சிறப்புப்பக்கங்கள்

ஒலிம்பிக் பதக்கமே கனவு

அசோகன்

பிராட்வே பேருந்துநிலையத்துக்குள் வரிசையாக இருக்கும் கடைகளுக்கு நடுவே இருக்கும் பச்சை நிற வாயிலுக்குள் நுழைந்தால் ஆச்சரியம் காத்திருக்கிறது. விரிந்த விளையாட்டு மைதானம். பல்வேறு வயதில் இருக்கும் விளையாட்டுவீரர்கள் தீவிரமாக தடகளப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அது செயிண்ட் ஜோசப் ஸ்போர்ட்ஸ் அகாடமி! இருசக்கர வாகனம் ஒன்று மெல்ல ஊர்ந்து அங்கிருக்கும் அலுவலகம் செல்கிறது. அதிலிருந்து இறங்கும் மனிதரைக் கண்டதும் பவ்யமாக ’குட் ஈவ்னிங் கோச்’ என்கிறார்கள் மாணவர்கள். அவர் டாக்டர் நாகராஜன்! இன்றைக்கு தேசிய அளவிலும் சர்வதேச அளவில் தடகளப் பிரிவுகளில் அசத்திக்கொண்டிருக்கும் காயத்ரி, தீபிகா, பிரேம்குமார் போன்றவர்களை உருவாக்கிய பயிற்சியாளர்.  கடந்த 28 ஆண்டுகளில் இவர் உருவாக்கியிருக்கும் சர்வதேச அளவிலான தடகள வீரர்கள் எண்ணிக்கை மட்டும் முப்பதைத் தாண்டும். நாகராஜனுக்கு வயது 52. ஆனாலும் இளைஞராகவே இருக்கிறார்.

“தஞ்சாவூர் அருகே அருந்தவபுரம் தான் என் சொந்த கிராமம். விளையாட்டில் ஆர்வமுடைய கிராமத்து மாணவனாக நான் பல சிரமங்களை சந்தித்திருக்கிறேன். அதையும் மீறி என் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் உதவியுடன் ஒரு தடகள வீரனாக வளர்ந்தேன். மாவட்ட, மாநில அளவில் வெற்றிகளைக் குவித்தேன். விளையாட்டு ஒதுக்கீட்டில் மத்திய அரசுப் பணியும் கிடைத்தது. ஆனால் நான் பட்ட சிரமங்களை விளையாட்டில் ஆர்வமுள்ள யாரும் படக்கூடாது என்பதற்காகத்தான் ஒரு பயிற்சியாளராக மாறி பல இளம் திறமைகளைக் கண்டறிந்து வளர்த்துக்கொண்டிருக்கிறேன். நாள்முழுக்க மத்திய அரசின் கலால் வரித்துறையில் வேலை. மாலையில் சொந்த விருப்பத்தின் பேரில் தடகளப் பயிற்சியாளர்” என்று எளிமையாக தன் முன்கதைச் சுருக்கத்தைச் சொன்னார் நாகராஜன்.

2000-வது ஆண்டிலிருந்து பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமியை நடத்திவருகிறார். சில ஆண்டுகள் கழித்து செயிண்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி இந்த அகாதமியை கையிலெடுத்து குறிப்பிடத்தகுந்த ஆதரவை செய்துவருகிறது.

கிராமங்களில் இருந்து தடகளத்தில் ஆர்வமுள்ள இளம் மாணவர்களை சென்னைக்கு கொண்டுவந்து பயிற்சி அளிக்கிறார் நாகராஜன். “கிராமங்களில் தடகளத்தில் சிறப்பாக செயல்படும் மாணவர்களை சென்னைக்கு அழைத்து வருவதில் பெரும் சிரமங்கள் உள்ளன. அவர்களுடையது மிகவும் எளிய பின்னணியாக இருக்கும்.  சென்னை போன்ற நகரில் சாதாரண பள்ளியில் சேர்த்தாலும் படிப்பு என்பது அவர்களுக்கு பெரும் மலைப்பாகத்தான் இருக்கும். அவர்களின் குடும்பத்தினரை ஒப்புக்கொள்ள வைக்கவேண்டும். அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு நாம் பொறுப்பேற்றால்தான் பையன்களை அனுப்புவார்கள். உதாரணத்துக்கு இந்திய அளவில் நீளம் தாண்டுதலில் சாதனை படைத்திருக்கும் பிரேம் குமாரைச் சொல்லலாம். அவரை தஞ்சையின் அருகே கிராமத்தில்தான் கண்டறிந்தோம். அவரைத் தாண்ட வைத்துப் பார்த்து அவரிடம் திறமை இருப்பதை உணர்ந்தோம். 16 வயதில் அவரை அழைத்து வந்தோம். இப்போது சென்னையில்  படிப்பு முடித்து ஐசிஎப்பில் வேலை செய்கிறார். பெரும் எதிர்காலம் உள்ள தடகள வீரராக ஆகியிருக்கிறார்! விழுப்புரம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த அமுதா எங்களிடம் வந்து பயிற்சி பெற்று தேசிய, சர்வதேச அளவில் தடகளப்போட்டிகளில் வென்றவர். இப்போது கலக்கிக்கொண்டிருக்கும் காயத்ரி ஆறாம் வகுப்பில் என்னிடம் பயிற்சிக்கு வந்தார். இப்போது 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. சுமார் 14 சர்வதேச போட்டிகளில் இந்தியா சார்பாக கலந்துகொண்டிருக்கிறார் காயத்ரி. ஏராளமான பதக்கங்கள் பெற்றுள்ளார். தேசிய அளவில் தடைதாண்டி ஓடும் போட்டிகளில் சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். எங்கள் அகாதமியிலிருந்து ஆண்டுக்கு 30-40 பதக்கங்கள் தேசிய அளவில் பல்வேறு பிரிவுகளின் கீழ் பெற்று வருகிறோம்.” என்று சொல்லி புன்னகைக்கிறார்.

