சிறப்புப்பக்கங்கள்

எம்.ஜி.ஆரின் நிறைவேறாத ஆசை!

எம்ஜிஆர் நூற்றாண்டு

ராவ்

முழுநேரமாக அரசியலில் ஈடுபடும் விருப்பம் அல்லது ஆட்சிக்கட்டிலில் அமரும் எண்ணம் எம்.ஜி.ஆருக்கு ஆரம்பத்தில் இருந்ததா? இருக்கவில்லை என்பதுதான் ஆச்சர் யமான பதில். தி.மு.கழகத்துக்கான  பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலும் அவருக்கு அந்த எண்ணம் இல்லை. சுறுசுறுப்பாக படப்பிடிப்புகளில் அவர் கவனம் செலுத்திய நேரத்தில் அவர் எல்லோரிடம்  சொல்லிக் கொண்டிருந்தது “ஒரு கோடி ரூபாய் பணம் சேர்க்க வேண்டும். என் பெயரில் ஒரு யுனிவர்சிட்டி நானே ஆரம்பித்து நடத்த வேண்டும்” இதுதான் எம்.ஜி.ஆரின் ஆசை. அ.தி.மு.கழகத்தை துவக்கியிராவிட்டால் எம்.ஜி.ஆர் இதை சாதித்துக் காட்டியிருப்பார். அந்த ஆசை அவருக்கு நிறைவேறவேயில்லை. சொல்லப்போனால் அ.தி.மு.கவை ஆரம்பிக்க காலம் அவரை கட்டாயப்படுத்திவிட்டது!

அறிஞர் அண்ணாவுடன் நெருக்கமாக இருந்த எம்.ஜி.ஆர், தி.மு.க சென்னை மாநகராட்சியை பிடித்தபோது, அக்கட்சி நல்ல பெயர் எடுக்க வேண்டுமே என்று கவலைப்பட்டது உண்மை. அந்த சமயத்தில் ராமாவரம் தோட்டத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. தி.மு.க.வின் புதிய மேயர் ஒருவருக்கு எம்.ஜி.ஆர் அன்று விருந்து கொடுத்து உபசரித்தார். அந்த மேயர் வசதியற்றவர். மேயர் விடைபெறும்போது, ஒரு கவரில் நல்ல தொகையை அவருக்கு அன்புடன் தந்தார். ஐயா உங்களுக்கு செலவுக்கு ஏதேனும் தேவை இருந்தால் என்னிடம் வந்து தாராளமாகக் கேளுங்கள்! மற்றபடி நல்ல பெயர் எடுக்க வேண்டும். ‘லஞ்சம்’ என்ற குற்றமே  வரக்கூடாது ” என்று சொல்லி அனுப்பினார். நிருபர்கள் பார்த்த காட்சி!

எம்.ஜி.ஆர் முதல் முறை முதல்வராகப் பதவியேற்றவுடன், சில முக்கிய நிருபர்களிடம் தன் தொலைபேசி எண்ணைக் கொடுத்திருந்தார். தன்னை அவசியமானால் தொடர்பு கொள்ளலாம் என்று அனுமதித்திருந்தார். ஒரு முறை புயல் நேரத்தில் தொடர்புகொண்ட போது, “எம்.ஜி.ராமச்சந்திரன்” என்று அவரே டெலிபோனை எடுத்தார். அது மட்டுமல்லாமல் சில நிருபர்கள் தரும் தகவல்களை நேரிடையாகத் தன் பார்வைக்கு அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

ஒரு சமயம் மயிலாப்பூர் அப்பு முதலி தெருவில் இருந்த ரேஷன் கடையில் நடந்த கலாட்டாவை செய்தியாக்க நேர்ந்தது. ரேஷன் கடை முன்பு நீண்ட வரிசை. கூட்டத்தை அதிமுக பகுதிச் செயலாளர் என்கிற பெயரில் ஒரு வாட்டசாட்டமான நபர் கண்ட்ரோல் செய்தவாறு இருந்தார். சில பேரிடம் காசு வாங்கி, ரேஷன் பெற்று தந்தார். தட்டிக் கேட்ட ஒரு வயதானவரை வரிசையில் இருந்து தள்ளிவிட்டுவிட்டார்.  இந்த செய்தி வெளியானது. இதைப்படித்த எம்ஜிஆர். மறுநாள் புது உத்தரவை பிறப்பித்தார். ஒரு ரேஷன் கடையில் 500 கார்டுதான் இருக்கலாம். அப்பு முதலி தெரு ரேஷன் கடை இரண்டாகப் பிரிந்தது. பிறகு கூட்டமே இல்லை. அந்த பகுதி செயலாளர் மீதும் நடவடிக்கை!  எம்.ஜி.ஆர் ரேஷன் கடைகள் பற்றி எந்தச் செய்தி வந்தாலும் தன் கவனத்துக்குக் கொண்டுவரவேண்டும் என்று உத்தரவு போட்டு வைத்ததுதான் காரணம்.

