சிறப்புப்பக்கங்கள்

ஏற்கனவே சொல்லப்பட்ட வில்லிகள்

கலாப்ரியா

கண்ணதாசனைப் போல ஒரு படத்தின் ‘ஒன் லைனை’, ‘தங்கமுடிச்சை’ ஒரு பாடலில் சொல்லி விட இன்னொருவர் பிறந்துதான் வரவேண்டும்.

“கோட்டையிலே ஒரு ஆலமரம் அதில் கூடு கட்டும் ஒரு மாடப்புறா...” என்று ஆரம்பிக்கிற பாடலில் ஒரு பத்தி.

“வெள்ளைப் புறாவின் குடும்பத்திலே- வந்து

விழுந்ததம்மா ஒரு கள்ளப் புறா

கள்ளப் புறாவின் செயலாலே இன்று

கலங்குதம்மா ஒரு சின்னப்புறா...”

இங்கே கள்ளப் புறாவாக வந்து, அமைதியான நதியிலே அழகாகச் செல்லும் வெள்ளைப் புறாவின் குடும்ப ஓடத்தை வெள்ளமாக வந்து சிதைப்பது...‘முரடன் முத்து’ படத்தில் வரும் ‘அம்பாத்துரை பர்வதம்’ என்கிற வில்லி பாத்திரம். இந்த மாதிரிப் பாத்திரங்களுக் கெல்லாம் சி.கே.சரஸ்வதியை விட்டால் ஆள் கிடையாது. பாகப்பிரிவினையில் வருகிற அகிலாண்டத்தம்மாளிலிருந்து, (அதற்கும் முன்னாலேயே இருக்கலாம்) அவரைப் பார்த்த முதல் சீனிலேயே படம் பார்க்கும் பெண்கள், “ஏத்தா இந்தக் கரி முடிவா வந்துட்டாளே இன்னம என்ன ஆகுமோ..” என்று நாடியில் கை வைத்து அங்கலாய்க்க ஆரம்பித்து விடுவார்கள்.அப்புறம் கதாநாயகியோ, கதாநாயகனின் தங்கையோ படும் பாடுகளையெல்லாம் பார்த்து வழியும் கண்ணீரைத் துடைப்பதற்காகவே கையை எடுப்பார்கள். வில்லி மேலுள்ள கோபத்தில் இடையில் முறுக்கு கேட்டு நச்சரிக்கும் பிளைகளுக்கெல்லாம், “இரு சனியனே, நீ வேற படுத்தாத..” என்று அர்ச்சனை.

     பாசமலர் படத்திற்கு தரை டிக்கெட் முழுவதும் பெண்களுக்கு கொடுத்த ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலைக் காட்சி. பத்து, பதினோரு வயதான என்னையும் இன்னொரு சிறுவனையும் பெண்கள் டிக்கெட் வழியே விட்டு விட்டார்கள். ஆனால் உட்கார இடம் கிடைக்க வில்லை. “போங்கலே அங்கே...” என்று விரட்டினார்கள் தாய்மார்கள். பார்த்தோம் பெஞ்சு டிக்கெட்டுக்கு ஏறி விழுந்து விட்டோம். அங்கேயும் கூட்டம் நிரம்பி வழிந்தது. எப்படியோ ஒருவர் இடம் கொடுத்தார். இப்படி ‘இடம்’ கொடுப்பவர்கள் ‘இடம்’  கேட்கவும் ஆரம்பிப்பார்கள். படத்தில் பி.எஸ்.ஞானம் வில்லி பாத்திரம். அழுது மூக்கைச் சிந்தும் சனம் எல்லாம் பி.எஸ்.ஞானத்தைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்க, இடம் கொடுத்தவர் சொன்னார்.,“ வே இவ ஆளு என்னமா இருப்பா தெரியுமா... எம்.ஜி.ஆர். கலரு..(சமீபத்தில் ஒரு பழைய படத்தயாரிப்பு நிர்வாகியிடம் பேசிக்கொண்டிருந்த போது அவரும் சொன்னார், என்ன சார் தமன்னா, அந்தக் கால பி.எஸ்.ஞானம் கலருக்கு ஈடாகுமா,” என்று.) என்னமோ வில்லி ரோல்தான் கொடுக்கறாங்க...” என்று. “இல்லையே திருடாதே படத்தில் சரோஜாதேவியோட அம்மாவா, நல்லவங்களா வருவாங்களே....” என்றேன்.“தம்பியா புள்ளை நிறைய படமெல்லாம் பார்ப்பேரு  போல இருக்கே...” என்று  லேசாகத் தோளைத் தொட்டு இழுத்துக் கொண்டார். ஆஹா வில்லனிடம் மாட்டிக் கொண்டோம் போலிருக்கே என்று நினைக்கவும்......  தரை டிக்கெட்டில் யாரோ ஒரு பொம்பளை, இன்னொருத்தி செயினை அத்துட்டா என்று களேபரம் ஆகி படத்தை நிறுத்தி லைட்டைப் போட்டு விட்டார்கள். வில்லனிடமிருந்து தப்பினேன்.

