‘எழுத்தாளர்கள் மனித ஆன்மாவைச் செப்பனிடும் எஞ்சினீயர்கள்' என்கிறார் மாக்சிம் கார்க்கி.
அப்படியானால் வாசகர்கள் யார்? அந்த எஞ்சினீயர்களை உயிர்ப்புடன் உள்ளங்கையில் வைத்திருப்பவர்கள்.
நாகர்கோவில் மணிமேடைக்கு அருகிலிருந்த சுதர்ஸன் துணிக்கடைக்கு என் பெரியப்பாவுடன் போயிருந்தேன். பார்க்கச் சென்ற நபரின் ஆளுமை என்னைக் கவர்ந்தது. தீவிர இலக்கியத்திற்குள் நான் இறங்குவதற்கு முந்தைய காலகட்டம். அதற்குப் பின் அவரின் எழுத்துக்களை தேடித் தேடிப்படித்து நண்பர்களோடு விவாதித்ததுண்டு . நாகர்கோவிலில் கே.பி.ரோட்டிலுள்ள அவரது வீட்டை கடக்கும்போதெல்லாம் உள்ளே நுழைந்து உரையாடத் தோன்றும், ஆனால் சிறிய தயக்கத்துடன் கடந்து விடுவேன். நான் வேலைப்பார்த்த மாதமிருமுறை இதழில் அவரது கட்டுரைத் தொடரை அழகாக வடிவமைத்தேன். ஒரு முறை இட நெருக்கடி காரணமாக ஒரு கட்டுரையை எடிட் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் . இதழ் அவரை அடைந்த உடன் ஒரு கடிதம் அனுப்பினார். அதில் 13 வார்த்தைகளையும் , இரண்டு வரிகளையும் காணவில்லை என்றிருந்தது. பின் ஒரு முறை அவரது வீட்டிற்கு சென்றேன். அப்போது அவர் காலமாகியிருந்தார். அவருடன் விவாதிக்கச் சேமித்து வைத்திருந்த வார்த்தைகள் இன்னும் பத்திரமாக இருக்கிறது.
இது போன்ற ஒரு நீண்ட பட்டியலில் எழுத்தாளர்களையும் அவர்களிடம் பேச வேண்டிய கச்சா பொருட்களையும் சேமித்து வைத்திருக்கிறேன். எழுத்தாளர்களின் தனிமைக்குள் அத்துமீற ஒரு சிறு தயக்கம்.
1954, டிசம்பர் 10 - ல் ஸ்டாக்ஹோமில் நடந்த நோபல் பரிசு வழங்கும் விழாவில் ஸ்வீடனுக்கான அமெரிக்க தூதர் எர்னஸ்ட் ஹெமிங்வேயின் உரையை வாசித்தார். அதில், ‘‘எழுத்து வாழ்க்கை மிகவும் தனிமையானது. எழுத்தாளர்களுக்கான அமைப்புகள் அவனது தனிமையைக் குறைக்கின்றன. ஆனால் அவை அவனது எழுத்தை மேம்படுத்துகின்றனவா என்பதில் எனக்குச் சந்தேகமுண்டு. தன் தனிமையைத் துறப்பதன் மூலம் அவனது பொதுவாழ்வில் உயர்கிறான். ஆனால் அவனது எழுத்தின் தரம் குன்றுகிறது. எனெனில் அவன் தனியாக வேலை செய்யவேண்டியவன். அவன் நல்ல எழுத்தாளனாக இருந்தால் தினந்தோறும் நிரந்தரம் அல்லது நிரந்தரமின்மையை எதிர்கொள்ளவேண்டும்'' என்றார் எர்னஸ்ட் ஹெமிங்வே.
பல நேரங்களில் எழுத்தாளனின் தனிமையைப் பாதுகாப்பது வாசகனின் கடமை.
என்ன செய்து கொண்டு
இருக்கிறாய் இப்போ?
என்று நானும் இனிமேல் கேட்கலாம்
எனக்கு வேலை கிடைத்துவிட்டது
என்ற கல்யாண்ஜியின் கவிதைதான் எனக்கு வேலை கிடைத்தவுடன் ஞாபகத்திற்கு வந்தது. இது போல் அன்றாடம் ஏதோ ஒரு படைப்பு ஞாபகத்திற்கு வந்து போகும்.
எழுத்தாளன் மற்றும் பத்திரிகையாளனாக வேண்டும் என்ற கனவு சூல் கொண்டிருந்த எனது அறையில் தமிழ் கூறும் நல்லுலகின் அனைத்து எழுத்தாளர்களும் குடி கொண்டிருந்தார்கள்.
வாசிப்பு கூடுதலாகிப் போன ஒரு தருணத்தில் எனது எழுத்தாளன் ஆகும் ஆசையைத் துறந்தேன். வாசகனாகத் தொடர்வது என்று தீர்மானித்துக் கொண்டேன்.
பல எழுத்தாளர்கள் நல்ல நண்பர்களாகிப் போனார்கள்.
‘அவர் நல்லாத்தான் எழுதுகிறார், ஆனா செயல்பாடு / பேச்சு சரியில்லையே' என்பது சில சமயம் வாசகர்களின் ஆதங்கமாக இருக்கிறது. எழுத்தாளரின் படைப்பை மட்டும் பார்ப்பதே சிறந்தது என்பது என்னுடைய கருத்து.
சில எழுத்தாளர்களோடு நண்பனாக இருப்பது சில வேளைகளில் சிரமமானதாக இருப்பதுண்டு, ஆனால் அவர்களது வாசகனாக இருப்பதில் எந்தச் சிரமும் இல்லை.
இன்று ஒரு எழுத்தாளரின் செயல்பாடு தவறாக இருக்கிறது என்பதால் அவரது நேற்றைய எழுத்தை புறந்தள்ள வேண்டுமா?
‘‘எல்லா வாசகர்களும் தலைவர்கள் அல்ல. ஆனால் எல்லாத் தலைவர்களும் வாசகர்கள்'' என்பது ஹாரி ட்ரூமேன் வர்த்தைகள். நல்ல வாசகர்களை வாக்குச்சீட்டு மூலம் தேர்ந்தெடுத்தால் ஆட்சி சிறப்பானதாக அமையலாம்.
தமிழ் எழுத்தாளர்களை சிம்மா சனத்தில் அமர்த்தி அழகு பார்க்க வேண்டுமெனில் லட்சோப லட்சம் வாசகர்களை உருவாக்குவது அவசியம். அந்த முயற்சியின் ஒரு கட்டமாக இந்த சிறப்பிதழ் உருவாகியுள்ளது.
-அந்திமழை இளங்கோவன்
ஜனவரி, 2018.