சிறப்புப்பக்கங்கள்

ஒருவரை ஒருவர் மெதுவாகத் திருத்தவேண்டும்!

ஆனந்த் ராகவ்

பெண்களைப் புரிந்து கொள்ள முடிகிறதா என்ற கேள்விலேயே ஆணாதிக்க மனப்பான்மை இருக்கிறது. ஏன் முடியாது? பெண்கள் என்ன வேற்று கிரக வாசிகளா ?

என் கணிப்பில்  பெண்கள் ஆண்களை விட பல மடங்கு  உயர்ந்தவர்கள்.  புத்தி சாதுர்யம், உழைப்பு, பொறுமை, சுத்தம், சுகாதாரம், ஒழுக்கம், ஒழுங்கு என்று எடைபோடும்  அளவுகோல் எதுவாயிருந்தாலும்  பெண்கள் எந்த விதத்திலும் தாழ்ந்தவர்கள் அல்ல.  ஆண்கள் காலங்காலமாய்த்  தங்களுக்குச் சமூகத்தில் கிடைத்த முக்கியத்துவத்தை வைத்துக்கொண்டு ஆக்ரமித்து வந்தார்கள். அது கொஞ்சம் கொஞ்சமாய் மாறி வருகிறது.

ஆண் பெண் உறவுச்சிக்கல்களுக்குக் காரணம் என்று நான் பெரும்பாலும் ஆண்கள் தரப்பைத்தான் சொல்வேன்.  தங்களுக்குச் சமமானவர்கள் என்று  பெண்களை அங்கீகரிக்கும் மனப்பான்மை இன்னும் ஆண்களுக்கு வரவில்லை.  காலங்காலமாய் நாம் பார்த்துவரும் தமிழ் சினிமா இதைத்தான் பிரதிபலிக்கிறது.  நாம் சூப்பர் ஸ்டார் என்று போற்றும் ரஜினிகாந்தின் பல படங்கள் பெண்களைத் தரக்குறைவாய், பிற்போக்குத்தனமாய்ப் பேசுகின்றன.  படிக்காத, ரவுடித்தனம் செய்யும் நம் கதாநாயகர்களிடம் படித்த பண்புள்ள பெண்கள் வசியமாகி காதலிப்பதாய்க் காலம்காலமாய்  நம் சினிமாக்காரர்கள் படம் எடுத்து வருகிறார்கள். பாலசந்தர் ஒரு படத்தில் பெண்களை  விவரிக்கிறார் ‘ஆசைப்படத் தெரியும் இல்லன்னா அழத்தெரியும்' என்று. கவிஞர் கண்ணதாசன்  எழுதுகிறார்  ‘ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே' என்று.  சினிமா மட்டும் இல்லை. நம் இதிகாசங்களும் இலக்கியங்களுமே பெண்களை சரிவர நடத்தவில்லை. இந்த பிற்போக்கு மனநிலையோடு பெண்களை அணுகினால்  உறவு முறைகளில் ஏன் சிக்கல்கள் வராது ?

‘பெற்றோர்கள் பெண்களை 22 வயது வரை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். பிறகே வாழ்க்கை துணையைப் பற்றி நினைக்கவேண்டும். பெண்ணாகப் பார்த்து ஆணைத் தன் துணையாகத் தேர்ந்தெடுக்கவேண்டும். சம உரிமைகளைப் பெற வேண்டிய பெண்களைத் திருமணம் என்ற பெயரில் கொடுமைப் படுத்துவது அக்கிரமம்,'  இந்தக் கருத்துகளை அந்தக் காலத்திலேயே  சொன்னது யார்?  பெரியார்.

பெண்கள் இப்போதுதான் பெரியார் சொன்னதை உணர்ந்து விழித்துக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் மகன்களுக்குப் பெண் பார்க்கும் உறவினர் நண்பர் வட்டத்தில் ‘பெண்கள் அநியாயத்துக்கு கண்டிஷன்கள் போட்டு வதைக்கிறார்கள்' என்று ஒரு பேச்சு

சதா அடிபடுகிறது..  காலங்காலமாய் பெண்களை அடிமை மனப்பான்மையில் வளர்த்த நம்மவர்களுக்கு இது தேவைதான்.

இரண்டு தரப்பினருக்கும் அடிப்படையாக சில வித்தியாசங்கள் இருக்கின்றன. இதை உணர்ந்து, சம உரிமை கொடுத்து  நடந்தால் ஆண் பெண் உறவுகளில் சிக்கல்கள்  இருக்காது.

‘மணமக்கள் இருவரும் சிநேகிதர்களாக நடந்து கொள்ள வேண்டும். அதிகாரமாய்ப் பேசக்கூடாது.  வாழ்க்கை அன்புருவாக இருக்கவேண்டும். ஒருவரை ஒருவர் மெதுவாகத் திருத்த வேண்டும்.' சொன்னது பெரியார். இதுதான் தீர்வு.

நவம்பர், 2021.