“மொழி கருவியல்ல. வாழ்வின் வழி” - அண்ணாதுரை. இதையும் “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” போன்ற பாரதிதாசனின் பாடலையும், இப்போது கேட்கிற இளைய தலைமுறைக்கு “மொழியை ஏன் பிடித்துக்கொண்டு இந்த அளவுக்கு மாய்ந்து போகிறார்கள்” என்கிற காரியார்த்தமான எண்ணம் தான் உடனடியாகத் தோன்றும். அந்த அளவுக்கு இன்றைக்கு மாறிப்போயிருக்கிறது நிலைமை...
ஆனால் இன்றைக்கு ஊடகங்களிலும், இளவட்ட உரையாடல்களிலும் சிதைக்கப்பட்டு வருகிற தமிழைக் காப்பாற்ற எப்பேர்ப்பட்ட முயற்சிகள் எல்லாம் இங்கே நடந்திருக்கிறது. இதே மொழியை எவ்வளவு உணர்வுபூர்வமாக இதே மண்ணில் எத்தனைபேர்
நேசித்திருக்கிறார்கள்.. மொழியை முன்வைத்து எத்தகைய அரசியல் மாற்றங்கள்... இங்கு அரங்கேறியிருக்கின்றன.
சுதந்திரப்போராட்டத்தின் போது எதிர்ப்பை ஒருமைப்படுத்தும் விதமாக எப்படி விநாயக வழிபாட்டை திலகரைப் போன்ற சில தலைவர்கள் அபத்தமாக முன்வைத்தார்களோ, அதைப்போன்ற அபத்தம் தான் தேசிய மொழியைப் பிரகடனப் படுத்துவதிலும் நடந்தது.
1925 ஆம் ஆண்டில் காங்கிரஸ் அமைப்பின் விதிப்படி காங்கிரஸ் தேசியமொழியாக அறிவித்த மொழி எது தெரியுமா? உருதும், இந்தியும் கலந்த இந்துஸ்தானியை. அதற்கு அப்போதே எதிர்ப்புத் தெரிவித்தவர் காந்தி.
1937 ல் சென்னை ராமகிருஷ்ணமடத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சென்னை மாகாண முதல்வரான ராஜாஜி பள்ளிகளில் இந்தி படிப்பதைக் கட்டாயப்படுத்துவதாக அறிவித்ததும் உருவானது எதிர்ப்பின் பொறி. உடனே திருச்சியில் இந்தியைத் தடுக்க சிறப்பு மாநாடு நடந்தது. அதில் சிறப்புரை ஆற்றியவர் பெரியார். இருந்தும் இந்தி கட்டாயப்படுத்தப்பட்டுஅரசின் உத்தரவு வெளியானதும் மறைமலையடிகள் தலைமையில் மாநாடு நடந்தது. எதிர்ப்பு வலுத்து திருச்சியிலிருந்து சென்னை வரை ராமாமிர்தம் அம்மையார், அழகிரிசாமி தலைமையில் 42 நாட்கள் நடைப்பயணம் நடந்தது. இந்த எதிர்ப்பில் தீவிரமாக 1939 ஜனவரி மாதம் 15 ஆம் தேதி போராடிச் சிறை சென்ற நடராசன் உயிர்நீக்கிறார். அதே ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி தாளமுத்து உயிர்நீக்கிறார்.இவர்கள் தான் இந்தி எதிர்ப்பை முன்னிறுத்திப் பலியான முதல் இரண்டு உயிர்கள்.தொடர்ந்து பெரியாரும், அண்ணாவும் கைதாகிப்பலர் போராடியதின் விளைவாக 1940ல் இந்தி படிப்பதைக் கட்டாயமாக்கும் அரசின் உத்தரவு ரத்தாகியது. மீண்டும் 1948 ஆம் ஆண்டில் இந்தி படிப்பது குறித்து அரசாணை வெளியிடப்பட்டபோது மறுபடியும் கிளர்ச்சி. சென்னையில் பாரதிதாசன் தலைமையில் இந்தி எதிர்ப்பாளர் மாநாடு நடந்தது. ராஜாஜிக்கும்,சென்னை மாகாண முதல்வரான ஓமந்தூராருக்கும் கறுப்புக்கொடி காட்டப்பட்டது. கண்டனங்கள் பரவலாக எழுந்ததால் அரசின் உத்தரவு தளர்த்தப்பட்டது.
இதன்பிறகு 1950ல் உருவான இந்திய அரசியல் சட்டம் இந்தி மொழிக்கு மட்டும் தனித்து முக்கியத்துவத்தை அளித்தது. இந்தி மொழி வளர்ச்சிக்காக சிறப்பு நிதி ஒதுக்கப் பட்டது. 1953 ல் சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரா பிரிந்து தனி மாநிலமாக மாறியது.சென்னை மாகாணத்தில் தொடர்ந்து ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் மொழியை மையமாக வைத்து நடந்த போராட்டங்களைப் பொருட்படுத்தவில்லை.
அக்டோபர், 2012.