சிறப்புப்பக்கங்கள்

ஒவ்வொரு ரூபாயும் ஒரு குழந்தையோட சிரிப்புதான்!

ஷீலா ராஜ்குமார்

Birds are caught with seeds. men with moneyன்னு ஒரு பழமொழி உண்டு. காலத்தைக் கொல்றவங்க வாய்ப்புகளைப் புதைக்கிறாங்க. வாய்ப்புகளைக்  கொல்றவங்க பணத்தைப் புதைக்குறாங்கன்னு என்னோட தோழி ஒருத்தங்க சொல்லுவாங்க. 

சராசரி வாழ்க்கையில நாம அந்த அந்த வேளை பசிக்கு நியாயம் செஞ்சா போதும். கலைஞியோட வாழ்க்கை அவகிட்ட  பசியைத் தாண்டி வேறு எதோ ஒண்ண கேட்குது. அந்த ஒண்ணுக்காக அவ காலங் காலமாக சமூகம், சொல்லிக்கொண்டிருக்குற சட்டங்களையும் வட்டங்களையும் தாண்டி நடக்கப் பாக்குறா. இப்படியெல்லாம் கவித்துவமா நாம எதையாவது சொல்லிக்கிட்டே போனாலும் யதார்த்தம் வேற ஒண்ணாதான் இருக்குது.

ஒரு நடிகையாக என்னோட இருப்பை தக்க வெச்சுக்குறதுல  பணமும் முக்கியப் பங்கு வகிக்குது. அதுயில்லாம ஒரு துரும்பும் அசையாதுங்குறதுதான் உண்மை.

கல்லூரி நாட்கல்ள கல்லூரியோட கலைக்குழு சார்பா மேடையில ஆடி காசு  பார்த்திருந்தாலும், கல்யாணத்துக்குப் பின்னால சென்னையில நாங்க தங்கியிருந்த வீட்டோட ஒரு பகுதியில  டேன்ஸ் க்ளாஸஸ்  நடத்தி அதுக்காக நான் வாங்குன முதல் காசு,  நான் தேர்ந்தெடுத்த பாதை என்னைக் கை விடாதுங்குற நம்பிக்கையைத் தந்து என்னை முன்னுக்குத் தள்ளுன தருணம் என் நினைவில எப்பவும் இருக்கும்.

அதுக்குப் பின்னால  டூலெட்.படத்துக்கு நான் வாங்குன காசு. அழகிய தமிழ் மகள் சீரியலுக்காக நான் வாங்குன முதல் சம்பளம். இந்த சம்பளத்த வாங்குற  வரைக்கும் ஜாயின்ட்  அகௌண்டில இருந்த நான் இந்த சம்பளத்த வாங்க தனிக்கணக்கு தொடங்க வேண்டி வந்துச்சி. அதுக்குப் பின்னால  வருமான வரி. காசு சம்மந்தமான இந்த சம்பிரதாயங்கள் காசோட வரவு செலவு பத்தி என்ன யோசிக்க  வெச்சது.

வாழ்க்கையில இருக்குற பொறுப்புகளில் காசு சம்பாரிக்குறது மனுசனுக்கு முக்கியமான பொறுப்பா இருக்குது இல்லியா?! 

பணம் பண்ணும் கலையில ஒருத்தர் தேர்ச்சி அடைவதை பாராட்டக்கூடிய திறமையாதான் நான் பாக்குறேன்.

காசுக்குப் பின்னால நாம போறதா இல்ல நம்ம பின்னால காசு வற்ரதா ன்னு நம்மளோட சாய்ஸும் முயற்சியும்தான தீர்மானிக்குது.

காசு பார்க்குறது பாவம்ங்குற சீக்குலிருந்து வெளியே வந்து பார்க்கும்போது உண்மையிலேயே காசு ஒரு அழகான கவிதைதான். ஒவ்வொரு ரூபாயும் ஒரு குழந்தையோட சிரிப்புதான்.

ஆக, காசு பண்ணுவோம்

கலையா வாழுவோம்...

வாழுற காலத்த  கொண்டாடுவோம்.

பிப்ரவரி, 2023.