பொதுவாக சிவாஜி படத்தில் வில்லிகள் இப்படித்தான் இருப்பார்கள். கண்ணதாசன் பாடிய மாதிரி “சீதேவி தான் பிறந்த செய்யத் திரு பாற்கடலில் மூதேவி போல் பிறந்த மாடி வீட்டு ராணி-இவ முன்னாளில் அவதரித்த ராமாயணக் கூனி...” காலகாலமாய் கூனி ரோல்தான் சி.கே.சரஸ்வதிக்கு. இந்த வகையான கூனி ரோலுக்கு சி.கே.சரஸ்வதி, பி.எஸ்.ஞானத்தை விட்டால் சுந்தரி பாய், சீதா லட்சுமி. படிக்காத மேதை, பாக்தாத் திருடன் போல ஒன்றிரண்டு படங்களில், சந்தியா வில்லி பாத்திரம் செய்வார்.  மனோகரா படத்தில், கண்ணாம்பாவுக்கு எதிராக டி.ஆர்.ராஜகுமாரி ஒரு வில்லி ரோல் பண்ணியிருப்பார். அவரது ‘சிநேகமான’ புன்னகையிலேயே ஒரு வில்லித்தனம் இருக்கும். இதே ரோலை தங்கமலை ரகசியம் படத்திலும் செய்து இருப்பார். தங்கப்பதுமை படத்தில் கதாநாயகனை மதிமயக்கி ‘கற்புக்கரசி’ நாயகியிடமிருந்து பிரிக்கும், ‘மாதவி’ ரோல் அவருக்கு. அந்தப் படமே, கண்ணகி-கோவலன் கதையின் ‘உல்ட்டா’தான்.

    இன்னொரு புறம் எம்.ஜி.ஆர் படங்களில், சிம்பிள் லாஜிக். வில்லன் காதலி வில்லி. அவரே ஒரு தலையாக எம்.ஜி.ஆரைக் காதலித்து, “ஓ மிஸ்டர் பாலு இங்கே வா மிஸ்டர் கேளு.. ”என்று

சோலோவோ கனவில் டூயட்டோ பாடுவார். இதற்கு பெரும்பாலும் ஆதி காலத்தில் எம்.என்.ராஜம் தான். இல்லையென்றால் ஜி.சகுந்தலா. அபூர்வமாக ராஜ சுலோச்சனா. அந்தக் காலத்தில் சி.ஐ.டி.என்று ஒரு இந்திப் படம் வந்தது. குருதத் படம். தேவ் ஆனந்த் கதாநாயகன். இதில் வஹிதா ரஹ்மான் வில்லி என்பது திறமையான சஸ்பென்ஸ். அந்தப் புதுமைக்காகவே திருநெல்வேலியில் ‘ரெகுலர் ஷோ’வாக ஒரு வாரம் ஓடியது (என் அண்ணன் அடிக்கடி சொல்வார்). பொதுவாக இந்திப் படங்கள்.. சனி, ஞாயிறு குறைந்த கட்டணத்தில் காலைக் காட்சி மட்டும் போடுவார்கள். சி.ஐ.டி படம் மாதிரி தமிழில் குறிப்பிடத்தக்க வகையில் சஸ்பென்ஸ் வில்லி படம் இதற்குப் பத்து வருடம் கழித்தே வந்தது.

1966 ல்- பறக்கும் பாவை.

எம்.ஜி.ஆர் நடித்ததில் அவருக்கு ரொம்பப் பிடித்த படம் இது என்று இண்டஸ்ட்ரியில் பேசிக் கொண்டார்கள்( பேட்டியிலும் சொல்லி இருக்கிறார்). எல்லோரும் எதிர்பார்த்து தோல்வி கண்ட படம். இதில் நம்பியார்,மனோகர், அசோகன், ஓ.ஏ.கே.தேவர், எம்.ஜி.ஆர் ஸ்டண்ட் பார்ட்டி ‘மொட்டை’ரத்னம், ஜி.சகுந்தலா என்று ஐந்து ‘பாரம்பரிய’ வில்லன்கள், வில்லி நடித்திருந்தும், ‘காதலிக்க நேரமில்லை’ காஞ்சனா தான் நிஜமான வில்லி என்பது யாரும் யோசிக்க முடியாத சஸ்பென்ஸ். அவரது வில்லித் தனத்துக்கு காரணம், கதாநாயகன் மீது கொண்ட அளவற்ற காதல். (அது கனமான காரணமாயில்லை என்று ஏதோ பத்திரிகையில் கூட விமர்சனமெழுதிய நினைவு.) இந்த அளவற்ற காதலால் வில்லித்தனம் பண்ணுவது படையப்பாவில் பிரமாதமாக ஒர்க் அவுட் ஆகியது, ‘நீலாம்பரி’ வடிவில். கூனி வகை வில்லிகளின் தொடர்ச்சி, காந்திமதி, விஜயலலிதா, என்று வடிவுக்கரசி வரை வந்தது. கடிதங்கள் மூலமாக வாணிஸ்ரீயைக் காதலிக்கும் ஜெய் சங்கரை வில்லத்தனமாக அல்லாமல் ‘கதாநாயகத் தனமான வஞ்சனை’ செய்து கதாநாயகியாகவே மணம் முடிப்பார் விஜயகுமாரி, ‘டீச்சரம்மா’ படத்தில்.( கொஞ்சம் வித்தியாசமான நல்ல படம்,‘காதல் கோட்டை’க்கு முன்னோடி என்று சொல்லலாம்.)

