சிறப்புப்பக்கங்கள்

எழுதுபவனெல்லாம் எழுத்தாளன் அல்ல!

பாமரன்

முதல் சந்திப்போடு முடிந்து விடுகிறது எங்கள் எழுத்தாள வாசக உறவு.

பிற்பாடு அவர்கள் தோழர்கள்தான் எனக்கு. எனது எழுத்து அடுத்த கட்ட பரிமாணத்தை நோக்கி நகர்கிறதென்றால் அது அவர்களது தோழமையால்தான் சாத்தியப்படுகிறது.

எழுத்தாளன் என்பவன் மலைமேல் அமர்ந்து பிரசங்கம் செய்கிறவனாகவும் வாசகர்கள் அதை வாயைப்பிளந்து கொண்டு கேட்பவர்களாகவும் இருக்கிற ‘‘உறவு''முறை எங்களுக்குள் இல்லை. என் நண்பர் ராஜா கடைகடையாக புத்தகம் போடுபவர். ஏறத்தாழ இருபதாண்டுகால நட்பு. கட்டுரை வந்தவுடன் அவரிடம் இருந்து போன் வரும். 

‘‘என்னண்ணா... இந்த வாரம் சொதப்பீட்டிங்க. தினத்தந்திக்கு எழுதறமாதிரி எழுதுங்க. தினமணிக்கு எழுதறமாதிரி எழுதாதீங்க. அப்புறம் நாங்க எல்லாம் எப்படிப் படிக்கிறது?'' என்பார். அப்பொழுதே புரிந்துவிடும் நாம் ஏதோ மேதாவித்தனத்தைக் காட்டுவதுபோல் எழுதியிருக்கிறோம் என்று. மறுவாரம் திருத்திக்கொள்வேன்.

அடிப்படையில் எழுத்தாளனில்லை நான். சமூகத்திற்காகப் பங்காற்ற வேண்டிய பணிகளை செய்துமுடித்தது போக, தேவைப்பட்டால் எழுதுபவன். எழுதுவது மட்டுமே எனது வேலையுமல்ல. அது ஈழமாகட்டும்... கூடங்குளம் அணுமின் நிலையமாகட்டும்... சமூக நீதிக்கான சமாச்சாரங்களாகட்டும் முதலில் அதற்கான பணி. பின்னரே எழுத்து. எம்மைப் பொறுத்தவரை எழுத்தாளர் வாசகர் உறவென்பது சமூகப்பணிகளப் பகிர்ந்து கொள்வதில் அடங்கியிருக்கிறது. வெறும் எழுத்தைச் சிலாகிப்பதில் அல்ல.

எனது எழுத்தை செதுக்குபவர்கள் செப்பனிடுபவர்கள் எல்லாம் அவர்கள்தான். சொதப்புவதில் மட்டும்தான் எனது பங்கிருக்கிறது. ஆக நான் எழுத்தாளனாக அவதாரம் எடுக்கப்போகிறேன் என்று வானில் எந்த வால் நட்சத்திரமும் உதிக்கவில்லை. முண்டாசு கட்டிய மூன்றுபேர் வந்து எங்கள் வீட்டுக் கதவைத் தட்டி ''ஒரு அசகாய சூர எழுத்தாளன் பிறந்திருக்கிறான்'' என்று சேதி சொல்லிப் போகவுமில்லை.

இயக்குநர் பாலச்சந்தருக்கு எழுதிய பகிரங்கக் கடிதம் கோடம்பாக்கத்தின் எரிச்சலுக்கு இரையாயிற்று என்றால் வைகோவுக்கு எழுதியதோ அவரிடம் இருந்து கடும் கண்டனத்தையும் தொண்டர்களிடம் இருந்து பெருங்கோபத்தையும் கொண்டுவந்து சேர்த்தது. 

ஒரு திருமண வீட்டில் என்னைக்கண்ட ம.தி.மு.க வினர் ‘‘எத்தனைக்கு விலை போனே?'' என்றனர். ‘‘நானூறு ரூபாய்க்கு'' என்றேன். ஆம் அதற்கு குமுதம் அனுப்பிய செக்கில் அவ்வளவுதான் குறிப்பிட்டிருந்தது.

‘‘ஒழுங்கா உங்க புத்தகத்தை சிறைக்கு அனுப்பி வைக்கலேன்னா அப்புறம் உங்களையும் கடத்த வேண்டி வரும்...'' என்று நையாண்டியாக நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் சிறையில் இருந்த ஏழுமலை எழுதிய கடிதத்தை நினைத்தால் இன்றைக்கும் சிரிப்பு வரும். அப்படிப்பட்ட உரிமை உள்ளவர்களாகத்தான் என் எழுத்தை செதுக்குபவர்கள் இருக்கிறார்கள் இன்றைக்கும்.

அதன் சமீபத்திய உதாரணம்தான் விழுப்புரம் சுப்ரமணியம். ஓய்வு பெற்ற காவல் துறை உதவி ஆய்வாளர். புத்தகங்களை அனுப்பச் சொல்லி பல கடிதங்கள் எழுதிச் சலித்த பிறகு நாஞ்சில் நாடனிடம் எனது அலைபேசி எண்ணை வாங்கி நேரடியாகவே தொடர்புக்கு வந்துவிட்டார். எனக்கோ எனது எந்தப் புத்தகத்தையும் பாதுகாத்து வைக்கும் பொறுப்போ புத்திசாலித்தனமோ கொஞ்சமும் கிடையாது. வீட்டில் துணைவியோ அம்மாவோ ஒளித்து வைத்திருக்கிற புத்தகத்தையும் லவட்டிக் கொண்டுபோய் யாருக்காவது கொடுத்துவிடுவேன். அப்புறம் எங்கிருந்து அவருக்குக் கொடுக்க? 

கடைசியில் கடுப்பாகிப்போய்  ‘‘இனி உன்னோட எந்தக் கர்மமும் எனக்கு வேண்டாம். உனக்கொரு கும்பிடு... உன் புத்தகத்துக்கு ஒரு கும்புடு'' கடுதாசி எழுதிவிட்டார் சுப்ரமணியம். இதை விலாவாரியாகச் சொல்லி ''யாராவது தருமம் பண்ணுங்க துரைகளா...'' என முகநூலில் புத்தகப் பிச்சை எடுக்க.... ‘‘விடுங்கண்ணே நாமளே எல்லா புக்கையும் ப்ரிண்ட் போட்டர்லாம்...''ன்னு தம்பி இசாக் வந்து குதிக்க ஆரம்பமாகியிருக்கிறது அடுத்த அத்தியாயம்.

ஆக முதல் வரியிலேயே சொன்னதைப் போல எழுதுபவனெல்லாம் எழுத்தாளனுமல்ல. வாசிப்பதனால் மட்டுமே அவர்கள் வெறும் வாசகருமல்ல.  எழுத்தாளன் & வாசகன்  என்கிறபோது அதில் ஏதோ ஒரு அந்நியத்தன்மை இருப்பதாகவே உணர்கிறேன். என்னைப் பொறுத்தவரை அது ஒருவழிப்பாதை. 

எம்முடையதோ தோழமை. அது எழுத் தாளனை தேர்ந்த வாசகராகவும்... வாசகரை நல்ல படைப்பாளியாகவும் மாற்றும் வல்லமை கொண்டது.

ஜனவரி, 2018.