம் பீஸாக வாங்கும் பாரஸ்ட் ஸ்கூல் என்ற பள்ளியில். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த நாசர் உசைன் இந்த பள்ளியில்தான் படித்திருக்கிறார். பின்னர் லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் சேர்ந்து பாதியில் படிப்பைவிட்டு இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் ஈர்க்கப்பட்டவர். காஷ்மீர் முஸ்லிம்களுக்காக களம் இறங்கியிருப்பவர். அவர் போட்ட திட்டம்தான் இந்த வெளிநாட்டுப் பயணிகளைக் கடத்துவது. அதுவரை காஷ்மீர் தீவிரவாதிகள் வெளிநாட்டுப்பயணிகள் யாரையும் கடத்தியிருக்கவில்லை. எனவே இது உலகம் முழுக்கப் பேசப்படும் என்று முடிவு செய்தார்.
டெல்லி வந்த பால் பெஞ்சமின் ரைடவுட், கிறிஸ்டோபர் மைல்ஸ் க்ரோஸ்டன், ரைஸ் பாட்ரிட்ஜ் ஆகிய மூவரும் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள். பேலா நஸ் அமெரிக்கர். முதல் மூவரையும் கடத்திச் சென்று உத்தரபிரதேசத்தில் சாரன்பூரில் அடைத்துவைத்தனர். பேலா நஸ் டெல்லிக்கு அருகே காஸியாபாத்தில் அடைத்துவைக்கப்பட்டார்.
கடத்தல்காரர்கள் இவர்களை விடுவிக்க வேண்டுமென்றால் காஷ்மீர் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 10 தீவிரவாதிகளை விடுவிக்குமாறு கோரினர். இல்லையெனில் கடத்தப்படவர்களை தலையை வெட்டிக்கொல்வோம் என்றனர். இதற்காக டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்துக்கு ஒமர் ஷேக்கே நேரில் வந்து கடத்தல் பற்றிய செய்தியைக் கொடுத்துவிட்டுச் சென்றாராம்!
நாடே அதிர்ந்தது. கடத்தப்பட்டவர்களின் ஆயுள் கெட்டி. இந்த கடத்தல் நடந்தது அக்டோபர் 20. பத்துநாட்கள் ஓடிய நிலையில் காசியாபத்தில் ஒருகொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்த ஒரு வீட்டுக்குச் சென்றனர். பேலா நஸ் நான்கு நாட்களாக சாப்பிடாமல் இருந்து முரண்டுபிடித்துக்கொண்டிருந்தார். அவரை அடைத்துவைத்த வீடுதான் அது. பேலா நஸ் மீட்கப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்பேரில் விசாரித்து சாரன்பூர் வீட்டையும் போலீஸ் மோப்பம் பிடித்தது. அங்கிருந்த மூன்று பேரையும் மீட்டனர். இது தொடர்பான மோதலில் இரண்டுபோலீஸாரும் ஒரு தீவிரவாதியும் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த ஓமர் ஷேக் கைது செய்யப்பட்டார்.
இந்த காயத்துக்காக சிகிச்சை அளிப்பதற்காக ஓமர் ஷேக் ஒரு மருத்துவமனையில் கடும் பாதுகாப்புடன் சேர்க்கப்பட்டிருந்தபோது அவரை ஜுபைர் அகமது என்ற பிபிசி பத்திரிகையாளர் சந்தித்திருக்கிறார். அப்போது ஒமர் ஷேக் யாரென்று இந்திய காவல்துறைக்குத் தெரிந்திருக்கவில்லை. காயப்பட்டதால் விசாரணையும் ஆழமாக செய்யப்பட்டிருக்கவில்லை. பிரிட்டிஷ் ஆங்கில உச்சரிப்பில் பேசிய ஓமர், தனக்கு இருபது வயது என்கிறார். எப்படியாவது பிரிட்டனுக்குத் திரும்பிவிடவேண்டும் என்று தன் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். இந்த கடத்தலில் தான் தவறுதலாக ஈடுபட்டுவிட்டதாகவும் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதாக தனக்கு பொய்யான தகவல்கள் கொடுக்கப்பட்டது. இங்கு வந்து பார்த்தபிறகுதான் உண்மை தெரிந்தது என்றும் அவர் வருத்தப்பட்டதாக இந்த பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார். திகார் சிறையில் ஓமர் பின்னர் அடைக்கப்பட்டார்.
அப்பாடா விஷயம் இத்துடன் முடிந்துவிட்டது என்று இருந்தால் பிரச்னை இல்லையே...ஐந்து ஆண்டுகள் கழித்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 155 பயணிகளுடன் இஸ்லாமிய தீவிரவாதிகளால் காந்தஹாருக்கு கடத்தப்பட்டது. அந்த பயணிகளை விடுவிக்கவேண்டுமானால் மூன்று பேரை சிறையில் இருந்து விடுவிக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது. அதில் ஒருவர் ஓமர் ஷேக். இருவருடன் சேர்த்து அவரும் விடுவிக்கப்பட்டார். ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் உதவியுடன் அவர் தப்பிச் சென்றார்.
ஓமர் ஷேக் 2001-ல் பாகிஸ்தான் லாகூரில் திருமணம் செய்து ஒரு குழந்தையும் பிறந்ததாகத் தகவல். 2001-ல் செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்ட நான்குமாதங்களுக்குப் பின்னர் 2002-ல் ஒரு நாள் மனைவி குழந்தைகளுடன் காணாமல் போனார். அடுத்த நான்கு நாட்களில் அமெரிக்க பத்திரிகையாளர் டேனியல் பெர்ல் கடத்தப்பட்டார். மும்பையில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சார்பாக பணிபுரிந்த பெர்ல், பாகிஸ்தானில் ஒருவரை சந்தித்து கட்டுரை எழுத சென்றபோது இது நடந்தது. ஒன்பது நாட்கள் கழித்து அவரது தலைவெட்டப்பட்ட உடல் கிடைத்தது. அவரது தலை கரகரவென அறுக்கப்படும் காட்சி வெளியாகி இஸ்லாமிய தீவிரவாதத்தின் கொடூரமுகத்தைக் காண்பித்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஓமர் ஷேக் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. ஆனால் 12 ஆண்டுகளாக அவரது மரணதண்டனை மீதான மேல்முறையீடு விசாரிக்கப்படவில்லை.
ஓமர் வெறும் கடத்தல் கொலையாளி மட்டுமல்ல; அதற்கும் மேலே. இரட்டைக் கோபுரத் தாக்குதலில் விமானத்தை ஓட்டிச்சென்று மோதியவர் பெயர் முகது அட்டா. இவருக்கு ஒரு லட்சம் டாலர் பணத்தை ஓமர் அனுப்பியதாக எஃப் பிஐ கூறியது. அவருக்கும் பிரிட்டனின் உளவுநிறுவனமான எம்.ஐ.6-க்கும் இருக்கும் உறவுபற்றி விசாரணை நடத்தவேண்டும் என்று பாக் முன்னாள் அதிபர் முஷரப் தன் நூலில் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஓமர் பாகிஸ்தானில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
ஆகஸ்ட், 2014.