மோகன்லாலுடன் ராஜேந்திரன்(அது ஒரு ’முடி’ க்காலம்) 
சிறப்புப்பக்கங்கள்

ஐநூறு படங்களுக்கும் மேல டூப் போட்டிருப்பேன்!

மூர்த்தி

சினிமாவில் இப்போது பிரபலமாக இருப்பதால் கிடைக்கிற எந்த சலுகையையும் நான் அனுபவிப்பதில்லை. ஒரு சண்டைக் கலைஞனாக இருந்தபோது எவ்வளவு எளிமையாக இருந்தேனே அதையே வாழ்நாள் முழுக்க தொடரவே நான் விரும்புகிறேன். ஏனென்றால் அது மட்டுமே இங்கே நிரந்தரம்' என்கிறார் ‘நான் கடவுள்' ராஜேந்திரன் என்கிற ‘மொட்டை' ராஜேந்திரன்.

இன்று மிக அதிகம் விரும்பப்படும் நகைச்சுவை நடிகர் என்றாலும் படப்பிடிப்புகளில் அவரை சொகுசான கேரவனில் பார்க்க முடியாது. ஜூனியர் ஆர்டிஸ்ட்களுக்கு மத்தியில் ஒரு ஓரத்தில் எங்காவது பீடி பிடித்துக்கொண்டிருப்பார். படப்பிடிப்பு இடம் கொஞ்சம் அருகில்தான் இருக்கிறது என்றால் புல்லட்டிலேயே கிளம்பிவிடும் எளிய மனிதர். இன்று 65 வயது என்றாலும் இளமை துள்ளும் அச்சு அசல் சண்டைக் கலைஞன் இந்த ராஜேந்திரன்.

‘நான் பேசுற ஸ்டைலை, தோற்றத்தை வச்சு என்னை நிறையப்பேர் மெட்ராஸ்காரன்னே நினைக்குறாங்க. என்னோட சொந்த ஊர் தூத்துக்குடி. அப்பாவும் ரெண்டு அண்ணன்களும் சண்டைக் கலைஞர்களாக இருந்தாங்க. அப்ப நான் படிச்சுட்டிருந்தேன். நாம படிச்ச படிப்புக்கு கவர்மெண்ட் வேலையா கிடைக்கப்போகுது? ‘டேய் நீயும் எங்கள மாதிரி சினிமாவுக்கு வந்துரு'ன்னு அப்பாதான் கூப்பிட்டார். வந்து அவங்க வழியில சண்டைக் கலைஞனாக வேலை செய்ய ஆரம்பிச்சேன்.

ஆரம்பத்துல கிடைச்சதென்னவோ தெலுங்குப் படங்கள்தான். படு துடிப்பா வேலை செய்ய ஆரம்பிச்சேன். ஜம்ப் பண்ணுறது. உயரத்துல இருந்து குதிக்கிறது. ஹீரோக்கள்கிட்ட ஒரிஜினலா அடிவாங்குறதையெல்லாம் ரசிச்சு ரசிச்சு செஞ்சேன். செமத்தியா அடி விழும். ஆனா சுத்தி நிக்குற பத்துப்பேர் நமக்காக கைதட்டுறப்ப அந்த வலியெல்லம் பறந்து போயிரும்.

அப்படி ஆரம்பிச்ச பயணம் பல வருஷங்கள் நீடிச்சது. அப்பப்ப சின்னச் சின்ன வில்லன் வேசம் கிடைக்கும். அப்புறம் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கிறவன்னு பேர் கிடைச்சதால நிறைய பேருக்கு டூப் போட சான்ஸ் கிடைச்சது. அப்படி 500 படங்களுக்கும் மேல டூப் போட்டிருப்பேன். அந்த சமயத்துலதான் பாலா சாரோட ‘பிதாமகன்' படத்துக்கு விக்ரம் கூட மோதுறதுக்கு 5 பைட்டர்ஸ் தேவைன்னு 20 பேர்ல ஒருத்தனா என்னை அனுப்பி வச்சாங்க. மொட்டைத்தலை, புருவம் கூட இல்லை, ஒல்லியான உடம்பு... நம்மள எங்க அவர் செலக்ட் பண்ணப்போறார்னு நம்பிக்கையில்லாமத்தான் போனேன். ஆனா என்னைப் பார்த்த உடனே செலக்ட் பண்ணி சின்னதா ஒரு ஜெயில் வார்டன் வேசம் குடுத்து விக்ரம் கூட ஃபைட் பண்ணவும் வச்சார்.

 அதுல எனக்கு செம ரீச். அவரோட ‘நான் கடவுள்' படத்துல நான் கனவுலயும் நினைச்சுப்பாக்காத கொடூர வில்லன் வேசம் கொடுத்து என் வாழ்க்கையைவே மாத்துனார். நிஜத்துல பாலா சார்தான் எனக்கு கடவுள்.

அடுத்து வந்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்', ‘டார்லிங்', ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'ராஜா ராணி' மாதிரியான படங்கள் என்னைக் காமெடியனா மாத்தி மக்களை ரசிக்க வச்சது.

ஆனா இப்பவும் எப்பவும் மனசால நான் பழைய சண்டைக் கலைஞன் தான்!. முன்ன எப்படி டைரக்டர்ங்க... ‘அங்க இருந்து குதி'.. ‘இந்த பீரோவை ஒரே பஞ்ச்ல உடை'ன்னு சொன்னா ஒரு நொடியும் யோசிக்காம செய்வேனோ அதை செய்ய எப்பவும் நான் ரெடியாதான் இருக்கேன். ஏன்னா நடிகனுக்கு மார்க்கெட் நிரந்தரமில்லாதது. ஆனா சண்டைக் கலைஞன் சாகாவரம் பெற்றவன். அவனுக்கு எவர்கிரீன் மார்க்கெட்''.

முடிக்கும்முன், சமூக ஊடகங்களில் படித்த செய்தி சரிதானா என்று அவர் முடி இழந்த சோகக்கதை குறித்துக் கேட்டபோது, ‘ ஒரு மலையாளப்படம். அந்த டைரக்டர் சொன்னபடி ஒரு ஷாட்டுக்காக ஒரு குளத்துல குதிச்சேன். ஷாட் முடிச்ச வெளிய வந்தப்ப அந்த ஊர் ஜனங்க சொல்லித்தான் தெரியும், அது முழுக்க முழுக்க கெமிக்கல் கழிவுகள் கலந்திருக்குற குளம்னு. அப்ப நாம ஒரு சாதாரண ஃபைட்டர்தானே? அதனால ஷாட் முடிஞ்சு மாற்றுக் குளியலுக்குக் கூட ஏற்பாடு பண்ணலை. வீட்டுக்கு வந்துதான் குளிச்சேன். மறுநாள் தலையில லைட்டா பொடுகு மாதிரி வர ஆரம்பிச்சி, அடுத்து புருவம் உட்பட முடி அத்தனையும் கொட்டிப்போச்சி. ஆனா பாருங்க அதே மொட்டைத்தலைதான் நம்மள இன்னைக்கு ஓஹோன்னு வாழ வைக்குது'' தனது பிராண்ட் கரகர குரலில் உற்சாகமாகச் சிரிக்கிறார் ராஜேந்திரன்.