சிறப்புப்பக்கங்கள்

ஒவ்வொரு வகுப்பறை வாயிலிலும் ஒரு தமிழறிஞரின் படம்!

தி.பரமேசுவரி

திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என இரு மாவட்டங்களில் 18 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்துடன், இராணிப்பேட்டையில் உள்ள மேலபுலம் அரசு மேனிலைப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக 2018இல் பொறுப்பேற்றேன். அப்போது ஆசிரியர் ஓய்வறை தவிர வேறெங்கும் மின் விசிறியோ, விளக்கோ இல்லை; போதிய வகுப்பறைகளும் கழிவறைகளும் இல்லை; தேர்ச்சி சதவிகிதமும்  சொல்லும் தரத்தில் இல்லை. இவ்வாறு பல இல்லைகளைக் கடந்திருக்கிறோம்.

இன்று பள்ளியின் தோற்றம் முழுமையாக மாறியிருக்கிறது. மாணவர் எண்ணிக்கை 600 ஆகக் கூடியிருக்கிறது. இன்று ஒவ்வொரு வகுப்பிலும் மூன்று விளக்குகளும் மின்விசிறிகளும் உள்ளன. சமூக விரோதிகள் விடுமுறைக்காலத்தில் குடிக்குமிடமாகப் பயன்படுத்திய சூழலை மாற்றி, பள்ளியின் மதில்சுவரில் கம்பிவேலி அமைத்தேன். பள்ளி மாணவ & மாணவியர்க்குக் கூடுதல் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. பள்ளியில் 5000 நூல்களுடன் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆறு ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளன. பள்ளிக்குள் காலிஇடங்கள் சீர்செய்யப்பட்டு, அங்கே காய்கறித் தோட்டமொன்று பராமரிக்கப்பட்டு, அங்கிருந்து பறிக்கப்படும் காய்கறிகள் சத்துணவுக் கூடத்துக்கு அனுப்பப்படுகிறது. பள்ளியில் 16 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பனப்பாக்கம் அரிமா சங்கத்தினர் மூலம் எவர்சில்வர் சாப்பாட்டுத் தட்டுகள் பெறப்பட்டு, இன்று மாணவர்களுக்கு அதில் உணவு வழங்கப்படுகிறது. மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதத்தை முன்னேற்ற, 7 மணிவரையிலும் இரவுப் பள்ளி நடத்தினோம். அவர்களுக்குப் பனப்பாக்கம் அரிமா சங்கத்தினரின் உதவியுடன் சுவையான உணவும் வழங்கப்பட்டது. இப்படியாக எங்கள் தேர்ச்சி விகிதத்தை 80%  உயர்த்தினோம்.  கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஆசிரியர்களின் உதவியுடன் வசதியற்ற மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட 14 பொருள்களைக் கொடுத்தோம். நன்கு படிக்கக்கூடிய ஏழை மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளைக் கவனிக்க வசதியாக 10 மாணவர்களுக்கு நண்பர்களின் உதவியுடன் அலைபேசி வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு உதவும் மனப்பாங்குள்ள ஆசிரியர்களின் உதவியுடன் கோவிட் காலத்தில், அந்தந்த ஊர்களுக்கே சென்று சிறப்பு வகுப்புகள் நடத்தினோம். இத்தகைய சிறப்பான செயல்பாடுகளுக்காக, அந்த ஆண்டின் சிறந்த பள்ளிக்கான மாவட்ட ஆட்சியர் விருதினையும் பெற்றோம்.

மாணவரின் அறிவு வளர்ச்சிக்காக துறைசார் அறிஞர்களையும் பல்வேறு ஆளுமைகளையும் பள்ளிக்கு அழைத்து அறிமுகப்படுத்துகிறோம். ஆங்கிலம் பேசப் பயிற்சியளிக்கப்படுகிறது. அண்மையில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் பல பரிசுகளைப் பெற்று, எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றனர்.

அண்மையில் நடந்த நீட் தேர்வில் எங்கள் பள்ளி மாணவர் பேரானந்தம் மாவட்ட அளவில் முதலிடமும் மாநில அளவில் 11ஆம் இடமும் பெற்று, சென்னை மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தது எங்களுக்குப் பெருமை. அதற்குப் பாடுபட்ட எங்கள் ஆசிரியர்கள் திரு. கமலக்கண்ணன், திருமதி. பவானி ஆகியோரை நன்றியுடன் குறிப்பிட விரும்புகின்றேன்.

விதவிதமான வண்ண ஓவியங்கள் எங்கள் பள்ளிச் சுவர்களை அலங்கரிக்கின்றன. ஒவ்வொரு வகுப்பறை வாயிலிலும் ஒரு தமிழறிஞரின் படம் மாட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பறைக்கும் சங்கப் புலவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகமும் பள்ளி மேலாண்மைக் குழுவும் ஆசிரியர்களும் பெற்றோரும் உறுதுணையாக நிற்கின்றனர். நண்பர்கள் உதவியும் உண்டு. அவர்களை நெஞ்சார்ந்த அன்புடன் நினைந்து சிரம் பணிகிறேன்.

தி.பரமேசுவரி, தலைமை ஆசிரியர், மேலபுலம் அரசு மேல்நிலைப்பள்ளி

நவம்பர், 2022