பாவண்ணன் 
சிறப்புப்பக்கங்கள்

எல்லோரையும் சுமந்து செல்லும்

பாய்மரக் கப்பல்

பாவண்ணன்

ஒரே குடும்ப அமைப்புக்குள் வெவ்வேறு விதமான எண்ணப்போக்குகளையும் இயல்புகளையும் கொண்ட மனிதர்கள் வாழ்-வதைப் பார்த்து பலமுறை வியப்பில் ஆழ்ந்திருக்கிறேன். ஒரு வீட்டில் பக்திப் பரவசத் தில் ஆழ்ந்து இல்லறப்பொறுப்புகளிலிருந்து முற்றிலும் விலகியவர்களாக இருந்தாலும் இல்லறத்தோடு ஒட்டிக்-கொண்டிருக்கும் ஆட்களையும் பார்த்திருக்கிறேன். அதே வீட்டில் வெட்டு, குத்து என்று வீண்சண்டைகளில் சிக்கி சிறைக்குச் சென்று திரும்பும் ஆட்கள் உலவுவதையும் பார்த்திருக்கிறேன்.

எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் குடும்ப அமைப்பு யாரையும் கைவிடுவதில்லை. ஏராளமான பெட்டிகளை இணைத்து இழுத்துச் செல்லும் ரயில் எஞ்சினைப்போல குடும்பம் எல்லோரையும் இணைத்து இழுத்துக்கொண்டு செல்கிறது. ஒரே கூரையின் கீழே வசித்தாலும் இருபது முப்பது ஆண்டுகளாக ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளாமலேயே வாழும் விசித்திரம் இன்றளவும் எனக்கு பெரும்புதிராகவே இருக்கும் அம்சமாகும்.

யாருடைய விருப்பத்துக்கும் ஏற்புக்கும் காத்திருக்காமல் இத்தகு மாற்றங்கள் ஒரு குடும்பத்துக்குள் உருவாகி நிலைபெறும் தன்மைகளையும் அதனால் விளையும் அசைவுகளையும் தொகுத்துப் பார்க்கும் விருப்பம் வெகுகாலமாகவே எனக்குள் இருந்தது. ஒரு மூன்று தலைமுறைக்கதையாக அதை எழுதவேண்டும் என ஒரு வரைபடத்தை எனக்குள் வைத்திருந்தேன். எங்கள் கிராமத்தில் எனக்கு நன்கு அறிமுகமான ஒவ்வொரு குடும்பத்தின் தலைமுறைக்கதையையும் நான் அறிவேன்.

என் மனத்தில் இருந்த வடிவத்துக்குள் அக்குடும்ப மனிதர்களின் கதைகளைப் பொருத்தி சிறிது காலம் அசைபோட்டபடி இருந்தேன். ஒவ்வொரு தலைமுறை மனிதனாகவும் என்னை நானே கற்பனையில் பொருத்திக்கொண்டு மிதந்தலைந்தேன். தொடக்கத்தில் மனத்தில் தோன்றும் காட்சிகள் உற்சாகம் அளிப்பவையாக இருக்கும். எனினும் போகப்போக அந்த உற்சாகம் வடிந்துவிடும்.

உடனே அக்குடும்பத்தின் கதையை விட்டுவிட்டு வேறொரு குடும்பத்தின் கதையை அசைபோட்டுப் பார்க்கத் தொடங்குவேன். தொடக்கத்தில் அந்தக் கோட்டோவியம் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். ஆயினும் நாட்கள் செல்லச்செல்ல அதுவும் மனத்தைவிட்டு விலகிச் சென்றுவிடும். ஒரு பிடியோ தொடக்கமோ கிடைக்காமல் திகைத்து நின்றுவிடுவேன்.

ஒருமுறை கிராமத்துக்குச் சென்றிருந்தபோது எங்கள் பெரியப்பாவிடம் பழைமைக்கதைகளைப்  பேசிக்கொண்டிருந்தேன். பிரெஞ்சு அரசாங்கத் தின் கட்டுப்பாட்டில் இருந்த புதுச்சேரிப் பகுதியிலிருந்து ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த எல்லையோர தமிழ்நாட்டுக் கிராமத்துக்குக் குடியேறிய தன் அப்பாவின் கதையை அவர் எனக்கு அன்று விரிவாகச் சொன்னார். விவசாயத்தின் மீது அவருக்கிருந்த அளவற்ற ஆர்வத்தையும் உழைப்பையும் எடுத்துரைத்தார். அவரைப்போல ஆழ்ந்த பிடிப்பும் ஆர்வமும் இல்லாததால் அனைத்தையும் தங்கள் தலைமுறை தொலைத்துவிட்டதையும் துயரத்தோடு சொன்னார். வாழ்க்கை நெருக்கடிகளைச் சமாளிக்கும் விதமாக அந்தந்த நேரங்களில் கிட்டும் வேலைகளைச் செய்யும் தொழிலாளியாகவே காலமெல்லாம் வாழ்ந்துவிட்டார் அவர். சில நேரங்களில் வீடு கட்டும் தொழிலாளியாக இருப்பார். சில நேரங்களில் நெசவு வேலை செய்வார். மூலிகை தேடி காடுமேடுகளில் அலைவார். பசுக்களை வாங்கி வளர்ப்பார். அன்று இரவு முழுக்க அவர் சொன்ன கதைகளையே அசைபோட்டபடி இருந்தேன். விவசாயியாக மட்டுமே வாழும் விருப்பமுள்ள ஒருவரை மனத்துக்குள் ஒரு கோட்டோவியமாக எழுதி வைத்துக்கொண்டேன். மறுநாள் காலையில் எழுந்தபோது அவர் உருவம் பெரிய சுவரோவியமாக என் நெஞ்சில் நிறைந்து நின்றது. எல்லா வகைகளிலும் அந்த உருவம் என் மனத்துக்கு இசைவானதாகவும் நெருக்கமானதாகவும் இருந்தது.

