சிறப்புப்பக்கங்கள்

எஸ்.எம்.சுப்பையா நாயுடு; நீ எங்கே என் நினைவுகள் அங்கே

மதிமலர்

சிங்காரவேலனே தேவா.. கொஞ்சும் சலங்கை படத்தில் இந்த பாடலுக்கு சாவித்திரியையும் ஜெமினி கணேசனையும் பார்த்திருப்போம். இப்பாடலைப் பாடுவதற்கு முதலில் பி.லீலாவைத் தான் அழைத்தார்கள். காருகுறிச்சியாரின் நாதஸ்வரத்துடன் இசைந்து பாடவேண்டிய இப்பாடலை தன்னால் பாடமுடியாது என்று சொல்லிவிடவே அதன்பின்னால் இதைப் பாடும் வாய்ப்பு எஸ்.ஜானகிக்கு வந்தது. ஆபேரி ராகத்தில் அப்பாடல் இறவாப்புகழ் பெற்றுவிட்டது. இந்த பாடலுக்கு இசைஅமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. தமிழ்சினிமாவின் ஆரம்பகால இசையமைப்பாளர்களில் ஒருவர்.

இசைக்கு எந்த விதத்திலும் தொடர்பே இல்லாத குடும்பத்தில் பிறந்தவர் இவர். சின்ன வயதிலேயே வீட்டை விட்டு ஓடிவந்து தஞ்சா வூரில் ஒரு நாடக்குழுவில் சேர்ந்து பின்னர் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் நாடகக் கம்பெனிக்குத் தாவி, அங்கிருந்தே பதினாறு வயதுக்குமேல் இசை கற்றவர். அவர் அடைந்த உயரம் பிரமிக்கவைக்கிறது.

1935-ல் வெளிவந்த பக்தராமதாஸ் படத்தில் ஹார்மோனியக் கலைஞராக திரையுலகில் நுழைந்தார் சுப்பையா நாயுடு. நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களின் நாடகமே பக்தராமதாஸ். பின்னர் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் மாதசம்பளத்துக்கு ஹார்மோனியக் கலைஞராக வேலைக்குச் சேர்ந்தார்.

பின்னர் ஜி.ராமநாதன் இசையமைத்த சில படங்களில் ஹார்மோனியக் கலைஞராகப் பணிபுரிந்தார். அக்காலத்தில் ஒரே படத்துக்கு பல இசையமைப்பாளர்கள் ஆளுக்கு சில பாடல்கள் என்று பிரித்துக்கொண்டு வேலை செய்வார்கள். பின்னணி இசைக்கென்று தனியாக வாத்தியக் குழு இருக்கும்.

இந்நிலையில் ஜுபிடர் பிக்சர்ஸ் சென்ட்ரல் ஸ்டுடியோவை குத்தகைக்கு எடுக்க அதில் இசையமைப்பாளராக மாதச் சம்பளத்துக்கு சுப்பையா நாயுடு சேர்ந்தார்.

எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி படத்தை ஜூபிடர் பிக்சரஸ் தயாரித்தது. கதை வசனம் மு.கருணாநிதி. அப்படத்தின் முழுப்பாடல்களுக்கும் இசை அமைத்தவர் சுப்பையா நாயுடுதான்.

இந்தப் படத்தில்தான் பின்னணிப்பாடகர்கள் கதாநாயகனுக்காகப் பாடுவது என்பது அறிமுகம் ஆயிற்று. திருச்சி லோகநாதனும் எம்.எம்.மாரியப்பாவும் பின்னணிப்பாடகர்கள் ஆனார்கள். அவர்களை அறிமுகப் படுத்திய பெருமை இவருக்கு வந்தது. உடுமலை நாராயண கவிராயரின் வரிகளுக்கு அருமையாக மெட்டமைத்து பாடல்களைப் பிரபலமாக்கினார் அன்று இளைஞராக இருந்த சுப்பையா நாயுடு.

அடுத்து ஜுபிடர் பிக்சர்சஸ் தயாரித்த அபிமன்யுவில் சுப்பராமனுடன் இணைந்து இசை அமைத்தார்.

இதை அடுத்து பட்ஷிராஜா ஸுடுடியோஸ் தயாரித்த ஏழை படும் பாடு(1950) படம் வெளியாகி சுப்பையா நாயுடுவுக்கு நிலைத்த புகழைத் தந்தது. இதுதான் அவருக்கு முக்கியத் திருப்பம். இந்த கட்டத்தில் வந்த கன்னியின் காதல் முக்கியமாகச் சொல்லவேண்டும். இதில்தான் கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே என்றவாறு கவியரசு கண்ணதாசன் பாடலாசிரியராக சுப்பையா நாயுடுவின் இசையில் பாட்டெழுதினார். இதற்கடுத்து  சில படங்களுக்கு அப்புறம் வந்ததுதான் மலைக்கள்ளன். இப்படம் நாயகன் எம்ஜிஆருக்கும் திருப்புமுனை. இசை அமைப்பாளர் சுப்பையா நாயுடுவும் புகழ் உச்சிக்கு ஏறினார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், சிங்களம் ஆகிய மொழிகளில் வெளியான படம் அது.  அதில்வரும் “எத்தனைகாலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே. இந்த நாட்டிலே” என்ற பாடல் இன்னும் பலகாலத்துக்கு நிலைத்திருக்கும். பாடலை டி.எம்.சவுந்தரராஜன் எம்ஜிஆருக்காக பாடினார். அதன் பின்னர் டி.எம்.எஸ். எம்.ஜி.ஆரின் குரலாகவே மாறிப்போனார். ஆபேரி ராகத்தில் அருமையாக இப்பாடலுக்கு இசை சேர்த்திருக்கிறார் சுப்பையா நாயுடு.

