சிறப்புப்பக்கங்கள்

ஒருங்கிணைக்கப்பட்ட அறிவியல் ரீதியான திட்டமே தேவை!

புதிய அரசு என்ன செய்ய வேண்டும்?  

பேராசிரியர் ஜனகராஜ்

இதுவரைக்கும் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கைகளில் நீர்வளம் பற்றி முக்கியத்துவம் அளித்து குறிப்பிட்டதில்லை. இந்த முறை அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிடும் அளவுக்கு தண்ணீர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 நீர்வள இருப்பை எப்படி பேணப்போகிறோம்?

 சட்டங்களும் கட்டமைப்பும் இருக்கலாம். அவற்றை எப்படி கையாள்வது என்பது முக்கியம்.. நீர்வள நிர்வாகம்தான் இன்றைய தேவை.

நீர்வளம் சுருங்குகிறது, குறைகிறது, காணாமல்போகிறது என்பது தவறு. நீரியல் சுழற்சி முறையில் பூமி, வானம் இருக்கின்றன. இதில் இருக்கும் ஒரு சொட்டு நீர்கூட வீணாகாது. எங்கேயும் போகாது. இதற்குள்தான் சுற்றிக்கொண்டு இருக்கும். என்ன நடக்கிறது... அது கடலிலா, நிலத்தின் மேலேயா, பூமிக்குள்ளா, மலைப்பகுதியில் பனிக் கட்டியாகவா, வட துருவத்திலா தென் துருவத்திலா என்ன வடிவத்தில் இருக்கிறது? மாசுப்பட்டிருக்கிறதா? மாசுபடாமல் இருக்கிறதா என்பதுதானே தவிர, நீர் குறையவில்லை.

பூமியில் உள்ள நீரை 30 கோடி பேர் பயன்படுத்தினார்கள் என்றால் இப்போது 300, 400, 500 கோடி என பயன்படுத்துகிறார்கள். பல தேவைகளுக்கும் பயன்படுத்துகிறார்கள்.. தேவை அதிகமாகிவிட்டது; நீரின் அளவு அப்படியே இருக்கிறது. தரம் குறைந்துவருகிறது. கிடைக்கும் அளவு, தரம், பயன்பாடு மூன்றுக்கும் இடையிலான சீர்மை குலைந்துவிட்டது. இந்த உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும். இருக்கும் தண்ணீர் இருக்கத்தான் செய்கிறது, ஆனால் கெட்டுப்போய், வேறொரு நிலைமையில் இருக்கிறது. இதற்கேற்ப நம்மைநாமே எப்படி மாற்றியமைத்துக்கொள்வது என்று நாம் பார்க்கவேண்டும். அதைச் செய்யாமல் பழையபடிதான் இருப்போம் என்றால், முடியாது.

தொழில்வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் என்றால் மகாராஷ்டிரம், தமிழ்நாடு, குஜராத்.

அதிக வளர்ச்சியடைந்த இந்த பணக்கார மாநிலங்களில் நீர்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சியடையாத மாநிலங்கள் எனக் கூறப்படும் பீகார், ஒரிசா, உ.பி., அசாம் ஆகியவற்றில் இயற்கை வளம், நீர்வளம் அந்த அளவுக்கு கெட்டுப்போகவில்லை; நன்றாக இருக்கிறது. இந்த ஒப்பீட்டின்படி பார்த்தால், வளர்ச்சி என்பது என்ன? இதுவரைக்கும் வளர்ச்சி பற்றி நாம் பேசிக்கொண்டிருந்த கண்ணோட்டத்தின்படிதான் இனியும் பார்க்கவேண்டுமா? அல்லது மறுகண்ணோட்டம் தேவையா? இல்லை ஒரே கண்ணோட்டத்தில்தான் பார்ப்போமா? பார்த்தால்  விளைவுகளை அனுபவிக்கவேண்டியதுதான்.