உலக அளவில் ஒப்பிடுகையில் தடகளப்பிரிவுகளில் இந்தியர்கள் அவ்வளவு சிறப்பாக செயல்படுவ தில்லை என்று சொல்லப் படுகிறதே... என்றதும் உண்மைதான் என்றவர் தொடர்ந்தார்: “இந்தியாவில் பொதுவாக மக்களிடம் விளையாட்டுக்கான மன ஆர்வம் கிடையாது. நமக்கு கமர்சியல் மனப்பான்மைதான். இதைச் செய்தால் என்ன கிடைக்கும் என்று பார்த்து அதைச் செய்வார்கள். கணினி வந்து எவ்வளவு ஆண்டுகள் ஆயின? அதில் நம் நாடு எல்லோருக்கும் சவால் விடவில்லையா? கிரிக்கெட்டில் எவ்வளவு முன்னணியில் இருக்கிறோம்? எல்லாம் கமர்சியல்தான். ரஞ்சிப் போட்டியில் விளையாடிவிட்டாலே போதும் வாழ்நாள் முழுக்க 40,000 ரூபாய் பென்ஷனே கிடைக்கும். மற்ற விளையாட்டுகளில் என்ன கிடைக்கும்?

சர்வதேச அளவில் இந்தியாவுக்காக போட்டிகளில் கலந்துகொண்டவர்களுக்கே அரசு வேலை கிடைக்க சிரமாக இருக்கிறது! ஒரு சிறந்த தடகள வீரன் உருவாக குறைந்தது 10 ஆண்டுகள் தேவை. இது ஒரு நீண்டகால திட்டம். அதற்கு யாரும் தயாராக இல்லை. அரசுகள் மாறும்போது அவர்கள் போட்ட திட்டமும் மாறிவிடுகிறது. சீனாவில் பார்த்தால் வரவிருக்கும் இரண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்து அப்பால் உள்ள ஒலிம்பிக்கில் விளையாடப் போகிற டீம் தயாராக இருக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு உறுதியான எதிர்காலம் இங்கே கிடையாது. தடகளத்தை இங்கே தொழிலாக எடுக்க முடியாது. அது பொழுதுபோக்குதான். இதில் முன்னணிக்கு வந்தால் வேலை கிடைக்கும். இல்லையென்றால் சிரமம்தான். பையன்களுக்காவது பரவாயில்லை; பெண்கள் நிலை இன்னும் மோசம். சமுதாயம் திருந்தணும். அதற்கு மக்கள் என்ன விரும்புகிறார்களோ அது செய்யப்படணும். விளையாட்டில் ஈடுபட்டால் பணம் வரும் என்பது உறுதியானால் பத்துபேர் வரும் இடத்தில் 100 பேர் வந்து நிற்பார்கள்”

“சேவை மட்டுமே குறிக்கோளாய் வைத்து செயல்பட்டு வருகிறோம். இதற்கு பல நல்ல உள்ளங்கள் உதவி செய்வது மகிழ்ச்சி” என்கிற நாகராஜன் இதில் சிரமங்களையும் எதிர்கொண்டுள்ளார். ‘’ஒரு கல்லூரி மைதானத்தில் பயிற்சி செய்துவந்தோம். திடீரென்று ஒருநாள் புதிய டீன் வந்தார். நீங்களெல்லாம் வெளியே போங்கள் என்று எங்களைத் துரத்திவிட்டார். அந்த மைதானம் பழையபடி ஆடு மேயும் இடமாகிவிட்டது. நாங்கள் இவ்வளவு தடகள வீரர்களை வைத்துக்கொண்டு பயிற்சி செய்ய இடமில்லாமல் நின்றோம். பின்னர் கடற்கரையில் பயிற்சி செய்தோம். அப்புறம்தான் இப்போது இருக்கும் இடம் கிடைத்தது.” இவரது கனவு?

“ஒலிம்பிக்கில் நம் பையன்களும் பெண்களும் தடகளப் பதக்கங்கள் பெறவேண்டும்.”  

(சந்திப்பு: அசோகன்)

மார்ச், 2015.