  இரட்டை வேடக் கதாநாயகி கதைகளில் ஒருவர் வில்லியாக வந்ததுண்டு. அடிமைப் பெண்ணில் ஒரு ஜெயலலிதாவுக்கு சிறிய எதிர்மறைப் பாத்திரம்.  கண்ணன் என் காதலன் படத்திலும் ஜெயலலிதாவுக்கு ஒரு வகையான ஆண்டி ஹீரோயின் ரோல்தான். கால் ஒடிந்து விட்டதாகச் சொல்லி எம்.ஜி.ஆர்- வாணிஸ்ரீ காதலைப் பிரித்து அவர் திருமணம் செய்து கொள்வார். கன்னித்தாய் படத்தில் கே.ஆர். விஜயா கிட்டத் தட்ட வில்லி வேலைகள் பார்ப்பார். ஆனாலும் அவர் இமேஜ் கெடாமல் சாண்டோ சின்னப்பாதேவர் ‘பார்த்துக் கொண்டார்’. இந்த வகையில் திருவாங்கூர் சகோதரிகளான லலிதா பத்மினி ராகினி மூவரில் லலிதாவும் ராகினியும் வில்லி ரோல் செய்திருக்கிறார்கள்-லலிதாவின் தூக்குத்தூக்கியில் ‘கொலையும் செய்வாள் பத்தினி’ பாத்திரம் ஒரு உதாரணம்- பத்மினி, தன் ‘வாலிப’த்தில், கதாநாயகி ரோல் மட்டுமே செய்து ‘இமேஜைத் தக்க வைத்துக் கொண்டார்.

இது தவிர கதாநாயகனின் மாமியார் வில்லியாக வந்து கதை நகர்வது, குழந்தையும் தெய்வமும், பூவா தலையா படங்களில். முன்னதில் ஜி.வரலட்சுமி பின்னதில் எஸ்.வரலட்சுமி. எஸ்.வரலட்சுமி கதாநாயகனுக்கு ஏங்கும் வில்லியாக ‘சக்கரவர்த்திதிருமகள்’ படத்தில் நன்றாக நடித்திருப்பார். “ஏமாற்றம்தானா என் வாழ்விலே...” என்று ஒரு அழகான பாடலை அவரே பாடுவார்.  (‘இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்..’.என்று எம்.ஜி.ஆருக்கு அம்மாவாக வந்து தாலாட்டுப் பாடுவார், ‘நீதிக்குத் தலைவணங்கு’ படத்தில். ரிக்‌ஷாக்காரனில் பத்மினி எம்.ஜி.ஆருக்கு அக்காவாக வருவார். இது நடிகைகளுக்கு காலம் செய்யும் வில்லத்தனம்,ஸாரி, வில்லித்தனம்.)

இப்போதும்கதைஅதேதான். கதைக்களன்மாறிவிட்டது, தாதாக்கள்அரசியல்வாதிடாட்டாசுமோ, குத்துப்பாட்டு, ஐட்டம்டான்ஸ்என்று. இப்போது ‘சொர்ணாக்காக்கள்’ வில்லியாகஉலாவரும்காலம். ‘திமிரு’ படத்தில்,“வாடாஎன்மாப்ளேய்..” என்றுஷ்ரியாரெட்டி, ஈஸ்வரியாகமாறிவந்துகதாநாயகனைஒருதலையாகத்தொடர்ந்துகாதலித்துவில்லித்தனம்செய்கிறார். எல்லோரும்சொல்வதுமாதிரிஉலகில்ஏழேஏழுதிரைக்கதைகள்தான்உண்டு. அதிலும்வில்லிகளின்வகைமைஇன்னும்குறைவு. தமிழ்சினிமாவைப்பொறுத்து, வில்லிகளுக்குக்கூனிஒருரோல்மாடல்என்றால், ராமனைக்காதலிக்கும்சூர்ப்பனகைகள்இன்னொருரோல்மாடல். ஆக,  எல்லோருமேஏற்கெனவேசொல்லப்பட்டவில்லிகள்தான்

ஜூன், 2014.