இதில் அரசின் செயல்பாடு பூஜ்யம். கொள்கையெல்லாம் நம்மிடம் இருக்கிறது. வாட்டர் பாலிசி, என்விரான்மெண்டல் பாலிசி, பாரஸ்ட் பாலிசி எல்லாமும் இருக்கிறது. பாலிசியை வைத்து பல்தேய்க்கவா முடியும்? அதை நடைமுறைப்படுத்த வேண்டும். முதலில் கொள்கையை சட்டமாக ஆக்கவேண்டும்; சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; அது சரியாக நடக்கிறதா என்பதைக் கண்காணிக்கவேண்டும்.

எந்த அரசையும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை. இந்தியாவில் உள்ள எல்லா அரசுகளுமே பிரச்னை வருகையில் சமாளித்துவிட்டு, பிறகு மறந்துவிடுகிறார்கள். தமிழ்நாட்டின் சராசரி மழையளவு 9,071 மி.மீ. என்ன கணக்கு அது? எவ்வளவு தண்ணீர் எத்தனை மில்லியன் கன அடி.. எத்தனை ஆயிரம் மில்லியன் கன அடி.. கணக்கு ஏதும் இருக்கிறதா?

சராசரி மழை பெய்திருக்கிறது என சொல்லிவிட்டுப் போகிறோம்.. ஆனால் அடுத்த ஆண்டில் வறட்சி.. என்ன பொருள்..?

மழை பெய்கிறது.. 150 ஆண்டுகளாக ஒரே தன்மையில்.. அது குறையவில்லை. மழைநீரைச் சேமிப்பது பற்றி அக்கறை இல்லாமல் விட்டுவிட்டீர்கள். பெய்கிற மழையில் இவ்வளவை இன்ன செய்துவிட்டோம் என சொல்லுங்கள். 90 சதவீதத்தை கடலில் விட்டுவிட்டோம் என்றும் மக்களுக்குச் சொல்லுங்கள். ஆறு, குளங்களில் மீதம் இருக்கிறது என சொல்லுங்கள். வெள்ளம், வறட்சி வந்ததா அவ்வளவுதான் முடிந்துவிட்டது. 2015 வெள்ளமா 300 டி.எம்.சி. நீரைக் கடலில் விட்டோம். செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டோம்..750-& 800 டிஎம்சியை கடலில் விட்டோம்.. என்று சொன்னதா கணக்கு? அந்தமாதிரி கணக்கு தேவையில்லை.

பெய்யும் மழைநீர் எவ்வளவு? அதை எப்படி சேகரிக்கிறீர்கள்? அதை எப்படி பயன்படுத்துகிறீர்கள்? சேகரிக்க முடியவில்லை என்றால் இனி அதற்கு என்ன வழிமுறை வைத்திருக்கிறீர்கள்? இதைத்தான் செய்யவேண்டும்.

நீர்ப்பாசனத்துக்காக, நீர்த் தேவைக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடுகிறார்கள். அதை முறையாக செலவுசெய்வதில்லை. குடிமராமத்து என முதலமைச்சர் சொல்கிறார்கள். அங்கே குடிகள் எங்கே ஈடுபடுகிறார்கள்? அதை குடிமக்களா செய்கிறார்கள்.. அப்படிச் சொல்வது தவறு. அரசாங்கம் செய்யும் வேலைதான் அது. 1920, 30களில் இருந்தது.. பிரிட்டன் காலத்தில் 30-களிலேயே அது போய்விட்டது. மக்களின் பங்களிப்பு குறைந்துகொண்டே வந்துவிட்டது. குடிமக்கள் இணைந்து நீர்நிலைகளைப் பராமரித்தது நின்றுவிட்டது.