எம்.ஜி.ஆர். அடுத்து தயாரித்து இயக்கிய படம் நாடோடிமன்னன். ‘உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம் உண்டாவதெதிலே சொல் என் தோழா’- சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் தியாகி லஷ்மணதாஸ் எழுதிய ராகமாலிகைப் பாடல், பட்டுக்கோட்டையாரின் ‘மானைத் தேடி மச்சான் வரப் போறார்’  ‘சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி’ - ‘தூங்காதே தம்பி தூங்காதே’ஆகிய பாடல்களும் சுப்பையா நாயுடு இசை கோர்த்தவைதான். உவமைக் கவிஞர் சுரதாவின்,‘கண்ணில்வந்து மின்னல் போல் காணுதே.. உயர் காவியக் கலையே ஓவியமே..’ என்ற பாடல் என்றும் மறக்கமுடியாத டூயட் பாடல்.

கவி காமு ஷெரிப்பின்,  ‘அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை.. அவர் அடி தொழ மறுப்பவர் மனிதரில்லை..’ என்ற அன்னையின் ஆணை படப்பாடல். டி.எம்.எஸ். குரலில் இதயங்களை என்றென்றைக்கும் தாலாட்டிக் கொண்டிருக்கிறது.

மரகதம் அல்லது கருங்குயில் குன்றத்துக் கொலை படத்தில் குங்குமப்பூவே கொஞ்சுபுறாவே என்று சந்திரபாபு பாடும் பாடல் சுப்பையாநாயுடு இசையில் புகழ்பெற்ற பாடல். ஆனால் இதன் பின்னால் ஒரு சர்ச்சையும் உண்டு. இந்த பாட்டின் மெட்டு டி.ஜி.லிங்கப்பாவினுடயது. அதை சந்திரபாபு, சுப்பையா நாயுடுவிடம் சொல்லி போட வைத்துவிட்டார் என்பது.

1961-ல் வெளிவந்த திருடாதே படமும் சுப்பையா நாயுடு இசைதான். ‘திருடாதே பாப்பா திருடாதே..’ இந்தப் பாடலைக் கேட்டு ஆடாத தலையே தமிழ்மண்ணில் இல்லை. அதே ஆண்டு வந்த படம்தான் கொஞ்சும் சலங்கை. அதில் வெளிவந்த சிங்கார வேலனே தேவா படம் பற்றித்தான் ஆரம்பத்தில் பார்த்தோம்.

அறுபதுகளுக்குப் பின்னர் ஜெய்சங்கர், ஜெமினி கணேசன் நடித்த பல படங்கள் இசை அமைத்தார் சுப்பையாநாயுடு. அதில் முத்துச்சிப்பி என்ற ஜெய்சங்கர்-ஜெயலலிதா நடித்தப் படத்தில் வரும் பாடல்களில் ‘தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக.  கண் பட்ட இடம் பூமலரும் பொன்மகளே வருக - நீ வருக’ என்ற பாடல் இன்று அதிமுக மேடைகளில் அந்த இசையமைப்பாளரின் மேன்மையைச் சொல்லி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

மன்னிப்பு என்ற படத்தில் வரும்,‘நீயெங்கே என் நினைவுகள் அங்கே..’ என்ற பாடலை இரவுகளில் கேட்டிருக்கிறீர்களா? சுப்பையா நாயுடுவை நினைத்து நன்றி சொல்லுங்கள்.

1975- எஸ்.எம்.சுப்பையா நாயுடுவுக்கு மணிவிழா. எம்.எஸ்.வி, கண்ணதாசன் இருவரும் இணைந்து ஏற்பாடு செய்ய எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருமே கலந்துகொண்டார்கள். 1976-ல் இவர் இசை அமைத்த குலகௌரவம் இவரது கடைசிப்படம். 1979-ல் இந்த மாபெரும் இசைக்கலைஞர் மரணம் அடைந்தார். குழந்தைகள் இல்லை என்பதால் அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்தவர் அவர் மீது பேரன்பு வைத்திருந்த எம்.எஸ்.விஸ்வநாதன்!

ஜனவரி, 2014.