அன்று காலை நடைப்பயிற்சியின்போது கூட அவரைப்பற்றிய நினைவுகளை அசைபோட்டபடியே சென்றேன். என் நெஞ்சில் அவருக்கென சில குணச் சித்திரங்களும் இயல்புகளும் அடுத்தடுத்து உருவானபடியே இருந்தன. இனிமையான அக்கணங்கள் என்னை விண்ணிலேறிப் பறக்கவைத்தன. நடந்து நடந்து ஊர் எல்லை வரைக்கும் சென்றுவிட்டேன். ஊர் எல்லையில் ஏதோ ஒரு கட்டுமானத்தைப் புதிதாக எழுப்புவதற்கான ஏற்பாடுகள் நடப்பதைப் பார்த்தேன். நேற்றுவரை புதராக மண்டியிருந்த இடம் சமதளமாக்கப்பட்டு கட்டுமானத்துக்கான சுண்ணாம்புக்-கோடுகள் போடப்பட்டிருந்தன. சிறிது நேரத்துக்கு முன்பு பூசை முடிந்த அடையாளத்தைக் காணமுடிந்தது. என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் அங்கே புளியமரத்தடியில் நின்றிருந்த ஒருவரிடம் கேட்டேன். அங்கே ஒரு சாராயக்கடை வர இருப்பதாகவும் அதற்குத் தோதாக விரிவான வகையில் கடை அமைப்பதற்கான கொட்டகை எழுப்ப ஏற்பாடுகள் நடப்பதாகவும் அவர் சொன்னார். ஏதோ பள்ளிக்கூடமோ மருத்துவமனையோ திறக்க இருப்பதுபோன்ற மகிழ்ச்சியோடு சாராயக்கடையின் வரவைப்பற்றி அவர் விவரித்தார்.

அதுவரை கற்பனையில் விண்ணிலேறிப் பறந்திருந்த என் மனம் ஒரே கணத்தில் தரைக்கு இறங்கி வந்து நிலைகுலைந்து நின்றது. அந்தப் பரவசம் எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு அந்தத் திகைப்பும் நிலைகுலைவும் உண்மையானவை. வாழ்வின் இருவேறு உண்மைகள். நான் வெகுகாலமாக எழுத நினைத்திருந்த நாவலின் கனவுக்கு ஒரு வடிவம் அக்கணத்தில் தானாகவே எழுந்து வந்தது. முழு நாவலுக்கான வரைபடமும் செல்திசையும் தானாகவே துலக்கம் பெற்றுவிட்டன. அந்தக் கட்டுமானக் காட்சியையே முதல் பகுதியாகக் கொண்டு அன்றே எழுதத் தொடங்கினேன்.

நாவலை எழுதிச் செல்லும் தருணத்தில் மன எழுச்சி தடைபடாமல் இருக்கும் பொருட்டு கவிதைகளையும் பழைய செய்யுள்களையும் எப்போதுமே நான் படிப்பதுண்டு.

அந்தப் பழக்கத்தின் விளைவாக ஒருநாள் இரவில் சித்தர் பாடல்களைப் படித்தேன். கைபோன போக்கில் ஒரு பக்கத்தைப் புரட்டி நான் படித்த ஒரு பாட்டு அன்று எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் எழுதிக் கொண்டிருந்த நாவலுக்கு அது மிகவும் நெருக்கமாக இருப்பதுபோலத் தோன்றியது.

‘பஞ்சபூதப் பலகை கப்பலாய்ச் சேர்த்து பாங்கான ஓங்குமர பாய்மரம் கட்டி நெஞ்சுமனம் புத்தி ஆங்காரம் சித்தம் மானாபிமானம் கயிறாகச்சேர்த்து' என்று தொடங்கி நீண்டு சென்றது அந்தப் பாட்டு. கப்பல் என்னும் சொல்லிலும் பாய்மரம் என்னும் சொல்லிலும் என் மனம் சிக்கிக்கொண்டது. மீண்டும் மீண்டும் அவற்றை மனத்துக்குள்  சொல்லிப் பார்த்தேன். பிறகு இரண்டையும் இணைத்து பாய்மரக்கப்பல் என்று ஒற்றைச்சொல்லாக்கினேன். வெவ்வேறு குணங்களையும் எண்ணப்போக்குகளையும் கொண்ட பலவிதமான மனிதர்கள் அடங்கிய குடும்ப அமைப்புதான் பாய்மரக்கப்பல். இசைவின்மைக்குள் ஓர் இசைவு. இணக்கமின்மைகளுக்குள் ஒரு நல்லிணக்கம். எல்லோர்க்கும் பெய்யும் மழையைப்போல எல்லோரையும் சுமந்துகொண்டு செல்கிறது பாய்மரக்கப்பல். தொடர்ந்து சில நாட்களிலேயே அந்த நாவலை எழுதி முடித்தேன்.

ஜனவரி - 2022