ஏரியைப் பராமரிப்பது என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு ஏரிக்கு 2 கோடியா... ஒரு மண் தோண்டி எந்திரத்தை ஏரிக்குள் இங்குமங்காக தோண்டிப்போட்டுவிட்டு, ஆங்காங்கே பள்ளம்பள்ளமாக ஆக்கிவிட்டு பராமரிப்பு முடிந்துவிட்டது என்கிறார்கள். இப்படி செய்யவேகூடாது. ஏரி என்பது நீர்சுழற்சி முறையின் ஓர் அங்கம். இயற்கையானது அல்ல, மனிதனால் உருவாக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், மன்னர் காலத்தில் வறட்சி வரும்போது, வெள்ளமாகப் போன இடங்களில் தடுத்து, ஏரிகளை உருவாக்கினார்கள். கரையைப் பார்த்தால் அரை வட்டமாக இருக்கும். அது நிரம்பிய பின், அடுத்த ஏரிக்குப் போகும்படியாக, இணைப்புச் சங்கிலியுடன் ஆயிரக்கணக்கான ஏரிகளை உருவாக்கினார்கள். இன்றைக்கு நிலைமை என்ன,, அந்தப் புரிதல் இப்போது இருக்கிறதா? நீர்ப்பிடிப்புப் பகுதி, வரத்துப் பகுதி எது, வரத்துக் கால்வாய் இருக்கிறதா, வண்டல் எந்தவகை, விற்கலாமா கூடாதா, அதன் அளவு என்ன, அதன் தரம் எப்படி, ஏரியின் எதுவாய், மதகுகள், உபரி நீர்க் கால்வாய், கலிங்கல், ஏரிக்கரை... இவ்வளவையும் திருத்தம்செய்தால்தான் மராமத்து செய்வதாகப் பொருள்.

எத்தனை ஏரிகளில் இவ்வளவையும் செய்கிறார்கள் என யாராவது சொல்லமுடியுமா?

முதலில் வண்டல் பற்றிய ஆய்வு எடுக்கலாம். எந்த இடத்தில், எவ்வளவு இருக்கிறது என தெரியவேண்டும். சில இடங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மேலே போனால் எவ்வளவு தண்ணீர் வந்தாலும் உள்ளே போய்விடும். சில இடங்களில் களியாக இருக்கும். அங்கே அதிகமாக தோண்டலாம். இரண்டு மடங்குகூட அங்கு தோண்டலாம். என்ன மட்டம்வரை, என்ன மணற்பாங்கு என்பதைப் பொறுத்து முடிவுசெய்யலாம். உள்வாங்கினால் அது வீணாகிவிடும் என சொல்லமாட்டேன். ஆனால் அது நிலத்தடி நீராக மாறிவிடும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் தூர்வாரக்கூடாது எனக் கூறுவது இதனால்தான்.எனவே, மண்ணின் தன்மை என்பது முக்கியம்.

வண்டலை எடுத்து விற்கலாம். அதன் மூலம்  செங்கல் செய்யலாம். நிறைய மணல் கிடைக்கும். அதை விற்றே அந்த ஏரியைப் பராமரிக்கமுடியும். 2கோடி 3கோடி செலவிட்டு என்ன பயன்? தவறு. அறிவியல்ரீதியான அணுகுமுறை வேண்டும். ஒவ்வொரு ஏரியையும் புரிந்துகொண்டு, அங்கு என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யவேண்டும். ஏரிப் பராமரிக்கும் முறையானது நீடித்த தன்மைகொண்டதாக இருக்கவேண்டும்.

மேட்டூர் அணை போன்ற பெரிய அணைகள் வேண்டாம் என்றே உலக அளவில் முடிவுக்கு வருகிறார்கள். முதன்மைக் காரணம், வண்டல் மேலே வந்துவிடும். 124 அடி நீர்மட்டம் எட்டிவிட்டால் அணை 93.7 டிஎம்சி நீர் இருக்கும் என செய்திகள் வரும். 40 சதவீதம் அங்கே வண்டல்தான். இதைப் போல ஹிராகுட், பக்ராநங்கல் அணைகளும் 40 சதவீதம் வண்டல் இருக்கிறது. இது ஒரு பெரிய பிரச்னை.. அதைக் குறைக்கவேண்டும்.

