சிறப்புப்பக்கங்கள்

ஒரு படம் எதனால் வெற்றி பெறுகிறது?

அந்திமழை இளங்கோவன்

அப்போது அவரது நிறுவனங்களுக்கு நான்கு கண்டங்களில் உள்ள 146 வங்கிகளில் கடன் இருந்தது. திருப்பி செலுத்த முடியாதபடியிருந்தது நிறுவனங்களில் நிதி நிலை.

அதீத துயரங்களூடே அவரது வாழ்க்கை மிக மெதுவாக நகர்ந்தது. நிறுவனத்தின் உயரதிகாரிகளுடன் அவரும் உடன் சென்று கடன்களை மறுசீரமைப்பு செய்யுமாறு வேண்டினார். நிறுவனங்களின் சொத்துக்களில் எதையெல்லாம் விற்கலாம் என்று மற்றொருபக்கம்  விவாதங்கள் .

அப்போது அவரது நிறுவனங்களில் ஒன்று சிறிய பட்ஜெட் காமெடி படமொன்றை தயாரித்து  வந்தது. 1990 நவம்பர் 26 அன்று அமெரிக்காவில் திரையிடப்பட்ட அந்த படத்தின் தயாரிப்புச் செலவு அப்போதைய இந்திய மதிப்பில் 32 கோடி ரூபாய். எல்லாருக்கும் பிடித்துப் போக படம் வசூலில் அள்ளிக் குவித்தது. அந்த படத்தின் மொத்த வசூல் 863 கோடி ரூபாய்.

திவாலாகி விடுவார் என்று வங்கிகள் எதிர்பார்க்கப்பட்டவரது வாழ்க்கையை மாற்றியமைத்த அந்த ஹிட் படம் - HOME ALONE.

HOME ALONE ன்  வெற்றியால் தனது தொலைந்த புன்னகையை மீட்டவர் Rupert Murdoch .

அழகியல் மற்றும் கலையம்சமுள்ள படங்களை ஆராதிக்கும் தமிழக மேன்மக்களிடம், வசூலைக் குவிக்கும் படங்களை இடக்கையால் புறந்தள்ளும் போக்கு இருக்கிறது.

தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் வெளியாகி 85 ஆண்டுகள் ஆகின்றன ( 31,அக்டோபர் 1931). தமிழ் சினிமா உயிர்ப்புடன் இருப்பதற்கு வெற்றிப்படங்கள் ஒரு முக்கிய காரணமாகின்றன.

ஹாலிவுட்டை போன்ற வெளிப்படைத்தன்மை இல்லாத காரணங்களால் தமிழ் சினிமாக்களை வசூல்ரீதியாக வரிசைப்படுத்துவது சிக்கலான சவால். வசூலைப் பற்றி ரசிகர்கள், திரைத்துறை வல்லுனர்கள் கூறுவதற்கும் தயாரிப்பாளர்களின் வார்த்தைகளுக்கும் உள்ள இடைவெளியில்  கப்பல்கள் மிதந்து செல்லலாம்.

தமிழில் 2015 வரை சுமார் 5730 நேரடி தமிழ் படங்கள்  வெளிவந்திருக்கிறது.இதில் ரஜினியின் சந்திரமுகி 880 நாட்கள் ஒடி வசூலில் சதனை படைத்தது.குறைந்த நாட்களில் அதிக வசூலை பெற்றது கபாலி.

கிட்ட தட்ட 920 படங்கள் நூறு நாட்களை தாண்டி ஓடியிருக்கின்றன (வெள்ளிவிழா படங்களும் 200க்கும் மேற்பட்ட நாட்கள் படங்களும்இதில் அடக்கம்). பல படங்கள் ஓட்டப்படுவது உண்டு. இதில் 100 படங்களை தேர்ந்தெடுப்பது மிகவும் சிரமமானது. தமிழ் சினிமாவின் வரலாற்றை ஆவணப்படுத்தும் திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன், கோ. தனஞ்சயன் ஆகியோரிடம்  வசூலில் சாதனைப் படைத்த 50 படங்களின் பட்டியலைக் கேட்டுப்பெற்றோம்.

இது போக தமிழ் திரைத்துறையின் உள்ளும் புறமும் உள்ள பலருடன் விரிவாக உரையாடிய பின் இந்த பட்டியல் இறுதி செய்யப்பட்டது. 2000- வது ஆண்டுக்கு முன்னால் 75 படங்களையும் அதன்பின்னால் 25 படங்களையும் தேர்வு செய்து 100 படங்கள் கொண்ட பட்டியலை உருவாக்கியிருக்கிறோம்.

85 ஆண்டு கால தமிழ் சினிமாவை அலசிப்பார்த்தால் பதினாறு சதவித படங்கள் தான் வெற்றி பெற்றுள்ளன. இதுவும் சமீப காலங்களில் குறைந்து வருகிறது.

மனித உறவுகள் , சமூகம் பற்றிய பார்வைகள், பொருளாதார மற்றும் வாழ்வியல் சிக்கல்கள் , பயங்கள் எல்லா இனங்களைப் போல் தமிழர்களிடத்தும் காலந்தோறும் மாறுகின்றன.

அன்றைய பொதுத்திரளின் மனப்போக்கை விறுவிறுப்பாகசொல்லும் படங்கள் வெற்றி பெறுகின்றன.

இந்த சிறப்பிதழ் தயாரிக்கும் போது ஒரு படம் எதனால் வெற்றி பெறுகிறது என்ற கேள்விக்கான விடையை பெறப் பிரயத்தனப்பட்டோம்.

எங்களுக்கு கிடைத்த பதில்,  ‘Nobody knows anything when it comes to predicting which films will succeed at the box office’ என்று  ஹாலிவுட் திரை ஆசிரியர் William Goldman  கூறிய வார்த்தைகள் தான் .

நவம்பர், 2016.