அப்போது சென்னை வானொலியில் ‘நகர்வலம்’ என்ற நிகழ்ச்சி காலை 7.30 மணிக்கு ஒலிப்பரப்பாகும். இதைக்கூட எம்ஜிஆர் கேட்டு வந்தார். நகர பஸ்களில் செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் கூட்ட நேரங்களில் ஏறி, பயணிகளிடம் வீண் கெடுபிடி செய்து வந்தார்கள். பாவம், ஒரு மூதாட்டி.

சாப்பாடு கூடை எடுத்துச் செல்பவர்.

செக்கிங் இன்ஸ்பெக்டர் செய்த கெடுபிடியில், வாங்கிய டிக்கெட் எங்கே வைத்தோம் என்று அவருக்கு புரியவில்லை, இறக்கிவிட்டுவிட்டார்கள். மூதாட்டி கதறிக் கொண்டு கீழே இறங்கி தலையிலிருந்த ‘சும்மாடு’ எடுத்தபோது டிக்கெட் அதில் இருந்தது. இந்த நிகழ்ச்சி ஒலிப்பரப்பானது.

அடுத்த நிமிடம் வானொலி நிர்வாகி நடராஜனை டெலிபோனில் அழைத்தார் எம்ஜிஆர். அந்த மூதாட்டி எங்கே இருப்பார் என்று விசாரிக்குமாறு கூறினார். அந்த நகர்வலம் எழுதிய நிருபருக்கு தகவல் பறக்க, அவர் மூதாட்டியை மௌண்ட் ரோட்டில் அடையாளம் காட்ட, அதிகாரிகள் அவரிடம் மன்னிப்பு கேட்டு எம்ஜிஆரின் அன்பளிப்பையும் அளித்தார்கள். ஆனால் மூதாட்டி கேட்டது எம்ஜிஆரின் படத்தை. செக்கிங் இன்ஸ்பெக்டர்களின் கெடுபிடிகளும் நின்றது. ஆக, எம்ஜிஆர் பல்வேறு வழிகளில் மக்கள் கருத்தை அறிய முயன்றார் என்பது புரியும். அதுவும் ஏழை எளியவர் விஷயத்தில் அவர்களுக்கு நல்லதே நடக்கவேண்டும்  என்று நினைத்ததில் சந்தேகமே கிடையாது.

அறிஞர் அண்ணாவுக்கு அது நன்கு புரிந்திருந்தது. ஆகவே அவர் எம்.ஜி.ஆரை தன் இதயத்தில் பூட்டிவைத்த கனி என்றார். 1967 சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் நிதிக்கு ஒரு லட்சரூபாய் தருவதாக அறிவித்தார் எம்ஜிஆர். “லட்ச ரூபாய் வேண்டாம்! லட்சக்கணக்கான மக்களுக்கு உன் முகத்தைக் காட்டினால் போதும்” என்றார் அண்ணா. தி.மு.கழகத்தின் கறுப்பு சிவப்பு கொடி மக்களிடையே அதிகம் பரவாத காலம். எம்.ஜி.ஆர் தன் திரைப்பட நிறுவனத்தின் சின்னமாகக் கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தினார். தணிக்கைக்குழு ஏற்கவில்லை. நீதிமன்றம் போய் அந்த உரிமையை நிலை நாட்டினார்.

அண்ணா கட்சிக் கொடி பறக்க காரில் ஒரு கிராமத்தின் வழியாக சென்றபோது “நீங்கள் எம்ஜிஆர் கட்சியா” என்று கிராமவாசிகள் கேட்ட நிகழ்ச்சி நடந்தது. எம்ஜிஆர் ஓர் ஆச்சர்யமான தலைவர். பணம் தேடுவது என்பது மட்டும் அவர் குறிக்கோளாக இருக்கவே இல்லை! ரஜினி கூறினாரே, நடிகர் என்பதையும் தாண்டி அதற்கு மேலே ஏதோ ஒன்று இருக்கவேண்டும் என்று, அது இதுதான்!

இந்திரா காந்தி அவரது ஆட்சியை டிஸ்மிஸ் செய்தார். திமுக - இந்திரா கூட்டணி நாடாளுமன்றத்தில் மாபெரும் வெற்றி பெற்றதுதான் காரணம். பதவி இழந்த எம்ஜிஆர் தனித்துவிடப்பட்டார். அவருடன் சீட்டு விளையாட கூட யாரும் வரவில்லை என்று செய்தி. அந்த சமயத்தில் ராமகிருஷ்ணன் ( இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் பெரிய அதிகாரியாக இருந்தார்) மட்டுமே எம்ஜிஆரை சந்தித்தார். அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலுக்கு எம்ஜிஆரிடம்  போதிய பணம் இல்லை. ராமகிருஷ்ணன் தான் முதல் தேர்தல் நிதியை  அளித்ததாகச் சொல்வார்கள்!

யார் தயவும் இன்றி, தானே பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்தார் எம்ஜிஆர். அந்த வெற்றி இந்திரா காந்திக்கு திகைப்பு அளித்தது. ராமகிருஷ்ணனை ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைத்தார் எம்ஜிஆர். அவர் எதையும் மறப்பதில்லை!    

டிசம்பர், 2017.