விவசாயத்துக்கு தண்ணீரை விடும்போது இன்ன பயிருக்கு இவ்வளவு தண்ணீர் எனத் தருகிறோமா? காவிரிப் பாசனத்தை எடுத்துக்கொண்டால் அந்தக் காலத்தில் என்ன செய்தோமா அதையே இப்போதும் செய்கிறோம். இப்போது தண்ணீர் தட்டுப்பாடு. ஆனால் பழைய முறைப்படியே தண்ணீரை விநியோகிக்கிறோம். அந்த வழங்கல் முறையை நவீனப்படுத்த வேண்டும். காவிரியில் கல்லணைக்குக் கீழே மட்டுமே டெல்டா மாவட்டங்களில் 990 ஏரிகள் இருக்கின்றன. அவ்வளவு மழை பெய்து போகும்போது அவை எல்லாமும் நிரம்பவேண்டும். 2018-ல் ஒரு பக்கம் கரைபுரண்டு வெள்ளம் ஓடியது. ஏரிகள் எல்லாம் காலி. நாகப்பட்டினத்தில் குடிநீர் இல்லை. என்னமாதிரி நீர் நிர்வாகம் இது? இப்படியான சூழலை எதிர்பார்த்து முன்கூட்டியே யோசித்து செயல்படவேண்டும்.

அறிவியல்ரீதியான அணுகுமுறை வேண்டும். பணத்தை செலவழித்துவிட்டதாகச் சொன்னால் போதாது. அதனால் இன்ன பயன்கள் என்பதையும் சொல்லவேண்டும். காவிரி நவீனமயம் ஆக்கியதால் என்ன பயன்? நிறைய இடங்களில் ஆறு கீழே போகும்; விநியோக வாய்க்கால் மேலே இருக்கும். ஒரு பக்கம் குறுவைக்கு நிலத்தடி நீரை எடுத்து டெல்டாவில் கடல் நீர் உள்ளே புகுந்துவிட்டது. நாகை மாவட்டதில் 100 சதவீதம் உப்பு நீர் ஆகிவிட்டது. திருவாரூர் மாவட்டத்தில் 80 சதவீதம், தஞ்சை மாவட்டத்தில் 60 சதவீதம் உப்பு நீர் .. கடல் நீர் உள்ளே வந்துகொண்டே இருக்கிறது. டெல்டாவில் இப்படி ஆனால் உணவுப் பாதுகாப்புக்கு எங்கே போவது?

வருகின்ற அரசாங்கம் இதைக் கருத்தில்கொண்டு, நகரத்தின் தேவைகளை, வளர்ச்சியைக் கருத்தில் கொள்ள வேண்டும். சென்னையின் வளர்ச்சியோ அதிவேகம்..  1,170 ச.கிமீ. பரப்பு கொண்ட சென்னை மாநகராட்சி, இன்று 8,800 சகிமீ, புறநகர் மாவட்டப் பகுதிகளும் சென்னை மாநகராட்சிக் குள் வந்துவிட்டன.  4,100 ஏரிகள் இருக்கின்றன. அத்தனையையும்  காலிசெய்துவிடுவீர்களா? அவற்றில் தண்ணீர் சேர்த்துவிட்டால் சென்னை மாநகரத்துக்கு தண்ணீரும் கிடைக்கும். வெள்ளத்திலிருந்தும் பாதுகாக்கலாம். வறட்சி, வெள்ளத்தை சமாளிக்கலாம். குடிநீரையும் கவனித்துக்கொள்ள முடியும்.

வல்லுநர் குழு ஒன்றை அமைத்து, நன்கு ஆராய்ந்து, நீடித்த தன்மை கொண்ட தீர்வுக்கான, ஒருங்கிணைக்கப்பட்ட அறிவியல்ரீதியான அணுகுமுறையைக் கையாளவேண்டும்.

இதுவரை பல வல்லுநர் குழுக்களை அமைத்துவிட்டார்கள். குறிப்பிட்ட குறிக்கோளுடன் அமைக்கப்படும் அந்தக் குழுக்களின் பரிந்துரைகளை, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் செயல்படுத்தவேண்டும். அப்படி செய்யமுடியாதபோது ஏன் முடியவில்லை என்பதைச் சொல்லுங்கள். இல்லையானால் வல்லுநர் குழு அமைக்கவேண்டியதில்லை.

இதுவரை இயற்கைவளத்துக்கு நிறைய சேதாரங்களை ஏற்படுத்திவிட்டோம். இனியும் தூங்கினால் முடிந்தது, நம்முடைய கதை.

                      (சந்திப்பு: இர.இரா. தமிழ்க்கனல்)

ஏப்ரல், 2021