இந்தியாவில் எடுக்கப்பட்ட விளையாட்டு சம்மந்தப்பட்ட படங்களில் மல்யுத்த வீராங்கனை கீதா போகட், அவரது தந்தை மகாவீர் சிங் போகட் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட டங்கலுக்கு ஒரு முக்கிய இடமிருக்கும்.
ஹரியானாவின் ஒரு சிறிய கிராமத்தில் வாழும் ஒரு தந்தையின் கனவு எப்படி தனது மகள்களின் மூலமாக நிறைவுறுகிறது என்று சொல்லும் படம். தொடக்கத்தில் தந்தையின் சர்வாதிகார போக்கிற்கு இணங்க மறுத்து போர்க்கொடித் தூக்கும் பெண்கள் பின்னர் தந்தையின் கனவை புரிந்து கொண்டு ஜெயிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஜெயித்த பிறகு தந்தையுடன் கீதாவுக்கு முரண்பாடு வருகிறது. அது சரி செய்யப்பட்டு தந்தையின் உதவியுடன் அவர் எப்படி உலக சாம்பியனாகிறார் என்று சொல்வதே டங்கல். இதற்கிடையில் தந்தை செய்யும் தியாகங்கள், சந்திக்க நேரும் அவமானங்கள் என்று படம் நெடுகிலும் வருகிறது.
இப்படியொரு கதை ஏற்படுத்தும் உணர்வெழுச்சி பற்றி பெரிதாக சொல்லவேண்டியதில்லை. பொதுவாக போட்டி, விளையாட்டு போன்றவற்றை அடிப்படையாக கொண்ட படங்கள், ஆட்டக் களத்தில் இருக்கும் உணர்வெழுச்சியை பார்வையாளர்களுக்கு கடத்துவதில் வெற்றிபெற்றுவிடும். அதுவே இந்த படங்களின் வெற்றிக்கான சூட்சமம். அந்த சூட்சமத்தின் படி டங்கலும் வெற்றிபெற்றிருக்கிறது.
ஆனால் ஒரு பெண் விளையாட்டு வீரரை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படத்திற்கு அது மட்டும் போதுமா? டங்கலின் மிகப்பெரிய போதாமையாக நான் நினைப்பது, அது தந்தையாக நடித்திருக்கும் ஆமிர் கானின் பார்வையிலேயே பெரும்பாலும் நகர்கிறது என்பதுதான். தனது மகள்களின் ரத்தத்தில் மல்யுத்தம் ஓடுகிறது என்பதை ஒரு சந்தர்ப்பத்தில் உணரும் மகாவீர் சிங் அதிலிருந்து அவர்களுக்கு கடுமையாக பயிற்சியளிக்கத் தொடங்குகிறார். அவர்களது எதிர்ப்போ மறுப்போ அவருக்கு ஒரு பொருட்டாக இல்லை. அவர்களது கவனம் சிதறி விடக்கூடாதென்று அவர்களுடைய முடியை வெட்டிவிடுகிறார். அதன் பொருட்டு அவர்கள் பொதுவில் சந்திக்க நேரும் அவமானங்கள் தற்காலிகமானவை என்று அவர் நம்பியிருக்கக்கூடும்.
ஆனால் இத்தனை அவமானங்களை கடந்து அந்த இளம் பெண்கள் ஓரிரவில் மனம் மாறி தந்தையின் கனவுக்காக தங்களை தயார் செய்துக் கொள்ள தொடங்குகிறார்கள் என்பது கொஞ்சம் இடறலாகவே இருக்கிறது. அந்த மன மாற்றத்தை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.
பெண்களின் பார்வையில் படம் கொஞ்சம் நகர்ந்திருந்தால் அது முற்றிலும் வேறொரு பரிணாமத்தை கொடுத்திருக்கக்கூடும். ஆனால் படத்தில் வேறு சில குறிப்பிடத்தகுந்த விசயங்கள் இருக்கவே செய்கின்றன. மல்யுத்தம் பற்றி பெரிதாக தெரியாதவரும் படத்தை ரசிக்க முடியும். மல்யுத்த விளையாட்டின் நுணுக்கங்கள், மிக விரிவான விளையாட்டுக் காட்சிகள் என்று எல்லாமே பரபரப்பை கூட்டும் அம்சங்களாகவே இருக்கின்றன.
பிறகு ஹரியானா போன்ற ஒரு மாநிலத்திலிருந்து இரண்டு பெண்கள் போராடி சாதித்திருக்கிறார்கள் என்பதை உலகுக்கு உரக்கச் சொன்ன படமாகவும் டங்கல் இருக்கிறது. பெண் சிசுக்கொலை, பெண் கருக்கொலை போன்றவற்றில் அண்மைக்காலம் வரையில் முதன்மையாக விளங்கிய மாநிலம் ஹரியானா. இப்போது வரையில் பெண் மீதான வன்முறைகள் மிகப்பெரிய அளவில் நடக்கும் ஒரு மாநிலமாகவே அது இருக்கிறது. 2016ன் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் தரவுகளின் படி கூட்டு வன்புணர்வில் ஹரியானாவுக்கே முதலிடம்.
இப்படியொரு மாநிலத்திலிருந்து பெண்கள் சாதிக்கவும் செய்கிறார்கள் என்பது இந்தியா தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதன் பொருட்டு பிறப்பிலிருந்து அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை, புறக்கணிப்புகளை இந்த உலகம் புரிந்து கொள்ள வேண்டியதும் அவசியம். அதை ஓரளவாவது டங்கல் செய்திருக்கிறது. பெண் பிள்ளைகளாக பிறந்ததால் வருத்தமடைந்த மகாவீர் சிங் போகட், ஒரு கட்டத்தில் ஆண் வென்றாலும் பெண் வென்றாலும் தங்கம் தங்கம்தானே என்கிறார்.
இது ஹரியானாவின், இந்தியாவின் ஒவ்வொரு தந்தையிடமும் ஏற்பட வேண்டிய தெளிவு.
ஆனாலும் டங்கல் ஒரு தந்தையின் கனவாகவே இருக்கிறது.
ஜூன், 2020.